பெண் மீது அறிவிக்கப்படாத போர்

மாலதி மைத்ரி

indexjajaசமூக இயங்கியல்:

பெண்கருக் கலைப்பு, பெண்சிசுக் கொலை, அமில வீச்சு, சதி, வரதட்சணை கொலை, சாதிவெறி பாலியல்வன்முறை, ஆணவக் கொலை, முலை நீவுதல், கந்து அகற்றல், பெண்குறி அடைத்தல், கற்பு பூட்டு, கால் கட்டுதல், கழுத்து வளையமிடுதல், குடும்ப வன்முறை. திருமண வன்கலவி, பெண் கடத்தல், கட்டாய பாலியல் தொழில், பாலியல் வன்முறை, போர்க்கால பாலியல்வன்முறை கொடுமைகள், இனவெறி பாலியல் வன்முறை.

மேற்கூறியவை அனைத்தும் இன பாரம்பரியம், சமூகப் பாரம்பரியம், சமய நம்பிக்கை, குடும்ப மரபுகள் என்ற பெயரில் பெண்கள் மீதும் பெண் இனத்தின் மீதும் தொடுக்கப்படும் வன்முறைகள். சில இடங்களில் இவை நியாயப்படுத்தப்பட்ட சமூக வழக்கங்களாகவும் இருந்து வருகின்றன. உலக அளவில் நேரடியான போரால் கொல்லப்படும் மக்கள் தொகையை விட குடும்ப வன்முறையால் கொல்லப்படும் பெண்களின் தொகை அதிகமென்கிறது புள்ளி விபரங்கள். மனித இனத்தின் முதற் போர் பெண்ணுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டதாக தான் இருந்திருக்க வேண்டும்.

இந்தச் சமூக அமைப்பும் அதன் நுண் அலகான குடும்பமும் பெண்களுக்கான திறந்தவெளி வதைமுகாமாகவும் கொலைபீடமாகவும் திகழும்போது குடும்பமும் அதைத் தாங்கி நிற்கும் சமூகமும் பெண்களைப் பாதுகாக்கும் அமைப்பு என்று இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பொய்க் கதைகளைப் பரப்பி, பெண்களை நம்ப வைத்து அவர்களை அடிபணிய வைத்துக்கொண்டிருப்பார்கள். இவ்வமைப்பு முறையை மாற்ற வேண்டுமென உரையாடலைத் தொடங்கினால் மத/சாதிய அடிப்படைவாதிகள் அடையும் பதற்றத்தைவிட முற்போக்குவாதிகளென சொல்லிக் கொள்பவர்கள் அதிக பதற்றமடைகிறார்கள்.

பாரம்பரியக் குடும்ப அமைப்பும் இன்றைய நவீன குடும்ப அமைப்பும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே வேறுபட்டு நிற்கின்றன. இரண்டு குடும்ப அமைப்பிலும் பெண் கொத்தடிமைதான். பாரம்பரிய குடும்பம் என்ற அமைப்பு உருவாக்கிய சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் போன்ற பிற்போக்கு நடைமுறைகளை நவீன குடும்பங்கள் சிறிதும் நீக்கிவிடவில்லை. எந்த குடும்ப அமைப்பாக இருந்தாலும் ஆதிகாலத்திலிருந்து நவீன காலம் வரை பெண்ணை கொத்தடிமையாக வைத்திருப்பதுதான் அதன் வெற்றியாக உள்ளது. சமூகம் என்பது அடிமை வர்த்தக மையம், குடும்பம் அதன் சிறப்பு வதை முகாம்.

சமூக அமைப்பும் அதன் நிறுவனங்களும் குற்றத்தன்மையும் குற்றவியல் நடைமுறைகளை மட்டுமே தனது இயங்கியலாக கொண்டு செயல்படுகிறது. ஆண்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்கி கால மாற்றத்திற்கேற்ப பெண்களுக்கு மேலும் புதிய புதிய கட்டுப்பாடுகளையும் ஒழுக்க வரையறைகளையும் வகுத்து, சமூகத்தில் சமநிலை குலைவையும் ஏற்றத்தாழ்வையும் தீவிரப்படுத்தி பெண்களுக்கு தொடர் உயிரச்சத்தை உருவாக்குவதன் மூலம் சமூகம் தனது குற்றவியல் நடைமுறைகளை நவீனப்படுத்தி தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. இந்நிலையில் பெருகிவரும் அபரிமிதமான குடி கலாச்சாரம் பொதுவெளி அனைத்தையும் திறந்தவெளி ‘டாஸ்மாக்’ ஆக மாற்றியிருக்கிறது. ஏற்கனவே வன்முறை மலிந்த சமூக/ குடும்பவெளி மதுவெறி மனநோயாளிகளால் அதீத வன்முறை நிறைந்த கடும் சித்ரவதை கூடமாகவும் கொலைக்களமாகவும் தற்கொலை களமாகவும் மாறியிருக்கிறது. நிரந்தர போர்கள் நிகழும் நாட்டில் உள்ள நிராதரவான பெண் தலைமை குடும்பங்களை விட தமிழ்நாட்டில் சிறு வயதிலேயே வன்முறையின் வடுக்களை சுமந்தபடி குடும்பத்தின் பாராத்தையும் சுமக்கும் பெண்கள் அதிகம்.

குடும்ப இயங்கியல்:
ஒரு பெண்ணுக்கு குடும்பம் தான் உலகமென்று பிறந்ததிலிருந்து போதிக்க தொடங்கிவிடுகிறது அமைப்பு. பெண் தனது வரலாற்றை முன்னையும் பின்னையும் மேலும் கீழும் எங்கும் பார்க்க தேவையில்லை. குடும்பத்தை பார்த்தால் மட்டும் போதும். அரசு, மதம், சாதி, சமூகம், குடும்பம் இவற்றின் பிற்போக்குத்தனமான ஆணாதிக்க நடைமுறையை விமர்சித்தால் நாம்

விபச்சாரி’ ‘வேசி’ என தூற்றப்படுவோம். (உலகப்புகழ் பெற்ற பாலியல் தொழில் நிறுவனங்களை உருவாக்கிய தொழில் அதிபர்களும் அதன் கைகூலிகளும் பெண்ணியவாதிகளை ‘விபச்சாரிகள்’ என்பது எந்த ஒழுக்கவிதி சார்ந்தது?)

இந்த வகையான குற்றவாளிகள்தான் மரபான சமூகம் உருவாக்கிய குடும்பம் பெண்ணுக்கு பாதுகாப்பளிக்கும் உன்னதமான அமைப்பு என்கிறார்கள். குடும்ப அமைப்பு ஆண்களை பெற்று, கட்டிக் காப்பாற்றி பேணி வளர்க்க உருவாக்கப்பட்ட அமைப்பு. குடும்பம் ஆண்களுக்கான தனிசிறப்பு மிக்க ‘வாழ்நாள் கேர் சென்டர்’ குடும்ப அமைப்பு பிழைத்திருந்தால்தான் ஆண் பிழைத்திருக்க முடியும். இந்த அமைப்பு சிதைந்தால், தேசம் முழுவதும் ஆண்களுக்கான மனநோய் கேர் சென்டர்களைத்தான் துவங்க வேண்டும். ஆகையால் பெண் என்னும் அடிமைகளை உற்பத்தி செய்யும் குடும்பங்களை உருவாக்குதல் சமூக கட்டமைப்புக்கு எளிதாகிறது. ஆண்கள் தனியாக ஜீவித்திருக்க முடியாத ஓர் சிவில் ஒட்டுண்ணி இனமென்பதால் குடும்பமும் ஒருவகையில் ஆண்களுக்கான மினியேச்சர் மனநோய் காப்பக விடுதிகள்தான். அவர்களின் வக்கிரங்களை, குரூரங்களை ஆற்றுப்படுத்தும் இல்லங்கள். பிள்ளையைப் பெற்றெடுப்பது பெண்கள் என்பதால் இது உங்களின் கடமையென எளிதாக சொல்லிவிட்டு சமூகமும் அரசும் நகர்ந்துவிடுகிறது. (பெண்களே பிள்ளை பெற்றுக் கொள்ளாதீர்கள் என்று பெரியாரும், பெண்ணியவாதிகளும் சொல்கிறார்கள்) ஆணை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முடியாட்சி, மக்களாட்சி, குடியரசு, ஜனநாயகம், முதலாளித்துவம், சோஷலிசம், சாதி, மதம், சிவில் சட்டம், மெய்யியல், தத்துவம். கலை, இலக்கியம் போன்ற அனைத்து நிறுவனங்களும் குடும்ப அமைப்பைக் காக்க கொள்கைகளையும் ஒழுக்க விதிகளையும் உற்பத்தி செய்து கண்காணிப்பு முறைகளையும் தண்டனை பொறிமுறைகளையும் உருவாக்கி ஆண் கங்காணிகளின் கையில் அதிகாரத்தை கையளித்துவிடுகிறார்கள். பின் என்ன? பெண்களைக் கொன்று கொன்று விளையாடிக் கொண்டிருக்கும் குடும்பம்.

அரசும் அரசு நிறுவனங்களும் அதன் கட்டமைப்புகளும் மக்களுக்கானது என்றால் அதில் பெண்கள் எப்போதும் வெளியேற்றப்பட்டவர்கள் தான். நம் பங்கை, உரிமையை, பாதுகாப்பை எப்போதும் நாம் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. பெண்கள் தனித்து சுயமரியாதையுடன் வாழ்வதற்கான

ட்டமைப்பை அரசோ, சமூகமோ எப்போதும் உருவாக்கித் தருவதில்லை. இதற்கான பெரும் பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது. சமூகம் பெண்களின் காலில் பாறாங்கல்லை அல்ல கண்ணிவெடிகளைக் கட்டி வைத்திருக்கிறது. உயிர்ச் சேதமற்று நம் தளைகளை அறுத்துக்கொண்டு வெளியேறுவதுடன் பிறர் தளைகளையும் களைய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

முற்போக்கு இயங்கியல்:
‘குடும்ப அமைப்பு பெண்களுக்கான வாழ்நாள் கடுங்காவல் சிறைக்கூடங்கள்’ என்ற கருத்தை மறுக்க பெண்களே வருவார்கள். இதுதான் ஆணாதிக்கத்தின் வெற்றி. ஆணாதிக்கம் செயல்படும் நுண்ணரசியல் தளமும் இதுதான். பெண்களைக் கொண்டே பெண்ணியக் கருத்தியலை வீழ்த்துவது. குடும்பம் என்பது ஆண்-பெண் இருபாலர் சேர்ந்து வாழும் இனிய சங்கீதம், கனவுக்கூடு, ‘பூலோக சொர்க்கம்’ என்றெல்லாம் வாதிடும் அறிவுசீவிகளும் முற்போக்காளர்களும் இருக்கிறார்கள். இதை இவர்கள் வீட்டுப் பெண்களை விட்டே சொல்ல வைப்பது அதைவிடக் கொடுமை. இவர்களின் வீட்டுப் பெண்களைச் சந்தித்திருக்கிறேன். இவர்கள் பல கைகள் கொண்ட, பல திறமைகள் பெற்ற பெண்களாய்த் திகழ்கிறார்கள். அத்துடன் நாள் முழுவதும் இன்முகத்துடன் சமைத்துக் கொட்டும் திறமையுமிருக்கிறது. எனக்கு சமைப்பது பிடிக்கும் என்று வேறு சொல்லப் பழகியிருக்கிறார்கள். நாங்களும் எங்கள் வீட்டு பெண்களுக்கு சமையலில் உதவுவோம் என்று பெருமைப் பொங்க ஆண்கள் அறிக்கை வாசிப்பது பூண்டு, வெங்காயம் உரிப்பதையும் கோடை மழை மாதிரி எப்பவாவது டீ போட்டுவதும்தான். பெண்கள் வேலை பார்க்கவும், வெளியிடங்களுக்குத் தனியே செல்ல அனுமதிப்பதும் (கவனிக்கவும் அனுமதிப்பது), வெங்காயம் பூண்டு உரித்துக் கொடுப்பதும், மனைவிக்கு உடல்நிலை குறைவின்போது மட்டும் அடுப்படி பக்கம் போவதல்ல மாற்று வாழ்க்கை. ஒரு இணையரின் வாழ்வில் வீட்டுப் பணியை, குழந்தை வளர்ப்பை சரிபாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுதான் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் சுதந்திரமான வாழ்க்கை முறையாக இருக்கும். அதுவரையில் குடும்பமென்பது பெண்ணைச் சுரண்டும் அடிமைப்படுத்தும் கொல்லும் ஒரு அமைப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. நான் வீட்டுபணியெல்லாம் செய்ய முன்வந்தாலும் என் மனைவி அனுமதிப்பதில்லை என்னும் நற்சான்றிதழ் காட்டும் ஆண்களும் இருக்கிறார்கள். குடிக்க, புகைக்க, சைட் அடிக்க, போர்னோ

பார்க்க இன்னும் பிற குற்ற செயல்களையெல்லாம் மனைவி அல்லது தாயின் அனுமதி பெற்று செய்வதில்லையே. தனக்கானவைகளை செய்வதையும் தவறுகள் செய்வதையும் தங்கள் பிறப்புரிமையாக கருதும் ஆண்கள், வீட்டுப் பணி என்பதை மட்டும் பெண்ணின் கடமையாகப் பார்ப்பது எந்தவகை சமூக இயங்கியல் தத்துவம் என்று புரியவில்லை.

ஆண்கள் மாற வேண்டும் என்று கோரும் அதே சமயம் பெண்ணியவாதிகளும் முன்மாதிரிகளாக, முன்மாதிரிகளை உருவாக்குபவர்களாக செயல்படவேண்டும். பெண்ணியம், பெண் அடையாளம், பெண் விடுதலை பேசும் சிலர் ஆண்களின் பிற்போக்குதனங்களைக் கண்டிக்காமல் கண்டுகொள்ளாமல் கடப்பதும் அதற்கு துணை போவதும் இயல்பானது என்று நினைக்கின்றனர். இவர்கள் தங்களைப் பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். அவர்கள் மீது பரிதாப உணர்ச்சியே மேலிடுகிறது. ஆண்திமிர் கொண்ட ஆண்களிடமிருந்தும் அவர்கள் உருவாக்கிய நிறுவனங்களிடமிருந்தும் நற்சான்றிதழும் அங்கீகாரமும் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்தச் சமூகம் சிந்திக்கத் தலைப்படும் பெண்களில் பலரை ஊடகப் புகழ் என்ற நஞ்சைப் பருக வைத்து அறிவைக் கொன்று, அடிமையாக்கி வைத்துக் கொள்கிறது. விளிம்பிலும் விளிம்பு நிலையில் உள்ள பெண் எழுத்தாளர்கள் ஆண் அறிவுசீவிகளின் சமூக விலக்குத் தண்டனைக்கு அஞ்சி அடிபணிய வேண்டியிருக்கிறது. ஆண்களைப் பகைத்துக் கொண்டால் ஆண்கள் கூடி எழுதும் இலக்கிய வரலாற்றில் தமது பெயர் இருக்காது என்ற அச்சமே அதற்குக் காரணம்.

நாங்கள் ஆண்களை வெறுக்கும் பெண்ணியவாதிகள் இல்லையென ஒவ்வொருமுறையும் பெண்கள் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. அதுசரி பெண்களை வெறுக்காத ஆண் யார்? தன் தாயைக்கூட நேசிக்க தெரியாதவர்கள்தான் ஆண்கள். ஒரு வயதுக்கு மேல் உன் வேலைகளை நீயே செய்ய வேண்டும் என்று பணிக்கும் தாயை எந்த ஆணுக்கு பிடிக்கும்? தாய் தியாகத்தின் சேவையின் திருவுருவாக இருந்தால்தான் அவள் தன் மகனின் நேசத்திற்கும் பிரியத்திற்கும் உரியவளாகிறாள். ஆனால் இதையெல்லாம் செய்யாத தந்தை எப்போதும் மதிப்புக்கும் நேசத்திற்கும் பிரியத்துக்கும் உரியவாகி விடுகிறார். அதுபோல் நல்ல மனைவி, சகோதரி, காதலி என்ற இடமும் அதுதான். இணையாகவோ சமமாகவோ பெண்ணை எதிர்கொள்ள

முடியாத ஆண்களின் குறைகளைச் சுட்டினால் நீ ஆணை வெறுப்பவள் ஆகிவிடுவாய். பெண் இழிவு “ஸ்டேன்ட் அப் காமெடிகளை” இலக்கியத்திலும் பொதுத்தளத்திலும் பகிர்ந்து கொள்ளும் அறிவுசீவிகள் இவர்கள். பெண்கள் இவர்களிடம் ‘நல்ல பெண்கள்’ நற்சான்றிதழை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டுமென விரும்புகிறார்கள்.

ஆண்கள் மிக எளிதாக பெண்ணை கைப்பற்றி விட்டார்கள். வெளிப்படையான போர் அறிவிப்புமின்றி, படையெடுப்பின்றி, போராயுத தளவாடங்களின்றி மிக எளிதாக ஆண்களால் வெற்றிக்கொள்ளப்பட்ட இனம் பெண்ணினம். குடும்பம் என்னும் எலிப்பொறி ஒன்றை மட்டும் அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதற்குள் அவளே இரை அவளே எலி. அந்த உன்னத இரை நோக்கி பெண்கள் நகர சர்க்கஸ் விலங்குகள் போல் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பழகிய வளர்ப்பு பிராணிகள் எப்போதும் எஜமானனின் விசுவாசத்தைப் பெற ஆயுசு முழுவதும் போராட வேண்டும். பிறகு பெண்களுக்கு வேறு சிந்தனை என்ன இருக்கிறது. ஆணாதிக்கத்திற்கு கீழ்ப்படிந்து சேவை புரியும் பெண்கள் எப்போதும் தன் மீதான வன்முறையை நியாயப்படுத்தி கொள்கிறார்கள். தம் மீதான ஆண்களின் வன்முறைக்கு தானே காரணமென்னும் குற்றச்சாட்டை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுகிறாள் பெண். அவள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டால் தவறு அவளுடையதுதான், அவள்தான் குற்றவாளி. கணவன் அடிப்பதுகூட ஆணுக்கு கோபத்தை துண்டும் வகையில் பெண் நடப்பதுதான் காரணம். தவறு எப்போதும் பெண்கள் மீதுதான் இருக்கிறது, அதற்கான தண்டனை அவளுக்கு நிச்சயம் வழங்கப்படும்.
மூன்று பேரில் ஒரு பெண் வழக்கமான குடும்ப வன்முறைக்குள்ளாகிறாள். உலகில் கொல்லப்படும் பெண்களில் 70 சதவீதம் பேர் அவர்களின் வாழ்க்கை துணையினராலே கொல்லப்படுகிறார்கள். ‘புனித குடும்பம்’ எக்காலத்திலும் புனிதமாக இருந்ததில்லை. அது பெண்களுக்கென உருவாக்கப்பட்ட ‘சமூக பலிபீடம்’.

எந்த கட்டத்திலும் ஆண்களுக்கு மேலாதிக்க பேராசை ஓய்வதில்லை. எப்போதும் தான் வலுத்தவன் என்பதை நிரூபிக்க, சாதி, மத, இன மேலாதிக்கத்தை நிரூபிக்க பெண் மீது தொடர் போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போர்கள் ஆணாதிக்க வரலாற்றை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த

ஆண்மைய, ஆணாதிக்க வரலாற்றை மாற்றி எழுத முற்பட்ட பெண்கள் உண்டு. கேள்விக் கேட்ட பெண்கள் உண்டு. அவர்கள் இந்த ஆணாதிக்கச் சமூகத்தால் கொல்லபடுவேமென்று தெரிந்தே கேள்வி கேட்டார்கள். அதனால் கொல்லப்பட்டார்கள். சூன்யகாரிகளென கொல்லப்பட்டார்கள். மத விரோதிகளென கொல்லப்பட்டார்கள். ராஜ துரோகிகளென கொல்லப்பட்டார்கள். கலகக்காரிகளென கொல்லப்பட்டார்கள். புரட்சிக்காரிகளென கொல்லப்பட்டார்கள்.

இத்தனை நூற்றாண்டுகள் நாம் ‘நல்ல பெண்ணாக’ வாழ்ந்ததற்காக, நமது சேவைகளுக்காக இந்த ஆணாதிக்க உலகம் நமக்கு எதையும் விட்டுக் கொடுத்ததில்லை. இன்று நாம் பெற்றுள்ள சில அடிப்படை உரிமைகள், சிறிய அளவிலான சுதந்திரம் எல்லாம் நம் சகோதரிகள் போராடி, களத்தில் தம் உயிரைத் தந்து நமக்கு உருவாக்கிக் கொடுத்தவை. பெண்ணுக்கான ஒவ்வொரு சுதந்திர சொல்லாடலையும் உருவாக்கித்தர பல ஆயிரம் பெண்கள் தம் வாழ்வைத் தந்துள்ளனர். இன்று ஒரு பெண்ணின் அமைதியான அடிபணிதல் இனி வரும் பல ஆயிரம் பெண்களின் அடிமைத் தனத்தை உறுதி செய்துவிடுகிறது. உனக்காக மட்டுமல்ல உனக்குப் பின் வரும் பெண்களுக்காக உலகை எதிர்க்கப் பழகு. ஆணாதிக்கத்தைக் கொல்லப் பழகு. அதன் வழி மனித நிலையை புதிதாக உருவாக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *