மீறப்படும் மனித உரிமைகள்….
மனித ஓலம்….
இவை எல்லாம் சூழ்ந்த ஒரு சர்வதேச சர்ச்சையின், பேசு பொருளாக தற்போது நிற்பவர் தான் Francesca Albane.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு மனித உரிமை நிபுணராக, பாலஸ்தீனியர்களின் நிலைவரத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட இந்த இத்தாலிய சட்டவியலாளர், “உலகின் மிகப் பெரும் சக்தியாக” அடையாளம் காட்டி நிற்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நோக்கி “சுட்டிய விரல்” உலக அரங்கில் அதிர்வுகளைத் தோற்றுவித்திருக்கிறது.
திறமையான சட்ட ஆலோசகராகவும், அகதிகள், ஆக்கிரமிப்பு மற்றும் இனவாதக் கொள்கைகள் தொடர்பான ஆய்வுகளில் ஆழமான புலமை கொண்டவராகவும் உள்ள Francesca ,
2022-ம் ஆண்டு மே மாதத்தில், ஐ. நா மனித உரிமைகள் சபையால் (UNHRC) , காசாவில், பாலஸ்தீனியர் மீது நடைபெறும் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டார்.
தனது பணி தொடர்பான ஆய்வுகள் தகவல்கள் நிகழ்வுகள் அடிப்படையில்,
“காசாவில்,இஸ்ரேலின் நடவடிக்கைகள் வெறும் ஆக்கிரமிப்பு மட்டுமல்ல — அது ஒரு திட்டமிட்ட “இனப்படுகொலையாக”உள்ளது என்று பகிரங்கமாக அறிவித்தார்.
Genocide என்ற சொல்லை பல முறை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தினார்.
பாஸ்தீனிய மக்களை தமது மண்ணில் இருந்து துரத்தி, தொடர்ந்து தாக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மனிதநேயத்துக்கு எதிரானவை,
• பாஸ்தீனிய குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் எனப் பலர் தொடர்ச்சியாக கொல்லப்படுகிறார்கள்,
• இவை அனைத்தும் ஒரு திட்டமிட்ட தாக்குதலின் பகுதியாக இருக்கலாம் என அவர் வலியுறுத்துகிறார்.
இந்த கூற்றுகள் அனைத்து மட்டங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தின. ஏனெனில் அவர் கூறியது துணிச்சலாகவும், ஆதாரங்களுடன் கூடிய உண்மையாகவும் இருந்தது.
இவை மட்டுமல்லாமல், இஸ்ரேலிய அதிகார அமைப்பினர் மீதும், இஸ்ரேலுக்கு, அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவு வழங்கிவரும் அமெரிக்க அரசின் தலைவர்கள்,உயர் அதிகாரிகள் மீதும் “சர்வதேச நீதிமன்றம்” குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
இது “உலக வல்லரசு” அமெரிக்காவுக்கு பெரும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து 2025 ஜூலை 9ம் தேதி, அமெரிக்க அரசு,Francesca க்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது:அவரை தண்டனைப் பட்டியலில்(sanctions list) சேர்த்தது. அத்துடன்
• அமெரிக்காவில் உள்ள அவரது சொத்துகள் முடக்கப்பட்டன.
• அமெரிக்கா செல்லும் விசா ரத்து செய்யப்பட்டது.
• அமெரிக்க வர்த்தகத்துறை–(OFAC) இவரை “Specially Designated National” (SDN) என அறிவித்து, அமெரிக்க நிறுவனங்கள் அல்லது நபர்கள், அவருடன் எந்தவிதமான நிதி/தொழில்துறைக்கான தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று உத்தரவிட்டது.
இதற்கான காரணமாக “அவர் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் எதிர்த்து அரசியல் மற்றும் பொருளாதார யுத்தம் நடத்துகிறார்.” என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆனால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுவாக எழுந்துள்ளன.
• Human Rights Watch இதனை “மனித உரிமை ஆய்வாளரின் மீது அச்சுறுத்தல்” எனக் குறிப்பிட்டது.
• Amnesty International
“இது சர்வதேச நீதியின் மீதான நேரடி தாக்குதல்;ஐ.நா. நிபுணர்களை அடக்குவதற்கான முயற்சி ” என்று தெரிவித்துள்ளது.
.“இது அதிர்ச்சியளிக்கிறது. இவை ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் மோசமான முன்மாதிரி.” என்று ஐ.நா செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகப் புகழ்பெற்ற பொருளியலாளர்களான — Thomas Piketty , Yanis Varoufakis ,Jayati Ghosh உள்ளிட்டோர் ஒரு திறந்த கடிதம் மூலம் Francesca வுக்குஆதரவு தெரிவித்துள்ளனர்.
“இப்போது பேசாதவர்கள், வரலாற்றில் இந்த இனப்படுகொலைக்கு ஊக்கம் அளித்தவர்கள் ஆகிவிடுவார்கள்.” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“நான் கூறியவை அனைத்தும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே; எனக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தண்டனை, உண்மையை மூட முயற்சிக்கிறது; ஆனால் உண்மையைச் சொல்லும் குரல்களை யாராலும் அடக்க முடியாது.” என்று கூறியுள்ள Francesca, அமெரிக்கா தன் மீது விடுத்துள்ள தடை நடவடிக்கைகளை, “இது ஒரு “mafia-style intimidation” (பயங்கரவாத அணுகுமுறை) எனச் சாடியுள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கை தொடர்பான இந்தச் சொல்லாடல் சர்வதேச ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
Florescaவுக்கான ஆதரவுக் குரல்கள் வலுப்பெற்று வருகின்றன.
தேடலும் எழுத்தும்
வாசுகி குமாரதாசன்
11/07/2025

