கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரண்டு கவிதைகள்

நல்லதோர் கவிதை நெய்தே…
செவிப்பறை யுரசும்
குரலோசையில் மடல் திறக்கும்.
ஷவர்த்தேனும்  நுரைப்பூவும் ஸ்பரசித்தே மெய்சிலிர்க்கும்.
அதிகாலைப் பிரார்த்தனைக்காய்
நிலமுரசும் நுதலினிலே
சுவனத்துத்தென்றல் சுழன்றடிக்கும்.
சமையலறைப் பரபரப்பில் நிமிசங்கள்
நெருப்பாகிப் புகைந்திருக்கும் .
அழுத்தலுக்காய் பிஞ்சுச்சீருடைகள்
தகித்திருக்கும்.
ஒப்பனைக்கு மட்டும் நாழியின்றியே அவசரம்
கதவடைக்கும.; 
வகுப்பறைக் களமதிலும்
கரும்பலகையோடு போராடும்
விரல்களுக்கே வெண்தூசு குளியல்போடும்.
ஆய்வறை ரசாயனங்களுடன்
கண்ணாடி  முகவைகள் கைகலக்கும்.
அடுத்ததாகவும்…

உச்சிவெயில் பயணங்களுடன்
இரண்டாம்சுற்றுப் பரிமாறல்கள் தொடர்ந்திருக்கும்
இன்னமும்……
மாலைத்தேனீர், மகளின் ‘ஹோர்ம் வேர்க்|
கோடைமழைத்துளியாய்
குடும்பத்தவர் வருகை
இடைக்கிடையே சொடுக்குப்போடும்
செல்பேசியதன் செல்லக்குரவை.
ஒப்படைக்கட்டுகளுக்குள் மூச்சுத்திணறும்
சிவப்புபேனாவின் ஒளிவளையங்கள்.
கூடவேவரும் என்துணையின் பனிப்பார்வையோ
சுவாலைச்சுமைகளையே
சுட்டுப் பொசுக்கிக்
கூதல் தெளிக்கும்.
சுவர்க்கூட்டுக்கணமுள்ளின் 
சுழலொலி உயர்வு கொள்ளும்
அடர்மையூடேயும்
ஆர்ப்பரித்து அதிர்ந்திருக்கும்
நல்லதோர் கவிதை நெய்தலுக்கான
மென்சிலிர்ப்பு 
உனக்குப்புரியவாபோகிறது ?  

   
                  

உனக்குப்புரியவா போகிறது…… ?

உனக்குப்புரியவா போகிறது…… ?

என் மனசுங்கூட வெள்ளைமணல்தான்
சீர்கல்விதந்த இக்கரைக்கே
செஞ்சோறிட வேண்டாமோ?
சடுதிப்பயணமிதுவல்ல என்றே
இப்போதுங்கூட உனக்குப்புரியவா போகிறது?
அதிபாரமிக்க என் அதிகாரியே —உன்
முறைத்த பார்வையும்
விறைத்த சிவப்புக்கீறலும்
தினமும் நீயென் இதயந்துளைக்கும்
இரட்னடக்குழல் சுடுகலனோ…?
மெய்ப்பேனா செம்மை சிந்துமந்த
அவஸ்தைப் பொழுதுகளில்கூட
நொடிந்துபோன பாதங்களோடும்
வடிந்துபோன உற்சாகங்களோடும்
இடைவெளியின்றி ஏகினேனே யென்
கைப்பை முழுதுமான கற்பித்தல் உத்திகளோடு.
உழல்நாற்காலியிலே
உட்கார்ந்து கொண்டே
ஊகநிர்வாகம் நடாத்துகின்ற
உனக்கெங்கே புரியப்போhகிறது?
நான்தின்றுவிட்டதாய் நீ திட்டித்தீர்த்த
அச்சுணங்கல் கணங்களிலே 
நான் கடல்கிழித்து விரையும்
இயந்திரப் படகின்  நெரிசலிலோ, அன்றேல்
குன்றுங்குழியுமான உன்
கிறவல்பாதையின் அசிங்கப்பார்வைகளிலோ
சிக்குண்டு-
அவஸ்தைகளோடு  நசுங்கிக்கொண்டிருந்ததனை.

 

1 Comment on “கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரண்டு கவிதைகள்”

  1. Dear sis.Fayisha

    I read your poems….very good vocabulary that u used in your poems….nice keep it up…and if u do not mind plz give me your mobile number.

    all the best of luck

    with love jawahira

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *