மெளனத்தின் பிளிறல் – ஒரு வாசிப்பு அனுபவம் . சுப்ரா வே சுப்ரமணியன்

puthiyamathavi 2கவிதைகள் , சிறுகதைகள் , மொழியாக்கங்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் புதியமாதவி அவர்களின் எழுத்துகளை , பல்வேறு தருணங்களில் தனித்தனியே வாசித்திருந்தாலும் , கவிதைகளின் மூலமாக வெளிப்படும் அவரது எழுத்தின் வீச்சை ஒரே தொகுதியாக வாசிக்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சி வேறு விதமாகத்தான் உள்ளது .
” எழுத்து “ வெளியீடாக வெளிவந்துள்ள ” மெளனத்தின் பிளிறல் “ தொகுப்பில் உள்ள 46 கவிதைகளிலும் முதல் வாசிப்பில் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு வகை அறச்சீற்றமே தென்பட்டாலும் , மறுவாசிப்பில் ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு பரிமாணங்களில் விரிகின்றது .
*************************
சாத்தான்கள் வேதம் ஓதலாம்
வேதங்களே சாத்தான் ஆகலாமா ?
**********************************************
சமூகம் குறித்த சீற்றத்தை , மென்மையான வார்த்தைகளாலும் வெளிப் படுத்த முடியும் என உணர்த்தும் நிறைய கவிதைகள் தொகுப்பெங்கும் சிதறிக் கிடக்கின்றன .
******************************************************
மரணம் இல்லாத வீட்டில் கடுகு வாங்க என்னை
அனுப்பாதே….
யுத்தமில்லா பூமியில் எங்காவது உன்னைச் சந்தித்தால்
அப்போது வருவேன் ….
மீண்டும் உன் காதலியாக .
புத்தம் சரணம் கச்சாமி …

*************************************************


கலை விமர்சகர் இந்திரன் தன் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது போல புதியமாதவி அவர்களின் கவிதைகள் பால்பகா உயர் திணைக் கவிதைகளாகவே உள்ளன . அவரது கூற்று தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு நியாயம் கற்பிப்பதாகவே படுகிறது .
**********************************************
வெள்ளை மனிதர்களுக்கு நடுவில்
கருங் காக்கைகள் கத்துவதும் கூட
காதுகளுக்கு சங்கீதமாய் .
********************************************
சற்றே விரிந்த பார்வையில் பார்த்தால் பெண்ணின் குரலாக வெளிப்படும் அநேக கவிதைகள் , ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தான சமூகத்தின் பொதுக் குரலாகவே தோன்றுகின்றன . எதனை எதற்கு உருவகப் படுத்துகிறார் என்ற கேள்வியை முன் வைத்து வாசிக்கும் போது விரிந்து கொண்டே போகின்றன கவிதை வரிகள் .
*************************************
குடைக்குள் நடப்பதும்
குடை பிடித்து நடப்பதும்
வேறு வேறான உலகம் .
இப்போதெல்லாம் எனக்கான குடை
எப்போதும் என் வசம் .
*****************************************
ஒரு வகையில் பொறாமையாகக் கூட உள்ளது . நான்கு தலைமுறையாக மும்பையில் வாழும் ஒருவரால் எப்படி இவ்வளவு அழுத்தமாக தனது கால்களை தனது தாயகமான தாமிரபரணி நதியோடும் மண்ணிலும் , அதன் தொன்மங்களிலும் பதித்து நிற்க முடிகிறது என்று .
**********************************************************
கடகரேகையும் மகரரேகையும்
சங்கமிக்க மறுக்கும்
பூமத்திய ரேகையின் அடிவயிற்றில்
இந்தப் பஃறுளி
மெளனத்தின் பிளிறலோடு .
************************************************
மெளனத்தின் பிளிறல்களில் இருந்து விடுபட சற்று நாட்கள் ஆகும் என்றுதான் தோன்றுகிறது . விடுபட முடியுமா என்றும் தோன்றுகிறது .
————————–————————–——-
மெளனத்தின் பிளிறல் – கவிதைத் தொகுப்பு .
மெளனத்தின் பிளிறல் – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – புதியமாதவி .
வெளியீடு – எழுத்து , சென்னை .
விலை – ரூ 60 /

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *