முள்ளிவாய்க்காலில் கடைசி வரை சென்ற அமரதாஸின் கமெரா

– ஐ.நா மன்றில் அமரதாஸ் உரையாற்றினார்.

79ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ஐ.நா பக்க அரங்கில் சுயாதீன ஊடகவியலாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அமரதாஸ், தன் வசமுள்ள தமிழினப் படுகொலை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்து 2015.10.01 அன்று, உரையாற்றினார்.

போர்க்காலத்தில், தமிழின அழிப்புக் களத்தில், அவர் பதிவு செய்த ஒளிப்படங்கள் பலவற்றைக் காட்சிப்படுத்தி தமிழில் உரையாற்றும் போது ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது. அமரதாஸ், யுத்த நெருக்கடிகளால் சூழப்பட்ட வன்னிப்பகுதிக்குள்ளிருந்து ஒரு கவிதைத் தொகுதியும், ஒரு ஒளிப்படத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். தனிநபர் ஒளிப்படக் காட்சியினையும் செய்திருக்கிறார். சினிமாத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் கடைசி வரை சென்று பல்வேறு நிலைமைகளையும் படங்களாகப் பதிவு செய்து, பல்வேறு வழிகளில் வெளிக்கொண்டு வந்தவர். அவரது உரையின் முக்கிய பகுதிகளும் வீடியோ இணைப்பும், அவரது சில ஒளிப்படங்களும் கீழே இணைக்கப்படுகின்றன.

” ஈழத்தில் கலை, இலக்கிய, சமூகச் செயற்பாடுகளில் அதிகமதிகம் ஈடுபட்டுக்கொண்டிருந்தவன் நான். ஒரு கவிதைத் தொகுதியும், போர்க்கால வாழ்வியல் உள்ளிட்ட ஈழத்தமிழர்களின் வாழ்வியலையும் நிலவியலையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒளிப்படங்களின் தொகுதியும் வெளியிட்டிருக்கிறேன். ஈழத்தின் போர்க்கால வாழ்வியல், என்னை சுயாதீன ஊடகவியலாளனாகவும் விரிவுரையாளனாகவும் ஆக்கியிருந்தது.

நீண்டகாலமாகத் தொடரும் சிங்கள-தமிழ் இன முரண்பாடுகளுக்கு மத்தியில் பிறந்து, போர்க்காலத்தில் அதன் கொடிய நெருக்கடிகளுக்குள்ளும் பற்றாக்குறைகளுக்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவன் நான்.

சிங்களப் பேரினவாத அரசுகளால், தமிழினமானது காலத்துக்குக் காலம் ஒடுக்குமுறைகளுக்கும் பல்வேறு வகையிலான படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்படுவதை நேரடியாகவே அறிந்தவன்.

முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்த இறுதிப் போர்க்காலகட்டத்தில் ஈழத்தமிழினம் இன அழிப்பிற்குள்ளானதை நேரடியாகக் கண்டவன் நான். இன அழிப்பு நடவடிக்கைகளை இயன்றவரையில் பெருமளவில் ஒளிப்படங்களாகப் பதிவு செய்திருக்கிறேன்.

உக்கிரமான இறுதிப் போர்க்காலத்தில் மக்களோடும் வலிகளோடும் எனது மூன்றாவது கண்ணாக, மெய்யான சாட்சியாக, முள்ளிவாய்க்கால் கடைசி வரை சென்ற கமெரா என்னுடையது.

ஒடுக்குமுறைகளுக்கும் இன அழிப்பிற்கும் உள்ளான ஈழத்தமிழினத்தின் பிரதிநிதியாக, அற நிலைப்பட்ட ஊடகவியலாளனாக, உண்மையின் குரலைப் பதிவு செய்ய இந்த ஐ.நா மன்றம் வரை வந்திருக்கிறேன்.

 

இதுவரையில் சந்தித்த நெருக்கடிகளும் அவலங்களும் துயர்களும் ஆபத்துக்களும் ஏராளம். இனியும் அவை தொடரும் என்று தான் தோன்றுகிறது.

இந்த ஐ.நா மன்றத்தில் என் கதையோ பெருமையோ பேசுவது என் நோக்கமில்லை. காலத் தேவை கருதி என் இனத்தின் அவலத்தை, இயன்றவரை சுருக்கமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தீவிரமாகப் போர் நடைபெற்ற மிக நெருக்கடியான காலப்பகுதியில் மக்களோடு இடம்பெயர்ந்து அலைந்துகொண்டே , மக்களோடு சேர்ந்து எல்லா அவலங்களையும் எதிர்கொண்டபடியே எல்லவற்றையும் பதிவு செய்தேன்.

எந்த வகையிலும் போர் நெருக்கடிகள், அழிவுகள், இழப்புக்கள் போன்றவற்றிலிருந்து விடுபடவோ, அவற்றை நிறுத்தவோ முடியாதிருந்தபோது, எல்லாவற்றையும் தீவிரமாகப் பதிவு செய்தேன். எப்போதாவது இது என் இனத்தின் கதையை, உண்மைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுபோகும் என்றும், என் இனத்தை ஏதோ ஒரு வகையில் காக்கும் என்றும் நினைத்துக்கொண்டுதான் தீவிரமாக இயங்கினேன்.

ஒரு கட்டத்தில் ஒரு முதிய பெண், நான் படமெடுத்துக்கொண்டிருந்தபோது ‘இதனால் இப்போது என்ன பயன்’ என்று மிகவும் ஆக்ரோசமாகவும் வேதனையோடும் அழுதபடி கேட்டார். அப்போது அவருக்கு ஏதும் சொல்லமுடியவில்லை. இப்போதும் அந்தப் பெண்னின் குரல் என்னுள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

என் பதிவுகளில் பலவற்றை, காலத்தின் தேவை கருதி பல்வேறு வழிகளில், ஊடகங்களில், என் அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். பல்வேறு ஊடகங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் அநாமதேயமாகப் பயன்படுத்தப்படுகின்ற இனப்படுகொலை சார்ந்த படங்களில் பெரும்பாலானவை நான் பதிவு செய்தவை.

தமிழினத்தின் மீது சிங்களப்பேரினவாத சக்திகள், பல சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையோடு நிகழ்த்தி முடித்த, இனப்படுகொலை நடவடிக்கைகளின் உண்மையான ஆதாரங்களோடு கூடிய உயிருள்ள சாட்சியாக இந்த ஐ.நா அவையில் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்.

எனது படங்களின் துணையோடு, அவற்றின் பின்னணிக் கதைகளோடு பல மணி நேரங்கள் பேசமுடியுமாயினும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எனது வெளிப்பாட்டை முடிக்கவேண்டியிருப்பதால் , வகைமாதிரிக்கு சில படங்களைக் காட்சிப்படுத்தி, அவற்றையொட்டி சில விசயங்களை மட்டும் பதிவு செய்ய முயல்கிறேன்.

படுகொலை செய்யப்பட்ட, சிதைக்கப்பட்ட வெறும் சடலங்களை மட்டும் நான் பதிவு செய்யவில்லை. உண்மையில் அவற்றையெல்லாம் பதிவு செய்யும் விருப்பம் எனக்கு இருக்கவில்லை. அதையும் நானே செய்யவேண்டியிருப்பதை உணர்ந்து அதைச் செய்யவேண்டியிருந்தது. ஒருவகை விடுபட்ட மனநிலையிலிருந்தே அதைச் செய்திருப்பதாக உணர்கிறேன்.

எல்லோரும் பாதுகாப்புத் தேடி ஓட , பதுங்கு குழிகளுக்குள் முடங்க, நானோ உயிராபத்துகள் நிறைந்த , தடைசெய்யப்பட்ட கனரக இரசாயன ஆயுதப் பிரயோகங்களும் , விமானக் குண்டுவீச்சுக்களும் , சரமாரியான எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்ட நிலப்பரப்புக்களில் ஒளிப்படங்களைப் பதிவு செய்வதற்காகத் திரிய வேண்டியிருந்தது.

கண்டவற்றையெல்லாம் பதிவு செய்யவும் முடியவில்லை. பதிவு செய்தவற்றையெல்லாம் காப்பாற்றிக் கரை சேர்க்கவும் முடியவில்லை. இழந்தவை போக என்னிடம் எஞ்சியிருப்பவையே ஏராளம்.

வெறும் சடலங்களை மட்டும் நான் இங்கே காட்டப்போவதில்லை. அதில் எனக்கு முழு விருப்பமுமில்லை. சடலங்களின் படங்கள் ஏற்கெனவே நிறைய வெளிவந்துவிட்டன. இப்போது அதிகமும் இனப்படுகொலைக்குள்ளான இனத்தின் முகங்களையும், வலிகளையும், உணர்வுகளையும் காட்டப்போகிறேன்.

என் இனத்திற்கு இப்படியொரு அவலம் நிகழ்ந்து, அதை நான் பதிவு செய்து, இப்படியொரு சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்த வேண்டியிருக்கிற அவல நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.

படமெடுக்கும் போது உயிரோடிருந்த பலர் இறந்து போனதைப் பார்த்திருக்கிறேன். அநீதியான முறையில், அநியாயமாக, வலிந்து இறந்துகொண்டிருக்கும் போது, அந்த இறப்பை எந்த வகையிலும் நிறுத்த முடியாமல், பார்த்துக்கொண்டு மட்டுமே படமெடுத்துக்கொண்டு மட்டுமே இருக்கவேண்டிய நிர்ப்பந்தமான, அவலமான நிலைமை உலகில் யாருக்கும் வரக்கூடாது.

முதலில் எனது படங்கள் வெளியான பிரசுரங்கள் சிலவற்றை வகைமாதிரிக்கு அறிமுகப்படுத்திவிட்டு, தொடர்ந்து சில படங்களைக் காட்சிப்படுத்தப் போகிறேன்.

எல்லாப் படங்களுக்குமான விளக்கத்தை இந்த இடத்தில் எனக்குச் சொல்லமுடியாமலிருக்கும். படங்கள் பற்றி நான் அதிகம் பேசவேண்டுமென்றில்லை. படங்களே பேசக்கூடிய தன்மையில் இருக்கும். ஆனாலும், சில படங்களுக்கான சில பின்னணித்தகவல்கள் சொல்லவேண்டியிருப்பதால் மட்டும், நான் குறுக்கிட்டுச் சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன். படக்காட்சி முடிந்ததும் சில விடயங்களைக் கதைக்க விரும்புகிறேன்.

151.peoples tribunal on sri lankaஇங்கு நீங்கள் பார்க்கின்ற இந்த முதிய பெண்னின் முகத்தைக் கொண்ட கடைசிப் படமானது, தமிழினப் படுகொலையை உறுதிப்படுத்தி ஜேர்மனில் 2013 இறுதியில் நிகழ்த்தப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் சாராம்சமாகத் தொகுத்து வெளியிடப்பட்ட நூலின் அட்டைப்படமாக வந்தது. இந்தப் படத்தின் பின்னே ஒரு நெகிழ்ச்சி மிக்க அவலமான கதையும் ஒரு வேண்டுதலும் இருக்கிறது. இந்தப் பெண் இப்போது உயிரோடு இருக்கிறாரோ தெரியவில்லை. என் படங்களில் பதிவாகிய பலர் இப்போது எங்கே, எப்படியிருப்பார்களோ தெரியவில்லை. அவர்கள் உயிரோடிருந்தால் அவர்களைச் சந்தித்து பரிமாறிக் கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன. இந்தப் பெண்ணின் படத்தின் பின்னணியை இப்போது நான் பகிரப்போவதில்லை. அவசியமுமில்லை. இப் படம் , இப்போது இனப்படுகொலைக்குள்ளான, இப்போதும் நுட்பமான இன அழிப்பிற்குள்ளாகிற, சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி நிற்கிற, ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் குறியீடாகத் தெரிகிறது.

இலங்கைக்குள் நீண்டகாலமாக நிலவிவருவது இனப்பிரச்சினை தான். தமிழினம் வெளிப்படையாக அழிக்கப்படும் போது தடுத்து நிறுத்த முன்வராத, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களையும் சுயநல உள்நோக்கங்களையும் கொண்ட வல்லாதிக்க சக்திகள் மலிந்த சர்வதேச சமூகம், தமிழினத்துக்கு சுயநல நோக்கின்றி பொருத்தமான, சரியான தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று நம்புவது கடினம் தான்.

ஆயினும், இந்த ஐ.நா மன்றத்தில் உண்மைகளோடும் காட்சி ரீதியான ஆதாரங்களோடும் ஒரு உயிருள்ள சாட்சியாக, எல்லா விதமான அநீதிகளுக்கும் எதிரான அறத்தின் குரலை அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்.

சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை உரிமை என்று ஐ.நா நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைக் கூறுகளாக ஐ.நா வரையறுக்கின்ற அத்தனைக் கூறுகளையும் கொண்டது தமிழினம். அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு.

இனப்படுகொலைக்கான நீதியான பரிகாரமே, இலங்கை இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வுக்கு வழிவகுக்க முடியும்.

நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இனப்படுகொலை என்று நிரூபிக்கக்கூடிய வகையில் கண்மூடித்தனமான மோசமான குற்றச் செயல்களும் நடந்திருக்கின்றன.

போர்க்குற்றங்கள் எனப்படுபவை வேறு, இனப்படுகொலைக் குற்றங்கள் எனப்படுபவை வேறு. இரண்டுக்குமான விளக்கங்களை நான் இதில் சொல்ல விரும்பவில்லை. போர்க்குற்றங்களுக்கான நிறைய ஆதாரங்கள் ஏற்கெனவே வெளிவந்து விட்டன. அவை நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன . இனப்படுகொலைக்கான முற்று முழுதான ஆதாரங்களை என்னால் வழங்க முடியும். ஏனெனில் நான் இனப்படுகொலை நடந்த களத்திற்கு உள்ளே இருந்தவன்.

இலங்கையில் நடந்தவை போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, தமிழின அழிப்பும் தான் என்பது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் போதுதான், தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட தனியான இனமென்பதும், இன விடுதலைக்கான நீண்ட கால விடுதலைப் போராட்ட நியாயங்களும், தியாகங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைய முடியும்.

இந்த ஐ.நா மன்றம் என்பது, வெறுமனே கற்களாலும் சடப்பொருட்களாலும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறதா அல்லது உண்மையான மனிதாபிமானமும் அறமும் நீதி பரிபாலனமும் கலந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கிறதா என்பதை இந்த ஐ.நா மன்றமே உறுதி செய்துகொள்ளட்டும்.இதுவரை எனது வெளிப்பாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருந்த, அவதானித்துக்கொண்டிருந்த எல்லோருக்கும் நன்றி.”

————————————-

 

 

25 42 46 55 79 83 93 99 101 107 119 120 128

 

1 Comment on “முள்ளிவாய்க்காலில் கடைசி வரை சென்ற அமரதாஸின் கமெரா”

  1. வணக்கம்,
    அமரதாஸ் அண்ணனைப்பற்றி நான் நன்கு அறிவேன். இவருடன் சில நாட்கள் பணியாற்ற எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *