ஆரத்தி ராவ் : நதியோடு வாழும், சூழலியல் ஊடகவியலாளர்

 -Thanks yourstory

கதைசொல்லி

“ நான் என்னை ஒரு புகைப்படக்காரராகவோ, எழுத்தாளராகவோ கருதுவது இல்லை. நான் கதை சொல்கிறேன். உண்மைக் கதைகள், மனிதர்களைப் பற்றியும், நிலப்பரப்புகளைப் பற்றியும், அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைப் பற்றியும், அதில் உருவாகும் மாற்றங்களை பற்றியும் கதை சொல்கிறேன். ஊடகங்களில் சரியான மதிப்பு கொடுக்கப் படாத பிரச்சனைகள் மீது தான் கவனம் செலுத்துகிறேன். என்னுடைய படைப்பு வார்த்தைகளையும் கடந்தது; நான் படங்கள், வரைபடங்கள், காணொலிகள் மற்றும் கிராஃபிக்குகளையும் பயன்படுத்தி வாழ்க்கைகளையும் இடங்களையும் கண்டுபிடிக்கிறேன். அதை பொறுமையாக செய்யவே விரும்புகிறேன். வேறுபட்ட நிலப்பரப்புகளில் இருக்கும் மக்களின் வாழ்க்கை முறையை பல காலங்கள், வருடங்கள், ஆட்சி மாற்றங்கள், கொள்கை மாற்றங்கள், நிலப்பயன்பாட்டு மாற்றங்களை பின் தொடர்வதை விரும்புகிறேன்.

எனக்கு எப்போதுமே காட்சிகள் மூலம் கதை சொல்வது மிகவும் பிடித்தமான ஒன்று. நேஷனல் ஜியோகிராபிக் அளித்த மாதாந்திர பரிசு அதற்கான பெரிய தாக்கம். வெறும் வார்த்தைகளையோ அல்லது வெறும் புகைப்படங்களையோ மட்டும் தேர்வு செய்தால், நான் சொல்லும் கதை முழுமை அடையாது என்றறிந்ததனால் இரண்டையுமே தேர்வு செய்தேன்”, என்கிறார் ஆரத்தி குமார் ராவ்.

ஆரத்தி, கடந்த பத்து வருடங்களாக, நிலப்பயன்பாட்டு மாற்றம் எப்படி சூழலையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது என்பதை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறார். நிலம், மனிதர்கள், மிருகங்கள் என சுழலும் இவருடைய புகைப்படங்கள் மேன்மையின் சாயலையும், அதே நேரம் அழிவின் முகத்தையும் திறமையாய் வெளிப்படுத்துகிறது. நதிகளின் அருகே தோன்றிய இனங்களையும், அதன் சூழலியலையும் ஆழமாக ஆரய்ந்த ‘ரிவர் டைரீஸ்’ (river diaries) இவருடைய மிகச் சிறந்த அடையாளம்.

பிரம்மபுத்திரா

அந்நிகழ்ச்சியைப் பற்றி விவரிக்கும் போது, “பல காரணங்களால், நான் பிரம்மபுத்திராவின் மீது கவனம் செலுத்துவதாய் முன்னரே முடிவு செய்திருந்தேன். கல்லூரிப் படிப்பை முடித்த நிலையில், வாழ்க்கையில் செய்து முடிக்க வேண்டியவைகள் என்று நான் எழுதியிருந்த பட்டியலில், முதல் ஐந்தில் இருந்தது, ‘உலகின் முக்கிய நதிகளை, அதன் மூலத்திலிருந்து கடலில் சென்று சேரும் இடம் வரை பயணித்து, அதனோரம் இருக்கும் வாழ்க்கையை ஆவணப்படுத்துவது’. லஹாசாவிற்கு பயணிப்பதும், யார்லுங் சங்போவை (திபெத்தில் பிரம்மபுத்திரா இப்படித் தான் அழைக்கப்படுகிறது) ரசிப்பதும் என் மனதில் மிக ஆழமாய் பதிந்துவிட்டது, நான் அந்த நதியின் தொடக்கதின் இருந்து அது கடலை சேரும் இடம் வரை கண்டறிய விரும்பினேன்.

மற்றொரு காரணம், இந்திய அரசு, இந்த நதியில் 160 அணைகள் கட்ட திட்டமிட்டிருந்தது. அது அந்த நதி சார்ந்த வாழ்க்கைக்கும், சூழலியலிற்கும் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும்? பிரம்மபுத்திராவின் கதையை சொல்லி முடிக்க பல வருடங்கள் ஆகும். நான் எங்கெல்லாம் சுற்றித் திரிந்தாலுமே, இறுதியில் இங்கு வருவதையே எதிர்பார்க்கிறேன். இந்த தொடர், மிக தீர்க்கமானதாகவும் எனக்கு திருப்தியளிப்பதாகவும் இருக்கிறது. பொறுமையாகவும் ஆழமாகவும் அனுகுவதால், பிரச்சனைகளுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இது தான் எனக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக இருக்கிறது.”

இளமைப்பருவம்

ஆரத்தியின் பணி, விதிமுறைகளுக்கு உட்பட்டது இல்லை என்று சொன்னால், அது தவறு. அவருடைய கேமராவின் பயணத்தை, பல எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி, நிலம் முடிவு செய்கிறது. அப்படித்தான் அவருக்கான இடத்தை எட்டிப் பிடித்தார். உண்மையில், இதற்கான விதைகள் இளமையிலேயே விதைக்கப்பட்டிருக்கின்றன.

“என்னை தடை செய்யாததற்கு, என் பெற்றோருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நான் பல இடங்களில் அலைந்து திரிந்து, பல விஷயங்களைக் கண்டறிய அவர்கள் அனுமதித்தனர். நான் எழுதுவேன், வரைவேன், டென்னிஸ் விளையாடுவேன், காலிகிராஃபி செய்வேன், அப்பாவும் நானும் என் சகோதரியும் பறவைகள் பார்க்க போவோம். நான் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டிருக்கும் வரை, நான் விரும்பிய எதையும் செய்ய முடிந்தது.

அறிவியலிலும் ஆங்கில இலக்கியத்திலும் நன்றாக சிறப்பாக செயல்படுவது எனக்கு முக்கியமானதாக இருந்தது. அதே நேரம், நேஷனல் ஜியோகிராஃபிக்கின் புகைப்படங்களை கவனித்து, அதன் குறிப்புகளையும் படிப்பேன். அந்த மஞ்சள் வண்ண ஜன்னல்கள் தான் என்னை நிலத்தில் மூழ்கச் செய்து, பார்வையாளர்கள் மீது அழியாத சுவடுகளை விட்டுச் செல்ல கற்றுக் கொடுத்தது.

சுயத்தை அடையாளம் காணும் போது, குழப்பம் ஏற்படுவது, வழக்கமானது தான். ஆரத்தியின் கதையிலும் அப்படித்தான் ஆனது. “குழந்தையாக, எனக்கு இயற்பியலிலும் எழுத்திலும் ஆர்வம் இருந்தது. இந்தியாவில் இருந்து கொண்டு, இந்த பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெறுவது சுலபமில்லாததால் , நான் பயோ பிஸிக்சில் பட்டம் பெற்றேன். பாடம் பிடித்து தான் இருந்தது, ஆனால், வெகு விரைவிலேயே, நான் வாழ்நாள் முழுக்க பரிசோதனைக் கூடத்திலேயே இருக்க விரும்ப மாட்டேன் என்பதை உணர்ந்தேன். அன்றே அதை விட்டுத் தள்ளிவிட்டு, வேறு இடத்தில் நிருபராய் சேர்ந்தேன். நான் இன்றும் கூட, எடிட்டரிடம், முன் அனுபவமே இல்லாத என்னை எதற்கு வேலைக்கு சேர்த்தீர்கள் என்று கேட்பதுண்டு.

நெடும்பயணம்

ஒன்றரை வருடம் கழித்து, திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்கா சென்றேன். மறுபடி இந்தியாவிற்கு வரும் முன்னர், மேலும் இரண்டு முதுநிலைப் பட்டங்களும், எட்டு வருட கார்ப்பரேட் வேலையின் அனுபவமும் பெற்றிருந்தேன். இந்த முறை நான் செய்ய விரும்புவதை மட்டும் தான் செய்வேன் என்று மிக உறுதியாக இருந்தேன். அது, முக்கியத்துவம் கொடுக்கப்படாத கதைகளை எழுதுவதும், படம் பிடிப்பதும் சொல்வதும் தான். ஒரு புதிய துறையில் செயல்படத் தொடங்கும் போது சவால்களை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“ஒவ்வொரு வித்தியாசமான படைப்புகளை உருவாக்கும் முயற்சியின் போது, வருமானம் நிலையானதாக இருக்காது. கிடைக்கும் குறைந்தபடச வருமானமும், ஏற்கனவே இருக்கும் சிக்கல்களை சரி செய்ய மட்டுமே போதுமானதாய் இருக்கும். தொடக்கத்தில், கார்ப்பரேட் வேலை உதவியாய் இருந்தது. பின்னர், நான் கன்சல்ட்டிங் வேலைகள் செய்யத்தொடங்கினேன், அதுவும் நன்றாகத்தான் இருந்தது. என் வேலையின் இயல்பு எப்படி என்றால், சில சமயம் பல மாதங்களுக்குக் கூட கதைகள் கிடைக்காமல் இருக்கும்; அதனால் ஒரு நிலையான வருமானம் இருக்க வாய்ப்பில்லை. ஃபெல்லோஷிப்களுக்கும், ‘கிராண்ட்’ களுக்கும் எழுதுவேன். அடுத்த ஃபெல்லோஷிப் வரும் வரை, மற்ற வருமானத்தையும், என் படைப்பில் நம்பிக்கை கொண்டு எனக்கு உதவும் மனிதர்களையும் நம்பி தான் இருப்பேன்.”

 “ உண்மையில் என்னுடைய முதல் வாய்ப்பு எது என்று எனக்கு தெரியவில்லை; அப்படி ஒன்று இருந்ததா என்று கூட தெரியவில்லை. நான் அப்படி ஒன்றை தேடி செல்லவில்லை. நான் முக்கியம் என நினைக்கும் கதைகள் தான், என்னை வேலை செய்யத் தூண்டும். ஆனால், இந்த பயணம் நெடுக, சில அரிய அன்பான மனிதர்கள் என்னை அளவுக்கு அதிகமான நம்பி, ஆதரித்துள்ளனர். எனக்கு சொசைட்டி பத்திரிக்கையில் முதல் நிருபர் வேலை அளித்த சுமா வர்கீஸ்; மற்றும், இந்தியாவிலேயே, நான் செய்வது போன்ற, நீண்ட- பொறுமையான ஜர்னலிசத்தை பற்றி, தெளிந்த பார்வையும் , பசியும் இருக்கும் ஒரே எடிட்டர் என நான் நினைக்கும், ப்ரேம் பனிக்கர். ‘ரிவர் டைரீஸ்’ ற்கு இவர் அளித்த ஆதரவின் மூலம் தான் என் கதைகளின் நீட்சியை நான் உணர்ந்தேன், அது விலைமதிப்பற்ற உணர்வு!”.

இந்தப் பாத்திரம் எவ்வளவு தாங்கும்?

ஆரத்தியினுடைய வேலை, மன அளவிலும் உடல் அளவிலும் வருத்தும் வேலை. முரணாக, அதைக் குணப்படுத்துவதும் அவரது வேலையே தான்.

“ இரண்டு உதாரணங்களை தருகிறேன். கடந்த வருடம், நில அரிப்பால் பாதிக்கப்பட்ட, பிரம்மபுத்திராவின் வடக்கு கரையோரம், நடந்து கொண்டிருந்தேன். ஒரு அறுபது வயது பெரியவர் என்னை நிறுத்தினார். ‘நான் பால் வேலை செய்கிறேன்’ என்று அஸ்ஸாமிய உச்சரிப்பு இல்லாத ஹிந்தியில் சொன்னார். ‘அடுத்த முறை நீ இங்கு வரும் போது, என்னை கூப்பிடு. என் எண்ணை எடுத்துக் கொள்’. சட்டைப் பையில் இருந்து ஒரு சின்ன புத்தகத்தை எடுத்து, எண்ணை தேடி எடுத்து என்னிடம் காட்டி, ஆங்கிலத்தில் தலைகீழாக படித்தார். 6-ஐயும் 9ஐயும் குழப்பிச் சொல்லி, பின் அவரே திருத்தினார். என்னைக் கூப்பிடு, உனக்கு உணவு தயார் செய்கிறேன். உன்னை நன்கு உபசரிப்பேன். நீ கட்டாயமாக என் குடும்பத்துடன் உண்ண வேண்டும்’
பின், அந்த பீஹாரை சேர்ந்த பால்காரர், ஜாதவ், தன் பாதையிலேயே சென்று மணலையும் நீரையும் கடந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் தொலைவில் இருந்த தன்னுடைய தற்காலிக வீட்டிற்கு சென்றார்.

பின்னர் தான், அவர் தன்னுடைய பண்னை நிலத்தையும் ஆடு மாடுகளையும் வெள்ளத்திற்கும் நில அரிப்பிற்கும் பலி கொடுத்தவர் என தெரியவந்தது. இங்கு, எல்லாவற்றையுமே இழந்து புதிதாக தொடங்க வேண்டிய கட்டாயம் இருக்கும் ஒருவர், பணம் இல்லாமல், என்னை விருந்திற்கு அழைக்கிறார்”.
அவருடைய அடுத்த உதாரணம், இதை விட நெகிழ்ச்சியானது. “எனக்கு மிக பெரிய விஷயம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தவர் பெயர், இனாமுல் ஹக்யு. அவர் மேற்கு வங்காளத்தில் கங்கையோரம் வாழ்கிறார். ஏழு முறை தன் நிலத்தை நில அரிப்பிற்கு இழந்தவர். அவர் அரசின் பொறுப்பின்மை பற்றியும், பொறியியலின் அலட்சியம் எப்படி நதியை வறட்சியாக்குகிறது என்பது பற்றியும் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார். 
‘உங்களுக்கு கோபமாக இல்லையா ?’ என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, தன் கையால் முகத்தை துடைத்தார். ஒரு தட்டைக் கையில் எடுத்தார். 

‘இந்த பாத்திரம், எவ்வளவு தாங்கும்?’ என்று கேட்டார். ‘அந்த அளவு தான் இதை நிரப்ப முடியும். அதன் பிறகு, எங்கும் வைக்க முடியாது. என் கோபம் அப்படிப்பட்டது தான். ஒரு அளவு தான் கோபம் கொள்ள முடியும், பின் அது அளவிற்கதிகமாக மாறி மறைந்துவிடும். எனக்கு அறுபது வயதாகப் போகிறது. ஏழு இழப்புகளுக்கு பிறகு, என் தலைக்கு மேல் ஒரு கூரை இருக்கிறது. அது எத்தனை நாளுக்கென்று தெரியவில்லை; ஆறு அருகில் வந்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், என் தலைக்கு மேல் இருக்கும் கூரைக்காக நான் நன்றியோடு இருக்கிறேன்.”

கதைப்பொருள்

படம்பிடிக்கவோ, எழுதவோ அவருக்கு மிகவும் பிடித்தமான கதைகள் குறித்து பேசிய போது ,

“ நான் செய்யும் வேலையை நீங்கள் செய்யத் தொடங்கினால், ‘தலைப்புகள்’ , ‘பிரச்சனைகள்’, ‘கதைகள்’, ‘பொருட்கள்’ எல்லாமே மறைந்து விடும். மனிதர்களும், நிலப்பரப்புகளும், விலங்குகளும், நதிகளும் ,மரங்களும், குன்றுகளும் கூட ஒன்றிபோய் விடும். இந்தக் ‘கதைகள்’, யாரோ ஒருவருடைய வாழ்க்கை, யாரோ ஒருவருடைய எதிர்காலம், தன் இயல்புநிலைக்கு திரும்ப முடியாத மாற்றங்களோடு இருக்கும் நிலப்பரப்பின் கதை. இனி வரும் நாட்களில் நடக்கவிருப்பவைகளை முன் கூட்டியே, இப்போது நடப்பவைகளால் அறிவிக்கப்படுகின்றது. இதில், எனக்கு பிடித்தமானவைகள் என்று நான் எதையுமே நினைத்ததில்லை. எல்லாமே முக்கியம் தான். ”

சுந்தரவனக்காடுகளில் வரலாறு காணாத பேரிடர் நடந்த போது, களத்தில் இருந்த பத்திரிக்கையாளர்களில் ஆரத்தியும் ஒருவர்.

“சுந்தரவனக்காடுகளின் எண்ணெய் கசிவு, நாம் மௌனமாய், நம் சூழலியல் அழிக்கப்படுவதையும், அதை நம்பி இருக்கும் வாழ்க்கைகளின் நிச்சயமின்மையை எப்படி அலட்சியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியது”, என்கிறார்.

தனியே பயணிக்கும் ஒரு பெண்ணிற்கு, இந்தியா ஆபத்தான இடமாக இருக்கலாம். ஆனால், ஆரத்தி அதை வேறு விதமாக பார்க்கிறார்.

“ நான் கிராமங்களில் இருக்கும் போது, அது அஸ்ஸாமோ ராஜஸ்தானோ, நான் பாதுகாப்பின்றி உணர்ந்ததே இல்லை. நகரங்களில் இருக்கும் போது, அது வேறு விஷயம். பல இடங்களில், உள்ளூர் ஆட்கள் அவர்களது தகுதிக்கு மீறி உதவுவார்கள். ஒருவேளை, நான் அதிர்ஷ்டக்காரியாக இருக்கலாம்.”

தொடரும் பயணம்

இனி ஆரத்தியின் வேலை காவேரி நீர் படுகைக்கு செல்கிறது. தற்போது ஆரத்தி, பெங்களூர் நகரத்தின் நீர் வரலாற்றையும், ஒரு காலத்தில் செழித்து இருந்த ராஜாங்கம் எப்படி இன்று மிகக் கொடிய தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்கிறது என்பதையும், உலகுக்கு காண்பிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் . ஆனால் வெகு விரைவிலேயே, பிரம்மபுத்திராவிற்கும் சுந்தரவனக்காடுகளுக்கும் திரும்பி விடுவார். இந்தியாவின் தலை சிறந்த பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து இவர் உருவாக்கியிருக்கும், பீப்லியின் (peepli) நோக்கம், ‘இந்த நாட்டிற்கு தேவையான கதைகளை, சிறந்த பத்திரிக்கையாளர்கள், சரியான சமயத்தில் எடுத்துரைக்க, ஒரு மேடையை அமைப்பது’ தான்.

தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடம் பற்றி கேட்ட போது, என்னச் சொல்வது என ஆரத்தி குழம்புகிறார். தோல்வி அவருக்கு பழக்கமில்லை என்பதால் அல்ல, அவர் தோல்வி என்பதை வேறு கோணத்தில் அணுகுவதால்!

“ஆம்… தோல்வியை நீங்கள் எப்படி வரையறுக்குறீர்கள்? எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு பொழுதும் எனக்கு பாடம் தான். நான் களத்திற்கு செல்லும் போது, திட்டங்களுடன் செல்ல மாட்டேன். எல்லாவற்றையும் அதன் போக்கிலேயே விட்டு, அதிலிருந்து கற்றுக் கொள்வேன். எல்லாமே பாடம் தான். என்னைப் பொறுத்தவரை தோல்வி என்பது, மனிதர்களையும், விலங்குகளையும், மரங்களையும், நதிகளையும், மலைகளையும் கவனிக்காமல், கற்க மறுத்து, உணர மறுத்து இருப்பதுதான்”.

உலகை அவர் பார்க்கும் விதம் போலவே, அவரது அறிவுரையும் வித்தியாசமாக இருக்கிறது. தங்களுக்கு என ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள் முயற்சிப்பவர்களுக்கு ஆரத்தியின் அறிவரை , “அதை செய்யுங்கள்”, என்பது தான்.

“ஆனால், அதற்கும் மேல், அது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் , ‘உங்கள் கனவை பின் தொடருங்கள்’ என்று சொன்னதை போலவே, கால் ந்யூபோர்ட் சொன்னது நினைவிற்கு வருகிறது. உங்களது ஆர்வம் எதுவாக இருந்தாலும், மக்கள் உங்களை புறக்கணிக்காத அளவிற்கு, முயற்சி செய்து அதில் சிறப்பாக இருக்க வேண்டும். ஒரு துறையில் ஆர்வம் இருப்பது ஒரு புறம். ஆனால், நீண்ட நேரங்கள் செலவழித்து உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு, அதில் மேலும் மேலும் சிறப்பானவராக ஆவதே, உண்மையில் உங்கள் கனவை பின்தொடர்வதாகும்” என்று நிறைவு செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *