துளிகளை விலை மதிப்பற்றதாக்கியுள்ளது

யாழினி-யோகேஸ்வரன்  

  ragv 4yogv ravஊர் கூடி தேர் இழுத்தோம், அழகிய இருப்பிடம் ஏகினாள் எம் கலைவாணி அரங்கத்தாள்.
வடலியடைப்பு கலைவாணி இளைஞர் மன்றத்தினர் 2014, 2015ம் ஆண்டு காலப்பகுதிகளில் கலை அரங்கம் ஒன்றை அமைத்து முடித்தனர். இவ் அரங்க அமைப்புக்கு வடலியடைப்பு கலைவாணி வீதிக்குட்பட்ட அனைத்து கிராம மக்களும் தம்மாலான அனைத்து உதவிகளையும் முன் வந்து செய்துள்ளனர். இவர்கள் மட்டுமல்ல வெளியூர் உறவுகளும் பல்வேறுபட்ட உதவிகளை மனமுவந்து வழங்கியுள்ளனர்.இக் கலை அரங்கம் அமைக்கப் பாடுபட்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி கூறும் முகமாகவும் அரங்க கட்டுமானப் பணிகளை ஆவணப்படுத்தும் நோக்காகவும் கொண்டு “கலையரங்க விளக்கப் படம்” என்கின்ற வடிவில் எமது அத்தனை செயற்பாடுகளையும் கலை அரங்க கட்டட திறப்பு விழாவின் போது கிராமப் பார்வையாளர்களுக்காக சமர்ப்பித்திருந்தோம்.அதனடிப்படையில், குறித்த நிகழ்வோடு மட்டும் நின்று விடாது இந்த ஆவணப்படுத்தலை சமூக சேவைத் தேவை உள்ளோர் அதில் ஆர்வம் உள்ளோர் அறிந்து மகிழ, எமது கிராமம் சார்ந்த செயற்பாடுகளை அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமையும் என்ற நோக்கோடு இதனை இங்கு பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன்.

ragvyograv 2

இளைஞர் நாம் ஆண்டுகள் பலவாய் கனவு கண்டோம் ஓர் அரங்கம் அமைக்கவென. எதுவுமற்ற எம்மிடம் அரங்கம் அமைத்தே முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் நிலைத்து நின்றது. எமது தாயவள் கலைவாணியின் பாதங்கள் பணிந்து அவள் சனசமூக நிலையத்திடம் கட்டட அனுமதியும் கட்டடம் அமைக்க ஓர் இடமும் வேண்டி கோரிக்கை விடுத்தோம். எம் வேண்டுகோள் பலர் சம்மதங்களாய் சந்தோசத்துடன் ஈடேறிற்று. கூட்டங்கள் பல போட்டு, அபிப்பிராயங்கள் கேட்டறிந்து, அரங்க வரைபடம் அழகாய் வரைந்து , அத்திவாரம் வெட்ட நிலமும் தெரிவு செய்தோம். இவ் இனிய தருணத்தில் அரங்க வரைபடத்தை அழகாய் வரைந்து உதவிய எமது கிராம நண்பன் பிரபாகரன் குகதர்சன் அவர்களுக்கு எம் கிராமம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அந் நாள் முதல் எம் பணி ஓய்வின்றி இரவு பகலாய் , மழை , வெயில் பாராது மகிழ்வுடன் தொடர்ந்தது. எமது கிராம அத்தனை மேசன் தொழிலாளிகளுக்கும் அரங்கம் அமைக்கவென சரீர உதவி வேண்டி கோரிக்கை கடிதங்கள் கொடுத்தோம். வீடு நோக்கிய எம் வருகையை வினயமாய் உபசரித்து உள்ளன்போடு உதவிக்கரம் நீட்டினர் மேசன் தொழிலாளர்கள். அத்திவாரக் கட்டன்று ஊர் கூடி மகிழ்வெழுந்து நம் இறையோனைக் கும்பிட்டு வாழ்த்துப் பாடி நம் அரங்கம் சிறக்கவென மகிழ்வாய் பணி செய்தோம். கற்கள் நிறைந்த நிலம் , கரடு முரடாய் கிடந்த நிலம், அத்திவாரம் வெட்டவென வசதியான நாளொன்றில் மேசன் தலைமையுடன் அவரவர் குழுவினரும் எம் அரங்க வளர்ச்சிக்காய் வியர்வைத் துளிகளை விதைகளாக்கினர். அட்டவணை போட்டது போல் ஒவ்வொரு கட்டட தொழிலாளர்களும் கட்டுக்கட்டாய் எம்மோடு நேசக்கரம் நீட்டினர். இளைஞர்கள் பலரும் கொண்ட வேட்கை துளியும் குறைந்து விடாது பலமும் உரமும் கொண்ட நெஞ்சோடு பக்குவமடைந்த பருவமுமாய் துடிப்போடு விரைகின்றனர் தம் பணி முடிக்கவென. குழந்தை ஒன்று பிறந்து உடல் திருப்பி மெதுமெதுவாய் தவழ்ந்து மழலை மொழி பேசி இவ் உலகை அறிய விளைகிறது. அதேபோல் எம் அரங்கம் படிமுறை படிமுறைகளாக தம் செயற்பாடுகள் நோக்கிய தீவிரத்துடன் நகர்ந்தது.

பொருளாதார நெருக்கடிகள் போர்க்கால ஊரடங்குகள் போல் எம்மை அச்சுறுத்தி பயம் காட்டினாலும் தளராத துணிவோடு எம் நிதிசேகரிப்புகள் சன்னம் சன்னமாய் உலகமெங்கும் துளைத்தெடுக்கத் தொடங்கி அதிலும் மிகப் பெரிய வெற்றி கண்டோம். அத்திவாரம் முழுமையாக்கப்பட்டு மேடை நடுவில் மண் பரப்பப்பட்டு கூரை அமைக்கப்படாத திறந்தவெளி அரங்காக்கினோம். எம் தாயவள் கலைவாணியின் அகவை 60வதில் மணிவிழாக் கொண்டாட்டத்தை எம் அரங்க திறப்புவிழாவோடு மகிழ்வாக ஆரம்பித்து வைத்தோம். எங்கள் கனவுகளின் பாதி நனவாகிய நாள் அன்று. எனினும் முழுமையை எதிர்கொள்ள அவாவி நின்றோம்.அத்தனை உறவுகளும் அற்புதமாய் வளம் சேர்க்க சமுதாய நலன் கொண்ட ஏற்றமிகு அன்பர்களும் அர்ப்பணிப்பை நேசக் கை கோர்க்க செவ்வனே எம் பணியை மேலும் தொடங்கினோம்.

அரசியல் தலைவர்கள், கிராம மக்கள், புலம்பெயர் வாழ் நம் இரத்த உறவுகள், அயல் கிராம நண்பர்கள், தூரதேசத்து நண்பர்கள், அறிந்தவர், அறியாதவர், தெரிந்தவர், தெரியாதவர் என அத்தனை உறவுகளும் நம் ஆர்வம் துடிப்புக் கண்டு தம்மால் இயன்ற பண உதவி, பொருளுதவி என உதவிகளை அள்ளி வழங்கினர்.  சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் உயர உயரக் கட்டடம் எழுப்பினோம். மேசன் தொழிலை தெரிந்தே இராதவர் , அதில் அனுபவம் ஏதும் பெற்றிராதவர் பலர் எம் அரங்க வேலைக்காய் மேசன் தொழிலாளிகள் ஆகினர். பேனா பிடிக்கும் கரங்கள் புத்தகம் சுமக்கும் தோள்கள் பள்ளி செல்லும் சிறார்கள் இவர்கள் தம் ஓய்வு நேர பொழுது போக்கை இதுவாக்கி சீமெந்தை தலையிலும் தண்ணீர் வாளிகளை கரங்களிலும் ஏந்தி பணி செய்தனர்.

ragv2

இளைஞர் பலருக்கு இரவும் பகலும் ஒரு பொழுதுகளாயிற்று.அரங்க நிலமே வீடாயிற்று.நாள் ஒன்றின் முக்கால் பொழுதுகளை கட்டடப் பணிக்காய் தம்மை தியாகம் செய்தனர். குடும்பஸ்தர் பலரும் வருமானம் அற்ற சேவைக்காய் பல பொன்னான பொழுதுகளை எம் அரங்கிற்காய் செலவிட்டிருக்கிறார்கள். தவிர்க்க முடியாத தருணங்கள் பலவிருந்தும் தம் சுகம் கொள்ளாது, நோய் வாட்டி வருத்திய போதும், நலம் தொலைத்த குடும்பங்கள் நகர்வற்று நிற்கையிலும் துயர் அனைத்தும் மறந்து எதிர்கால சந்ததிக்காய் அவர்களின் முன்னேற்றத்திற்காய் ஒன்று சேர்ந்த காலம் அது.கோவில் திருவிழாக்கள் மங்கல நாள், அமங்கல நாள் என அத்தனை நாட்களிலும் அத்தருணம் கலந்து கொண்டு மீதி நேரம் முழுவதையும் அரங்க வேலைக்காய் அர்ப்பணித்தோம்.

எம் அத்தனை பேரினுக்கும் வேலைச் சோர்வு நீங்கவும் பசியாற்றவும் எம் கிராம உறவுகள் அனைவரின் கரங்களும் தயாராகிக் கிடந்தன. கடலை, வடை, வாய்ப்பன், மிக்சர், என சிற்றுண்டிகளும் குளிர்பானம், தேனீர், சோடா என பான வகைகளும் விதவிதமாய், வகைவகையாய், சுவைசுவையாய் எம்மவர் எமக்களித்தனர். சுட்டெரிக்கும் சூரியனின் செந்நெருப்பு பிடிக்காது, வாழையிலைதனை தலைக்கவசம் ஆக்கி உச்சிதனில் ஏறி நின்று வளம் சேர்க்கும் ஓர் நண்பன். ஆடவர் மட்டுமல்ல பெண்டிர் நாமும் உதவிக்கரம் நீட்டுவோம் என உத்வேகம் கொண்டு யுவதிகளும்,பெண்கள் பலரும் இணைந்தெமக்கு வேலைக்களை போக்கி வயிறார உணவு பரிமாறி மகிழ்ந்தனர். ஓர் முழுநாளில் நாம் அனைவரும் மைதானத்தில் ஒன்றானோம். ஓர் பக்கம் பூச்சு வேலை சுறுசுறுப்போடு நடைபெற இன்னோர் பக்கம் சமையல் வேலை அதே ஆர்வத்தோடும் மகிழ்வோடும் குதூகலமாய் செய்து முடித்து வாழையிலை, தட்டுக்களோடு சைவம், அசைவமுமாய் பெரியதொரு பந்தி வைத்து தாமும் உண்டு மகிழ்ந்திருந்த காலம் அது.ragv 5

இவள் எங்கள் ஆசைக்கிழவி “இவள்” எனக் கொள்வதால் இவளிடம் மரியாதை அற்றுப் போகவில்லை எமக்கு. அன்பின் உச்ச வெளிப்பாட்டின் ஆனந்தப் பிரவாகமே இவள் என்பதற்கான காரணம் மட்டுமாக இருக்கலாம். எம் மன்றங்களின் அத்தனை காரியங்களிலும் தவறாது கலந்து கொண்டு கொள்ளும் தலைமைக்கிழவி இவள். எங்கள் அனைவரையும் வாஞ்சையோடு மகிழ்வூட்டும் அம்மம்மாக் கிழவி. இவள் புன்னகைகள் மேலும் விரிய தீதொன்றும் அணுகாமல் நெடுங்காலம் வாழ எம் கலை அரங்கம் வாழ்த்தி நிற்கிறது.எம்முள் மகிழ்வான தருணம் பல இனிதாய் வந்து போயின.வளை வைத்தல்,கூரை போடுதல் என நம் முன்னேற்றங்களை ஊரறியச் செய்யும் நிகழ்வுகள் அவை. கூரை போடுவதற்காய் எம்மிடம் பணம் இல்லாத போது ஊரவர் பலரும் வெளியவர் சிலரும் மனமுவந்து முன்வந்து கூரைக்காய் கை கொடுத்த தருணம் இது. அத்தோடு நின்றுவிடாது காரை போடவும், ஒட்டு வேலை செய்யவும், வர்ணம் பூசவும், அரங்க முகப்பு கதவு செய்யவும், பொருத்தவும் பலர் ஒன்றாய் சேர்ந்து அர்ப்பணிப்போடு பங்காற்றிய காலங்கள் இவை. ஒட்டு வேலை நடைபெற்ற காலங்களில் எம்மவர் தூக்கம் தொலைத்து அரங்க உயிர்ப்பினுக்காய் விரதம் கொண்டு விழித்திருந்த கணங்கள் அவை. ‘சுவாமிப் படம் வைத்தல்’ நிகழ்விலே பொங்கல், படையல் என எம் கழகத்து வைரபரை தொழுதெழுது பூஜைகள் பல செய்து பெண்கள் பலரும் கலந்து கொள்ள பால் காய்ச்சி படம் வைத்து இன்மகிழ்வாய் கதைகள் பல பேசி படம் வைத்து களிப்புடனே பொங்கல் உண்டு பாலும் பருகி அந்த அற்புத நாளை அமைதியாய் களித்தோம்.
இன்று முழுமை பெற்ற நாள். அரங்கம் திறந்து அழகாய் கூடி இருக்கிறோம். நம் எதிகாலம், தம் திறமைகளை இங்கே அரங்கேற்ற எம் கிராமத்தின் நிலையான சொத்தாக வான் நோக்கி வளர்ந்திருக்கும் இவ் அரங்கம் எம்மவர் வியர்வைத்

துளிகளை விலை மதிப்பற்றதாக்கியுள்ளது. கிராமம் முழுவதையும் ஒன்று சேர்த்திருக்கிறது. அரங்கப் பணியின் போதும், அது நிறைவடைந்த பின்னரும் நட்பும், சிரிப்புமாய் பலர் உறவுகளைப் பலம் பெற வைத்திருக்கின்றது. மக்கள் பலரின் புரிந்துணர்வையும், தாராள மனப்பாங்கையும் இங்கு பேசிச் சென்றிருக்கின்றது. கலை அரங்கின் ஒவ்வொரு கற்களும், ஒவ்வொரு படிகளும், கதவுகளும், யன்னல்களும், சுவர்க்கூட்டங்களும் பாடுபட்ட அத்தனை உள்ளங்களின் கதை பேசும். அது காலம் கடந்தும் தொடரும். எம் அனைவரையும் வாழ்த்தும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *