தமிழினியின் -ஒரு கூர்வாளின் நிழலில்

றஞ்சி -(சுவிஸ்)

Oru_Koorvaalin_Nizhalil-1__09432_zoomஒரு கூர்வாளின் நிழலில் தமிழினியின் வாழ்வின் சுயசரிதையை இன்று வாசித்து முடித்தேன் அதை வாசிக்கும் போது என்னில் ஏற்பட்ட மன உணர்வலைகள் என் மனதில் பல போராட்டங்களைத் தோற்றுவித்தது. தங்கள் வாழ்க்கையை உயிரை தாம் நம்பிய வழியில் தமிழின விடுதலைக்காக அர்ப்பணித்தவர்கள் அவர்கள். ஆயுதப் போராட்ட வழியில் போராடி உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான பெண்போராளிகளின் கண்ணீர் கதையின் ஒரு துளிதான் ஒரு கூர்வாளின் நிழலில். தமிழினி தான் ஏன் புலிகள் அமைப்பில் சேர்ந்தேன் என்பதில் இருந்து சிறை சென்று திரும்பிய வரை விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் தனது பங்காற்றலை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் தன்னை சுய விசாரணைக்குட்படுத்தி எழுதியுள்ளாதாகவே நான் பார்க்கிறேன்.

ஆணாதிக்க சமூகத்தில் காலம் காலமாக ஒடுக்கபட்டு வாழ்ந்து வரும் பெண்கள் இராணுவ உடை அணிந்து களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேராக போரில் ஈடுபடுவதைத் காட்டி பெண்கள் சமூக விடுதலை அடைந்து விட்டார்கள் என்ற மாயை புலிகள் இயக்கத்தினுள் தோற்றுவிக்கப்பட்டிருந்தது.. விடுதலைப்புலிகள் இராணுவத்தின் பலத்தை அதிகரிப்பதற்கு பெண்கள் பயன்பட்டார்களே ஒழிய பெண்விடுதலையிலும் சரி பால்வாத அடிப்படையிலும் சரி எந்த வித மாறுதல்களையும் தமிழ்ச் சமூகத்துள் புலிகள் அமைப்பு ஏற்படுத்தவில்லை என்பது மிகக் கசப்பான உண்மையாகும்.

தேசியவிடுதலைப் போராட்டத்துடன் பெண்கள் தமது உரிமைகளுக்கான போராட்டத்தையும் இணைத்துக்கொள்ள வேலைமுறை இருக்கவில்லை அல்லது வழியேற்படுத்திக் கொடுக்கப்படவில்லை மாறாக பெண்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டதை இயக்கத் தலைமை தமது சாதனையின் அம்சமாக நிறுவ முற்பட்டுள்ளது. இனவொடுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் தாம் ஆயுதத்தைக் கையிலெடுத்துக் களமாடுவது பெண்களின் கருத்துநிலையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்ற மாயைக்குள் போராளிப் பெண்களும் விடப்பட்டுள்ளனர்.. பெண்கள் பற்றிய உடல் உள ரீதியிலான மனோபாவங்கள் பலவற்றை இந்தக் களமாடல் உடைத்தெறிந்தது உண்மை. என்றபோதும் அது பெண்களின் சமூக அந்தஸ்தில் மாற்றமெதையும் கடைசிவரை ஏற்படுத்தவில்லை. ஆயுதப் போராட்டம் தோல்வியுற்றபின் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் வாழ்க்கையை கையில் எடுக்க முடியாமல் போய்விட்டது. இங்கு போராட்டமும் பெண்களும் ஆண்மயப்படுத்தப்பட்டதினால் புலிகள் இயக்கத்திற்குள் முக்கியமான பணிகளை பெண் போராளிகள் ஆற்றியிருந்தும் பல தியாகங்களை செய்திருந்தும் பெண்களுடைய ஆற்றலும் போராட்டத்தில் அவர்கள் வகித்த பங்கும் பெண்நிலையில் நின்று மதிப்பிடப்படவில்லை. இதை தமிழினியின் சுயசரிதையிலிருந்து காணக் கூடியதாகவுள்ளது.

எல்லா யுத்தங்களைப் போலவே இலங்கையிலும் யுத்தத்தின் செயல்பாடும் வெற்றியும் தோல்வியும் பெண்களையும் சார்ந்திருந்தது. ஆணதிகாரம் வகுத்த மரபுகளையும் கலாச்சார எல்லைகளையும் தாண்டி வந்து இன்று இந்த யுத்தத்தில் போராடிய பெண்களின் சுதந்திரத்தையும் சுய உரிமைகளையும் சுயசிந்தனைகளையும் புலிகள் என்ற பெயர்ப்பலகையின் கீழ் குறுக்கிவிட்டிருக்கிறது தமிழ்ச சமூகம். மீண்டும் அவர்களை தமது ஆண்நோக்கினுள் வீழ்த்தியுள்ளது

போராட்டத்தில் ஈடுபட்ட உயிர்தப்பிய பெண்போராளிகளுக்கு அவர்களது எதிர்காலம் குறித்து எத்தகைய சமூக உத்தரவாதமும் உருவாக்கபட்டு பேணப்படவில்லை இப் பெண்போராளிகள் இன்று நிர்க்கதியாக நிற்பதை தமிழினி மிகவும் வேதனையுடன் சுட்டிக்காட்டியுமுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *