பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்!


 

 

 thanks -http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11777&id1=9&issue=20170217

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு எதிராக போராடி வருபவர் இவர்தான்!
திவ்யாவைப் பற்றி பேசியே ஆக வேண்டும். மக்களுக்கு இடர்ப்பாடு நேரும்போதெல்லாம் நேரம் காலம் பாராமல் வந்து நிற்கிறார். பரப்புரை, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், தீர்க்கமான பேச்சு, தெளிந்த சிந்தனை என இவரைப் பார்த்து திணறுகிறது அதிகாரவர்க்கம்! சொந்த விருப்பங்களை தள்ளி வைத்துவிட்டு மக்களுக்காக அர்ப்பணம் செய்ய விரும்புவது முற்றிலும் மேலான காரியம்.

எதுவொன்றுக்கும் விளம்பரம் தேடுபவர்களுக்கு மத்தியில் மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களுக்காக ‘கக்கூஸ்’ ஆவணப் படம் எடுத்திருக்கிறார் திவ்யபாரதி. சமரசமின்றி துணிவும், அறிவுமாய் போராடும் இவரது ஆவணப் படத்தின் முன்னோட்டமே அடி மனதை கிள்ளிப் போடுகிறது. நெகிழவைத்து, நேசிக்க வைத்து, கலங்கவைத்து எனப் போகும் இந்த ஆவணப் படத்தைக் காண நேர்வதே உயிர்த்திகில்.

 


அன்பைத் தவிரவும், நியாய உணர்வே முக்கியமானது என இந்த ஆவணப்படம் அழுத்தமாகச் சொல்கிறது. ‘‘‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்கிற தத்துவம்கூட தோற்றுப் போனது சாதியிடம்தான். உலகமே கிராமமாகி வரும் சூழலிலும் நாம் சாதியின் முன் மண்டியிட்டுக் கிடக்கிறோம். ஜனனம் முதல் மரணம் வரை நம்மைத் துரத்துகிறது சாதி! ‘கழிவுநீர்த் தொட்டியை தூய்ைமப்படுத்தும்போது விஷவாயு தாக்கி சாவு’ என்ற சிறிய செய்தியை கணப்பொழுதில் படித்துவிட்டு தாண்டிப்போய் விடுகிறோம்.

நானும்கூட அப்படிச் சென்றவள்தான். மதுரையில் கிடைத்த அனுபவம் என்னை அடியோடு மாற்றிவிட்டது. கதறி அழும் அந்தத் தொழிலாளர்களின் இள மனைவிகள் என்னைப் பதற வைத்தார்கள். அவர்களுக்காக சிறிய போராட்டம் நடத்திவிட்டு தற்காலிகமான உதவிகள் செய்துவிட்டு வேறு வேலை பார்க்கப் போக முடியவில்லை. இதற்கான ஓர் அடிப்படை அறிதல்தான் ‘கக்கூஸ்’ ஆவணப்படம்.

தமிழகம் முழுவதும் பயணம் செய்து காட்சிப்படுத்த வேண்டியிருந்தது. இந்த ஆபத்தான தொழிலின் மீதான அக்கறையை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. முயற்சியை முன்னெடுத்தபோது, அதற்கான சாத்தியங்கள், கடினங்கள், போதாமைகளைத் தாண்டித்தான் வந்தேன்…’’ என்று சொல்லும் திவ்யபாரதி, துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சட்டம் நிறையவே மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கான பலன்கள் வேண்டியவர்களுக்கு போய்ச் சேரவில்லை என்கிறார்.

‘‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சமத்துவம் பேசுகிறது வள்ளுவம். ‘உன் பிறப்பே அவமானகரமானது. நீ வாழத் தகுதியற்றவன்’ என்கிறது இந்தத் தொழிலாளர்களின் உண்மை நிலை. அவர்கள் மேல் சுமத்தப்படும் வேண்டாத அடையாளங்களும், அவமானங்களும் நிறைய! ஆரம்பத்தில் இந்த மக்களே என்னை நம்பவில்லை. பிறகு என் போக்கைப் புரிந்து தேவையான ஒத்துழைப்பை கொடுத்தார்கள். நான் இந்தப் பணியைத் தொடங்கியபோது ஆரம்பித்த துப்புரவுத் தொழிலாளிகளின் மரணம் இன்றைக்கு 27 ஆக உயர்ந்திருக்கிறது. அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள்.

மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்துகொண்டு நாம் சிறந்து வாழ உயிர் கொடுப்பவர்கள். ஒவ்வொருவரும் அடுத்தடுத்து இந்தத் தொழிலை மனம் விரும்பாமலே செய்து வருகிறார்கள். வாழ்க்கையின் நெருக்கடி அவர்களை இதில் கொண்டுபோய் நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது. நமக்கு வார்த்தை தவறி விழுந்துவிட்டாலே காயப்படுகிறது மனசு. அவர்கள் வாழ்க்கை தவறி இதில் போய் விழுந்து விட்டார்கள். அவர்களின் வேதனை இன்னும் தொடரவேண்டுமா? ஒருவருக்கொருவர் எண்ணங்களால் முரண்படலாம்.

அது இயல்பு. ஆனால், எவரொருவர் மனதும், வாழ்க்கையும் வர்ணங்களால் புண்பட வேண்டாமே! ஒரு வீட்டில் திருமணமான மூன்று மாதத்தில் கணவனை இழந்த பெண்ணைக் கண்டேன். அவர் நடுங்கும் விரல்களுடன், துளிர்க்கும் கண்ணீருடன் திருமண ஆல்பத்தை புரட்டிக் காட்டிய சோகம் என் வாழ்க்கையின் இறுதிவரை துரத்தும். துப்புரவுத் தொழிலாளர்களின் அவலம் இந்த ஆவணப்படத்தில் தெளிவாக முன் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் பெண்களே அதிகம் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

இதற்கான கூலிக்காக அவர்கள் சண்டை போட மாட்டார்கள். அதேநேரம் உழைக்கவும் தயங்குவதில்லை. இவ்வளவு வேதனைகளுக்குப் பிறகும் அவர்களின் மேலதிகாரிகளால் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படுகிற கொடுமையும் நடக்கிறது. நம் தூய்மைக்கான ஓர் அங்கமாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நடப்புலகில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கௌரவத்திற்காக மன்றாட வேண்டியிருக்கிறது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர்களுக்கு வேண்டிய உரிமைகளை பெற்றுத்தராமலும், கேட்டாலும் தர முடியாமலும் நாம் இருக்கிறோம். நம்மைப் போன்ற மனிதனை மலம் அள்ள வைத்துவிட்டு அதற்குரிய குற்ற உணர்வே இல்லாமல் நடமாடுகிறோம். இந்த ஆவணப் படம் வெளியான பிறகு அவர்களின் உரிமைகள் பேசப்பட்டால் சந்தோஷப்படுவேன்.

அவர்களுக்கு வெளிச்சம் கிடைத்தால் மகிழ்வேன். அவர்களின் வாழ்க்கைத் துயர் இனியாவது பேசப்படும் என நம்புகிறேன்; எதிர்பார்க்கிறேன்…’’ என்கிற திவ்யா, மக்களிடமிருந்தே பணம் பெற்று இந்த ஆவணப் படத்தை எடுத்திருக்கிறார். இதற்காக சக ேதாழர்களிலிருந்து ஆரம்பித்து முகநூல் வரை நீண்ட உதவிக்கரங்கள் நிறைய. இந்த எளியவர்களின் வாழ்வும், பயணமும் அழகு பெற போய்க் கொண்டே இருக்கிறார் திவ்யா. இளைய தலைமுறைதான் இனி நம்பிக்கை!         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *