ஜாதியற்றவளின் குரல்

jeyarani

இவைகளைத்  தூக்கிச் சுமக்க கடவுள் என்னும் பிம்பம் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்துக் கடவுள் எத்தகைய அறமற்றவர்! தனக்கு நெருக்கமானவர்களை தன் தலையிலும் பிற மக்களை தோள், தொடை, கால், பாதம் என்னும் பல பிரிவுகள் அடிப்படையில் பிறக்கவைப்பதாக நம்ப வைக்கப்படுகிறது. பார்ப்பனியர்கள் கடவுளின் பிள்ளைகளாகவும், அவர்களுக்கு பணி செய்ய பிற சாதிப் பிரிவினர்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளனர்.  இதில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் தலித் மக்களை இந்துத்துவம் வைத்துள்ளது என்பதை இந்து தர்மம் சொல்கிறது. வர்ண அடிப்படையில் பிரித்திருக்கும் மக்களில் தலித் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும் ஊர்களின் ஒதுக்குப் புறங்களில் அம்மக்களின் வாழ்வியல் நிர்ப்பந்திக்கப்   பட்டுள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக தன் ஆணி வேரை ஊன்றி வைத்திருக்கும் சாதி, இம்மக்களை பல வகைகளில் இழிவு படுத்துகின்றது. சமூகத்தின் இழிவான பணிகள் அனைத்தையும் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்

.அடிமை இந்தியாவிலிருந்து இன்றுவரை இம்மக்களின் வாழ்வியல் பெறும் மாற்றம் என்பது ஏற்படவில்லை. இருப்பினும், அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் இம்மக்களின் அடிமை வாழ்வியல் விடுதலைக்கான வலுவான பணிகளைச் செய்திருக்கின்றனர். நிற்க, ஜெயராணி பத்திரிக்கையாளராய் தன் பணியைத் துவக்கி சுமார் 17 வருடங்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் சேரிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கியும் நெடும் பயணத்தின் அனுபவத்துடன் தொடர்ந்து வந்துள்ளார். அம்மக்களின் கொடூரமான அடிமை வாழ்கையை, வலி, அடக்குமுறையை, எந்த ஒரு சமரசமும் மின்றி தன் கட்டுரைகளின் மூலம் பதிவு செய்துள்ளார். இத்தொகுப்பில் 37 கட்டுரைகள் உள்ளன.
தலித் மக்கள்மீது தொடுக்கப்பட்ட வன்முறைகள், அதற்கான போராட்டங்கள், மறைக்கப்பட்ட உண்மைகள், இதனுடன் பேசப்படும் மத மாற்றம், மற்றும் பெண்ணியம் பார்வையின் வெளிப்பாடே இத்தொகுப்பு.
இக்கட்டுரைகளை ஆறு பிரிவாக பிரித்துக் கொள்ளலாம்.

  1. சாதியம்
  2. இந்துத்துவ எதிர்ப்பு
  3. பெண்ணியம்
  4. இஸ்லாம்
  5. கொலை செய்யும் சாதியைக் கொலை செய்யும் குரல்
  6. பொதுவுடமை அரசியலும் சாதிய எதிர்ப்பும்

 

சாதியம்

“ஜாதிக்காக தினம் தினம் பலாத்காரக் கொடுமையை அனுபவித்திருக்கிறீர்களா? மலக் குழியில் இறங்கிய பிறகு உணவருந்தப் போகும் மரண வேதனையை உணர்ந்திருக்கிறீர்களா! பிணமெரித்தும், இழவு வீட்டில், பறையடித்தும் மனம் குமுறியிருக்கிறீர்களா? செருப்புப் போட்டதற்காகவும் மேல்சட்டை அணிந்ததற்காகவும், ஏன் சாணிப்பால் கொடுத்து சவுக்கடி வாங்கியிருக்கிருக்கிறீர்களா? தெருவுக்குள் வரக்கூடாது என யாராவது உங்களைத் தடுத்திருக்கிறார்களா? பழைய சோறும் பழைய துணியும் தான் உங்கள் வாழ்வுரிமையாக விதிக்கப்பட்டது என்றால் சம்மதித்திருப்பீர்களா? ஓரமாக நின்று கொட்டாங்குச்சியில் டீ குடித்திருக்கிறீர்களா? உணவும் உடையும் கூட அடிமைச் சின்னமாக்கப்பட்ட வேதனை அறிவீர்களா? தோட்டம், வயல், கிணறு, ஏரி, சேரியில், வீடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஊர் என்ற ஒன்று உங்களை நிரந்தரமாக நிராகரித்திருக்கிறதா? உறங்கிக் கொண்டிருக்கும் போது குடிசைகள் பற்றி எரியும் சோகம் தெரியுமா? கட்டளைகளை மீறும்போதும், புறக்கணிக்கும்போதும் சாதிப் பெயரைச் சொல்லிக் கொச்சையாகத் திட்டியபடி யாரேனும் உங்கள் மீது மலத்தைக் கரைத்து ஊற்றியிருக்கிறார்களா?”
இதுபோன்ற வரிகள் ஆசிரியரின் ஒவ்வொரு கட்டுரை நெடுகிலும் வெளிக் கொணரப்படுகிறது. நெஞ்சில் ஈரம் கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கான கேள்வியாய் இவை மூளையின் அடி ஆழத்தில் ஆணியைத் தைக்கிறது. தமிழ் சமூகத்தின் சாதியக் கொடூரத்தை தன் மூளையில் ஏதோ ஒரு வகையில் சாதியைத் தூக்கிச் சுமக்கும் ஒவ்வொருவரையும் தன்  எழுத்தெனும் தோட்டாவால் நெற்றிப் பொட்டில் வைத்துத் துளைக்கிறார் ஜெயராணி.
அனைத்துக் கட்டுரைகளும் எழுதப்பட்ட காலகட்டம் தமிழ்ச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. தலித் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளின் ஊடாக உடனுக்குடன் களப்பணியுடன் சேர்ந்த ஆய்வுக் கட்டுரைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தின் நூற்றாண்டு கால வரலாற்றை இணைத்து எழுதப்பட்டுள்ள, தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த போராட்டம் – அதன் பின்னணி அரசியலை வெளிப்படையாகப் பேசுகிறார்.
“எல்லாவற்றையும் சந்தேகி” என்ற காரல் மார்க்ஸ்சின் வரிகளுக்கு ஏற்ப, தலித் தலைவர்களின் அரசியலை விமர்சனத்திற்குள்ளாகிறார். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் பிரச்சனையில் புதிய தமிழகத்தின் செயல்பாடு பற்றி விவரிக்கையில், சட்டப் பேரவையும், நாடாளுமன்றத்தையும் வெறுமனே தலித் மக்களைக் கொண்டு நிரப்புவதால் மட்டும் அடிமைத்தனம் அழிந்துவிடாது. மதங்களின் வேர்களும் சாதியின் கிளைகளும் இந்த சமூகம் முழுவதும் பரவிக் கிடப்பதையும் வெற்று வசனத்தால் அவற்றைச் சரிசெய்துவிட முடியாது என்று விவரிக்கிறார்.

அருந்ததியற்கான முதல் போராட்டம் 1946 தோழர் ஜீவானந்தம் மற்றும் தோழர் சிங்கார வேலரின் தலைமையில் நடந்தது. அப்போராட்டத்தின் விளைவு, அம்மக்களுக்கான சாதக பாதக விடயங்களை தெளிவாக பதிவு செய்கிறார்.
தோல் தொழில் செய்யும் சக்கிலிய இன மக்களின் வாழ்வின் வெறுமையும் அதற்கான புறச் சூழலையும் படம்பிடித்துக் காட்டுகிறார். அடிப்படையில் செருப்புத் தைப்பதில் கைதேர்ந்த கலைஞர்களான இவர்கள், இதற்கான சந்தைப்படுத்தல் தெரியாமல், தொழில் நலிவடைய இதனை விட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு துப்புரவுத் தொழிலாளியாக அழைத்துவரப் படுகின்றனர்.  வறுமை இவர்களை இத்தொழில் செய்யப் பணிக்கிறது.
தமிழ்நாடு தோல் அபிவிருத்திக் கழகத்திலோ பாரம்பரியர்களான தொழில் தெரிந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. தோல் தொழில் அறிந்த மக்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதும் லாபம் மற்றும் பொருளாதார அடிப்படையில் தன் தேவைக்காக அதிகார வர்க்கம் பயன்படுத்துவதை தோலுரித்துக் காட்டுகிறது.புதிரை வண்ணார் பற்றி மிக முக்கியமான பதிவாக இக்கட்டுரை அமைகிறது. தாழ்த்தப்பட்ட மக்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களாக இவர்கள் உள்ளனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் தங்களுக்கான எந்த அதிகாரமோ, அங்கீகாரமோ கிடையாது என்கின்றனர். ஒவ்வொரு குறிப்பிட்ட சாதியினருக்கும் வண்ணார்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மட்டும் துணிவெளுப்பது அவர்களின் பணி. ஆனால் புதிரை வண்ணார்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இப்பணியைச் செய்யவேண்டும். இவர்களுக்கு கூலி என்று எதுவும் கிடையாது. மீதியான பழைய சோறு மற்றும் பழைய துணிகள் வழங்கப்படும். அரசால் கிடைக்கும் இடஒதுக்கீடு கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதற்கான காரணங்களை இதுபற்றி பதிவு விளக்குகிறது. இன்னொருவரை அடிமைப்படுத்திவிட்டு தனக்கான விடுதலைக்கு மட்டும் குரல் கொடுப்பது எவ்வளவு இழிவான மனநிலை என்பதைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.இதுபோன்ற பல கட்டுரைகள் சாதியம் பற்றி விரிவாக நடைமுறை வாழ்வியலாக நமக்குத் தருகிறார். இவைகள் ஏதோ தகவல் அறிக்கைகளாக இல்லாமல் இருளடைந்து போன சமூகத்தின் வரலாற்று ஆவணமாக உள்ளது.

இந்துத்துவ எதிர்ப்பு

அடிப்படையில் மிகவும் சிக்கலான ஏற்றத் தாழ்வு நிறைந்த ஒரு தத்துவம் தான் இந்து மதத்தின் தத்துவம். இதன் அடிநாதமாய் செயல்படும் BJP அரசு மக்களைப் பிளவுபடுத்தி அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி  வருகிறது. பல ஆண்டுகாலமாக களப்பணி செய்து மக்களை எப்படி “இந்து வெறியர்களாக” மாற்றுகிறது என்பதைத் தனது கள அனுபவத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.“கழுத்தறுக்கும் இந்துத்துவம்; சிதையும் தலித் தலைமுறை” என்னும் கட்டுரையின் மூலம் BJP சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ். மூளையில் உள்ள இழிவுகளை வெளிப்படையாக பேசுகிறார். மநு (அ) தர்மத்தின் வாயிலாக தலித் மக்களை கீழ்மைப்படுத்தும் இந்துத் தலைவர்கள் சில ஆண்டுகளாக சேரியை நோக்கி தங்கள் பணிகளை நகர்த்தியுள்ளனர். தற்போது பள்ளர் இன மக்கள் அதிகமாக இந்த அமைப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். BJP தூண்டிவிடும் மத மோதல்களுக்கு அடியாட்களாக கைக் கூலிகளாகவும் இஸ்லாமிய எதிர்ப்பாளராக இம்மக்களைப் பயன்படுத்துகின்றனர். ஷாகா எப்படி தலித் இளைஞர்களைச் சேர்க்கின்றனர் என்று சொல்கிறார் ஏழு ஆண்டு R.S.S. உறுப்பினராக இருந்த இளவேனில்.
“R.S.S.ல் இருக்கிறத கவுரவமா நெனச்சேன். எங்க வீட்டுக்குள்ள RSS காரங்க வருவாங்க. நானும் அவுங்க வீட்டுக்குள்ள போவேன். தலித் மக்களோட தாழ்வு மனப்பான்மையை RSS சரியா பயன்படுத்துது. வன்முறையைத் தவிர அதுல ஒண்ணும் சாதிக்க முடியல. முஸ்லிம்களைப் பார்த்தாலே அடிக்கணும்னு தோணும். அந்த அளவுக்கு வெறுப்புணர்ச்சியை ஏத்தி விட்டிருந்தாங்க. தலித் மக்களின் இருப்பிடங்களை விட்டுவைக்கவில்லை. இந்துத்துவம் யார் எதிரி என்பதில் இந்துத்துவவாதிகளுக்கு இருக்கும் தெளிவு. தலித் தலைவர்களிடம் இல்லை. இந்துத்துவ எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகளுக்கும், பெரியார்வாதிகளுக்கும் இருக்கும் பிடிவாதம் கூட, தலித் தலைவர்களுக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது என்கிறார் ஆசிரியர்.

பெண்ணியம்

தற்போதையச் சூழலில் பெண்ணிய வாதம் பரவலாகப் பேசப்படுகிறது. இதிலும் பல வகையான பெண்ணியச் சிந்தனைகளை முன்வைக்கப்படுகிறது. உடல் அரசியல், உரிமை, சுதந்திரம் போன்றவற்றை வெவ்வேறு கோணங்களிலும் தமிழ்ச் சமூகம் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. இருப்பினும் ஜெயராணியின் பெண்ணியச் சிந்தனைகள் என்பது மிக எதார்த்தமானவை. எளிய மக்களின் பெண் விடுதலையைப் பேசும் எழுத்து அது. பெண்ணியச் சிந்தனைகள் பற்றி பல நிலைகளில் பேசப்பட்டாலும், பெண் அடிமைத்தனம் மட்டும் நிலைபெற்று இருப்பதற்கான காரணத்தை அலசுகிறது. பெண் அடிமைத்தனமே மற்ற எல்லா அடிமைத் தனங்களுக்கும் ஆணி வேர் என்கிறார் ஜெயராணி.நம் சமூகத்தில் பெண் அடிமைத் தனம் மதங்களின் ஊடாகவே பிறந்துள்ளது. ஆகையால் மதங்களின் நம்பிக்கைகளை, அதன் கடவுள்களையும் சடங்குகளையும் விட்டொழிக்காத வரையில் பெண் விடுதலை சாத்தியமில்லை என்கிறார். இதைத் தவிர்த்து பெண்ணியவாதிகளையும் பெண்ணிய இயக்கங்களையும் கேள்விக்குட்படுத்துகிறார்.

“மதங்களின் பொறுக்கித்தனங்களைப் பேசத் தயங்கும், கடவுள்களை எதிர்க்கத் துணியாத யாராலும் பெண்ணடிமைத்தனத்தை இம்மியளவுகூட நகர்த்திப் பார்க்க முடியாது” என்கிறார்.
பெண் அடிமைத்தனம் என்பது இச்சமூகத்தின் இழிவு என்றால், அதனினும் இழிவு தலித் பெண்கள் மீது ஆதிக்க ஆண்கள் செலுத்தும் வன்முறை என்பது வார்த்தையில் சொல்லிவிட முடியாத வலியின் கொடூரம்.
உறையாத ரத்தம் என்னும் கட்டுரையில் சங்கனங்குளம் பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவேற்றுகிறார். தேவர் சாதியைச் சேர்ந்த கொடூர மிருகங்கள் நடத்திய வன்முறையை இச்சமூகத்தின்முன் வெளிப்படையாக, அறச்சீற்றத்துடனும் முன்வைக்கிறார்.தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் “Indian Army Rape us”  என  Banna  ரோடு நிர்வாணப் போராட்டம் நடத்திய மணிப்பூர் பெண்களின் போராட்டத்தில் உள்ள நியாயத்தை விளக்குகிறார். இரோம் சர்மிளாவின் போராட்டம் பற்றிப் பல தரவுகளுடன் பேசுகிறது கட்டுரை.“33% மோசடி”பெண்களுக்கு 33 சதவித  இட ஒதுக்கீட்டில் தலித் பெண்களுக்கான உள் ஒதுக்கீட்டின் தேவை என்ற வார்த்தை ஆதாரபூர்வமாகவும், தேவையின் அடிப்படையிலும் முன் வைக்கப்படுகிறது.

இஸ்லாமுக்கு மாறும் மக்கள்

இந்து மதம் தலித் மக்களை இழிவேலைகளுக்கு பணியவைக்கிறது. ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறது. ஆதிக்க சாதியினரால் ஏச்சிற்கும் பேச்சிற்கும் ஆளாக்கப்படுகின்றனர். வறுமை வேலையின்மை இவை அனைத்தும் இம்மக்களை வேறு ஒரு மதம் மாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. மனிதனை மனிதனாக மதிக்க மறுக்கும், அடிப்படை சுயமரியாதைகூட இல்லாத இந்து மதத்தில் இருப்பதைவிட இஸ்லாம் மார்க்கத்திற்கு செல்கிறோம் என்கின்றனர் தலித் மக்கள். இதிலும் பெண்ணடிமைத் தனம் வலுவாக இருந்தாலும் மனிதனைப் பிரித்து இழிவாகப் பார்ப்பதில்லை என குறிப்பிடும் இக்கட்டுரை, மறைந்து கிடக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறது. இந்து மதத்தின் கொடிய பிடியில் சிக்கியிருக்கும் தலித் மக்களை ஏதோ ஒரு உந்துதலில் மதம் அடைந்து தங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக் கொள்வதாக உணர்கின்றனர்.ஆனால் இவைகள் எந்த அளவிற்கு விடுதலைக்கான வழியாக இருக்கும்? இருப்பினும் இஸ்லாமிய மக்களை இன்னொருபுறம் தீவிரவாதிகளாக சித்தரித்து சித்ரவதை செய்யப்படுவதையும் அதன் பின் அரசியலை கட்டுரை ஆராய்கிறது.

பொதுவுடமை அரசியலும் சாதிய எதிர்ப்பும்

“பீடங்கள் பறிபோகின்றன – பதற்றத்தில் பார்ப்பனர்கள்” என்ற கட்டுரையில் பலரது பெயரை பார்ப்பனியர்கள் என்று ஒரு பட்டியலை வைக்கிறார். அதனைத் தொடர்ந்து பார்ப்பனியம் அதன் அதிகாரத்தைப் பல துறைகளிலும் விரித்துள்ளது என்பதை பதிவேர்கிறார். அக்கட்டுரையில் ஜெயலலிதாவில் துவங்கி எஸ்.ஆனந்த் வரை நீள்கிறது பட்டியல். இதில் இல.கணேசன், துக்ளக் சோ போன்றோரோடு இணைத்து மங்கை உ.வாசுகி, மைதிலி சிவராமன் என்று இன்னும் பல முரண்களோடு இணைத்திருப்பது மிகவும் நெருடலான விஷயம்.
தோழர் மைதிலி 1968லிருந்தே தலித்  மக்களோடு களத்தில் பணி செய்யாதவர். சாதியம் பற்றியும் பெண்ணியம் பற்றியும் மிகத் தெளிவான பார்வையுடையவர். மக்கள் மீது அக்கறையோடு சாதி எதிர்ப்பு விஷயங்களில் செயல்பட்டவர் தான் சார்ந்த சாதியை, தன்னை முன்நிறுத்திக் கொள்பவர் அல்ல. மக்கள் நலம், பெண் விடுதலை பற்றி மிகத் தீவிரமாக களப்பணி செய்தவாறு எந்த காலகட்டத்திலும் சுயமுன் நிறுத்தலோ அங்கீகாரமோ வேண்டும் என்று நினைக்காத நேர்மையான  மக்கள் தொண்டர். அவரையும்  உ.வாசுகியையும் மங்கையையும் இப்பட்டியலில் இணைப்பது என்பது, புத்தகம் நெடுகிலும் அறம் பேசப்படும் நிலை  இங்கு அறம் அற்றதாக உள்ளது.

உத்தப்புரம்: உடைக்க முடியாத ஜாதி

உத்தப்புரத்தைப் பொறுத்தவரை ஒரு சுவர் இடிப்பு என்பது அது வலுவாக நடந்துவிடவில்லை. இதற்கும் பொதுவுடமைத் தோழர்களின் கடின உழைப்பு தலித் மக்களின் பெரு ஆதரவுமே சாதி இழிவின் அடையாளமான சுவர்த் தகர்ப்பை சாத்தியப்படுத்தியது. பிள்ளை சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்களை அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது இந்த நிகழ்வு. ஒரு சுவரால் சாதி ஒழிந்துவிடவில்லை. ஆனால் சாதி ஒழிவதற்காக ஆரம்பப் புள்ளியாக இந்த தகர்ப்பு என்பது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தால் நடந்தேறியுள்ளது.

கொலை செய்யும் சாதியைக் கொலை செய்யும் குரல்

இதில் உள்ள பல கட்டுரைகளும் அம்பேத்கர், பெரியாரின் சித்தாந்த அடிப்படையில் தலித் மக்களுக்கான குரலாய் ஒலிக்கிறது. சில இடங்களில் அரசியல் கட்சிகளை, இயக்கங்களையும் விமர்சிக்கவும் செய்கிறது. அனைத்தையும் சங்தேகிப்பதும் பாரபட்சமின்றி ஒரு கலகக் குரலாய் சாதித் தகர்ப்புக்கெதிராக வலுவாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது.தோழர் ஜெயராணியின் ஒவ்வொரு கட்டுரையும் தனக்கான அறம் ஆய்வு அறிவுத் தேடல் மற்றும் களப்பணி இதன் அடிப்படையில் எழுதப்படுகிறது. தலித் மக்களின் வலிகளை மட்டுமின்றி, அதற்கான எதிர்வினையும், அரசு நிர்பந்திக்கும் வாதமும் முன்வைக்கப்படுகிறது.

பெண் எழுத்து என்பது தமிழ்ச் சமூகத்தில் குறைவான தளத்தில் இயங்கக்கூடியனவாக உள்ளது. தமிழகத்தில் பல பெண் படைப்பாளிகள் இருந்தபோதிலும் அவை எண்ணில் அடங்கிய ஒன்று. 1960களில் வாசிப்பாளர்களுக்கு தற்போதைய வாசிப்பாளருக்கு பெரிய மாற்றம் நிகழ்ந்து விடவில்லை. குறிப்பாக, கவிதை கதை நாவல்களைத் தாண்டி கட்டுரை இலக்கியங்களில் சமூக அக்கறையுடன் அறிவார்ந்த தளத்தில் இயங்குவது மிகச் சொற்பமானவர்களே. அந்த வகையில் தலித் இதழியலாளராய் சமூகத்தின்முன் தத்துவார்த்த விவாதங்களையும், விமர்சனங்களை தனக்குரிய அறத்துடன் முன் வைக்கிறார். மிகச் சிக்கலான விடயங்களைக்  கூட, எளிய மொழியில் வாசிப்பவருக்கு கடத்துகிறார்.

சாதியற்றவர்களாய் வாழ்வது என்பது, அறம் கொண்டு புதிய வாழ்வியலுக்கான வழியை அறிமுகம் செய்கிறார் ஜெயராணி. இன்றைய இளைய தலைமுறைக்கு அவர் ஒரு அறைகூவல் வைக்கிறார்.

“ஜாதியைக் கொல்லும் அருஞ்செயலுக்கு எல்லோரையும் கூவி அழைக்கிறேன், இந்த சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் நிலைகளிலும் ஊறிப் போய் கிடக்கும் ஜாதியை தங்கள் மூளையிலும் ரத்தத்திலும் சுமந்து கொண்டிருக்கிறவர்களுக்கு நடுவில் இப்படி அறிவித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. இந்த பிரகடனம் என் மனதை இலகுவாக்குகிறது. நான் யாருக்கும் தாழ்ந்திருக்கவில்லை. யாரையும் நான் தாழ்வாகக் கருதவில்லை என்ற உணர்வு சுமையற்றது. சமத்துவத்தின் எளிய மகிழ்வைப் புறக்கணித்து, சர்வாதிகாரத்தின் செருக்கைச் சுமந்து திரிவோர் என் பார்வையில் நோயால் பீடிக்கப்பட்டவர்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *