இளவேனில் பருவத்தில் வீழ்ந்த இலையொன்றின் கதை.
நூல் ருசி – அன்பாதவன்
மரியான் என்றும் 13 புதினம் நோரா பிரெய்ஸி
பிரெஞ்சு லிருந்து தமிழில் :ஸ்ரீ அஸ்வத்தாமன்

இரண்டு நாட்களுக்குமுன் யூடியூபில் ஒரு ரீல்ஸ் காண நேர்ந்தது. வீட்டுப்பாடம் எழுதாத சிறுமிக்கும் அல்லது தாயாருக்கும் இடையேயான உரையாடல்; சிறுமியின் அழுகையும் தாயின் கண்டிப்பும் காண்பவருக்கு பல கேள்விகளைஉருவாக்கும். வகுப்பறைகளோ பள்ளியோ விட்டுப் பாடங்களோ குழந்தைகளுக்கு உகந்ததாகவோ உவப்பனதாகவோ இல்லை. காலை எழுந்தவுடன் படிப்பு- பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமாலை முழுதும் விளையாட்டு- என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா ! வெறுமனே சொற்களில் சொல்லவில்லை பாரதி..!
ஆனாலின்றோ விளையாட்டு என்பதே இல்லாத பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சமகாலத்தில் ,குழந்தைகளுக்குப் பள்ளிகள் தன்னம்பிக்கையை வழங்குகின்றதா? என்றால் இல்லை என்றுதான் சொல்வோம். காரணம் ,சின்னவயதில் தோல்விகளை எதிர்கொள்ள இயலாத தற்கொலைகள்; தற்கொலை முயற்சிகள், சரியான சமூக வாழ்விலிருந்து பிரிந்து எதிர்மனிதனாக [NEGATIVE CHARACTER ] வளர்தல் போன்றவை பெருகிவருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இந்தச்சூழலில் தான் மரியான் என்றும் 13 எனும் French மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது
இவ்வுலகில் வாழ மறுத்துவிட்ட எட்டாம்வகுப்பு மாணவியின் சிரித்த கனவுகளும்,.மகளின் மரணத்துக்கு நியாயம் கேட்டுப்போராடும் தாயின் போராட்டமுமே இப்புதினம் . இந்தக்கதையின் பின்னணி பிரான்ஸ் தேசத்தின் பண்பாட்டுக்கு மட்டுமானது அல்ல நம் ஊரிலும் நிகழலாம்.
பள்ளி மாணவர்கள் FACEBOOK, INSTAGRAM ,TELEGRAM போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்ற கேள்வி ஒருபுறமெனில், வாழ்க்கையின் இக்கட்டுகளுக்கு இவை எளிதாக வழிவகுக்கும் என்பதே விடையாக இருக்கிறது. ஆனால் நிகழ்காலத்தில் முகநூல் , இன்ஸ்டாகிராம் மூலம் பல சிறுமிகளின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டதை வரலாறு சொல்லும்
அந்த வகையில் மரியான் என்றும் 13 எனும் இந்நூல், நம் மண்ணுக்கேற்ற மொழிபெயர்ப்பு பணி என்பது சிறப்பு. பதின்பருவ வயதில் நிகழும் குழப்பங்கள், தாக்கங்கள் ,கூட்டு வன்முறையின் தாக்குதல்களில் இருந்து எதிர்கொள்ளவியலா மரியான் எனும் சிறுமியின் தற்கொலையை குறித்து பேசும் நூல், தாயின் பார்வையில் ஆதங்கக் குரலோடு பயணிக்கும் கதை,. பெற்றோரின் சிரமங்களையும் , போராட்டங்களையும் ,பள்ளிகளின் அதிகாரிகளின் புறந்தள்ளும் அலட்சிய்ப்போக்கினையும் பதிவு செய்கிறது.
மரியோன்: பதின்மூன்று வயதில் உறைந்துபோன ஒரு சமூகத்தின் மனசாட்சி

ஒரு சிறுமி தற்கொலை செய்துகொண்டு இறந்துபோகிறாள். சமூகம் அதற்காக வருந்துகிறது. சில நாட்கள் பேசுகிறது. இரங்கல் தெரிவிக்கிறது. பின்னர் அடுத்த செய்திக்குச் சென்றுவிடுகிறது. ஆனால் அந்தக் குழந்தையின் தாய் மட்டும் காலத்தைக் கடக்க முடியாமல் அதே நாளில் நின்றுவிடுகிறாள்.
நோரா ஃப்ரேஸின் Marion, 13 ans pour toujours என்ற நூலை வாசிக்கும்போது முதலில் நம்மைத் தாக்குவது மரியோனின் மரணம் அல்ல; அவள் உயிரோடு இருந்தபோது அவளுடைய துயரத்தைப் புரிந்துகொள்ளத் தவறிய சமூகத்தின் இயல்புதான். ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியின் மரணத்தை முன்வைத்து, குழந்தைகளின் உளவியல் உலகம், பள்ளிக்கூடங்களின் அதிகார அமைப்பு, சக மாணவர்களின் வன்முறை, பெரியவர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றை விசாரணைக்கு உட்படுத்துகிறது இந்நூல்.
இது ஒரு தாயின் துயரப் பதிவு மட்டுமல்ல. துயரத்தின் வழியாக நிகழ்த்தப்படும் சமூக விசாரணை.
நூலின் தலைப்பே ஒரு தீர்க்கமான குறியீடு. Marion, 13 ans pour toujours — மரியோன், என்றும் பதின்மூன்று வயது. பதின்மூன்று வயது என்பது அவளுடைய வயது மட்டுமல்ல; அவளிடமிருந்து பறிக்கப்பட்ட எதிர்காலத்தின் அளவுகோலும் கூட. அவளுடைய சக மாணவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வாழ்க்கை பல்வேறு பருவங்களைக் கடக்கிறது. ஆனால் மரியோன் மட்டும் காலத்தால் வளர்ச்சியற்றவளாக அல்ல, மரணத்தால் வளர்ச்சியிலிருந்து துண்டிக்கப்பட்டவளாக நிறுத்தப்படுகிறாள்.ஒரு மனிதனின் வாழ்நாளை அவனுடைய வயது தீர்மானிப்பதில்லை; அவனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய எதிர்காலம்தான் அவனுடைய வாழ்வின் முழுமையைத் தீர்மானிக்கிறது. அந்த எதிர்காலம் ஒரு சிறுமியிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது என்பதே இந்நூலின் அடிப்படைத் துயரம்.
குழந்தைகளின் மனவலி:
பதின்மூன்று வயது என்பது உடல் வளர்ச்சியைவிடவும் மன அடையாள உருவாக்கம் தீவிரமாக நடைபெறும் பருவம். குழந்தை தன்னைப் பற்றிய புரிதலை உருவாக்கிக்கொள்கிறது. பிறருடைய பார்வையில் தன்னைத் தேடுகிறது. நண்பர்களின் அங்கீகாரத்தை விரும்புகிறது. குழுவில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முயல்கிறது.இந்தப் பருவத்தில் நிராகரிப்பு என்பது வெறும் சமூக அனுபவமல்ல; அது தன்னிருப்பின் மீதான கேள்வியாக மாறக்கூடும்.
‘என்னை ஏன் வெறுக்கிறார்கள்?’ என்ற கேள்வி ஒருகட்டத்தில் ‘என்னிடம் என்ன குறை?’ என்ற கேள்வியாக மாறுகிறது. பிறர் தன் மீது சுமத்தும் அவமானத்தை ஒரு குழந்தை தன்னுடைய அடையாளமாகவே உள்வாங்கத் தொடங்கும்போது உளவியல் சிதைவு நிகழ்கிறது .இதனை உளவியலில் Internalized Shame என்று குறிப்பிடலாம். வெளியில் இருந்து நிகழ்த்தப்படும் அவமதிப்பு, உள்ளுக்குள் தன்னைப் பற்றிய எதிர்மறையான மதிப்பீடாக மாறுகிறது.
இங்கே ஒரு முக்கியமான உளவியல் வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். ஒரு குழந்தை துன்புறுத்தப்படுவதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது அதன் பலவீனம் அல்ல. தொடர்ந்து நிகழும் வன்முறை, புகார் அளித்தும் தீர்வு கிடைக்காத நிலை, நண்பர்களின் ஆதரவின்மை ஆகியவை அதன் எதிர்ப்பாற்றலைக் குறைக்கலாம். தன்னால் எதையும் மாற்ற முடியாது என்ற கையறுநிலை உருவாகலாம்.இதனை Learned Helplessness என்ற உளவியல் கருத்தின் வழியாக விளக்கலாம்.
ஆனால் மரியோனின் மனநிலையை ஒரு குறிப்பிட்ட மருத்துவ நோயறிதலுக்குள் அடைத்துவிடுவது சரியல்ல. அவளுடைய அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்கான விளக்கக் கருவிகளாகவே இந்த உளவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த இடத்தில் நூல் வாசகரிடம் எழுப்பும் கேள்வி மிகவும் கூர்மையானது:
ஒரு குழந்தை தன்னை வெறுக்கத் தொடங்குவதற்கு முன்பு, அதைச் சுற்றியிருக்கும் உலகம் எத்தனை முறை அதை அவமானப்படுத்தியிருக்க வேண்டும்? குழந்தைகளின் மனவலியைப் புரிந்துகொள்ள முடியாத பெரியவர்கள், அவர்களின் மௌனத்தைச் சம்மதமாகப் புரிந்துகொள்கிறார்கள். அழாத குழந்தை துயரமற்ற குழந்தையல்ல. புகார் செய்யாத குழந்தை பாதிக்கப்படாத குழந்தையல்ல. இயல்பாக நடந்துகொள்வதுபோல் தோன்றும் குழந்தை உள்ளுக்குள் இயல்பாகவே இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. குழந்தையின் மனநிலையை அதன் வெளிப்படையான நடத்தையால் மட்டும் அளவிடும் பெரியவர்களின் உளவியல் அறியாமையை இந்நூல் கேள்விக்குட்படுத்துகிறது.
பகடியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை:
பள்ளிப் பகடிவதை என்பது குழந்தைகளுக்கிடையிலான சாதாரணமான விளையாட்டுச் சண்டையோ, குறும்போ அல்ல. அதிகாரத்தை நிறுவுவதற்காக ஒருவரின் சுயமரியாதையைத் தொடர்ந்து தாக்கும் வன்முறை.இதன் மிகக் கொடுமையான அம்சம், வன்முறையை நிகழ்த்துபவர்கள் பல நேரங்களில் தாங்கள் வன்முறையாளர்கள் என்பதையே உணராமல் இருப்பதுதான். ‘சும்மா விளையாடினோம்’, ‘அவளுக்குக் கோபம் அதிகம்’, இணையவழிப் பகடிவதை இந்த நிலையை மேலும் மோசமாக்குகிறது. பள்ளியில் நிகழ்ந்த அவமானம் பள்ளியோடு முடிவதில்லை. வீட்டுக்குள் நுழைகிறது. கைப்பேசியில் தொடர்கிறது. ஒரு கேலிச் செய்தி பலரிடம் பகிரப்படலாம். ஒரு அவதூறு நீண்ட காலம் அழிக்கப்படாமல் இருக்கலாம். ஒருவரின் தனிப்பட்ட துயரம் பொதுவெளியில் பொழுதுபோக்காக மாற்றப்படலாம்.பள்ளி நேரம் முடிந்தாலும் வன்முறையின் நேரம் முடிவதில்லை. இதனால் குழந்தைக்கு வீடு, பள்ளி, இணையம் என எந்த இடமும் முழுமையான பாதுகாப்பை வழங்காத நிலை உருவாகிறது கள்ளக்குறிச்சி நகருக்கருகே ஒரு பள்ளியில் என்ன நிகழ்ந்தது .இன்று வரை மர்மம்தான்.! போராடிய தாய் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றங்கள் இன்னமும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன.குழந்தைகள் வன்முறையாளர்களாகப் பிறப்பதில்லை. ஆனால் வன்முறையைப் பார்த்து ரசிக்கவும், அதில் பங்கேற்கவும், பாதிக்கப்பட்டவரின் துயரத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கவும் கற்றுக்கொள்ளும் சூழலைச் சமூகம் உருவாக்குகிறது..
கல்வி நிறுவனப் பொறுப்பு மரியோனின் துயரத்தைப் புரிந்துகொள்வதற்கு பள்ளி என்ற நிறுவனத்தைத் தனியாக விசாரிக்க வேண்டியிருக்கிறது. கல்வி நிறுவனம் என்பது பாடத்திட்டங்களையும் தேர்வுகளையும் மதிப்பெண்களையும் நிர்வகிக்கும் இடம் மட்டுமல்ல. குழந்தைகள் தங்களைப் பற்றியும் பிறரைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் கற்றுக்கொள்ளும் இடம். அங்கேதான் சமத்துவம், சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை, மனிதநேயம் ஆகியவை நடைமுறையில் கற்றுத்தரப்பட வேண்டும்.ஆனால் பள்ளிக்குள் நிகழும் வன்முறையைப் பள்ளி நிர்வாகம் ஒரு சாதாரண ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதும்போது அதன் கல்வி நோக்கமே கேள்விக்குறியாகிறது.
ஒரு குழந்தை வகுப்பறையில் தனிமைப்படுத்தப்படுகிறதா? நண்பர்களுடன் பேசுவதைத் தவிர்க்கிறதா? பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் இருக்கிறதா? திடீரென்று மதிப்பெண்கள் குறைகிறதா? எப்போதும் பதற்றத்துடன் இருக்கிறதா? இத்தகைய மாற்றங்களைப் புரிந்துகொள்ளும் பயிற்சி ஆசிரியர்களுக்கு இருக்கிறதா?இவை வெறும் நிர்வாகக் கேள்விகள் அல்ல. கல்வியின் அறம் தொடர்பான கேள்விகள்.
இந்நூல் இத்தகைய முரண்பாடுகளை வாசகரின் முன் நிறுத்துகிறது. பள்ளிக்கூடம் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் இடமாக இருப்பதற்கு முன்பு, அவர்கள் அச்சமின்றி இருக்கக்கூடிய இடமாக இருக்க வேண்டும். அச்சத்தில் கற்றுக்கொள்ளும் குழந்தை அறிவைப் பெறலாம். ஆனால் சுதந்திரமான சிந்தனையையும் தன்னம்பிக்கையையும் பெறுமா என்பது வேறு கேள்வி. சமூக உளவியல் பரிமாணம்
இந்த நூலின் ஆழமான சமூக உளவியல் பரிமாணம், வன்முறையை நிகழ்த்துபவர்களுடன் சேர்த்து அதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவதில் இருக்கிறது. சமூக உளவியலில் இதனை Bystander Effect என்று குறிப்பிடுகிறார்கள். பலர் ஒரு தவறான நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, தலையிட வேண்டிய பொறுப்பை ஒவ்வொருவரும் மற்றொருவரிடம் தள்ளிவிடும் நிலை.இதன் விளைவாக வன்முறையாளருக்குக் கிடைப்பது வெறும் பார்வையாளர்களின் அமைதி அல்ல; அவருடைய செயலுக்கு எதிர்ப்பு இல்லை என்ற மறைமுகமான அங்கீகாரம். இந்நூல் இங்கே தனிநபர்களின் நடத்தையைத் தாண்டி சமூகத்தின் அறவுணர்வையே கேள்விக்கு உட்படுத்துகிறது.
துயரத்தோடு இணைந்த விசாரணைக் குரல் நோரா ஃப்ரேஸின் எழுத்தில் தாய்மை என்பது மென்மையான உணர்வாக மட்டும் வெளிப்படுவதில்லை. அது துயரத்தோடு இணைந்த விசாரணைக் குரலாக மாறுகிறது. இழப்புக்குப் பிந்தைய குற்றவுணர்வு என்பது துயரத்தின் மிகக் கடுமையான உளவியல் நிலைகளில் ஒன்று.
மகளை இழந்த தாய், அவளுடைய கடந்தகாலத்தை மீண்டும் மீண்டும் நினைவுகூர்கிறார். அவளுடைய நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களைத் திரும்பிப் பார்க்கிறார். தன்னால் கவனிக்கப்படாமல் போன அடையாளங்களைத் தேடுகிறார். மகளின் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறார். நோரா ஃப்ரேஸின் எழுத்தில் தாயின் துயரம் தனிப்பட்ட இழப்பிலிருந்து பொதுச் சமூகப் பொறுப்புக்கான பயணமாக விரிவடைகிறது. அவர் தனது மகளை நினைவுகூர்வதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இன்னொரு குழந்தைக்கு இதே நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகப் பேசுகிறார். மகளின் மரணத்தை ஒரு சமூக விழிப்புணர்வாக மாற்ற முயல்கிறார்.இதுவே இந்த நூலின் அறவியல் வலிமை. அவருடைய எழுத்து துயரத்தை அழகுபடுத்துவதில்லை. துயரத்தின் வழியே மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.
இந்தியப் பின்னணியில் மரியோனின் கதை
மரியோனின் கதையைப் பிரெஞ்சு சமூகத்திற்குரிய ஒரு தனிப்பட்ட துயரமாகப் பார்க்க முடியாது. இந்தியப் பள்ளிகளிலும் இதன் பல்வேறு வடிவங்களைக் காண முடியும். சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படும் குழந்தைகள் இருக்கிறார்கள். பொருளாதாரப் பின்னணியால் ஒதுக்கப்படும் மாணவர்கள் இருக்கிறார்கள். உடல் தோற்றம், நிறம், மொழி, மதம், பாலினம் ஆகியவற்றின் பெயரால் கேலிக்கு உள்ளாகும் குழந்தைகள் இருக்கிறார்கள். சில இடங்களில் ஆசிரியர்களின் முன்னிலையிலேயே இத்தகைய அவமானங்கள் நிகழ்கின்றன. சில இடங்களில் ஆசிரியர்களே குழந்தைகளின் சுயமரியாதையைச் சிதைக்கும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதில் சாதிய வன்முறையின் பரிமாணம் தனித்துக் கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில் ஒரு குழந்தை பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பே சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளின் சுமையைச் சுமந்து வருகிறது. பள்ளி அந்த ஏற்றத்தாழ்வுகளை உடைக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றை மறுபடியும் உற்பத்தி செய்யும் இடமாக மாறிவிடக்கூடாது.
கல்வி என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் கருவியாக அல்ல; அவற்றை உடைக்கும் மனிதநேயச் செயல்பாடாக இருக்க வேண்டும்.
Marion, 13 ans pour toujours எனும் பிரஞ்சுப் புதினம், ஒரு தாயின் துயரப் பதிவு மட்டுமல்ல; குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொள்ளத் தவறிய குடும்பம், பள்ளி, நண்பர்கள் குழு, இணையச்சமூகம், கல்வி நிர்வாகம் ஆகியவற்றின் கூட்டுத்தோல்வியை விசாரிக்கும் சமூக உளவியல் ஆவணம்.
உணர்வுச் சூழலோடு உளவியலும் கலந்த பதின் பருவத்தின் குறுக்கு வெட்டுப் பார்வையாக இப்பதினம் இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்,பதிப்பாளர் இருவருக்கும் பெண் குழந்தைகள் இருப்பது அறிவேன்; வாசிப்பவர்க்கும் கூட இருக்கக்கூடும் இந்நூலை வாசிக்கும் போது நாம் நம் குழந்தைகளை இதமாக அணைத்துக்கொள்வோம்.’ நான் இருக்கிறேன் கலங்காதே இயல்பாக இரு’ என ஆறுதல் சொல்வோம். அந்த அளவுக்கு பாடங்கள், பள்ளிகள் குழந்தைகளின் மீது சிலுவையாய் அழுத்துகின்றன .
புத்தகங்களே சமர்த்தாய் இருங்கள் குழந்தைகளை கிழித்து விடாதீர்கள் என்று கவிக்கோ விண்ணப்பித்ததை சற்றே மாற்றி இந்தப் புதினத்தை வாசித்த பிறகு பள்ளிக்கூடங்களே சமர்த்தாய் இருங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள் என கட்டளையிடலாம்.
கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா நாடு 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பேஸ்புக், டிக் டாக், ஸ்னாப்சாட் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதன்முறையாகத் தடை விதித்தது. ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஐரோப்பாவில் இந்தத் தடைக் கொள்கையைச் செயல்படுத்தும் முதல் நாடாகப் பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.
சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பை பேணும் வகையில், 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குப் பிரான்ஸ் நாடாளுமன்றம் முழுமையான தடை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது..
[FRANCE TAMIL NEWS. COM July 21,2026] பள்ளி, கல்வி ,வகுப்பறை என்பவை தன்னம்பிக்கை வளர்க்கவா? தற்கொலைக்கு தூண்டவா? எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வதை கற்றுத் தராத கல்வியால் என்ன பயன் இருக்க முடியும்? போட்டி நிறைந்த போராட்டங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை எதிர்கொள்வது இந்த கல்வி முறையால் சாத்தியம்தானா? என்ற கேள்விகளை வாசகங்கள் வைக்கிறது இப்புதினம்.. ஒவ்வொரு பள்ளியிலும் ரெஃபரன்ஸ் நூலாக இப் புத்தகத்தை பயன்படுத்த வேண்டும் .
சமகாலத்துக்கும் நம் மண்ணுக்கும் ஏற்ற நூலை மொழிபெயர்ப்பில் தந்ததற்காக நம் பதிப்பகம் மற்றும் அஸ்வத்தாமன் இருவரையும் குழந்தைகள் உலகம் கொண்டாடும்.

௦௦௦௦௦

