எனது பேனா..!

-வானதி (”வானதியின் கவிதைகள்”, வி.பு வெளியீட்டுப் பிரிவு,  1992)

எனது
பேனா கூரானது
எனது
கைகளில் உள்ள
துப்பாக்கியைப் போல

ஆனால்
துப்பாக்கி
சன்னத்தை மட்டுமே துப்பும்
என் பேனாவோ
சகலதையுமே கக்கும்!

எந்தப் போட்டிகளிலும்
கலந்து கொள்ள – எனது
கவிதைக்கு அனுமதியில்லை
ஆனால்
எமது உணர்வுகளை
அவமரியாதை செய்து
அனுமதி வழங்கத்
தவறும் இடங்களில்
எனது பேனா
உத்தரவின்றி
உட்பிரவேசிக்கும்!

பராட்டுக்களோ
அன்றி பரிசுகளோ
என் கவிதையை
பரவசப்படுத்துவதில்லை
ஏனெனில்!
மிக உயர்ந்த பரிசும்,
மிக… மிக…. உயர்ந்த
பாராட்டும் அன்று
என் கவிதைக்கு
கிடைத்ததால்தான்
இன்று – என் கவிதை
பரிசுத்தமாய் இருக்கிறது.

எனது
பேனா கூரானது!
எனது
கைகளில் உள்ள
துப்பாக்கியைப் போல!!

எந்த
கலாநிதியுடனும்
எந்த
வித்துவானுடனும்
எந்த
பண்டிதருடனும்
என் கவிதை சவால் விடும்
ஏனெனில்
எனது பேனாவில்
உணர்வுகள்
உயிருள்ளவை!

எமது
உணர்வுகளை
கொச்சைப்படுத்தும்
சில பேனாக்களுக்கு
ஓர் வேண்டுகோள்!
முகவரி தருங்கள்
உங்கள் முகத்திரையை
என் பேனா கிழிக்கும்!

எனது
பேனா கூரானது
எனது கைகளிலுள்ள
துப்பாக்கியைப் போல!
எனது துப்பாக்கி
எதிரியை மட்டுமே
குறிபார்க்கும்.
எனது பேனாவோ
எல்லாவற்றையும்
பதம் பார்க்கும்

எனது
பேனாவின்
நினைவுகளின்
இறந்தகாலம்
நிகழ்வுகளின் நிகழ்காலம்,

எனது
பேனாவின்
நினைவுகளின்
நிகழ்காலம்
நிகழ்வுகளின் எதிர்காலம்

புரியவில்லையா
என் கவிதைகளை
நீ புரியவில்லையா!

இது
எனக்குக் கிடைத்த
வெற்றியல்ல!
எனது கவிதைக்கு கிடைத்த
வெற்றியுமில்லை!
எனது
பேனாவின் வெற்றிகள்
எனது கைகள்
நாளை ஓயலாம்
அன்றி ….. ஒடியலாம்
ஆனால்
எனது பேனாவோ
ஓயப்போவதில்லை
எமது துப்பாக்கியைப் போல!!!
மன்னார் அனுபவத்தின் பின்
எனது பேனா கூரானது
கைகளிலுள்ள
துப்பாக்கியையும் விட
எனது பேனா கூரானது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *