சோனாகாச்சி: பாலியல் தொழில்: திருநங்கைகளின் போராட்ட வாழ்வு!

தமிழாக்கம்: அருண் பாண்டியன் – Thanks http://tamilarasial.com

transgender-woman-sex-worker-india-638x381

மனித உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில் திருநங்கைகள் இருக்கின்றனர். அடிப்படை வசதியில் தொடங்கி அவசியமான தேவைகள் வரை அவர்கள் போராடிதான் பெற வேண்டியுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் சூழலுக்குதள்ளப்படுகிறார்கள். கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சி, ஆசியவில் உள்ள மிகப்பெரிய சிகப்பு விளக்கு பகுதிகளில் ஒன்று. இங்கே தன் வாழ்வியல் சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை சிண்டு பகுய் தனது கதையை பகிர்ந்துள்ளார். மிகவும் மோசமான சூழ்நிலையில் தங்கள் வாழ்க்கையை நடத்தும் திருநங்கைகள் பற்றி அறிந்துகொள்ள இந்த கதையை நிச்சயம் வாசிக்க வேண்டும்.

என் பெயரை மாற்ற உங்களுக்கு உரிமையில்லை. என் பெயரை நானே முடிவு செய்வேன் என்கிறார் 25 வயதான திருநங்கை சிண்டு பகுய். இவர் கொல்கத்தா மாநிலத்தில் உள்ள சோனாகாச்சி பகுதியில் பகுதி நேர பாலியல் தொழிலாளியாக பணிபுரிகிறார். தன் 21ஆவது வயதில் தாயை இழந்த சிண்டு, தந்தை, பாட்டி, அக்கா மற்றும் அக்கா குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சிண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசு சார்பற்ற அமைப்புடன் இணைந்து திருநங்கைகளின் உரிமைக்காக போராடி வருகிறார். இதைதான் சிண்டு முக்கியமான வேலையாக கருதுகிறார். பாலியல் தொழில் செய்வது அவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே. இதுகுறித்து சிண்டு, “நான் முழுநேர பாலியல் தொழிலாளி அல்ல, ஒரு மாதத்துக்கு 4 முறை அந்த வேலையில் ஈடுபடும் சூழலில் இருக்கிறேன். நான் விபச்சார விடுதிகளுக்கு செல்வதில்லை. அழைப்பு வரும்
வேளையில், ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்வேன்” என்று கூறினார்.

சிண்டுவை பொறுத்தவரை திருநங்கைகளை வியாபாரப் பொருட்களாக பயன்படுத்துகிறது அல்லது அந்த சூழலுக்கு தள்ளுகிறது இந்த சமூகம். இதுபற்றி அவர், “வற்புறத்துதலால் என் பள்ளி படிப்பை துறந்தேன். என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவாக இல்லை. இந்த சமூகம் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. அதானால் எனக்கு வேறு வழியில்லை, ஏழை குடும்பத்தில் பிறக்கும் திருநங்கைகள் இங்கே முறையான கல்வி கிடைக்காது. அவர்களுக்கு பிடித்த வேலையை செய்ய முடியாது. எங்களை பாலியல் தொழிலாளியாக மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் பாலியல் தொழிலில் எங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்த வேலையும் எங்களுக்கு இல்லாத பட்சத்தில், பாலியல் தொழிலே அதற்கான தீர்வாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

 பெற்றோரின் புறக்கணிப்பு

 

பிறப்பால் ஆண் பாலினத்தை சேர்ந்தவர் சிண்டு. ஆண் பிறந்ததால் அவரது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் சிண்டுவின் உண்மையான நிலையை அறிந்த அவர்கள் அதிர்ச்சியாகி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து சிண்டு, “இங்கு எந்த பெற்றோரும் தன் குழந்தை பாலினம் மாறுவதை ஏற்றுக் கொள்வதில்லை. என் பெற்றோர் என்னை ஏற்றுக் கொள்ளாததில் எனக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. அவர்களுக்கு நான் பாலியல் தொழிலாளி என்பது தெரியாது. திருநங்கைகள் உரிமைக்காக போராடும் ஆர்வலர் என்று மட்டுமே அவர்களுக்கு தெரியும். இதுபோல் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயங்கள் ஏராளம். சமூகம் மாறினால்தான் இந்த விசயங்களும் மாறும்” என்று கூறினார்.

சிண்டு 8ஆம் வகுப்பு படிக்கும்போது பள்ளியை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார். அது ஒரு ஆண்கள் பள்ளி. இவருடைய பாலினம் பற்றி தெரிந்த சக நண்பர்கள் அவரை கேலி செய்வது, பாலியல் தொந்தரவு கொடுத்தது பற்றி அவர் நினைவு கோருகிறார்.

பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு ப்ளைவுட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார் சிண்டு. இதுபற்றி அவர், “அந்த தொழிற்சாலையில் சேரும்போது எனக்கு 15 வயது. அங்கும் எனக்கு மோசமான அனுபவம்தான் மிஞ்சியது. அங்கு பணிபுரியும் சக ஊழியர்களால் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டேன். இந்த சம்பவங்கள் என்னை மனதளவிலும் உடலளவிலும் பாதித்தது. இந்த வேலையிலிருந்து விலகி பாலியல் தொழிலை தேர்வு செய்தேன். நான் வாழ்வதற்காக அதை தேர்வு செய்ததால் அதனை தொழில் என்று சொல்லமாட்டேன்” என்று தெரிவித்தார்.

 

பாலியல் தொழிலாளிகளின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்பு

பாலியல் தொழிலாளிகளின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் கொடுமைகள் ஏராளம். இதுபற்றி சிண்டு, “பாலியல் தொழிலாளிகள் மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதில் சில ஆண்கள் எங்களை தவறாக பயன்படுத்த நினைப்பார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த சமூகத்தில் மரியாதை வேண்டும், என்னை உடலுறவுக்கு அழைக்கும் ஆண்களும் அதை எதிர்பார்ப்பார்கள். நாங்கள் நினைத்தால் அவர்களை தொந்தரவு செய்ய முடியுமென்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால் திருநங்கைகளான எங்களைவிட இங்கே பெண்கள்தான் அதிக பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள்” என்று கூறினார்.

ஆனால் சோனாகாச்சியில் உள்ள தர்பார் மகிலா சமன்வயா என்ற பாலியல் தொழிலாளிகள் அமைப்பின் செயலாளர் பாரதி டெய், “பாலியல் தொழிலாளிகளுக்கு எதிரான வன்முறையில் அதிகம் பாதிக்கப்படுவது திருநங்கைகள்தான். காவல்துறையினர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள்” என்று தெரிவிக்கிறார். காவல்துறையின் கொடூர செயல்களால் திருநங்கைகள் அதிகம் பாதிக்கப்படுவதை சிண்டுவும் ஏற்றுக்கொள்கிறார். இதுபற்றி சிண்டு, “போலீஸார் எங்களை மனிதராக கூட நினைப்பதில்லை. நான் ஒரு திருநங்கை வன்புணர்வு செய்யப்பட்டதாக அவர்களிடம் புகார் அளித்தால், வன்புணர்வு செய்ய அங்கு என்ன இருக்கிறது?, நீ ஒரு பாலியல் தொழிலாளிதானே? … என்ற கேள்விகள் என் மீது பாயும்” என கூறுகிறார்.

பாரதி டெய் தங்கள் அமைப்பின் முயற்சியால் இப்போது திருநங்கை பாலியல் தொழிலாளிகளுக்காக குரல் கொடுக்கும் ‘ஆனந்தம்’ என்ற அமைப்பு உள்ளது. காவல்துறையினர் திருநங்கைகளின் புகாருக்கு செவி சாய்க்கவில்லை என்றால் இந்த அமைப்பு அவர்களுக்காக போராடி வருகின்றனர்.

 

நான் ஏன் கனவுகளை சுமக்க வேண்டும்?

எனக்கு நல்ல கல்வி, நல்ல வேலை கிடைத்தாலும் இந்த சமூகம் என்னை வித்தியாசமாக தான் நடத்தும் என சிண்டு கவலை கொள்கிறார்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் ஒருநாளில் 500 முதல் 1000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஆனால் திருநங்கைகளின் உரிமைக்காக போராடும் சிண்டுவின் மாத சம்பளம் 9,000 ரூபாய் மட்டுமே.

இதுபற்றி சிண்டு, “பாலியல் தொழிலில் நிரந்தரமான சம்பளம் என்று எதுவும் கிடையாது. கடுமையாக பேரம் பேசும் பழக்கம் இங்கே உள்ளது. நான் 500 ரூபாய்க்கு ஒப்புக்கொள்ள மறுத்தால், வேறொருவர் 400 ரூபாய்க்கு ஒப்புக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இதுபோல் சில நேரங்களில் சம்பாதிக்க வேண்டிவரும். அதேபோல் வாடிக்கையாளர்கள் எங்களை அதிகமாக ஏமாற்றுவார்கள். இரண்டு நபர் எனக் கூறி அழைத்து செல்வார்கள், அங்கே நான்கு நபர்கள் இருப்பார்கள். இதுபோன்ற துயரங்களையும் சந்திக்க வேண்டும்” என்று கூறினார். ஒருவேளை பாலியல் தொழிலாளியாகவே வாழும் நிலை வரும் பட்சத்தில் நான் ஏன் கனவுகளை சுமக்க வேண்டும்?” என்று கேட்கிறார்.

சிண்டு நிச்சயம் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதே அவரின் லட்சியம், அதிகமாக பணம் சேர்த்தால் எதுவும் அதிசயம் நிகழ வாய்ப்புள்ளதென அவர் நம்புகிறார்.
இந்த கதை முழுவதும் www.youthkiawaaz.com என்ற செய்தி தளத்துக்கு சிண்டு கூறியது. தீப்தத்தா மொகந்தி ரேய் என்ற மும்பை பத்திரிக்கையாளரால் தொகுக்கப்பட்டவை. இவர் அச்சு பத்திரிகையில் ஆறு வருட அனுபவம் உள்ளவர். சமூகம் மற்றும் மனிதர்களின் கதைகள் மீது ஆர்வம் கொண்டவர்.

நன்றி: www.youthkiawaaz.com

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *