கக்கூஸ் ஓர் ஆவணப்படம்.

ரவி – https://sudumanal.wordpress.com
kakkoos-2

சுவிஸ் சூரிச் இல் “வாசிப்பும் உரையாடலும்” என்ற தொடர் சந்திப்பு கடந்த இரு வருடகாலமாக நிகழ்த்தப்படுகிறது. நூல்களை (முக்கியமாக மொழிபெயர்ப்பு நூல்களை) வாசித்து பின் உரையாடுவது என முதிய இளைய சந்ததிகள் இணைந்து பயணிக்கிற பாதை இது. இதன் இணைப்பாக “திரையிடலும் உரையாடலும்” இதுவரை இரண்டு முறை நடந்திருக்கிறது. 07.05.2017 அன்று நடந்த இரண்டாவது திரையிடல் உரையாடலில் கக்கூஸ் ஆவணப் படமும் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.

 

இந்த ஒன்றே முக்கால் மணி நேர ஆவணப்படத்தை  சமூகக் கோபத்துடன் நாம் பார்ததாகவேண்டி இருக்கிறது. அருவருப்பு அல்லது கழிவிரக்கத்துடன் மட்டும் இப்படத்தை முழுமையாக பார்க்க இயலாது போகலாம்.

இப் படம் சாதிய இழிவு குறித்தான ஒரு அம்பலப்படுத்தலை செய்கிறது. புலனறிவும் பகுத்தறிவும் இணைகிற புள்ளியில் நாம் நின்றாக வேண்டிய ஒரு தேவையை இப் படம் கோருகிறது. புலனறிவு என்றாகும்போது காட்சிவழியும் குரல் வழியும் மிக கூர்ந்து அவதானிக்க நேர்கிறது அல்லது அது எம்மை தாக்குகிறது. அதனால் இப் படத்தின் தலைப்பு என்பது இந்த இழிவின் நெற்றியில் அடித்தது போல் அமைந்திருக்கிறது. மலம் அல்லது பீ என்பதை நாம் நாகரிகமான சொற்களால் அல்லது ஊடகவிதிகளால் மறைக்க முயற்சித்தால் அது இந்த இழிவின் வலுவை குறைக்க நேரும். இதுவே அருவருப்பு என்பதைவிடவும் ஒரு சமூகக் கோபத்தை எம்மில் ஏற்படுத்துகிறது.

நாகரிகமான சொற்கள் எனும்போது ரண்டுக்குப் போதல், கக்கா இருத்தல், ரொயிலற்றுக்குப் போதல், இயற்கைக் கடனை கழித்தல் போன்ற சொற்களை இங்கு நான் குறிப்பிடுகிறேன். கக்கூஸ் என்ற சொல்கூட கோலண்ட் மொழியிலிருந்து தமிழுக்கு மருவிய சொல் என சொல்லப்படுகிறது. அதன் நேரடி தமிழாக்கம் ‘மலவீடு’ எனப்படுகிறது. வாழிட வீட்டுக்கு அருகில் தனியாக அமைக்கப்படும் பழைய கால முறைமையில் இப் பெயர் வழங்கப்பட்டது என்கிறார்கள்.

இந்த மக்கள்மீது சுமத்தப்பட்டிருப்பது சாதிய ஒடுக்குமுறை என்ற பொதுச் சொல்லாடலையும் தாண்டியதான “சாதிய இழிவு” என்பதே பொருத்தமானது. பொருளாதார ரீதியில் அதில் தங்கிவாழ வைத்ததின் மூலமாக அவர்களாகவே இதை தொழிலாக எண்ணவைத்தது அல்லது இதை ஒரு தொழிலாக அவர்கள் மீது திணித்தது என்பது ஆதிக்க சாதிகளின் சூழ்ச்சி. அத்தோடு அதிகார மையங்களின் உயர்சாதிய மனோபவம் சேர்ந்து கொண்டுள்ளதன் விளைவை அவர்கள் காலம்காலமாக அனுபவிக்க நேர்கிறது.

இந்த அடிப்படையில் இப் படத்தின் தலைப்பை “கக்கூஸ்” என தலைப்பிட்டிருப்பதை ஓர் அழகியலாக நான் பார்க்கிறேன்.
அத்தோடு சேர்த்து மற்றைய அழகியல் விடயங்கள் என்று பார்க்கிறபோது,
இந்த படத்தில் உலவும் மனிதர்கள் பற்றியது. கசங்குண்ட இந்த வாழ்நிலைக்குள்கூட அவர்களின் அழகுத் தோற்றம், சுறுசுறுப்பு, உடல்மொழி என்பவற்றைச் சொல்லலாம். குழந்தையிலிருந்து பெண்கள் ஆண்கள் முதியவர் வரை இதை கவனிக்க நேர்கிறது.

அடுத்து அவர்கள் பேசுகிற மொழியும் சொல்லாடலும் தமிழ் அவர்களிடம்தான் வாழ்கிறது என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது. ஆங்கிலக் கலப்புகளுடன் தமிழை படாத பாடு படுத்தும் தமிழகத்தின் நடுத்தர மேல்தட்டு மக்களின் முகத்தில் அடிக்கிற வார்த்தை உச்சரிப்புகள் அவை. மறுபுறமாக ஆதிக்கசாதியினரின் சாதிய புறக்கணிப்புக்கு எதிரான அவர்களின் கோபத்தை வெளிப்படுத்துகிற வார்த்தைகள். இதை சக மனிதர்களை மதிக்காதவாறான வசை வார்த்தைகளாக கற்பிதம் செய்ததில் புகலிட தலித்தியவாதிகளுக்கும் அது ஒரு செய்தியை சொல்லத்தான் செய்கிறது.

அடுத்த அழகியல், மிக வெளிப்படையான பேச்சு… அவர்கள் முன்வைக்கிற தர்க்கபூர்வமான சமூகக் கேள்விகள்… இழிவுக்கு எதிரான கோபம் என்பன. உரையாடல் முழுமையும் சமூக அரசியல் அவர்களின் வார்த்தைகளில் வெளிப்பட்டபடியே இருக்கிறது.

 

kakkoos-3
கக்கூஸ் திவ்யா பாரதி என்ற 25 வயது யுவதியினால், ஒரு சமூகப் போராளியால், எடுக்கப்பட்ட படம். இடதுசாரிய சிந்தனையும். தலித்தியம் பெண்ணியம் பெரியாரியம் குறித்தான அவரது ஈடுபாடும் அறிவும் பாடசாலைக் காலத்திலிருந்தே அரசியல் போராட்டங்களில் கொண்டிருந்த ஈடுபாடும் இப் படத்தை சமூப் பிரக்ஞை தரும் படமாக உருவாக்க உதவியிருப்பதாக அவரது பேட்டிகளிலிருந்து காணக் கிடைக்கிறது.

இவர் சட்டப்படிப்பை முடித்தவர். அதனால் இந்த ஆவணப் படத் தயாரிப்பின்போதுகூட இந்த மக்கள் சார்ந்து பல வழக்குகளை நீதிமன்றத்தில் பதிவுசெய்து போராடியிருக்கிறார். (இதுவிடயத்தில் வேறு சமூகப் போராளிகளினதும் கூட்டுழைப்பு இருந்திருக்கிறது. அதுபற்றி அவர் பேசியதாகத் தெரியவில்லை.) அதிகார வர்க்கத்திடம் இருந்தும் சாதிமான்களிடம் இருந்தும் வந்த தடைகளை மீறியபடி தனது பணியை அவரும் அவரது படக் குழுவினரும் செய்து முடித்ததின் மூலம் தாம் செயற்பாட்டாளர்கள் என்பதையும் நிறுவியிருக்கிறார்கள். ஒருமுறை படப்பிடிப்பு குழுவினர் அனாதைப் பிணத்தை தூக்கிச் செல்கிற காட்சியொன்றும் இப் படத்தில் வருகிறது.

தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில்,
“எப்பிடி படம் எடுக்கிறதெண்டு தெரியாது. ஆனால் எப்பிடி எடுக்கக்கூடாது என்று நல்லாத் தெரியும்” என பதிலளித்தார். 92 மணித்தியால காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு, இப்போ ஒன்றே முக்கால் மணி நேரத்துக்குள் சுருங்கியிருக்கிறது கக்கூஸ் படம் என்கிறார்.

இருந்தாலும் என்னளவில் ஆவணப் படத்துக்கான செறிவை இன்னும் அதிகரிக்கிற  உத்தியில் அவர் முன்னேறியாக வேண்டும் என படுகிறது. காட்சிவேக அசைவுகளும் அது பார்வையாளரிடத்தில் சிந்தனை அதிர்ச்சியை ஏற்படுத்துவதான உத்தியும் பெரியளவில் கவனிக்கப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில் கமரா நிலைகுத்தி நிற்கிறது அல்லது குளோசப்புக்கு நகர்ந்து (கோபத்துக்குப் பதில்) அருவருப்பை மேல்நிலைக்கு கொண்டுவந்துவிடுகிறது. ஒரேவகையான கருத்துகள் மீண்டும் மீண்டும் பேசப்படுவதை தவிர்த்திருக்கலாம். இந்த வாழ்வியலுக்குள் வீழ்த்தப்பட்ட வேறுவேறான பிரதேச மக்களினூடாக அவை சொல்லப்படுகிறது என்ற தர்க்க நியாயம் ஆவணப்படத்தின் வீச்சுக்கும் செறிவுக்கும் எதிராக அமைந்துவிடுகிறது.

இந்த மக்களை வெளிப்படையாக பேசவைப்பது எளிதல்ல. காரணம் உழைப்பில் மண்விழுந்துவிடும் என்ற அச்சம். தமக்கான குரலை நேர்மையாக வெளிப்படுத்துவதாக அவர்கள் திவ்யாவை நம்பவேண்டும். அது குறித்த அவர்களின் பிரக்ஞையை தொடுவதற்கு திவ்யா ஒரு வருட காலம் அவர்களுடன் செலவழிக்க வேண்டி இருந்திருக்கிறது. இன்றேல் இது சாத்தியமில்லை.

 

kakkoos-1

 

இந்தியா வல்லரசுக் கனவில் இருக்கிற அல்லது பசப்பு விடுகிற ஒரு நாடு. மிகப் பெரிய ஜனநாயக நாடு என ‘மேக் அப்’ போட்டிருக்கிற ஒரு நாடு. மறுபுறத்தில் சமூகப் புத்திஜீவிகளால் அது ஒரு இந்துத்துவ அரசு என விமர்சிக்கப்படுகிற ஒரு நாடு. சாதியத்தை காப்பாற்றுகிற நிறுவனமாக அரசு வடிவம் இருக்கிறது என விமர்சிக்கப்படுகிற ஒரு நாடு. விண்வெளிவரை.. அணுஆயுத தயாரிப்புவரை சென்று அதையே முன்னேற்றம், வளர்ச்சி என காட்டியிருக்கிற ஒரு நாடு.

வெட்கமாயில்லை!

இப்படியொரு இழிவை தனது சமூகங்களுக்குள் வைத்துக்கொண்டிருப்பதை உலகு தெரிந்துவிடக்கூடாது என பதட்டப்படுகிறதுபோல் தெரிகிறது. இதனால் இப் படத்துக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டதுகூட நடந்தது.

இந்த நாடு சுதந்திரமடைந்து 45 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது காகிதத்தில் ஒரு சட்டத்தை இயற்றுதற்கு. மனிதமலத்தை மனிதர்களே கையால் அள்ளுவதை தடைசெய்கிற சட்டத்தை 1993 இல் கொண்டு வந்தது. பிறகு 2013 இல் இன்னொருமுறை. வெறும் காகிதச் சட்டம். அதன்படி 40 க்கு மேற்பட்ட பாதுகாப்பு உபகரணங்களோடு அவர்கள் வேலைசெய்ய வேண்டும் என்பதெல்லாம் நடைமுறையில் துளியும் இல்லை. அந்த அரசே அரசுப் பணியாளர்களாக இந்த மக்களை இந்த இழிவுக்குள் தள்ளிவைத்து செயற்பட வைக்கிறது. இன்னொருபுறம் தனியார் நிறுவனம். சட்டப்படி தடைசெய்யப்பட்டதாக காகிதத்திலும் ‘அதெல்லாம் சும்மா’ என்பதுபோல் இந்த இழிவை செய்ய வைக்கிற வேலையை நடைமுறையிலும் ஓர் அரசே செய்கிறதான கொடுமையை படம் சொல்லியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் பொறுப்புச்சொல்கிற கடப்பாடுள்ள அரசியல் நிறுவனங்களில் அரசுக்கு முதன்மையான பங்கு உண்டு. கக்கூஸ் அதுகுறித்து வெளிப்படையாகவே வார்த்தைகளாலும் காட்சி வழியேயும் பேசியிருக்கிறது.

சிறப்பு என்னவென்றால் அரசை மட்டுமல்ல கொள்கை கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகள் சார்ந்தோ அதேநேரம் அதை நிராகரித்தோ அவர் பேசவில்லை. மாறாக அவைகளை விமர்சித்தபடி நகர்கிறார்.
கம்யூனிஸ்ட்
தலித் அமைப்புகள்
பெண்ணிய அமைப்புகள்
சுற்றுச்சூழல் அமைப்புகள்
ஊடக அரசியல்;
எல்லாவற்றின் பக்கமும் விமர்சனப் பார்வையை பொறியாகத் தட்டிச் செல்கிறது கக்கூஸ். அது முக்கியம்.

கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். சாதியம், தீண்டாமை குறித்து போதிய கவனம் எடுப்பதில்லை. தலித்திய அமைப்புகள் சாதியம் தீண்டாமை குறித்து பேசுகிறார்கள். வர்க்கப் போராட்டம் குறித்து பேசுவதில்லை என்கிறார் திவ்யா. இது சரியானதுதானா. தலித்திய அமைப்புகள் இடதுசாரிகளா என்ன. அப்படி அவர்கள் இருக்கவேண்டுமென்பதில்லை. அவர்கள் தாங்கள் முன்வைத்து செயற்படுகிற கொள்ளை, கோட்பாட்டு எல்லைக்குள் சரியாக செயற்படுகிறார்களா என்ற கேள்வி சரியாக இருக்கும். அதற்கு அவர்கள் உண்மையாக நடந்தாலே போதும். வர்க்கப் போராட்டத்தைப் பற்றி அவர்களிடம் என்ன எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

சாதியின் வர்க்கப் படிநிலைக்குள் நிகழ்கிற புறக்கணிப்புகளின் கடைசித் தொங்கலில் இந்த மனிதர்கள் விடப்பட்டிருக்கிறார்கள். ஆதிக்க சாதிகளால் மட்டுமல்ல ‘தலித்’ என்ற மொத்தத்துவ அடையாளத்துக்குள் அடைக்கப்பட்டுள்ள படிநிலைச் சாதிகளிடையேயான உள்ளக புறக்கணிப்புகள் அல்லது மேலாதிக்கங்கள், ஒடுக்குதல்கள் அல்லது ஒடுங்குதல்கள், மற்றும் உள்முரண்கள், அதை அணுகவேண்டிய வழிமுறைகள் குறித்தெல்லாம் ஒரு கோட்பாட்டு விவாதங்களை தலித் அமைப்புகள் நடத்துவதில்லை. ஆதிக்கசாதியினருக்கு இது சாதகமாகப் போய்விடலாம் என்ற அச்சமா அல்லது பொதுவான தலித்திய பாதையொன்றிற்குள்ளால் நடக்கிற வசதிப்பாடா என்பது குறித்து விவாதத்தை எழுப்புகிற பொறியை கக்கூஸ் தரவே செய்கிறது.

பெண்ணிய அமைப்புகள் குறித்து பேசுகிறபோது,
இந்த இழிவில் 90 வீதம் பெண்களே ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதாவது இது பெண்மயப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 3 மணிவரை வேலைசெய்ய வைக்கப்படுகிறார்கள். உடல் ரீதியில் கடினமான ஓய்வற்ற இந்த வேலைகளால் அவர்களது கர்ப்பப் பை பலவீனமடைகிறது அல்லது கீழிறங்குகிறது. அத்தோடு பாலியல் ரீதியில் அதிகாரிகளால் சுரண்டப்படுகிறார்கள். இந்த இழிவு தமது சந்ததியோடு முடிந்து போகட்டும் என்றுகூட அவர்களில் சிலர் நினைத்தல்கூடும். எல்லாமுமாய்ச் சேர்ந்து அவர்களில் பலரும் தமது கர்ப்பப்பையை அகற்றிவிடுகிற நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.

ஆண்களை விடவும் குறைந்த சம்பளம் பெறுகிறார்கள். இது பொருளாதார ரீதியலான சுரண்டல். குடும்பத் தலைவனின் மரணத்தால் பொருளாதார இழப்பு அவர்களை அநாதரவாக்குகிறது.

தமது பிள்ளைகளே “மணக்கிறாய் அம்மா” என விலத்திக்கொள்வதும், தமது கையால் சோறூட்டிவிட முடியாத பரிதவிப்பு நிலையும் தாய்மை நிலையில் மேலதிகமாக அவர்களை உளவியல் ரீதியில் மோசமாக பாதிக்கக்கூடிய விடயங்கள்.

இதுகுறித்தெல்லாம் பெண்ணிய அமைப்புகள் கவனம் கொள்வதில்லை என்ற விமர்சனத்தை கக்கூஸ் இன்னொரு பொறியாக தட்டிவிடுகிறது.

தொழிற் சங்கங்கள் இந்த இழிவை அகற்றவும் மறுவாழ்வுத் திட்டத்தை ஏற்படுத்தவும் அரசுடன் போராடாமல் இதை ஒரு தொழிலாக ஏற்றுக்கொண்டு வெறும் தொழிற்சங்கவாதத்துக்குள் முடங்கிப் போயிருக்கிறது என தொழிற்சங்கங்கள் குறித்தான விமர்சனப் பொறியை தட்டிவிடுகிறார் திவ்யா.
தொழிற்சங்கத்தின் தற்காலிக இலக்குகளையும் அதன் எல்லைகளையும் நாம் நிராகரிக்க முடியுமா என்ற ஒரு கேள்வி என்னளவில் இங்கு எழவே செய்கிறது.

அனல்மின் நிலையம், காடுகள் அழிப்பு போன்றவை பற்றி பேசுகிற சுற்றுச் சூழல் அமைப்புகள் இந்த மலக் கழிவுகள், மோசமான வடிகால் நிலைமைகள் அதனால் எற்படுகிற சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றி பேசுவதில்லை. இதுபற்றிய விமர்சனப் பொறியையும் கக்கூஸ் படம் தரத் தவறவில்லை.

ஊடகங்கள் எல்லாமே ஆதிக்க சாதியினரின் பிடிக்குள் இருப்பவை. அதற்கேற்ப இந்த தாழ்த்தப்பட கடைநிலை சாதி மக்களின் மலக்குழி மரணங்கள் பற்றிய செய்திகளை எந்தவகையான சொல்லாடல்கள் கொண்டு உருவாக்குகின்றன, அதன்மூலம் எவ்வாறு இந்த மரணங்களின் உண்மைத்தன்மையை மூடிமறைக்கின்றன என்பதை கக்கூஸ் ஆதிக்கசாதியினரின் முகத்திலறைந்து சொல்லியிருக்கிறது.

 

kakkos-4

 

இந்த இழிநிலைக்குள்ளிருந்து மீளுகிற முயற்சியில் தமது பிள்ளைகளை கல்வி கற்பிக்க அவர்கள் எடுக்கிற முயற்சிகளை சாத்தியமில்லாமலாக்குகிற ஆதிக்கசாதி மனோபாவமானது சாதிய மனநிலை கொண்ட ஆசிரியர்கள் ஊடாகக் கூட செயற்படுவதையும், எல்லாமும் தாண்டி கல்விகற்று முடிப்பவர்கள்கூட வேலைவிடயங்களில் புறக்கணிக்கப்படுதல் அல்லது சாதியப் பார்வைக்குள் வைத்து துஸ்பிரயோகம் செய்யப்படுதல் போன்றவற்றையும் கக்கூஸ் படம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

குடும்பம், பாடசாலை என்ற சமூக நிறுவனங்களினதும் அதற்குள் இயங்குகிற கருத்தியல் தளத்தினதும் அறிவுத் தளத்தினதும் தாக்கங்கள் ஒரு மனிதஜீவியை பிஞ்சுநிலையில் வைத்து புனைவதில் பெரும் பங்கு ஆற்றுகிறது. சமூகத்துள் மனிதர்களாக இவர்கள் இதே பாதையில் அவிழ்த்துவிடப்படுகிறார்கள். மேலும் பண்பாட்டு நிறுவனங்களாலும் மத நிறுவனங்களாலும் மற்றைய சமூக நிறுவனங்களாலும் புனையப்பட்ட கதாபாத்திரங்களாகவே மனிதர்கள் உலவவிடப்படுகின்றனர். அந்தவகையில் சாதிய கருத்தியலை தாங்கி நிற்கின்ற இந்த (குடும்பம், பாடசாலை என்ற) நிறுவனங்கள் குறித்தும் கக்கூஸ் ஆவணப்படம் ஓர் ஒளிரும் பொறியை தட்டியிருக்கலாம்.

மனிதரை மனிதராக மதிக்கத் தெரியாத ஒரு சமூகம் விடுதலைபெற தகுதியற்றது. சாதிய மனநிலை கொண்ட எவரும் உண்மை மனிதராக இருக்க வாய்ப்பில்லை. அந்த அடிப்படையில் சாதியத்தை வர்ணாச்சிரம தர்மத்தின் மூலம், மனுதர்மத்தின் மூலம் அறமாக காப்பாற்றிய காப்பாற்றுகிற இந்து மதத்தை கண்மூடித்தனமாக பற்றிக்கொண்டு மனிதராக இருப்பது சாத்தியமுமில்லை.

மாற்று.கொம் என்ற இணையத்தளத்தில் சிந்தன் ரா என்பவர், “என்ஜிஓ (NGO) மனநிலையிலிருந்து வெளிவர 100 முறை கக்கூசை பாருங்கள்.” என்ற தலைப்பில் கக்கூஸ் படம் பற்றிய தனது குறிப்பை தொடங்கியிருந்தார். இது முக்கியமான ஒன்று.

இன்று சமூக அசைவியக்கத்தை முன்னோக்கி தள்ளுவதில் பிரக்ஞைபூர்வமாக செயற்பட்ட பல சமூகப் போராளிகளை என்ஜிஓ க்கள் இனங்கண்டு அவர்களை இந்த வேலைகளுக்கு சம்பளம் பெறும் பிழைப்புவாத மனநிலைக்குள் தள்ளி அவர்களது போராட்டக் குணத்தை நாசமாக்குகிற வைரசுகளாக செயல்படுகின்றனர். அவை மூன்றாமுலக நாடுகளில் மிக வீரியமாக திட்டமிட்டே செயற்படுகின்றன. சம்பளம் பெறுவதற்கும் சமூகப்பணியின் பெயரால் உலகை சுற்றிப் பார்க்கிற ஊதாரித்தனத்திற்கும் சமூகப் போராளிகளும் பலியாகியே இருக்கின்றனர். அதற்கான வேலைமுறைகளில் ஒன்றாக மக்களின் அவலங்களை காட்சிப்படுத்தவும் கூவி விற்கவும் ஆவணப்படம் தயாரிப்பதும் அதை ஏதோ சமூகத்துக்காக செய்வதாக படம்காட்டுவதுமான புரட்டுகள் மலிந்த இந்த யுகத்தில் இவை எதையுமே சாராது முகநூல் உறவுகள் உட்பட பொதுமனிதர்களிடமிருந்து பெற்ற பணத்தை வைத்து தனது நண்பர்களின் உழைப்பை இணைத்து திவ்யா இப் பயணத்தைத் தொடங்கி ஒரு கிடைத்தற்கரிய ஆவணமாக தந்திருக்கிறார். எதிர்காலத்திலும் அவர் என்ஜிஓ வைரசுக்கு ஆளாகாமல் தனது பயணத்தை இதே தளத்தினூடு பயணிக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

  • ரவி (07052017)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *