தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 1,2,3,4,5…..!

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் –    

யோகி-

 வேடந்தாங்கல் பறவைகள், தங்கள் பயணத்திற்காக காத்திருப்பது போல ஊடறு இணையத்தளம் மேற்கொள்ளும் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளப் பெண்ணியலாளர்கள் காத்திருப்பதை நான் உணர்வேன். அந்த உணர்தல் இரண்டாவது சந்திப்பிலேயே எனக்கு ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை என்றுதான் தோன்றுகிறது.

இரண்டாவது சந்திப்பைச் சந்திக்கவிருக்கும் எனக்கே இப்படி என்றால் 21 சந்திப்புகளை நடத்தி முடித்திருக்கும் ஊடறு இணையத் தளத்தின் ஆசிரியர் றஞ்சியின் மனநிலையை என்னவென்று சொல்வது. சில மாதங்களுக்கு முன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட றஞ்சி 2016-ஆம் ஆண்டுக்கான பெண்கள் சந்திப்பை மலேசியாவில் செய்யலாமா என்று கேட்டபோது என்னைவிட யாரும் மகிழ்ச்சியடைந்திருக்க வாய்ப்பு இல்லை.
முதல் பெண்கள் சந்திப்பில் எனக்கு ஏற்பட்ட அனுபவமும், அதன் பிறகு திட்டமிடப்பட்ட பயணமும் குறுகிய நாட்கள் என்றாலும், என் வாழ்க்கையிலிருந்து அதைத் தனியே பிரித்து எடுத்துவிட முடியாது. அந்த அளவுக்கு   முக்கியமான பயணமாகவும் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு போவதற்குமான திறவுகோலாகவும் அமைந்தது.

மீண்டும் தோழிகளை என் சொந்த மண்ணில் சந்திக்கப் போகிறேன் என்று நினைக்கும்போதே, மனதிற்கு அத்தனை சுகமாக இருந்தது. பெண்ணியச் சந்திப்புக்கு ஆவலாகக் காத்துக்கொண்டிப்பதும் தனிச் சுகம்.

முதல்முறையாக இப்படியான சந்திப்பை ஏற்பாடுச் செய்வதில் ஏற்பட்ட  படிப்பினை, சோர்வுகள் அனைத்தும் எனக்கு அனுபவங்களையே ஏற்படுத்திக் கொடுத்தன. அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தி, சோர்விலிருந்து நிவாரணம் கொடுத்த றஞ்சி எனக்கு ஓர் ஊக்க மருந்தாகவே இருந்தார்.

பினாங்கில் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் சில தோழிகளை முதல் முறையாகவும் சில தோழிகளை இரண்டாவது முறையாகச் சந்தித்தாலும் என் வரையில் அவர்களோடு பல ஆண்டுகளாகத் தொடர்பில் உள்ளவர்கள் போலவே எண்ணம் இருந்தது. இந்தச் சந்திப்பில் கலந்துகொள்பவர்களின் தனிச்சிறப்பாகவும் அது அமைந்துவிடுகிறது.

கடந்த வருடம் மலையகத்திலிருந்த இடவசதியும், பெரிய அரங்க வசதியும் இல்லாமல் இருந்தாலும், சின்னக் கூட்டுக்குள் கூடிவாழும் பறவைகளைப் போலச் சுமார் 25 தோழிகள் அந்த இடத்தில் தங்கிக் கொண்டோம். அதில் இரண்டு குழந்தைகள் வேறு இருந்தனர்.

ஆஸ்ரோலியாவிலிருந்து ஆழியாளும் சௌந்தரியும் ஆகஸ்ட் 24-ஆம் தேதியே பினாங்கில் வந்திறங்கினர். அவர்களை வரவேற்க மணிமொழி 24-ஆம் தேதியே கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டிருந்தார். சுவிஸிலிருந்து றஞ்சி 25-ஆம் தேதி காலையில் பினாங்கு வந்திறங்கிய நேரம் நான் அவருக்காகப் பினாங்கு விமான நிலையத்தில் காத்துகொண்டிருந்தேன். கிட்டதட்ட சரியாக 15 மாதங்களுக்குப் பிறகு அம்மாவை (இது கொஞ்சம் மிகையாகத் தோன்றலாம், எனக்கு இதைத் தவிர வேறு சொல்ல தெரியவில்லை) சந்திக்கப்போகும் தருணம் எப்படிதான் இருக்குமோ என நினைத்துக் கொண்டேன். நேரம் செல்லச் செல்ல என் கண்கள் வருகையை நோக்கியே நிலைகுத்தி நின்றன. றஞ்சி வரவே இல்லை. முகவரி இல்லாமல் வந்த ஒரு தொலைபேசி அழைப்பையும் நான் எடுக்கவில்லை. எந்த நொடியையும் வீணடிக்க நான் விரும்பவில்லை.

ஆழியாள் (அம்மா)-வின் மலேசிய  தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “றஞ்சி வந்துவிட்டார்; நீங்கள் எங்கே இருக்கிங்க?” என்று. என்னைத் தாண்டி றஞ்சி எப்படிப் போனார் என்ற கேள்வியுடன் ஓடினேன். புன்னை மாறாமல் றஞ்சி நின்றுகொண்டிருந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரிந்த போது,  தொடரும் என்று எழுதப்படாத வரி, பினாங்கு விமான நிலையத்தில் தொடங்கியது போல இருந்தது. அன்றுதான் ஆழியாள், சௌந்தரி இருவரையும் நான் முதன்முதலில் பார்க்கிறேன்.

இப்படியாக நாங்கள் இணைந்த வேளையில் சந்திப்புக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினோம். மறுநாள் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சந்திப்பில் கலந்துகொள்ளும் எல்லாத் தோழிகளின் கரமும் இணைந்தது. முக்கியமாக நான் எதிர்பார்த்திருந்த என் செல்ல விஜயா அம்மாவும் பாசத்திற்குறிய செல்லத்தங்கை பாரதியும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். வழக்கறிஞர் ரஜனி மஹி இருக்கும் இடமெல்லாம் சிரிப்பொலி எதிரொலிக்கும். வந்திறங்கிய நொடியிலிருந்து அவர் அதற்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அதே கொஞ்சலோடும் பகடியோடும் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டினார்.

கவிஞர் மாலதி மைத்திரியின் அறிமுகம் இருந்தாலும் அவரை அன்றுதான் முதன்முதலில் பார்த்தேன். கல்பனா (அம்மா)வின் அறிமுகமும் அன்றுதான் கிடைத்தது. எளிமையான  மனுஷி அவர்.

மறுநாள் நடக்கவிருக்கும் சந்திப்பு மற்றும் தற்போது தங்குமிடத்தில் இருக்கும் வசதியை எவ்வாறு பகிரப்போகிறோம் உள்ளிட்ட விஷயங்களை இரவு பகிர்ந்துக்கொண்டோம். பினாங்கு கடற்கரையின்  வானத்தில் விழித்திருந்த அரைநிலா, எங்கள்  பயணம் தொடர்பான கதைகளையும் சில மீள் கதைகளையும் இரவு முழுதும் கேட்டுக் கொண்டிருந்தது.

 

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 2

  27 ஆகஸ்ட், சனிக்கிழமைப் பினாங்கில் எப்போதும் போலத்தான் சூரியன் எழுந்தது. ஆனால், அந்த விடியலுக்கு முன்பே சோம்பல் 27 ஆகஸ்ட், சனிக்கிழமைப் பினாங்கில் எப்போதும் போலத்தான் சூரியன் எழுந்தது. ஆனால், அந்த விடியலுக்கு முன்பே சோம்பல் முறித்து எழுந்த ஊடறுவுக்கும் ஊடறு பெண்களுக்கும் அன்றைய நாள் மலேசில வரலாற்றில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக மாறும் என்று அந்தச் சூரியனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

புள்ளி வைத்துப் போட்ட ரங்கோலியைப் போல, கொஞ்சமும் பிசுறு இல்லாமல் நேர்த்தியாகத் தோழியர் தங்கள் வடிவம் உணர்ந்து அன்றைய விடியலை அலங்கரித்தனர். காலை 9.30 மணிக்குத் திட்டமிட்டபடியே பெண்கள் சந்திப்பின் முதல் அமர்வுதொடங்கியது.

எளிமையான அறிமுகத்தோடு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த நான்(யோகி), முதல் அமர்வை நடத்துவதற்குக் கவிஞர் புதியமாதவியை (அம்மாவை) அழைத்தேன். அதுவரை அவரின் அமர்வில் நடக்கவிருக்கும்  அமர்வு எதைக் குறித்து என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒன்றுகூடிய  தோழியரில் அதிகம் பேசாமல், காணும்  அனைத்தையும் உள்வாங்கும் பாத்திரம்தான் புதியமாதவி. அவர் ஏற்று நடத்தும் அமர்வில் எப்போதும் ஓர் எதிர்பார்ப்பு இருப்பது இயற்கையானது.
 

மைக்கைக் கையில் எடுத்தவர், இந்தச் சந்திப்பின் காரணகர்த்தாவான றஞ்சியை அழைத்தார். றஞ்சியும் அதைச் சற்றும் எதிர்ப்பார்க்காதவறாகப் புறம் வந்தார். மெல்லிய சிரிப்பை முகத்தில் கொண்டு, தொடர்ந்தார் புதிய மாதவி.

“வெற்றிகரமாக ஊடறு பல  பெண்கள் சந்திப்புகள் நடத்திய பிறகு, அதுகுறித்தான கேள்விகளும், சந்தேகங்களும் ஆரூடங்களும், கட்டுக் கதைகளும் கூடவே நம்பிக்கைகளும் வளர்ந்துவரும் வேளையில் சில கேள்விகளுக்கு இந்தச் சந்திப்பில் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.  

நான் இதுவரை பார்த்த நேர்காணலில் மிக அழகான, ரத்தமும் சதையுமாக உணர்வுகளை முன்வைத்து பேசிய நேர்காணலாக அது அமைந்தது. சில பதில்கள்கள் கூடியிருந்த தோழிகளுக்கு ஆச்சரியத்தையும் அதே வேளையில் தெளிவுகளுக்கான கதவுகளையும்  திறந்துவிட்டது.  மனம் திறந்து றஞ்சி பதில் அளிப்பதும் அதன் தொடர்ச்சியான புதியமாதவி கேள்விகளும் இச்சூழலுக்குத் தேவையான ஒன்றாக அமைந்ததில் ஆச்சரியமில்லை என்றே தோன்றுகிறது.  றஞ்சி மற்றும் ரவி ப்பாவின் காதல் அனுபவம் மிக அழகு.  (செயற்பாட்டாளர்களின் காதல் கதைகளை கேட்க வேண்டும் தோழர்களே.  சினிமாத்தனம் இல்லாத காதலையும் திருமணத்தையும் அவர்கள் எப்படி கண்டடைந்தார்கள் என்பதையும் பதிய வேண்டும். ) றஞ்சியின் அனுபவப் பகிர்வுக்குப் பிறகு பெண்கள் உடையாடல் மிகுந்த உற்சாகமாகத் தொடங்கியது.

 

-பெண் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,

-பணியிடத்தில் பெண்களும் உரிமைகளும்,

-எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண்

என்று இலங்கை தோழிகள்  மிக முக்கியமான தலைப்புகளில் பேசினார்கள்.

என்ற தலைப்புகளில் காந்திரமான  கட்டுரைகளும்  உரையாடல்கள் தொடங்கப்பட்டன. அந்த உரையாடலுக்கு மாலதி மைத்திரி தலைமை ஏற்றார். இந்தச் சந்திப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது தங்கை பாரதியின் உரை. ஊடகத்துறையில் கல்வி பயின்றிருக்கும் பாரதி, ஊடறு சந்திப்புக்கு புதியவள் என்றாலும் எதிர்காலத்தில் தனக்கான இடத்தைத் தேடி பிடிப்பாள் என்ற நம்பிக்கை விதையை எங்களுக்குள் விதைத்தாள்.

 

மதிய உணவுக்குப் பின்பான, இரண்டாம் அமர்வை வழக்கறிஞர் ரஜனி மஹி வழிநடத்த,

-இலங்கை முஸ்லிம் பெண்களுக்கிடையே அதிகரித்து வரும் விவாகரத்து பிரச்சனைகளும், தீர்வு முன்மொழிவுகளும்,

-நானும் என் கவிதையும்,

-பெண்களின் வாழ்க்கையில் கலாச்சாரத்தின் தாக்கம்,

பாலியல்தொழில் மீதான பெண்ணியப் பார்வை

குறிப்பாக ஜஸீமா சாதாரணமாகப் பேசும்போது இருக்கும் கனிவு, தனது காந்திரமான படைப்பை வைக்கும்போது வேறொரு பெண்ணாக மாறி தெரிகிறார். குரலில் மாறும் கம்பீரம் யாரையும் முதுகை நாற்காலியில் அமர்த்திக் கதைகேட்க வைக்காது. நிமிர்ந்து அமர்ந்து புருவங்கள்  சுறுங்கி நெற்றி இறுகி பின் தளர்த்தியும் விடுகிறது.

( இந்த இடத்தில் என் அருமை தோழி லறீனாவையும் நினைவு கூறுகிறேன். கடந்தாண்டு ஊடறுவில் அவள் பேசிய விதமும் இவ்வாறானதுதான்).

இந்த அமர்வை மேலும் சுவையூட்டிய பெருமை நிச்சயமாக  வழக்கறிஞர் ரஜனியைத்தான் சேரும். தோழிகளின் படைப்புகளில் வைத்த ஆதங்கத்தில்  தற்போதுள்ள பெண்களின் அவலநிலையை அறிந்துகொள்ள முடிந்தபோது அதிலிருந்து சட்டென யாராலும் எழுந்து வர முடியவில்லை. ஆனால், ரஜனி இந்தச் சூழலை மிக அழகாகக் கையாண்டு எங்களை மீட்டெடுத்து அடுத்தப் படைப்புக்குள் கொண்டு சென்றார். அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வு தமிழ்நாட்டில் யாரும் கண்டிருக்கிறார்களா தெரியாது. ஊடறு பெண்களோடு அவர் இருக்கும்போது வெளிப்படும் அவரின் உடல்மொழியும் வாய் மொழியும் அதனோடு அவர் மிகச் சாதாரணமாகச் சொல்லும் விஷயங்களும் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட மாட்டார்கள்.

சந்திப்பின் மூன்றாவது அமர்வு மிக மிகப் பெர்சனல் விஷயங்கள் கொண்டதாகவும், உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் வெளிவராத ஓர் உருண்டையைப் பிடுங்கி வெளியில் எறியும் படியும் அமைந்தது. இப்படியான சந்திப்புகள் இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக அந்த அமர்வுக்குப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். வெளியில் கொட்டிய பிறகு மனம் அத்தனை லேசாகிறது. இனி என்னிடம் ஒலித்துவைக்க எதுவும் இல்லை என்ற  ஏதோ திருப்தி.

மனம் திறத்தல் அமர்வுக்குப் பிறகு அல்லது அமர்ந்திருக்கும் வட்டத்திலிருந்து வெளியேறிய பிறகு கேட்ட ரகசியங்கள்  காற்றோடு கலக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. பெண்களிடம் ரகசியம் சொல்லக்கூடாது என்ற வார்த்தையை உடைத்து எறிவதற்கான காலம் இது எனத் தோன்றியது.

பெண்கள் தங்கள் பூதஉடலில் ஆடையணிந்து அலங்கரித்துக் கொண்டாலும், மனதின் சங்கடங்கள் அகற்றிய பிறகு அப்பழுக்கற்ற நிலையில் குழந்தைகளின் நிர்வாணத்தைப் போல அத்தனை அழகாக இருக்கிறார்கள்  அவர்களின் நிர்வாணத்துடன். அன்றைக்கு இரவில் வந்த நிலா இன்னும் கொஞ்சம் தேய்ந்திருந்தது.

 

 

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 3

 
28.8.2016
பெண்கள் சந்திப்பில் இன்று மிக முக்கியமான நாள். மலேசிய பெண்களின் உரையாடல்களையும் அவர்களின் சிந்தனையும் விவாதத்தையும் பொதுவில் வைக்கும் நாள். எங்களின் குரல்களை இன்று இந்தியாவும் அஸ்ரேலியாவும் இலங்கையும் கேட்க போகிறது. அதற்காக நான் தேடி தேடி தேர்வு செய்த பெண்கள் ஆளுமைகள். யாரும் பெரிய அளவில் வெளியில் அறியப்பட்ட பெண்கள் இல்லை என்றாலும் மலேசிய நாட்டிற்குள் அவர்கள் அனைவரும் ரொம்ப முக்கியமானவர்கள். அவர்கள் அனைவரையும் தனித்தனியே அறிமுகம் செய்து வைக்கும் கடப்பாடும் எனக்கு இருக்கிறது. அதற்கு முன்பு இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு கட்டுரைகளைச் சமர்பிக்க வேண்டும் எனக் குறைந்தது 50 பெண்களிடமாவது பேசியிருப்பேன். தற்போது இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பெண்களையும், மூத்த பெண் இலக்கியவாதிகள் சிலரையும்கூட நான் அணுகியிருந்தேன். அது ஒரு நல்ல அனுபவம் எனக்கு. எனக்குப் பயமா இருக்கு? எப்படிப் பேசுவது? வேறு யாரிடமாவது கேளுங்க? கொஞ்சம் யோசிக்க நேரம் கொடுங்க, நான் பேசவில்லை இப்படியாக  என் மலேசிய பெண்கள் கொடுத்த பதில்களில் நான் ஆச்சரியபட மாட்டேன். எம் பெண்களின் பெருந்தன்மையைப் பேசுவது எனக்கே மிகச் சங்கடமாக உள்ளதால் நான் கேட்டுக்கொண்டவுடன் பேசுகிறேன் என உடனே சம்மதம் தெரிவித்த தோழிகளை மிகப் பெருமையுடன் அறிமுகம் செய்துவைக்க  கடமை பட்டுள்ளேன்.

                                       

YB காமாட்சி


மலேசிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். (எதிர்க்கட்சி) சட்டமன்ற உறுப்பினர். சட்டமன்றத்தில் தமிழில் திருக்குறள் சொல்லி பதவி ஏற்ற முதல் தமிழ் பெண்.

ப.பிரேமா (டீச்சர்)
ம.இ.கா கட்சியின் வட்டார தலைவி. தேசிய முன்னணி (ஆளும் கட்சி) ஆதரவாளர். இடைநிலைப் பள்ளியின் ஆங்கிலக் கல்வி ஆசிரியை.

பி.எஸ்.எம் சிவரஞ்சனி

வணிக நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அகதிகளுக்குச் சட்ட ஆலோசனை வழங்கும் ஒரு அரசாங்க சார்பற்ற அமைப்பில் பணி புரிகிறார். மலேசிய சோசியலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் – தொழிலாளர் ஒருங்கிணைப்புப் பிரிவில் இருக்கிறார்.

ரமேஸ்வரி ராஜா

வட்டார நிருபர். ‘தென்றல்’ வார இதழின் ஆசிரியர் பிரிவிலும் இருக்கிறார்.

இவர்களோடு நானும் அன்றைய சந்திப்பை தொடங்குவதற்கு தயாரானோம்.
சிவரஞ்சனி, ரமேஸ்வரி  மற்றும் பிரேமா டீச்சர் ஆகியோர் முதல் நாள் நிகழ்ச்சியிலிருந்தே உடனிருப்பதால் அனைத்து தோழிகளிடத்திலும் சகஜமான சூழலை கொண்டிருந்தனர். ஆனால், சட்டமன்ற உறுப்பினரான YB காமாட்சி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்காகவே அவரது முக்கியமான கட்சி சந்திப்பை தியாகம் செய்துவிட்டு வந்திருந்தார். YB
காமாட்சியை நான் முதற்முறையாகச் சந்தித்கிறேன் என்பதும் குறிப்பிடதக்கது. YB என்றால் ( Yang Berbahagia)  மலாய் மொழியில் மாண்புமிகு என்று அர்த்தம். அதற்கு தகுந்த மாதிரி எந்த ஒரு பந்தாவும் இல்லாதவர் காமாட்சி.

‘மலேசிய ஊடக பெண்களும் ஊடகத்தில் பெண்களும்’ என்ற தலைப்பில் நானும் (யோகி)
‘மலேசியாவில் தனித்து வாழும் தாய்மார்கள்’ என்ற தலைப்பில் சிவரஞ்சனியும்
தமிழ்பெண்களின் அரசியல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் YB காமாட்சியும்
மலேசிய தமிழ் சமூகத்தில் தமிழ் சினிமாக்களின் பாதிப்பு என்ற தலைப்பில் பிரேமா டீச்சரும் கட்டுரைகளைச் சமர்பிக்க
‘நான் யார்?’ என்ற தலைப்பில் ரமேஷ்வரி கவிதை வாசித்தார். எங்கள் சந்திப்புக்கு றஞ்சி தலைமை தாங்கினார்.

மலேசிய பெண்களின் அமர்வில் மூன்று கட்சிகளைச் சேர்ந்த பெண்களின் கட்டுரைகளும் விவாதங்களும் அது தொடர்பான அவர்களின் பதில்களும் வந்திருந்த அயல்நாட்டு தோழிகளைக் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக YB காமாட்சி, ஆளுங்கட்சி அரசாங்கம் பெண்களுக்காக வழங்கியிருக்கும் சலுகைகள் குறித்துச் சாடுவதும் அதை ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரேமா டீச்சர் முழுமையாக ஆதரிக்காமலும் சிலவற்றை ஆதரித்தும் பேசி அமர்வை தீவிர படுத்துவதும் பார்ப்பதற்கு ஒரு அரசியல் கட்சி பிரச்சாரம்போலச் சூடு பிடித்திருந்தது விவாதம். தோழிகள் எழுப்பிய கேள்விகளில் மலேசிய அரசியல் நிலைபாடு குறித்தும் அரசாங்கத்தைக் குறித்தும் ஏறக்குறைய தெரிந்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது என்றே உணர்கிறேன். அதற்காகவே ஒரு கட்டுரைக்கு பின்பான கேள்வி பதில் அங்கம் அவசியமாகிறது என்பதை உணரவும் செய்கிறேன்.

தொடர் உரையாடலில் உஷ்ணம் தெரிக்கச் சின்னச் சின்னதாக மழைத்துளிகள் தூவத்தொடங்கிப் பின் பெருமழையாகப் பொழிய தொடங்கியது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடந்த வருடத்தின் பெண்கள் சந்திப்பின் போதும் இலங்கையில் மழை எங்களைத் தேடி வந்தது.

மழை பெண்களுக்கானதான ஒன்றோ எனப் பல தடவை சிந்தித்திருக்கிறேன். மனச்சங்கடங்களின்போது வரும் மழை, ஏன் மனதை ஆசுவாசப்படுத்துகிறது? ஒரு துயரத்தின் போது வரும் மழை, ஏன் பெருந்துயரத்தையே அள்ளி கொட்டுகிறது? ஒரு காத்திரமான உரையாடலை வைக்கும்போது வரும் மழை, ஏன் இன்னும் வீரியம் கூட்டுகிறது? மழையின் வேகமும் அமைதியும் அதன் சாரலில் தெரிக்கும் தாய்மையும் குழந்தை தனமும் எல்லாம் பெண்களுக்கானதேதான். எனக்கு எந்த சந்தேகமுமில்லை.
வெளுத்து கட்டிய மழை எங்களுக்கு எந்த இடையூரையும் செய்யவில்லை. எங்களின் நெருக்கத்தை அதிகப்படுத்தியே சென்றது.

அந்த நெருக்கத்தினூடே,  நான் எழுதிய ‘யட்சி’ கவிதை தொகுப்பு மறுவெளியீடு செய்யப்பட்டது. ‘யட்சி’ குறித்த அறிமுகத்தைப் புதிய மாதவி செய்தார். மிக மிக அழகான அறிமுகம் அது. ‘யட்சி’ என்றால் யார் நினைவுக்கு வருகிறார் என்ற கேள்விக்குத் தோழிகளிடத்தில் யோகிதான் நினைவுக்கு வருகிறார் என்ற பதில் என்னை நிலைக்கொள்ளாமல் செய்தது.   மேலும் ‘யட்சி’ என்பவள் யார் என்ற விளக்கம் புதியமாதவி குரலில் கூற கேட்பது தெரிந்த விஷயங்கள்கூடப் புதியதாகக் கேட்பதைபோலச் சூழலை ஏற்படுத்திவிட்டிருந்தது.

நான் எழுதிய வரைபவனின் மனைவி கவிதையும், ‘ஒரு கலைஞனின் மனைவி’ என்று கமலா தாஸ் எழுதிய கவிதையும் ஒப்பிட்டு பேசியது அழகு. மேலும் தனது அடையாளங்கள் குறித்துப் பல பெண்கள்  பேசியிருப்பதைக் குறித்தும் புதியமாதவி சுட்டிக்காட்டினார். ‘யட்சி’ அறிமுகத்திற்குப் பிறகு YB காமாட்சி அதை வெளியீடு செய்யப் பிரேமா டீச்சர் அதைப் பெற்றுக்கொண்டதும் என் வரையில் ஒரு வரலாற்று நிகழ்வாகவே காண்கிறேன். மிக அழகான புத்தகவெளியீடு எனக்கு நடந்ததுபோல வேறு யாருக்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை.

தொடர்ந்து அடுத்த அங்கமாக இந்தியாவிலிருந்து வந்த தோழிகளின் அமர்வு தொடங்கியது.

‘வழக்குகளில் பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்கள்’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் ரஜனியும்
‘அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் மாலதி மைத்ரியும்
‘பெருநகர வாழ்வில் தனியறை’ என்ற தலைப்பில் புதிய மாதவியும்
‘புலப்பெயர்வும் துவிதவெளியில் பெண்களும்’ என்ற தலைப்பில் ஆஸ்ரேலியாவை சேர்ந்த ஆழியாளும்
  தங்கள் கட்டுரைகளை முன் வைத்து உரை நிகழ்த்தினர். மிகக் காந்திரமான தலைப்புகளுக்கு ஏற்றமாதிரி அவர்களின் கட்டுரைகளும் காந்திரமாகவே அமைந்தது. மேலும், கேள்வி-பதில் அங்கமும் இந்த அமர்வில்தான் நீண்ட நேரம் பகிரப்பட்டது.

இந்தப் பெண்கள் சந்திப்பில் முக்கிய அங்கமாகவும் குறிப்பிட வேண்டிய அங்கமாகவும் அமைந்தது இறுதி அமர்வு. இலங்கையைச் சேர்ந்த அன்பு தோழி யாழினி நடத்திய கவிதை கூத்து. சில பெண்ணியக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பறையிசை வழங்கி தனது குரலிலேயே பாடி பதிவு செய்து அதைக் கூத்தாகவும் நடத்திக் காட்டினார். யாழியின் இந்தத் தனித்த நடனமும் முயற்சியும் நிச்சயமாகச் சிலாகிக்கக் கூடிய ஒன்றாகும். இந்த உழைப்புக்குப் பின் புதியமாதவி ஆலோசகராகச் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடதக்கது.

இப்படியாக 2016-ஆம் ஆண்டுக்கான ஊடறுவின் பெண்கள் சந்திப்பு இறுதிநிலையை எட்டியது. பல புதிய சொந்தங்களைச் சந்தித்த மகிழ்ச்சியிலும் புதிய தகவல்களைப் பெற்ற திருப்தியிலும் மலேசிய தோழிகள் அன்றைய நாளை முடித்துக் கொண்டு விடை பெற்றனர்.

பெண்ணிய உரையாடல் ஏற்பாட்டுக் குழுவினர்

 

அன்றைய இரவு அந்தத் தேய்நிலா மங்களான வெளிச்சத்தில் மேகத்திற்கிடையில் மறைந்துக்கொண்டிருந்தது.


 

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 4

வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த தோழிகளை போன்றுதான் எனக்கும் பிரமாண்டத்தைக் கொடுத்தது பினாங்கு மாநிலம். நான்  4-வது முறையாக பினாங்கு மாநிலத்திற்கு சென்றாலும் சேர்ந்தார்போல ஒரு வாரம் தங்கியிருந்ததும் அந்த மாநிலத்தோடு உறவாடியதும் இதுவே முதல் முறை.

தோழிகள் அனைவரும் அமைதியான மனநிலையில் இருந்தனர். காத்திரமான உரையாடல்கள், விவாதங்கள் முரண்பாடுகள் தீர்ந்து  ஆசுவாசிக்கும்  மனநிலை அது.  மழைக்காக திரண்ட கருமேகங்கள் கலைந்து தெளிந்து  நீல மேகம் சிரிப்பதைப்போல. பரிசுத்தமான இரவில் களங்கமில்லாத பௌர்ணமி நிலைவைப்போன்ற மனநிலை அது.   

அனைத்து தோழிகளிடத்திலும் அன்றைய  நாள் செடியில் பூத்த முதல் பூவைபோல  மலர்ந்திருந்தது.  இலங்கை தோழியர்களில் சிலர்  தங்கள் சொந்த திட்டத்தில் கோலாலம்பூரை சுற்றிப்பார்ப்பதற்கு கிளம்பினர்.  வழக்கறிஞர் ரஜனியும் அவசர அலுவல் காரணமாக முதல் நாள் இரவே இந்தியாவுக்கு பயணித்திருந்தார்.

 

 

எங்கள்  15 பேருக்காக  பா.சிங்காரம் பதிவு செய்த அந்த அழகிய பினாங்கு மாநிலம், இத்தனை ஆண்டுகள்  காத்திருப்பதைப்போன்று பிரம்மை எழுந்தது.  என் தோழிகள் அனைவரும் வரலாற்றை திரும்பி பார்க்கவைத்த பார்க்க வைக்கப்போகும் பெண்கள்.  இன்றைய விடியலில் ஒன்றாக  இணைந்து பினாங்கு மாநிலத்தில் தன் மூச்சுக் காற்றை, காற்றில் கலந்துவிட்டு போவார்கள் என  யாரும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். 
நாங்கள் அனைவரும் அமரக்கூடிய ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்து பினாங்கை சுற்றிவர புறப்பட்டோம்.  அந்தப் பயணத்தை மணிமொழி திட்டமிட்டார். தொடக்கமாக நாங்கள்  பகோடா என்று சொல்லக்கூடிய Kek Lok si  சீனக் கோயிலுக்குச் சென்றோம். பினாங்கிற்கு வரும் சுற்றுப்பயணிகள் நிச்சமாக பார்க்ககூடிய  கோயில் அது. கோலாலம்பூர் முருக சிலையைப்போன்று மிக பிரமாண்ட  சீன தெய்வ உருவச் சிலைகளை அங்கு பார்க்கலாம்.  நாம் பினாங்கு சாலையில் பயணிக்கும்போதே அடர்ந்த மலை புதர்களுக்கிடையில் கோனியன்  எனும் சீன பெண் தெய்வ உருவசிலை நம்மை பிரமிக்க வைக்கும்.

கோயிலின் மிக குறுகிய  நுழைவாயிலில்  நுழைந்து மேலே நடந்தால் இருபுறங்களிலும் சுற்றுப்பயணிகளுக்கென்று நிறைய நினைவுச்சின்ன பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.  கைவினை பொருட்கள், ஆடைகள், அலங்கார பொருட்கள், சிலைகள் என பலதரப்பட்ட பொருட்களை  பேரம்பேசி அங்கு மலிவாக வாங்கலாம்.  

முதல்முறையாக அந்தக் கோயிலுக்கு செல்பவர்களுக்கு ஒரு குழப்பமான மன நிலை இருக்கவே செய்கிறது. மலைப்பாம்புபோல நீண்ட நெலிந்த பாதையில் திடீரென தோன்றும் இருவழிப்பாதைகள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.  நீண்ட தூரம் வந்தப்பிறகே  Kek Lok si  நுழைவாயிலை அடைந்தோம்.

 

வாசலில் உடற்பேறு குறைந்த சீனப்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரைக் கடந்து செல்லும்போது இன்னும் பல பேர் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டு  வரிசையாக அமர்ந்திருந்தனர். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. நாட்டில் பணபலம் கொண்டவர்கள் சீனர்கள்தான். தங்கள் சமூதாயத்தை மேம்படுத்த அவர்களுக்குள்ளாகவே  நிறைய உதவி செய்துக்கொள்வார்கள். அதோடு பினாங்கு மாநிலம் எதிர்கட்சி அரசாங்கத்திடம் இருக்கும் மாநிலம்.  அதை கிட்டதட்ட சீன அரசாங்கம்  நடத்தும் மாநிலம் என்றே மலேசிய மக்கள்  விமர்சிப்பார்கள். மேலும் பினாங்கு, சீனர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலமும் கூட. இத்தனை அம்சங்கள் இருந்தும்  நிறைய பிச்சைக்காரர்கள் இருப்பதும் அதுவும் அவர்கள் சீனர்களாக இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியதோடு சங்கடத்தையும் ஏற்படுத்தியது.

அவர்களை கடந்து போகையில்  கோயிலின் சிலைகளும்  வழிபாட்டுத்தலங்களும் காண  கிடைக்கிறது.  மிக பிரமாண்டமான அந்த கோயிலை அவசர அவசரமாக பார்த்துவிட்டு வர முடியாது.  மலைமேல் இருக்கும் அந்த  கோயிலை மிக ரசனையோடு பார்த்தோமானால் இயற்கையோடு ஒன்றியிருப்பதை அறிய முடியும்.

தங்க நிறச் சிலைகளுக்கு முன் எரிந்துக்கொண்டிருக்கும்  ராட்ஷச ஊதிவத்திலும் மெழுகுதிரிகளும் விளக்குகளும்  முடிய முடிய எரியபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். நமக்கு மூட நம்பிக்கைகள் இருப்பதைப்போன்றே சீனர்களுக்கும் மூட நம்பிக்கைகள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அவர்களுக்கு நம்மை காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது எனலாம்.  வாஸ்து சாஸ்திரம், சகுனம், இறைவழிபாடு, ஆவி வழிபாடு உள்ளிட்ட விஷயங்களை அவர்கள் விளையாட்டாக நினைப்பதே இல்லை.  வண்ண வண்ண ரிப்பன்கள் தொங்கிக்கொண்டிருந்த மரத்தைப் பற்றி அதில் ஆர்வமாக ரிப்பன் கட்டிக்கொண்டிருந்த சீனரிடம் விசாரித்தேன். ஒரு வெள்ளி ஒரு ரிப்பன். மனதில் நினைப்பதை அந்த ரிப்பனில் எழுதி நன்றாக பிரார்த்தனை செய்த பிறகு கட்டச் சொன்னார். ‘வேதம் புதிது’ சத்தியராஜ் மாதிரி பகடியாக கேள்வி எழுப்பும் சமாச்சாரத்தை எல்லாம் நான் சீனர்களிடம் வைத்துக்கொள்வது இல்லை. முன் விளைவு பின் விளைவு எல்லாம் முன்னமே கொஞ்சம் பார்த்துள்ளதால் என் கேள்வியை நிறுத்திவிட்டு ரிப்பன்களை ஒரு பார்வையிட்டேன். எத்தனை எத்தனை ஆசைகளும் வேண்டுதல்களும் ரிப்பனாக தொங்கிக்கொண்டிருக்கிறது என்று பிரமிப்பாக இருந்தது. 

தோழிகளும் சமத்தாக அதிக கேள்விகளை எழுப்பாமல் கோயிலை ரசித்தனர். 

அந்த மலை கோயிலை கண்டு கழித்த நாங்கள் அடுத்து தெரு ஓவியங்கள் அமைந்திருக்கும் சாலைக்கு சென்றோம். பினாங்கில் இந்த தெரு ஓவியங்களை பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருந்தனர். நவீன பினாங்கை இந்த  தெரு ஓவிய விளம்பரங்கள் உண்மையில் அலங்கரிக்கத்தான் செய்கிறதா?

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *