‘நூரி அம்மா’: தன்னிகரற்ற திருநங்கையின் சொல்லப்படாத பெருங்கதை!

 

பிரபலமாக்கப்பட பல காரணங்கள் இருந்தும், பிரபலமாக்கப்படாத உன்னத ஆளுமை நூரி அம்மா. ‘திருநங்கை’ என்ற பெயர்ப் புழக்கத்தையே இதழோரம் குறுநகை மாறாமல் சொல்லமுடியாத பலர் இயக்கும் சமூகத்தை தெளிவாக கையாண்டு அவர் முன்னேறியது ஒரு வெற்றிக் கதை என்றால், வீடற்ற, ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு அரணாக இருந்து, அவர்களை ஆரோக்கியமாக வளர்ப்பது, மெய் சிலிர்க்க வைக்கும் வெற்றிக் கதை! தமிழ் யுவர்ஸ்டோரி அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து…

நூரியின் பால்யம்

அவரோடு பேசிய போது, “எனக்கு பூர்விகம் ராமநாதபுரம். நான் பிறந்தது சென்னை ராயபுரத்தில். உடன் பிறந்தது, ஒரு அண்ணனும், ஒரு தங்கையும். நான் ஒரு திருநங்கை. நாலு வயசுல அம்மா இறந்துட்டாங்க. பதிமூனு வயசுல அப்பா இறந்துட்டார். அப்பா இறந்தப்போ நான் பம்பாயிக்கு போயிட்டேன். பதினெட்டு பத்தொன்பது வயசு இருக்கும் போது ‘கமர்ஷியல்’ செய்யத் தொடங்கினேன்”, எனத் தன்னை அறிமுகப்படுத்தியவரிடம், அர்த்தம் புரியாமல், ‘கமர்ஷியல்னா என்ன’ எனக் கேட்டேன்.“கமர்ஷியல்னா, பாலியல் தொழில். பாலியல் தொழிலில் ஈடுபட்டேன். அப்படியே சில காலம் கழிந்தது. 1987 ஆம் ஆண்டு, எனக்கு ஹெச்.ஐ.வி நோய் வந்தது. இந்திய அளவில், மருத்துவர்களால் அதிகாரப்பூர்வமாக ஹெச்.ஐ.வி நோயாளி என அறிவிக்கப்பட்ட மூன்றாவது நபர் நான். அந்த நோயை மற்றவர்க்கும் பரப்பக் கூடாது என்ற காரணத்தால், அத்தொழிலிலிருந்து விலகினேன்.

அந்த சமயத்தில், ஒரு அரசு மருத்துவமனையில் ‘கவுன்சிலிங்’ற்காக சென்றிருந்த போது, டாக்டர் உஷா ராகவனின் அறிமுகம் கிடைத்தது. அவரின் வழிகாட்டுதலின் படி, சமூக வேலைகள் செய்யத் தொடங்கினேன். தொண்டு நிறுவனங்களில் வேலை செய்தேன். ஹெச்.ஐ.வி நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சென்றேன்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு

‘ஹெச்.ஐ.வி வந்தால் பயம் தேவை இல்லை. அது பற்றி மனம் திறந்து பேசுங்கள். மருத்துவரை அனுகுங்கள்.நோயை பிறருக்குப் பரப்பாதீர்கள். முறையான மருத்துவத்தின் உதவியால், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்’ போன்ற வாசகங்களை எடுத்துரைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தேன். ஒரு திருநங்கை எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதை ஏற்றுக் கொள்வதில் மக்களுக்கு தயக்கம் இருந்தது. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் புரிந்துக் கொண்டார்கள்.

 

‘சவுத் இண்டியன் பாசிடிவ் நெட்வொர்க்’ என்றொரு நிறுவனம் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் இரவு, ஒன்றரை மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. 

‘ரத்தக்கறையோடு, குழந்தை ஒன்று குப்பைத்தொட்டியில் கிடக்கிறது’ என்றார்கள். அங்கே சென்று பார்த்த போது, அந்தக் குழந்தை பிறந்து இரண்டே நாட்கள் தான் ஆகியிருந்தது தெரிந்தது. அதனருகில் ஒரு காகிதத்தில், “இது எனக்கு ஐந்தாவது குழந்தை. எனக்கு எய்ட்ஸ் வரக் காரணமான குழந்தை இது” என்று தெலுங்கில் எழுதியிருந்த மொட்டை கடிதாசி அது.

அவளை நான் எடுத்துக் கொண்டேன். தொடக்கத்தில் அவளுக்கு உணவளித்த போது உணவு எது கொடுத்தாலுமே, வெளியே வந்து விடும். மருத்துவமனைக்கு சென்று கவனித்த போது ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை, அதற்கு பிறகு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்து அவளைக் காப்பாற்றினேன்.

அப்போது தான், எய்ட்ஸ் பாதித்து இறந்த, என் நண்பர்கள் செல்வி, இந்திரா, பழனியின் நினைவாக, 2005 ல் SIP மெமோரியல் ட்ரஸ்ட்-ஐத் தொடங்கினேன். ஒரு குழந்தையோடு தொடங்கிய ஹோமில், இன்று ஐம்பது குழந்தைகளுக்கு மேல் இருக்கின்றனர். இதைத் தவிர வெளியே, நூற்றிமூன்று குழந்தைகளுக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இருக்கிறோம்”.

சிப்ஹோம் (SIPHOME)

சோழவரத்தில் இருக்கும் சிப்ஹோமில், ஐந்திலிருந்து பதினேழு வயது வரையுள்ள ஐம்பத்தைந்து குழந்தைகள் இருக்கின்றன. அனைவருமே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்.

சிப்ஹோமின் நோக்கம் என அவர் சொல்வது, 

“எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் -ஆண், பெண், திருநங்கை என யாராக இருந்தாலும், அவர்களை அரவணைத்து உதவுவது தான். உலகில், ஒரு திருநங்கை, வீடற்றவர்களுக்கும், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி, அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ வைத்தார் என்றால், அது நானாகத் தான் இருக்க வேண்டும் என்பது கனவு”, என்கிறார், ஆத்மார்த்தமாய்.

ஆஸ்திரேலியா, பேங்காக், ஹாங்காங்க் உட்பட இருப்பத்தி நான்கு நாடுகளுக்கு பயணித்திருப்பவர், ராஜ் டிவியின் ‘சிறந்த பெண் சமூக சேவகர்’ விருது, தமிழக அரசு சார்பாக பல விருதுகள் பெற்றுள்ளார் நூரி அம்மா. ஆனால், அவர் தன்னுடைய மிகப் பெரிய சாதனைகளாக நினைப்பது, தன் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்திருப்பது தான்.

சமூகமும்-நானும்

‘திருநங்கை’ என்னும் அடையாளம் பற்றி பேசிய போது, “ஒரு திருநங்கையாக சமூகத்தில் முன்னேற மன தைரியம் அவசியமானது. இன்று, ‘சமுதாயம் எங்களை வெறுக்கிறது, சமுதாயம் எங்களை ஏறெடுத்துப் பார்க்கவில்லைஎன்று பல திருநங்கைகள் சொல்வார்கள். ஆனால், நான் சமுதாயத்தை தான் நாடிப் போகிறேன். சமுதாயம் என்னை அடிக்கவில்லை. என்னை அடிக்கும் கம்புகளை உடைத்துப் போட்டு, என்னை அரவணைத்துக் கொள்கிறது”, என்கிறார்.

இன்று, சிப் ஹோம், வாடகை வீட்டில், பல சிரமங்களுக்கு மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தங்களுக்கென, சொந்தமாய் ஒரு நிரந்தர முகவரி பெற வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றும் முயற்சியில், விடியலின் விதைகள் என்னும் அரசு சாரா அமைப்பின் உதவியோடு, தற்போது நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார் நூரி அம்மா.

வரும் ஃபிப்ரவரி மூன்றாம் தேதி, சென்னை காமராஜர் அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை சிப்ஹோமிற்காக உபயோகிக்க திட்டமிட்டுள்ள நூரி அம்மாவிற்கு, சென்னையில், ‘நூரி இல்லம்’ என்றொரு ஆசிரமம் தொடங்குவது தான் லட்சியம்.

தேவைகள்

“பலசரக்குப் பொருட்கள், மருத்துவம் என, எங்களுக்கு, பூர்த்தி செய்யப்படாத பலத் தேவைகள் இருக்கின்றன. அறுபத்து ஆறு வயதில், தனி ஒருத்தியாக, எல்லாவற்றையும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. என்னால் இயன்றவரை செய்வேன். என் குழந்தைகளையும் உதவும் மனப்பான்மையோடு வளர்ப்பேன்” என்றவரிடம்,வேறெதாவது சொல்ல நினைக்கிறீர்களா எனக் கேட்ட போது, 

‘அன்பு செலுத்துங்கள். பிறருக்கு உதவுங்கள். போலி நபர்களுக்கல்ல, உண்மையாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள்’ என்றார்.

நூரி அம்மாவின் பல்லாண்டு போராட்டத்தை இனிமையாக முடித்து வைக்க, அவர் நிழலில் வளரும் குழந்தைகளுக்கென நிரந்தர முகவரி கிடைக்க, உண்மையாக உதவி தேவைப்படும் சிப்ஹோமின் குரலுக்கு செவி சாய்ப்போமாக!

சிப்ஹோமின் வலைதளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *