உழைக்கும் பெருந்தோட்ட பெண்களும் சமூக இயக்கமும்

சந்திர லேகா கிங்ஸ்லி மலையகம் இலங்கை

march 16அந்தப் பெண் அப்படித்தான் இருந்தாள். உடல் மெலிந்து கறுத்துக் காணப்பட்டது. கண்கள் ஒளியிழந்து குழிக்குள் விழுந்து சோபை இழந்திருந்தது. தலை முடி பிளந்து பரட்டையாகி கிடந்தது. கால்கள் பித்த வெடிப்பினால் பாலம் பாலமாக பிளந்துக் காணப்பட்டது. கை விரல்கள் கறைபடிந்து வெடித்து வெடித்து இரத்தக்கறையுடன் காப்பு காய்த்து முரடாகியிருந்தது. கொஞ்சம் கூன் விழுந்திருந்தது. உடம்பை மீறி மிகப்பெரிய “சோட்டி” எனும் உடுப்பை அணிந்திருந்தாள். கிட்டத்தட்ட 65 வயது மதிக்கும் தோற்றம்.; வயதை கேட்டறிந்தப் பொழுது அதிர்ந்துப் போனேன் 35 வயது மட்டும் தான். மனதை துக்கம் அழுத்த எண்கண்கள் பனித்தன. கருத்துக்கள் அவளின் கடந்த காலம் நோக்கிப் போயின.

பெருந்தோட்டத்தில் தேயிலைப் பறிக்கும் கணிசமான பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள். பெருந்தோட்ட துறையில் 1963ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் படி தோட்டங்களில் உள்ளவர்கள் 939380 பேர் ஆகும். இந்த மொத்தத் தொகையில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் தொகை 244596 பேராகும். ஆண்களை விட அதிகமாக பெண்களே பெருந்தோட்டத் துறையின் வேலைப்படையில் காணப்படுகின்றனர். சமீபத்தில் நாணய மதிப்புக் குறைப்புக்காரணமாக ஆண்களின் அடிப்படை சம்பளம் கூலி விகிதம் இவ்வாறு காணப்படுகின்றது. அடிப்படைச் சம்பளம் ஆண்களுக்கு 1.35 விசேட படி 1.36 இடைக்காலப்படி 0.30 மொத்தம் 3.01 ஆக காணப்பட பெண்களுக்கு அடிப்படை சம்பளம் 1.15 ஆகவும் விசேட படி 1.00 ஆகவும் இடைக்காலப்படி 0.30 ஆகவும் மொத்தச் சம்பளம் 2.45 ஆகவே மட்டும் காணப்படுகின்றது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் ஓர் அநீதியாகவே காணப்படுகின்றது. அவர்களின் உரிமையை மீறிய செயலாகவும் காணப்படுகின்றது.
இதைத்தாண்டி அன்றாடம் குடும்ப வேலைகள், கணவன் பிள்ளை பராமரிப்பு, வீட்டு துப்பரவு, தோட்டம், விறகு சேர்த்தல், சமையல், துணி துவைத்தல் இப்படி வேதனமில்லாமல் அவர்கள் நாள் பூராகவும் சுழற்சி முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரமாகவே அவள் கருதப்படுகின்றாள். காலை முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை அவர்களின் உழைப்பு பெறுமதி வாய்ந்தாகவும் அவளுக்கு மிகுந்த சுமையை கொண்டுவருவதாகவும் நமக்கு காணமுடிகின்றது. இந்த உழைப்புச் சுமையும,; உணவு பழக்கவழக்கங்களும் அவளின் அன்றாடத் தோற்றத்தினை அடையாளப்படுத்துகின்றன. இந்த ஓயாத உழைப்பும், குறைவான உணவும,; போதாத சுகாதாரமும் அவளை 35 வயதிலேயே 65 வயது தோற்றத்துக்காகி வயதுப் போனது போல், நோய்வாய்ப்பட்டு மிகக்குறைந்த வயதில் இறந்துவிடக் கூடிய சாத்தியத்தினையும் கொண்டு வருகின்றது.

இவ்வாறான அவளின் தோற்ற முதிர்ச்சியில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துவதினை நாம் அவதானிக்க முடிகின்றது. சிறுவயது முதலே அவளுக்கு கிடைக்கும் உணவு போதாமை, தகுந்த சுகாதாரத்தினை பேணமுடியாத வீட்டுச் சூழல், கர்ப்பக் காலங்களில் சக்தியை ஈடுசெய்ய இயலாத நிலை, பிரசவ காலத்தில் கவனிப்பின்மை, பிரசவத்திற்கு பின் உணவு முறைமை, போதிய விடுமுறை ஓய்வு கிடைக்காமை, பிள்ளை பராமரிப்பு சுமை, வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் மனச்சுமை, குறிப்பிட்ட வயதுக்கு பின் அவளைத் தாக்கும் உள நோய்களும,; நரம்பு சம்பந்தமான வியாதிகளும் என்பன அவர்களைச் சுற்றி அழுத்தங்களைக் கொண்டு வரும் விடயங்கள் என அதிகமாகவே காணப்படுகின்றது. இது அவர்களின் உரிமை மீறும் செயல்களாகவும் ஒடுக்கு முறைகளை கொண்டு வருவதாகவும் காணப்படுகின்றது.

பெருந்தோட்டத்துறையில் பிறக்கும் பெண் குழந்தைகள் சிறுவயது முதலே குறைந்தளவு உணவையே உட்கொள்கின்றனர். ஆணாதிக்க சமுதாய முறையில் பெண்களுக்கு கொடுக்கப்படும் உணவு ஆணுக்கு கொடுக்கப்படும் உணவின் அளவை விடவும் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. ஓர் ஆணாதிக்க சமூகத்தில் காணப்படும் உணவு முறையில் ஆணுக்கு இருக்கும் முன்னுரிமை பெண்ணுக்கு குறைவாகவே காணப்படுகின்றது. உணவின் அளவிலும் கூட குறைவான பங்கே பெண்ணுக்கு கிடைக்கின்றது. இது அவளின் பலத்தினை இழக்கச் செய்து அவளை பலவீனமுடையச் செய்கின்றது. இவற்றை இவ்விழப்பை அவளின் முதல் மாதவிடாய் காலங்களில் கொடுக்கப்படும் முட்டையினாலோ நல்லெண்ணெய்யினாலோ ஈடு செய்ய முடியாததாகும். அவளுக்கு சரியான உணவு முறைமை சிறுவயதிலிருந்தே தொடர்ச்சியாக வழங்கப்படுதல் மிக அவசியமானதாகும்.

upcon

பெரும்பாலும் பெருந்தோட்டத் துறையில் லயன் வாழ்க்கை முறையில் ஒரே பீலியடியில் சகல விடயங்களையும் செய்யும் பட்சத்தில் இப்பிள்ளைகள் ஆரம்பக் காலத்திலிருந்தே தம்மை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது. பொதுப்பீலிகளையே அதிகமாக உபயோகப்படுத்தும் இந்த தோட்டத்துறை சார்ந்த பெண்கள் மாதவிடாய் காலங்களில் 4இ5 மணித்தியாலத்திற்கு ஒரு முறையாவது உடைமாற்றி சுத்தப்படுத்திக் கொள்ளும் அந்தரங்க சுகாதாரம் பேணல் ஓர் வெளியரங்க பீலியடியில் எவ்வாறு சாத்தியமாகும். இது அவர்களுக்குள் பல்வேறு நெருக்கிடைக்களை தோற்றுவித்து அதனூடாக மன இறுக்கத்தினையும் அதிகரிக்கச் செய்கின்றது.
இவர்களின் தாம்பத்தியம் தொடங்கி கர்ப்பக் காலங்களிலும் இவர்கள் பெரும்பாலும் ஓர் முழுமைத் தன்மையை அனுபவிக்க முடியாதவைகளாகவே காணப்படுகின்றனர். இடவசதி குறைந்த வீடுகளில், பல அங்கத்தவர்கள் பல்வேறு வயதடிப்படையில் வாழும் நிலையில் திருமணம் பண்ணி குடும்ப வாழ்வை முதன் முறையாக ஆரம்பிக்கும் பெண் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிக அதிகமாகும். பயந்த சுபாவத்துடன் கூடிய முழுமைப்பெறாத உடலுறவு, அன்பை இன்பத்தை பகிர்தலில் ஏற்படும் தடைகள் முழுமையின்மை, திருப்பதி காண முடியாமை என்பன அதிகமாக பெண்களின் மன உளைச்சலை அதிகப்படுக்குகின்றது. இவ்வாறான வேளையிலும் கூட அவளின் உடல் சுத்தம் பேணப்படும் விதம் மிகவும் நுணுக்கமாக அவதானிக்கக் கூடியதாகும். வீட்டுச் சூழல், சுய சுத்தம் பேண முடியாத நிலை, பதட்டச் சூழ்நிலையில் தொடங்கும் குடும்ப வாழ்வான மகிழ்ச்சி அதிகமாகவே பெண்ணுக்கே கேள்விக்குறியாகி நிற்கின்றது.
பொதுவாகவே பெண்களுக்கு பிரசவத்துக்கு பின்னான காலங்களில் அவர்களின் சக்தி இழப்பை ஈடுசெய்ய சத்தான உணவுகளும் உண்பதென்பது கட்டாயமானது. ஆனால் பெருந்தோட்டத்துறைசார்ந்த பெண்களுக்கு பிரசவத்தின் பின்னான காலத்தில் சக்தி இழப்பை ஈடுசெய்ய கூடிய உணவுகளை வழங்குதற்கு அவர்களின் வறுமை, மருந்துகள் கிடக்காமை உடற் சுகாதாரம் பேணமுடியாமை, பிரத்தியேகமாய் கவனிக்க முடியாமை என்பன அவளை இன்னும் இக்காலங்களில் அவளின் உடல் பலவீனம் அதிகரிக்க காரணமாகின்றது.

பிள்ளை பராமரிப்பில் அதிகமான பங்களிப்பை ஆற்றுகின்றவர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர். பெருந்தோட்டத்துறையை சார்ந்த பெண்களில் அதிகமாக பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பது, பாலுட்டுவது, பிள்ளை மடுவத்தில் சேர்ப்பது, மீண்டும் பகல் வேளைகளில் பிள்ளைகளை எடுப்பது என்பது அவளின் பங்களிப்பே அதிகமாக காணப்படுகின்றது. இக்காலக்கட்டத்தில் அவளின் சுமை மூன்றாகி விடுகின்றது. வீட்டு வேலைகள், தொழில், பிள்ளை பராமரிப்பு என மூன்று சுமைக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றாள். இதுவும் அவளுக்கு உரிமை மீறிய செயலாகவே கருதப்படுகன்றது.

சாதாரணமாக அரசாங்க துறைசார் பெண்களுக்கான பிரசவ லீவு 84 நாட்களாகவும் அரைச்சம்பள லீவு என பல்வேறு சலுகைகள் காணப்படும் பொழுது பெருந்தோட்ட பெண்களுக்கு இவ்வாறான லீவுகள் 1 மாதம் எனக் காணப்படுகன்றது. இவ்வாறு 1 மாதம் காலம் பிள்ளைக்கு தாய்க்குமான பாலுட்டுதல் பராமரிப்பு என்பவற்றுக்கு போதுமானதாக காணப்படுவதில்லை . இதன் மூலம் பிள்ளைகளின் சுகாதாரம் அன்பு அரவணைப்பு என்பன போதுமான அளவு கிடைக்காமையினால் எதிர்கால சந்ததியும் பாதிக்கப்படுவது அதிகமாகவே காணப்படுகின்றது. இது பெண்ணுக்கே தேவையான உரிமையாகவும் காணப்படுகின்றது.

உள்ளுர் வருமானம் குறைவான நிலையில் வசதியாக வாழும் ஆசையில் பெரும்பாலும் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பப்படுவது பெண்களே இவ்வாறு அனுப்பப்படும் பெருந்தோட்டப் பெண்களின் ஊதியம் ஆண்களின் கரங்களுக்கு கிடைக்கும் பொழுது, அவை வீண் விரயப்படுத்தப்பட்டு உழைக்கும் பெண்கள் அதனை அனுபவிக்கவே முடிவதில்லை. மேலும் தனித்து விடப்படும் பிள்ளைகள், குடும்பப் பிளவுகள், விவாகரத்துகள் என்பன அதிகமாகின்றது. உழைப்புக்காகவும் குடும்ப நன்மைக்காகவும் எல்லா சுமைகளை தாங்கி உழைக்கும் பெண் இறுதியில் நிர்கதியாக்கப்படுகின்றாள். அவள் வீடு திரும்பும் பொழுது குடும்பச் சிதைவையே சந்திக்க முடிகின்றது. எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னமாகி கனவுகள் புதைக்கப்பட்டு ஒரு நடைபிணமாக்கப்படுகின்றாள். ஆணாதிக்க சமூகத்தில் எல்லா உணர்வுகளும் ஆணுக்குமானதாக இருக்கும் எனவும் அவனை சமாளித்து போக வேண்டுமென்ற நிலையிலும் இவளை குற்றவாளி கூண்டில் வைத்தே பார்க்கும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறான பெண்களின் நிலை இழப்புக்களை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மேலும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
ஆக மொத்தம் உழைக்கும் பெருந்தோட்டப் பெண்களின் இவ்வாறான நிலைப்பாடுக்களுக்கு தகுந்த மேம்பாட்டு திட்டங்கள் உருவாக்கப்படுதல் தேவையான காரியமாகின்றது. எதிர்காலத்தில் இப்பெண்கள் ஆளுமையுடனும், சுகதேகமாகவும் மனநோயாளிகளாகவும் இல்லாமல் இருக்கவும், பெண்களுக்கான உரிமைகளை பாதுகாக்கவும், அடக்குமுறைகளிலும் ஒடுக்கப்படுதலிலும் விடுதலைப் பெற அமைப்பு ரீதயாக முன்னெடுக்க வேண்டியது மிகவும் அவசியமான அவசரமான தேவையுமாகின்றது. இந்த அமைப்பு ரீதியான முன்னெடுப்புக்களை சமூகம் சரியாக இனம்காண வேண்டும். பொதுவாக காணப்படும் பெருந்தோட்டத்தினை சார்ந்த பெண் அமைப்புகள் வெறுமனே பிரதேச மாகாண பாராளுமன்ற தேர்தல்களை மாத்திரமே குறியாக கொண்டிருக்கின்றன. அதை விடுத்து மக்கள் நலன் சார்ந்த பெண்கள் நலன் சார்ந்த சமூக விடுதலை சார்ந்த சரியான கருத்தியலை கொண்ட அமைப்புகள் உருவாக்கப்படுதல் காலத்தின் தேவையாகும். இக்கருத்துக்கள் விஞ்ஞான ரீதியான ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்படுவதும் அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *