1. அந்த மழை இருட்டில் மறைந்தாள் ஒளிர முடியாத விண்மீனாக
அவளுக்கென்று அந்த பறவையின் கீச்சொலி கூட மீந்திருக்கவில்லை
மீன் தொட்டியில் விளையாடிய மீன்களுள் உறங்காத மீனாக
இன்னும் அவள்
நிலவறைக்குள் வீசப்பட்ட சிறிய பொருளாக துடித்துக் கொண்டு இருக்கிறது அவள் கனவு
தேடல்களை அவள்
ஒருபோதும் நிறுத்தவில்லை
அவளுக்கான கதவுகள் மூடியிருந்தன
தட்டுவதை மட்டும்
அவள் மறந்ததேயில்லை
2.அவளின் திசையை நோக்கி ஏன் இத்தனை கற்கள் எறியப் படுகின்றன
சொற்கள் அல்லாத அவளின் ஏந்தல்கள் உங்களால் அறிய முடியாதவை
உங்களால் வீசப் படுவது
கல்லோ
சொல்லோ
ஒலியோ
ஒளியோ
விழியோ
எதுவோ…
ஏந்திக் கொண்டே உலாவித் திரிவாள் இந்த அகண்ட பேரண்டத்தில் மந்திர பினைப்பிற்காய் அலைந்து திரியும் கடவுள் துகள்களை போல
நீங்கள் ஆராதிக்க வேண்டாம் அவளை
அள்ளி தூற்றாமல் இருங்கள்
நீங்கள் அன்பு செய்ய
வேண்டாம் அவளை
அவளாகவே இறக்க அனுமதியுங்கள் போதும்.
3.என் வீட்டுத் திண்ணையில் ஒரு பெண் போராளியும் நானும் பேசிக் கொண்டு இருக்கிறோம்
பெண்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததாக என்னிடம் கூறுகிறார்
வீதியில் ஆடை சுதந்திரம் பெற்ற பெண்ணொருத்தி எங்களை கடந்து செல்கிறார்
நாங்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரம் வீதியில் சந்தி சிரிக்கிறது என்று உறுமுகிறார் பெண் போராளி
எண்ணற்ற கேமராக்கள் அவளை வேட்டையாடுகின்றன
எது சுதந்திரம் ?
சுதந்திரம் என்றால் என்ன?
எதற்கெல்லாம் சுதந்திரம் பெற்றுத் தந்தீர்கள்? என
என் மனதில்கேள்விகள் தேநீராய் ஆறிக்கொண்டிருக்கிறது.
எங்களை நோக்கி கையில் ஒரு குழந்தையும் கருவில் ஒன்றுமாய் கை ஏந்துகிறது ஒரு பெண் தெய்வம்…
முற்றுப் புள்ளி வைக்கும் படியானதொரு சுதந்திரத்தை தேடுகிறது என் கண்ணீர்.
4.அவள்களின் வாழ்வென்பது ஏதோ ஒன்றின் தேடலை நோக்கி பயணித்த படியே தான்
எதை எதையெல்லாமோ
தாங்கிக் கொண்டே
அவள்கள் தன்
தேடலை
தேடித் தொலைகிறார்கள்…
அவள்களின் அன்றாடங்கள்
ஒரு போருக்கு
புறப்படும் காட்சியாய்
விரிகிறது
என் கண்களில்
மேல் முறையீடே இல்லாத வாழ்க்கையில்
அவள்கள் தொலைந்து
தொலைக்கட்டும்
அவள்களது
கசப்புக்களை…
விட்டுவிடுங்கள்
அப்படியேனும்
ஒரு சிறு நிம்மதி
கிடைக்கும்
அவள்களுக்கு.

