“ரேடியம் பெண்கள்” –
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகிற்கு புதிய அத்தியாயங்களைத் திறந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று — ரேடியம் (Radium).
1898 இல் பிரான்சைச் சேர்ந்த Pierre மற்றும் Marie Curie தம்பதிகள் இதனை கண்டுபிடித்தனர். அதன் ஒளிரும் தன்மையும் (luminescence) கதிர் வீச்சும் வியாபார உலகைச் சுண்டியிழுத்தது; ரேடியம் பெரும் வணிகப் பொருளானது.
விமான பாகங்கள், ஆயுத உற்பத்தி, மற்றும் கடிகார உற்பத்தியில் பரவலாக இது பயன்படுத்தப்பட்டது.
அதுமட்டுமன்றி, பற்பசை, முகப் பூச்சுகள், ஆரோக்கிய பானங்கள், ஸ்பா சிகிச்சைகள் போன்ற வியாபார வடிவங்களிலும் அது சந்தையில் இடம்பிடித்தது.
2. ரேடியம் தொழிற்சாலைகள்
முதலாம் உலகப் போரின் பின்னர், ஐரோப்பாவை முழுதும் சார்ந்திருக்க கூடாது என்ற உணர்வில் இருந்த அமெரிக்காவுக்கு, Colorado மலைப்பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்ட, ரேடியம் உள்ள கார்னோடைட் தாதுக்கள் (Carnotite ore) சுய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.
அமெரிக்காவில் United States Radium Corporation, Radium Dial Company போன்ற தொழிற்சாலைகள் தொடங்கின. அரசாங்கத்தின் பெரும் ஆதரவும் இந்த நிறுவனங்களுக்கு இருந்தது.
இந்த நிறுவனங்களுக்களால் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, பெரும்பாலும் இளம் பெண்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.
அவர்களின் பணி — ரேடியம் கலந்த ஒளிரும் நிறப்பூச்சை (luminous paint) பயன்படுத்தி கடிகார எண்களை வரைவது.
இதற்கு, பயன்படுத்தப்படும் தூரிகையின்(painting brush) முனை கூர்மையாய் இருக்க வேண்டும். அதற்கமைய, நிறுவனம் Lip, Dip, Paint என்ற முறையை கட்டாயப்படுத்தியது. இதன்படி, தொழிலாளர்கள் தூரிகையை நாவால் நனைத்து கூர்மையாக்கி எண்களை எழுதினர். இது ரேடியம் நேரடியாக உடலுக்குள் செல்லக் காரணமானது.
அந்தச் சாயம் அவர்களின் பற்கள், நகங்கள், ஆடைகள், முடி அனைத்தையும் பளபளப்பாக ஒளிரச் செய்தது. இது அவர்களுக்கு பெருமையாகத் தோன்றியது. இருட்டிலும் மின்னும் அழகிகளாய் மகிழ்ந்தனர்.
3. உடல் சிதைவுகள்
சில ஆண்டுகள் கழித்து அந்த ஒளிரும் அழகு குரூரமாக மாறத் தொடங்கியது.
• பற்கள் உதிர்ந்தன
• தாடை எலும்புகள் சிதைந்தன.
• உடல் எலும்புகள் உடைந்தன
• பெண்கள் கடும் வேதனையோடு சாவைச் சந்தித்தனர்
மருத்துவர்களால் ஆரம்பத்தில் இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இவர்களின் நோய்களுக்கும் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை எனக் கூறுமாறு மருத்துவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டன.
ஆனால் நியூ ஜெர்ஸி மாநில மருத்துவ பரிசோதகர் Dr. Harrison Martland நடத்திய விசாரணையில், பெண்களின் எலும்புகள் கதிர்வீச்சை உமிழ்வதை கண்டுபிடித்து, நோய்களுக்கு ரேடியம் தான் காரணம் என்பதைத் தெரிவித்தார்.
அதைப் பொருட்படுத்தாமல், நிறுவனங்கள் “ரேடியம் தீங்கில்லாதது” என பொய்ப் பிரசாரம் செய்தன.அந்தப் பெண்களுக்கு வந்திருப்பது syphilis என்னும் பாலியல் நோயே என்று கூறின.
இவ்வாறே சில ஆண்டுகள் ஓடின.
4. போராட்டத்தின் தொடக்கம்
இறுதியில், 1927-இல் Grace Fryer என்ற பெண் வழக்குத் தொடரத் துணிந்தார். அவரோடு Catherine Donohue, Edna Hussman, Albina Larice, Quinta McDonald ஆகியோர் இணைந்தனர்.இவர்கள் பின்னாளில் Radium Girls என அடைமொழியால் அழைக்கப்பட்டனர்.
நீதிமன்ற விசாரணைகளின் போது அவர்கள் சக்கர நாற்காலியிலும், சிதைந்த உடல்களோடும், பேசவே சிரமப்பட்டபடி நின்ற காட்சி பத்திரிகைகளால் “இது மரணமே சாட்சி சொல்ல வந்தது” என்று விவரிக்கப்பட்டது.
“எங்களின் வாழ்வை மீட்க முடியாது. ஆனால் புதிதாக இணையும் தொழிலாளர்களின் உயிரையாவது காப்பாற்றுங்கள்.” — என்று அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.
பெண்களின் சிதைந்த உடல்கள், மருத்துவ சான்றுகள், Dr. Martland-ன் அறிக்கை— இவை அனைத்தும் உண்மையை மறைக்க முடியாத நிலையை உருவாக்கின.
இறுதியில், 1928ல், நீதிமன்றம் பெண்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. நிறுவனம் நஷ்டஈடு வழங்க கட்டாயப்படுத்தப்பட்டது.
இது அமெரிக்க தொழிலாளர் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆனது:
• தொழிலாளர் பாதுகாப்பு விதிகள் கட்டாயமாக்கப்பட்டன
• மருத்துவ பரிசோதனைகள், கதிர்வீச்சு பாதுகாப்பு சட்டபூர்வமானது
• பாதுகாப்பு உபகரணங்கள், காற்றோட்ட வசதிகள் கட்டாயமானது
• 1949ல் ரேடியம் பெண்களின் வழக்கு அமெரிக்க சட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது
5. உலகளாவிய தாக்கம்
ரேடியம் பெண்களின் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது:
• சர்வதேச தொழிலாளர் அமைப்புகள் (ILO) வரை அதன் தாக்கம் இருந்தது.
• தொழில்சார் நோய்கள் (Occupational Diseases) பற்றிய சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டன
• கதிர்வீச்சு பாதுகாப்பு – அறிவியல் நெறிமுறையாகவும், மனித உரிமையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• 1970ல் உருவான OSHA (Occupational Safety and Health Administration) சட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்தது
ஆனால், தீர்ப்பு வெளிவந்து சில ஆண்டுகளிலேயே Grace Fryer உட்பட பல பெண்கள் உயிர் இழந்து போனார்கள்.
6. பின்னர் நடந்தது
நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் Radium Dial Company Illinois மாநிலத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது.
• Catherine Donohue உட்பட பலர் அங்கு உயிரிழந்தனர்
• 1938ல் Donohue மரணத்திற்குப் பிறகும் நிறுவனம் பெயர் மாற்றி Luminous Processes, Inc. என்ற பெயரில் செயல்பட்டது
⸻
1949 வழக்கு
• Illinois Industrial Commission முன் தொழிலாளர் குடும்பங்கள் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்
• மருத்துவ சான்றுகள், முன்னர் நடந்த USRC வழக்கு (1928), Dr. Martland மற்றும் பிற மருத்துவர்களின் ஆய்வுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
தீர்ப்பு
• 1949ல், Illinois நீதிமன்றம் Radium Dial Company (மற்றும் அதன் வாரிசு நிறுவனங்கள்) தொழிலாளர்களின் மரணத்திற்குப் பொறுப்பு என்று தீர்மானித்தது
• பல குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட்டது
• கதிர்வீச்சு பாதுகாப்பு மீறல்கள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது
⸻
தாக்கம்
• 1949 தீர்ப்பு “Occupational Diseases” என்ற கருத்தை Illinois மாநிலத்தில் சட்டபூர்வமாக இணைத்தது
• இது அமெரிக்க தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது
• Radium Dial Company இறுதியில் மூடப்பட்டது
⸻———————————————
இன்று, மிக மிக சிறியளவிலான இராணுவ கடிகாரங்கள் தவிர, கடிகார உற்பத்தியில் ரேடியம் பயன்பாடு நிறுத்தப்பட்டு விட்டது.
ரேடிய கதிர் வீச்சை விட குறைந்த Tritium-3 அடங்கிய GTLS முறை கடிகார ஒளிர்விற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதை விட Super-Lumi Nova எனப்படும் வெளிச்சத்தை உறிஞ்சி, இருளில் ஒளி தரும் கடிகாரங்கள் பாதுகாப்பாகவும் பயன்பாட்டிலும் உள்ளது.
நான் இங்கு எழுதியவை, உண்மையான ரேடியம் தாக்கத்தின் ஒரு வீதம் மட்டுமே. ரேடியப் பயன்பாட்டால் உருக்குலைந்து, விகாரமாகி, சாவடைந்தவர்களின் படங்கள் முதற் கொண்டு பல தகவல்களை இணையங்களில் தாராளமாகப் பெறலாம். ஆனால் நான் தரப்போவதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள், சக மனிதனை அழித்தாவது, இலாபம் ஈட்டுவதை விடுத்து, வாழ்வியல் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்பதை விதைப்பதற்காகவே எனது பதிவு.
வாசுகி குமாரதாசன்
22/08/2025

