பொதுச் சமூகமே… ஆண் உளவியலை உதறித் தள்ளு!’

  ஓவியா

-http://www.vikatan.com/news/tamilnadu/

p14c_18354அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரைச் சேர்ந்த நந்தினி, தன்னை காதலிப்பதாக கூறப்பட்டதை நம்பியதால், கர்ப்பமாக்கப்பட்டு, பாலியியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில், மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். நந்தினிக்கு நீதி வேண்டி, பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

நந்தினியின் கொலையை எப்படி பொதுச் சமூகம் அணுக வேண்டும் என்பது குறித்து, பெண்ணியச் செயல்பாட்டாளர் ஓவியாவிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

“நந்தினிக்கு ஏற்பட்ட கொடுமையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?”

“நந்தினி கொலை செய்யப்பட்டிருக்கும் தன்மையை நான் ஆண், பெண் எனும் நோக்கில் பார்ப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறேன். இந்த விஷயத்தில் சாதி என்பது இல்லையா எனக் கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது. முதன்மையாக இருப்பதை நான் குறிப்பிடுகிறேன். சாதியின் இடம் பற்றி பிறகு வருகிறேன். ஏனெனில் எந்தவொரு விஷயத்தையும் ஒற்றைக் கோணத்தில் பார்ப்பதோடு நின்றுவிடக் கூடாது.  காலங்காலமாக பெண்ணை ஒடுக்கி வைப்பதும், அவள் உடல்மீது வன்முறையை செலுத்துவதும் ஆணின் வழக்கமாக இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியே நந்தினி கொலை வரை நீண்டிருக்கிறது. இந்த ஆண் உளவியலை பிரதானமாக பேச வேண்டிய அவசியம். இதற்கு அடுத்துதான் சாதி வருகிறது. நந்தினி தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பெண், குற்றவாளி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்.  ஆதிக்க சாதி அல்லது அந்தப் பகுதியில் பரந்துபட்டிருக்கும் சாதியில் உள்ள ஒரு பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கி, ஏமாற்றி, கொலை செய்துவிட முடியும் எனும் துணிச்சல், இந்தக் குற்றவாளிக்கு வராது. ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் என்கிற ஏளனம்தான் நந்தினியைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கிறது. இவர்களை ஏதேனும் ஒருவகையில் எளிமையாக கையாண்டுவிடலாம் எனும் தைரியமும் இதற்கு காராணம். மேலும், விளிம்புநிலை மக்கள் காவல் நிலையம் செல்லும்போது எந்த வித மரியாதையும் இருப்பதில்லை. இந்த நிலையும் சேர்ந்துதான் நந்தினியை காவு வாங்கியிருக்கிறது.”

“நந்தினியை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும், நந்தினி அம்மாவிடம் தன் பிரச்னையைச் சொல்லியிருக்க வேண்டும் என்றெல்லாம் பலர் கருத்து கூறுவதைப் பற்றி…

“இதைத்தான் ஆணாதிக்க உளவியல் என்று சொல்கிறேன்

. நான் பங்கேற்ற தொலைக்காட்சி விவாதத்தில் நிர்மலா பெரியசாமியும் இதைத்தான் சொன்னார். ‘இந்துமுண்ணனி’ ராமகோபாலன் இதுபோன்ற கருத்தைச் சொன்னதாக கேள்விப்பட்டேன். பாதிக்கப்பட்ட பெண்ணை இன்னும் கேள்வியும் குறையும் சொல்பவர்களைப் பற்றி, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நந்தினி ஒரு சிறுமி. அவள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கிறாள். அதன் விளைவாக கர்ப்பமானதும் அவனை திருமணம் செய்யச் சொல்லி நிர்பந்தம் கொடுத்திருக்கலாம். அதன் விளைவே இந்தக் கொடூரக் கொலை. அவனுக்கு ஒரு துளிகூட நந்தினி மீது காதல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதைத்தான் வருகிற செய்திகள் சொல்கின்றன. அதுவும், அவன் நண்பர்களை வன்புணர்ச்சியைச் செய்ய வைத்த ஒன்றே போதும். அவனைப் பொறுத்த வரை, தோற்றத்தில் அழகாயிருந்த நந்தினியை அனுபவிக்க வேண்டும் ஆனால் கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது. அவ்வளவுதான். இந்த மனநிலையில் இருப்பவனை எப்படி அந்தச் சின்னப் பெண்ணால் எதிர்கொண்டிருக்க முடியும்.  எனக்கு இன்னொரு விஷயமும் பெரிய கவலையை அளிக்கிறது. 16 வயதுகூட முடியாத பெண் காதலின் பெயரால் ஏமாற்றப்பட்டு, கர்ப்பமாக்கப்பட்டு, கொலையும் செய்யப்பட்டிருக்கிறாள். இன்னொரு பக்கம் அதே வயதுள்ளவர்கள் நீட் தேர்வு குறித்து விவாதித்து வருகிறார்கள். சமூகத்தின் அடுக்குகள் பல உலோகங்களாக இயங்கி வருவதை நாம் உணர வேண்டியிருக்கிறது.”  

பெண்கள்

“இந்த வழக்கில் அரசின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?”

“அரசு, இதுபோன்ற வழக்கை சீரியஸாக அணுக வேண்டியது அவசியம்.  இந்தச் சமூகத்தில் ஒரு ஆண் காணாமல் போவதற்கும் ஒரு பெண் காணாமல் போவதற்கு நிறைய வித்தியாசம் உள்ளது. ஆணைப் போல சுதந்திரமாக இயங்குமளவுக்கு நமது அமைப்பு முழுதாக மாறிவிட வில்லை. பெண்ணைக் காணவில்லை என்று புகார் கொடுத்தால், காவல் துறையினரே. ‘உன் பொண்ணு எவனோடு ஓடிப்போனாள்’ எனக் கேட்பது எந்த விதத்தில் நியாயம். அவள் எவருடனோ ஓடிப்போயிக்கிறாள் என்பது அடுத்த விஷயம். காணாமல் போய்விட்டாள் அதைக் கண்டுபிடிக்கத்தானே காவல் துறை இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர வேண்டாமா?

இந்த நேரத்தில் இன்னோரு விஷயத்தை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. தனக்கு ஏதோ பாதிப்பு அல்லது யாரோ தாக்குகிறார்கள் என்று காவல் துறையை நாடும்போது, அவர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை என்றால் நாம் என்ன செய்வது? போலிஸே மக்களின் சொத்துகளை, உடலைச் சேதமாக்குவதையும் பார்க்க முடிகிறது! அந்தச் சூழலில் நாம் செல்ல ஓர் இடம் தேவைப்படுகிறது அல்லவா! அதுகுறித்த உரையாடலையும் தொடங்க வேண்டியிருக்கிறது. விளிம்பு நிலை மக்களிடம் இருப்பது உடலும் உயிரும் மட்டும்தான். மற்றவர்களைப் போல கார், பங்களா என்றெல்லாம் இல்லை. அந்த உயிரையும் உடலைப் பாதுகாக்க முடியாவிட்டால் இவ்வளவு பெரிய அமைப்புக்கு வேறு என்னதான் வேலை.”

“நந்தினி கொலை வழக்கில் கட்சிகள், இயக்கங்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்?”

“பலரும் நந்தினிக்கு ஆதரவாக இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இதை சாதி, கட்சி, இயக்கம் சார்ந்த ஒன்றிற்கு எதிர் அரசியலாக மட்டுமே குறுக்கிப் பார்த்துவிடக் கூடாது. இவை எல்லாம் குற்றவாளியைப் பாதுகாக்க களமிறங்கும் என்பதையும் கவனத்தில் கொள்வதைப் போலவே, இந்தப் பிரச்னை, ஆணாதிக்க உளவியலின் வெளிப்பாடு என்பதை உணர வேண்டும். இது ஒரே சாதிக்குள் இருக்கும் ஆண் – பெண் இருவரிடையே இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த உலகில் நடந்த முதல் கொடுமையே பெண் மீது நிகழ்த்தியதாகத்தான் இருக்கும். அதனால், பிரச்னையின் மையத்தை உணர்ந்து ஆண் உளவியலைச் சீராக்கும் விதத்தில், ஆண் பிள்ளைகளை வளர்க்கும் விதத்தில் தொடங்கி பல மாற்றங்களை நம் குடும்பத்தில், சமூகத்தில் கொண்டு வர முற்பட வேண்டும். “

இந்தச் சமூகம் பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான மனநிலைக்கு மாறட்டும்!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *