உத்வேக ‘வெள்ளி’த்திரை -ஃபான்றி – இது தலித் சினிமா மட்டும் அல்ல!

கீட்சவன்http:// Thanks -yourstory.com

கைக்காடி என்பது மராத்தியக் கிளை மொழி. அதில் ‘ஃபான்றி’ என்றால் பன்றி என்று பொருள். மகாராஷ்ட்ராவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர்தான் கைக்காடி மொழியைப் பேசுகின்றனர். ஒரு கிராமத்தில் எடுபிடி வேலைகள், கட்டிட வேலைகளைச் செய்வது, பன்றிகளைப் பராமரிப்பது உள்ளிட்டவை இவர்களது தொழில். கதைக்களமான மகாராஷ்டிராவின் அகமது நகருக்கு அருகேயுள்ள அகோல்நர் எனும் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் வாழ்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது ஜாப்யா எனும் சிறுவன்தான் நம் ப்ரொட்டாகனிஸ்ட்.

ஆதிக்க சாதியினருக்கு ஒடுங்கி புழுபோல் நெளிந்து குடும்பத்தைக் கரைசேர்க்க பெரும் பாடுபடுகிறார் ஜாப்யாவின் தந்தை. சொற்ப வருமானத்தை ஈட்டுவதற்காக அந்தக் குடும்பமே பல வேலைகளில் ஈடுபடுகிறது. ஜாப்யாவுக்கும் அவ்வப்போது பள்ளிக்கு மட்டம் போட்டு கட்டுமான வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை. சக மாணவர்களிடம் விசாரித்துவிட்டு நள்ளிரவுகளில் வீட்டுப் பாடம் முடிப்பான்.

ஏற்கெனவே ஒரு அக்கா வரதட்சணைக் கொடுமையால் குழந்தையுடன் வீட்டில் இருக்கிறார். இன்னொரு அக்காவுக்கு கல்யாண ஏற்பாடு. வரதட்சணைக்கு உரிய பணம் திரட்ட சுழல்கிறது ஜாப்யாவின் குடும்பம். இதற்கிடையே, தன் வகுப்பு மாணவி ஷாலு மீது ஜாப்யாவுக்கு காதல் துளிர்விட்டு வளர்கிறது. ஆதிக்க சாதி குடும்பத்தைச் சேர்ந்த ஷாலு, தன்னைப் புரிந்துகொள்வாள் என நம்புகிறான். அப்பழுக்கற்ற அன்புக்கு முன்னால் தோற்றம் என்பது ஏதுமற்றவை என்பதை அவளுக்கு உணர்த்தவும் விரும்புகிறான். காதல்… மூடநம்பிக்கையையும் நம்பவைக்கும் உணர்வு அல்லவா? கருங்குருவி ஒன்றைக் கொன்று எரித்து, அதன் சாம்பலை அவள் மீது தூவினால், அவள் பித்துப் பிடித்து தன்னைப் பின்தொடர்வாள் என ஒரு பழங்கதையை நம்பி, கருங்குருவி வேட்டைக்கு அலைவதையும் பகுதிநேரப் பணியாக வைத்துக்கொள்கிறான் ஜாப்யா. வில்லன் இல்லாத காதல் எங்கு இருக்கிறது? ஜாப்யாவுக்கு ஆதிக்க சாதியைச் சேர்ந்த தன்னை விட மூத்த மாணவன்தான் அச்சுறுத்தல். சைக்கிள் கடை அண்ணன் சாங்யா, தனக்கு நெருக்கமான ஒரே நண்பன் பிர்யா ஆகியோர்தான் ஜாப்யாவின் அன்றாட வாழ்க்கையை நகர்த்த உத்வேதகமாக இருக்கும் உறுதுணையாளர்கள்.

அந்த ஊரில் திருவிழா நடக்கிறது. சாமி ஊர்வலத்தில் ஒரு பன்றி புகுந்துவிடுகிறது. வெட்டவெளியில் வெளியேற்றப்படும் மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தும் அந்த மேன்மையான பன்றிகளை மறுநாளே பிடித்துவிட வேண்டும் என்பது ஊர்ப் பெரியவர் இட்ட வேலை. வீட்டுத் திருமணத்தில் குதூகல தருணத்தை அனுபவிக்க வேண்டிய ஜாப்யாவின் குடும்பமே பன்றியின் பின்னால் ஓடுகிறது. பள்ளிக்கு மிக அருகில், ஊர் மக்கள் ரெண்டுக்குப் போகும் இடத்தில் நடக்கிறது இந்த அவல யுத்தம்.

ஒரு மைதானத்தில் நிகழும் ஆட்டத்தைச் சுற்றி நின்று கொண்டாடும் ரசிகர்கள் போல அந்த ஊர் மக்களும், பள்ளிச் சிறுவர்களும் பன்றி பிடிப்பதை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்து ஆர்ப்பரித்து சிரித்துத் தி்ளைக்கின்றனர். பேல டாய்லட் இல்லாத ஊரில் இருந்த இடத்திலேயே ஃபேஸ்புக் அப்டேட்ஷன் வேறு. அந்தக் கூட்டத்தில் ஒருத்தி, ஜாப்யா நேசிக்கும் ஷாலு. தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த அவமானங்களைப் பொருட்படுத்தாமல் பன்றி பிடிப்பதில் குறியாக இருக்கிறார்கள். ஆனால், ஜாப்யாவோ அவமானங்களால் தன் மனம், எண்ணங்களுடன் யுத்தம் செய்கிறான். அங்கே தன்னை அவமதிப்பதையே வழக்கமாகக் கொண்ட சிறு கும்பலும் சலம்பலில் ஈடுபடுகிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி முடக்கப்பட்ட நெஞ்சம் வெகுண்டெழுகிறது. உக்கிரத்தின் உச்சத்துக்குச் சென்ற ஜாப்யா தன்னை அவமதிப்பர்களை நோக்கி கல்லெறிகிறான். அந்தக் கற்களில் ஒன்று பார்வையாளர்கள் மீது படும்படி படம் முடிகிறது.

ரு சினிமா குறித்து எழுதும்போது முக்கிய காட்சிகள், முழுக் கதை, திரைக்கதையின் முக்கிய அம்சங்கள் என ஸ்பாய்லர்களைப் பதிவு செய்வதை விரும்பாதவன் நான். ஆனால், இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு பலருக்கும் இருக்காது என்பதால் கதையை, குறிப்பாக இறுதிக் காட்சிகளையும் விவரிக்க வேண்டியதாகிவிட்டது. அதுமட்டுமல்ல, ஒரு படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதி டைட்டில் கார்டு வரை அனைத்தையும் எழுத்துகள், பேச்சுகள் மூலமாக விவரிக்கப்பட்டாலும், அந்தப் படத்தைக் காணும்போது முழுமையான சினிமா அனுபவம் கிடைக்கக் கூடிய படைப்புகளுள் ‘ஃபான்றி’யும் ஒன்று என்பதும் முக்கியக் காரணம். அந்த அளவுக்கு சினிமாவுக்கான மொழி அபாரமாக கையாளப்பட்டிருக்கிறது.

ஃபான்றி இயக்குநர் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவுக்கு இது முதல் சினிமா படைப்பு. மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த இவர், மராத்தியில் கவனிக்கத்தக்க கவிஞரும் கூட. தன் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானதுதான் இப்படம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இப்படத்துக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்தது. ஒளிரும் இந்தியாவில் வெளிப்படையாக ஒளிந்துகிடக்கும் சாதி ஒடுக்குமுறை அவலத்தை அழுத்தமாகப் பதிவு செய்த இந்தக் காவியம், உலக அளவில் கவனிக்கத்தக்க திரை விழாக்களில் விருதுகளையும் பாராட்டு விமர்சனங்களையும் வாரிக் குவித்தது.

ஒரு சமூக அரசியல் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ‘ஃபான்றி’ ஒரு சமகால வலுவான முன்னுதாரணம். நம்மவர்கள் சமூக அக்கறையுடனும் அரசியல் பார்வையுடனும் எடுக்கும் பெரும்பாலான படங்களைப் பார்க்கும்போது பரிதாபம் மேலிடும். புனைவுக்கதை மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும் சினிமாவை அணுகாமல், வெறும் சிலிர்ப்பூட்டித் தெறிக்கவிடும் வசனங்கள் மூலம் சமூக அரசியல் பேசுவதை வேறு எப்படிப் பார்ப்பது?

‘ஃபான்றி’யில் ஓர் இடத்தில் கூட வசனம் மூலம் குத்திக் காட்டல் இருக்காது. கதையும் காட்சிகளும்தான் நம்மைப் புரட்டிப் போடும். தாக்கத்தை ஏற்படுத்தும். அதுதான் சினிமா எனும் கலை வடிவத்தை அணுகும் முறை. அப்படிச் செய்வதால் ஏற்படும் தாக்கம் என்பது மிகப் பெரியது. குறிப்பாக, ஒவ்வொரு கதாபாத்திரமும் உண்மைத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடித்த கலைஞர்களும் நிஜத்தை நம் கண்முன் நிறுத்துவதற்கு தங்கள் அபார நடிப்பாற்றல் மூலம் பங்கு வகித்துள்ளனர். சினிமாவில் ஒரு குறிப்பிட்ட துறையின் பங்களிப்பு தனியாகத் தெரியாத அளவுக்கு, ஒட்டுமொத்த துறைகளின் கச்சிதமான பங்களிப்பின் மூலம் நிறைவான திரைப்படம் தரப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2014-ம் ஆண்டு காதலர் தினத்தில் வெளியான இப்படம் சொல்லும் பள்ளிப் பருவ காதலும் நட்பும் விரிவாக தனி அத்தியாயமே எழுதக் கூடிய அற்புத ரகம்.

நம் நாட்டில் காலம் காலமாக இன்னமும் ஆதிக்கம் செலுத்துவோரின் கட்டுக்குள் வாழும் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக ஜாப்யாவின் தந்தை கதாபாத்திரம் இருக்கிறது. ஆதிக்கத்தை எதிர்கொண்டு தோல்வியுற்று வாழப் பழகிப்போனவர்களின் பிரதிநிதியாகவே சாங்யா கதாபாத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியானால் ஜாப்யா?

ஜாப்யாவை முன்வைத்து மூன்று அம்சங்களை குறிப்பிட விரும்புகிறேன். ஆரம்பம் முதலே சுயமரியாதையை சீர்குலைக்கும் அடையாளத்தை விட்டு விலகிச் செல்ல இயன்றவரையில் முற்படுகிறான் ஜாப்யா. நிஜத்திலும் பாதிக்கப்பட்ட ஜாப்யாக்களில் பலரும் அப்படி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். தங்களது வழக்கமான வேலைக்கு அழைக்கிறார் அம்மா. அப்போது, ‘உனக்கு காசு தானே வேணும்? இந்தாப் பிடி’ எனும் ஜாப்யா, தன் குடும்ப அடையாளத்துக்கு அப்பாற்பட்டு தன்னால் முடிந்த கவுரமாகக் கருதும் வேறு வேலையான ஐஸ் விற்பதைச் செய்கிறான். முதலில் தங்களை சிறுமைப்படுத்தும் தொழிலைக் கடக்க வேண்டும் என்பதுதான் ஜாப்யா கதாபாத்திரம் சொல்லும் சேதி.

இரண்டாவதாக, அவமானங்களுக்கு இடையே அலைந்து திரிந்து பிடித்த பன்றியை ஜாப்யாவும் அவனது சகோதரிகளும் தூக்கிச் செல்லும்போது பின்னணியில் பள்ளியும் அதன் சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் ஓவியங்களும் இருப்பது உண்மை இந்தியாவை துகிலுரித்துக் காட்டும் அழுத்தமான அம்சம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இறுதிக் காட்சியில் கொதித்து எழுந்த ஜாப்யாவால் எறியப்பட்ட கல். அது, ‘சமூக அவலத்துக்குக் காரணமானவர்கள் மீதும், அந்த அவல நிலையை வேடிக்கைப் பார்ப்பவர்கள் மீதும் எறியப்பட்ட கல்’ என்கிற ரீதியில் பலரும் புரிந்துகொள்கிறார்கள். நம் சமூகம் மீதான அந்த விமர்சனம் முற்றிலும் உண்மைதான். ஆனால், இங்கே சுயவிமர்சனமும் உள்ளது என்பதை எத்தனை பேர் கவனித்தார்கள், அதைப் பதிவு செய்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆம், எறிந்த கல் மீதுதான் பலரின் கவனம் இருந்தது. ஆனால், எனக்கு அதற்கு இணையாக அந்தக் கல்லை எறிந்த ஜாப்யா மீதும் கவனம் இருந்தது. எத்தனை காலம்தான் ஒடுக்குமுறையைக் கண்டு பொறுத்திருப்பது? நாம் ஒடுக்கப்படுவதற்கு எதிராக எதிர்வினையாற்ற வேண்டும் – ரியாக்ட் செய்ய வேண்டும். விளைவுகள் பற்றி யோசிக்காமல் ரியாக்ட் செய்வதுதான் இப்போதைய தேவை என்பதை ஜாப்யாவின் செயல் உணர்த்தியது. கல் எறிவது என்பது அந்தச் சிறுவனக்குத் தெரிந்த – அவனால் முடிந்த ரியாக்‌ஷன். அதேபோல், தங்களால் இயன்ற வடிவங்களில் ரியாக்ட் செய்வது மட்டுமே ஆதிக்கப் போக்கில் இருந்து விடுபடுவதற்கான வழி என்றும் ஃபான்றி சொன்னதாக எனக்குப் படுகிறது.

அதேபோல், ஃபான்றியை தலித் சினிமா என்ற வரையறைக்குள் சுருக்கிக்கொள்ளவும் நான் விரும்பவில்லை. இது ஓர் உலக சினிமா. உலக மக்களுக்கான சினிமா. உலகின் பலதரப்பட்ட மனிதர்களுக்கான சினிமா என்கிற ரீதியில்தான் பார்க்க விரும்புகிறேன். ஒடுக்குமுறை என்பது இப்போது பல வடிவங்களில் அரங்கேறி வருகின்றன. அவற்றுடன் பொருத்தியும் பாதிக்கப்படுபவர்களும், பாதிப்பை ஏற்படுத்துவர்களும் பார்க்க வேண்டிய சினிமா இது.

எப்படி?

 

என் மூத்த நண்பர் மூர்த்தி சுமார் 13 ஆண்டு காலம் ஒரு நிறுவனத்தின் தொடர்ந்து பணியாற்றி வந்தவர். அந்த நிறுவனம் தொடங்கப்பட்டபோது சொற்ப சம்பளத்தில் சேர்ந்தவர். மிகுந்த ஈடுபாட்டுடன் தன் பணிகளைச் செய்து வந்தார். பல ஆண்டுகள் சம்பள உயர்வு பற்றியும், வேறு வசதிகள் பற்றியும் மேலிடத்திடம் அவர் வாதிட்டது இல்லை. அந்த மனப்பான்மையை அந்நிறுவனம் தவறாகப் புரிந்துகொண்டது. அவருக்கு வெளியே சொல்லும்படியான ஊதிய உயர்வு வழங்கியதே இல்லை. ‘இவருக்கு நம்மை விட்டால் வேறு கதியில்லை’ என்று தவறாக உணர்ந்து, அவரது உழைப்பைச் சுரண்டி வந்தது அந்நிறுவனம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நேற்று கோர்ஸ் முடித்து இன்று வேலைக்கு வந்தவர்களுக்கு சம்பளம் அள்ளிக் கொடுக்கப்பட்டது. தங்களை விட மிகக் குறைவாக ஊதியம் பெறும் மூர்த்தியை அவர்கள் ஏளமானமாகப் பார்ப்பதும் நிகழ்ந்தது. அதையும் பொறுத்துக்கொண்டார். ஆனால், மற்ற எல்லாரையும் விட இவருக்கு வேலை நெருக்குதல் அதிகம் கொடுக்கப்பட்டது. அதற்கு ஏற்ற சம்பளமும் இல்லை. பல ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தன் பிரச்சினை பற்றி அமைதியாக பேசினார். பலன் இல்லை. மதிக்கவே இல்லை. ‘இவனுக்கு வேறு வழியே இல்லை’ என்ற நினைப்பு. பொறுத்தார். பொறுத்தார். எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

ஒருநாள். விலகல் மெயில் தட்டினார். ‘அட, விளையாடுறாரு’ என்று நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. வேறு வேலைக்கு முயன்று நல்ல சம்பளத்தில் சேர்ந்தேவிட்டார். அதிர்ந்தது அந்நிறுவனம். ஒரு மாத காலம் அவரைத் தொங்கியது. கேட்கும் சம்பளம் தருவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. அவர் கண்டுகொள்ளவில்லை. அடங்கியது நிறுவனம்.

ஆம், மூர்த்தியிடம் ஜாப்யாவையும், ஜாப்யாவிடம் மூர்த்தியையும் பார்க்கிறேன். ஒடுக்குமுறை என்பது யாருக்கு எந்த வடிவில் வந்தாலும் ரியாக்ட் செய்வதுதான் முதலும் முக்கியமானதுமான வழி! 

 thanks -http://tamil.yourstory.com/read/d32bcc4976/impulse-39-vellittirai-hpanri-it-is-not-only-dalit-theater-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *