கெட்டவார்த்தையென்று சொல்வார்களே !!!

விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு , இலங்கை)

Cartoon-pls

srila busகூடுதலானோருக்கு சாப்பிட்டுவிட்டு பகல் பொழுதில் பஸ்சில் ஏறினால் கண்ணை உடனடியாகக் கசக்கும். அதுவும் இருப்பதற்கு யன்னல் ஓர இருக்கை கிடைத்தால், பக்கத்தில் ஒரு பெண்ணாக வந்தமர்ந்தால் தூக்கம் சுதந்திரமாக் கண்ணைச் சுழட்டும். சில வேளை நமது கஸ்டகாலமாக யன்னல் ஓர இருக்கையில் சுரணையில்லாத ஆண் அமர்ந்து, அவன் பக்கத்து இருக்கையில் இடம் கிடைக்க, அவனோ பக்கத்தில் இருப்பவரைப் பற்றி எந்த வித கவலையும் இல்லாமல் “நானே ராஜா விரும்பினால் இரு” என்பதுபோல் காலை அகல விரித்து கண்ணை மூடிக்கொண்டு இருந்தால், ஓரமாக இருப்பவள் நிலை;  ஒவ்வொரு பிரேக்கிற்கும் விழுந்து விடாமல் இருக்க கைப்பிடியை பிடித்துக்கொண்டும், தூக்கம் வந்தால் விழுந்திடுவோமோ என்ற பயத்தில் தினுக்கிட்டுக்கொண்டும், ….அந்த நேரம் பார்த்து அவள் இருக்கை ஓரம், வேண்டும் என்றே வந்து நிற்கும் ஆண்கள், அல்லது அவள் பிடித்திருக்கும் கைப்பிடியில் சாய்ந்து கொண்டு டிக்கட் கிழிக்கும் நடத்துனர், எத்தனை நாள் இப்படிக் காலை “ஆ” வென விரித்துப் போட்டிருப்பவனுக்கும், ஒதுங்க முடியாது தள்ளிக் கொண்டிருக்கும் இவன்களுக்கும் “மாட்டுப் பிறப்புக்கள்” என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே தொடரும் அவள்களது பயனங்கள்…..
நல்ல வேளை அன்று அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அனைத்துமே சௌகரியம்தான் எனக்கு. என்னைமாதிரியே பஸ்சில் அனேகர் கண்ணை மூடியே அன்றும் பயணம் செய்தனர். யாராவது இறந்கினால் அல்லது ஏறினால் கண் திறபடாமலே விழிப்போம். மீண்டும் விழிக்கையிலேயே தெரியும் திட்டமிடப்படாத எமது தூக்கம். இப்படியே பயணம் தொடரும். அன்றும் அப்படித்தான் நடந்தது. …திடீரென .ஒரு பெண்ணின் குரல் யாருக்கோ ஏசி சண்டை பிடிக்கும் சத்தம். பின்னால் இருந்து வந்தது. என்னைப்போல் சிலர் விழித்துக்கொண்டனர்.

அவள் யாருக்கோ ஏசிக்கொண்டு வந்தாள். சொற்கள் மிகவும் கடுமையான சொற்களாக இருந்தன. கெட்டவார்த்தையென்று சொல்வார்களே அவ்வாறான வார்த்தைகள்தான். கோவத்தில் அவள் முகம் சிவந்திருந்தது. மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது. மன நிலை சரியில்லாதவள்போல் அவள் இருந்ததால் அவள் எப்போது ஏன் பாதிக்கப்பட்டிருப்பாள் என தன் பாட்டிற்கு என் மனதில் கதைகள் உருவாகத் தொடங்கிவிட்டது… அவளது சத்தத்தில் பிரயாணிகள் தமது முகத்தைச் சுளித்தனர். இப்போது அனைவரும் தமது இருக்கையில் கண்கள் தெழிந்து காதுடன் அமர்ந்து கொண்டனர்.இப்போதுதான் எமது நடத்துனர் கதாநாயகனாகத் தொடங்கினார். கதாநாயகன் அப் பெண்ணை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். எல்லோரும் அவருக்கே சப்போட். ஏன்ன இவள் பொம்பிள, ஆள் சரியில்ல போல், என்ன கொட்ட வார்த்தையெல்லாம் கதைக்காள், ஒரிருவர் “என்னப்பா இவள் தூசனமெல்லாம் கதைக்காள்..” பெண்ணின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மேலும் மேலும் நடத்துனர் அனைவரையும் காப்பாத்துபவராய் உருப்பெற்றுக்கொண்டிருந்தார். திடீரென அறையும் சத்தம் கேட்டது.

என்னால் இருக்க முடியவில்லை எனக்கு பதட்டமாகி விட்டது, முன் சீட்டில் இருந்த பெண்ணைத் தட்டி “ஐயோ அறையிறார் அக்கா அவ பாவ” நான் முடிக்கும் முன்பே “என்ன செய்யிற இப்படி தூசனம் கதைச்சா அறையத்தான் வேணும்” தூசனம் கதைச்சா அறையலாமா? எனக்குள்; கூவினேன். என் பக்கம் கதைப்பதற்கு யாரும் இல்லாதது என்னால் எழும்ப முடியாமல் இருந்து.. எல்லோரும் இப்பொழுது நடத்துனரை ஆதரிக்க அவரது அந்தஸ்து கூடியது…அத்தனை பேரினதும் கௌரவம் அவர் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பது போல் மிகவும் நிமிர்ந்த நடை, உறுக்கும் பார்வை, கையில் பலம் கொண்டு மீண்டும் அறை…பெண் வெலவெலத்துப் போய் ..அவனைப் பார்க்க.. பஸ் மெதுவாக நிக்க “ எழும்பிடி” பெண் தோள்பட்டை பிடித்திழுத்து அவளுக்கு கைப்பிடியைப் பிடிக்க அவகாசமும் இன்றி இறக்குவதாய் அவள் தள்ளுப்பட..இப்பொழுது உலகத்தைக் காப்பாற்றிய பரமார்த்மா காலை நீட்டி சேட் கொலரை மேலே இழுத்து விட்டுக்கொண்டு ஆசுவாசமாக இருக்க …தண்ணி எடுத்துக் கொடுக்காத குறையாய் அனைவரும் அவரை பெருமைக்குரியவராய் தம்மைக் காப்பாற்ற உயிரையே கொடுக்கத் துணிந்த ஹீரோவாக நன்றியுடன் பார்த்துக் கொண்டிருக்க பஸ் பயணம் தொடர்கிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *