பாரம்பரியக் கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்:

 – நிலுஜா ஜெகநாதன்

பாரம்பரியக் கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்:

 கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்டியரசன் தென்மோடிக் கூத்தில் பங்கு கொண்ட  பெண் கலைஞர்களின் கலந்துரையாடலின் போது அவர்களின் கருத்துப்படி கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்காலங்காலமாக ஆடப்பட்டு வரும் இக்கலையானது நீண்ட ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாகவே ஆற்றுகை செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதனை வடமோடி, தென்மோடி என கூத்துக்  கலைஞர்களும், அண்ணாவிமார்களும் வகைப்படுத்துகின்றனர். ஆயினும் வடமோடி பெண்கூத்து என்றும் தென்மோடி ஆண்கூத்து என்றும் அழைக்கின்றார்கள். இதற்கு காரணம் கூறுகின்றனர் ‘தொங்க தீம் தா’ என சிவன் குதித்துப் பாய்ந்தாராம். (தம்பி முத்து அண்ணாவியார்) தென்மோடியில் ‘தொங்க தீம் தா’ என மாறுவது மரபு. எனவே தென்மோடி ஆண்கூத்து என கூறுகின்றோம். இவை இவ்வாறு வகைப்படுத்தப்பட்டாலும் பெண்கள் கூத்து ஆடுவது இல்லை என்பது மரபு. பெண்கள் கூத்துக்களில் பாத்திரம் ஏற்று ஆடுவதில்லை அதற்கான காரணம் கலாசார ஒழுக்க விதி என்றும் அவர்களால் அத்தகைய ஆட்டங்களை மேற்க்கொள்வது கடினம், முடியாது. (மட்டக்களப்புக் கலை வளம் – தங்கேஸ்வரி)

பெண்கள் மென்மையானவர்கள், பலவீனமானவர்கள், கஷ்டப்படமாட்டார்கள், வலிமை குறைந்தவர்கள், நுணுக்கமான கஷ்டமான ஆட்டங்களை அவர்களால் ஆட முடியாது. எனவே இந்த கூத்து எல்லாம் பெண்களுக்குச் சரிப்பட்டு வராது அதனால் அவர்களை கூத்துக்குள்ள எடுக்கல்ல என்பது தம்பிமுத்து அண்ணாவியாரின் கருத்தாக அமைந்தது. இதற்கு பெண்கள் ஆடுவதற்கு முன்வரவில்லையா, விரும்பவில்லையா என வினா எழுப்ப ‘அவர்கள் ஆட விரும்பினாலும் நாங்க எடுக்கல்ல பொட்டைகள கொண்டு எப்பிடி ஆட்டுற’ என்றார் தம்பிமுத்து  அண்ணாவியார். பெண்களை பலவீனமானவர்கள், வலிமை குறைந்தவர்கள், கஷ்டப்படமாட்டார்கள் என எப்படி கூற முடியும். பிரசவ வலியையும் தாண்டி குழந்தை பெற்று எடுக்கும் பெண்களுக்கு ஏன் இந்தக் கூத்து ஆடும் வலியை தாங்க முடியாது, வலிமை கிடையாது. இது கூத்துச்சமூகம் நியாயப்படுத்தும் கருத்து என்று தான் கூற வேண்டும்.

மேலும் பெண்கள் கூத்து ஆடினால் வாழ்க்கை ஒன்றுக்குள் போவது கடினம், விரும்பப்பட மாட்டார்கள் என்ற சமூகக்  கருத்தும் நிலவுகின்றது. (கமலநாதன் அண்ணாவியார்) அச்சமூகம் அதை ஏற்றுக் கொள்ளாமலும் இருந்தது.

ஆனால் கூத்து ஆடிய ஆண் ஒருவர் மீது  பெண்மகள் காதல் கொள்வதும் அல்லது பெற்றோர் தன் பிள்ளைக்கு கூத்தாடிய ஆண் மகனை வலிந்து பேசி திருமணம் செய்து கொடுப்பதும் சிறந்த ஆட்டக் காரன் சிறந்த இல்லற வாழ்க்கையை நடத்த வல்லவனாக இருப்பான் என்பது அவ்வூர் மக்களின் சமூகத்தின் சிந்தனையாக இழையோடி நிற்பது ஒரு சமூக ஒருங்கிணைவு ஆக கூத்து இருப்பதை காட்டுகின்றது. இதனை வலியுறுத்துவோர் ஏன் பெண்கள் கூத்து ஆடினாலும் சமூக ஒருங்கிணைவு இன்னும் வலுப்படும் என்பதை புலப்படுத்துவதில் தயங்கி நிற்கின்றனர். இதற்கு காரணம் என்ன? இவ்வாறான கருத்துக்கள் இடம் பெற்ற போதிலும் கூத்து ஒரு தூய்மையான கலை என்பதாலும் பெண்கள் கூத்துக்களில் இடம் பெறாமல் போய் இருக்க முடியும். கூத்தாற்றுகை செய்யும் இடம் ஒரு கோவில் அல்லது கோவில் முற்றம் எனவே சில சந்தர்ப்ப சூல்நிலைகளில் (மாதவிலக்கு காலங்களில்) கூத்தை ஆடாமல் அல்லது ஆடமுடியாமல் போகலாம். உதாரணம் ஆக நான்கு பெண்கள் கூத்தில் பங்கு பற்றுவார்கள் ஆயின் ஒரு பெண்ணுக்கு ஏதோ முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அக் கூத்தில் பங்கு பெறும் மொத்த கலைஞர்களும் இடம் பெற முடியாது அல்லது இடையூறு ஆக அமைகின்றது. சமயம், சம்பிரதாயம் என்ற போர்வையில் பெண்கள் இதன் மூலமாக கூத்துக்களில் தவிர்க்கப்படுகின்றனர் என ஊகிக்க முடிகின்றது. ஆனாலும் இது ஒரு உடல் இயக்க இயற்க்கைச் செயற்பாடே ஆகும்.
 
கடினமான ஆட்டங்களை (உதாரணமாக சீரணி, குத்துமிதி ஆட்டங்கள்) ஆடுவதற்கு பெண்களின் உடல்நிலை மேற்குறித்த காலங்களில் பங்களிப்பது குறைவு. காரணம் கூடுதலான இரத்தப்போக்கு இதனால் விளையும் களைப்பு, சோர்வு போன்றவற்றினைச் சுட்டலாம். இக்கால கட்டங்களில் கர்ப்பப்பை பலவீனம் பெற்று இருக்கும். எனவே துள்ளிக் குதித்து ஆடும்போது கர்ப்பப்பை கூடுதலான பலவீனம், காப்பப்பை வீங்குதல், கர்ப்பப்பை இறங்குதல், அதிக இரத்தப்போக்கு போன்றன இடம் பெற வாய்ப்பு இருப்பதால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களைப் போல் பெண்கள் ஆட முடியாமல் போய்விடுகிறது. இதற்குப் பெண்ணின் இயக்கத் தொகுதியில் ஏற்படும் அசாதாரண மாற்றம் காரணமாகிவிடுகிறது. மேலும் ஆரம்ப காலங்களில் பெண்கள், கல்வி, அரசியல், சமூகம், பொருளாதாரம், அந்தஸ்து போன்ற  இன்னோரன்ன விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் கலைகளில் கூட முன் வராமலும் தவிர்க்கப்பட்டும் இருந்த நிலையும் காணப்பட்டது. ஆனாலும் தற்போதைய சூழலில் அடிமைத்தனத்தில் இருந்து நீங்கி வெளிக்கிளம்பினாலும், கூத்துக்களில் பங்குபற்றுவதில் சில பெண்கள் ஒரு அனாகரிகமான செயல் என்றும் ஏராளமான பழிச்சொற்கள் எம்மத்தியில் ஏவப்படும் என்றும் நக்கல் நையாண்டிகளுக்கு ஆளாகிவிடுவோம் என்ற பயத்துடன் கட்டுப் பட்டு கூத்துக்களில் இடம் பெறுவதைத் தவிர்த்துக் கொள்கின்றனர்.(கமலநாதன் அண்ணாவியார்). ஆனாலும் சில பெண்கள் விருப்புடன் முன்வந்து கூத்துக்களில் ஈடுபடும் நிலமையும் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு விருப்புடன் பெண்கள் முன் வந்தாலும், முன்வரும் பெண்களின் குடும்பங்கள் சுற்றுச் சூழல் இவ்வாறான பெண்களை கூத்துக்களில் ஈடுபடத் தடுக்கும் நிலைமையும் நிலவுகின்றன. இவை முக்கிய பிரச்சினையாகவும் சவாலாகவும் அமைந்து விடுகின்றது.

Download
இவ்வாறான கருத்தியல்களுக்குச் சவாலாகவும்; நியாயப்படுத்தும் கருத்துக்களை தளர்த்தும் வகையிலும் இவ்வாறான கருத்தியல்களின்  இழையோடல்களுக்கு மாற்றாக கூத்து ஆற்றுகைப் பங்குபற்றல்கள்; அமைகின்றன.. இங்கு பெண்கள் பங்குபற்றி வருகின்றனர். கூத்தை ஆற்றுகை செய்யும் இடம் கூடுதலாக கோயில் வெளியாகவே இருந்தது. எனவே பெண்கள் கூத்துக்களில் உள்ளீர்க்கப்படாமைக்குக் காரணம் என எண்ணத்தோன்றினாலும், அண்ணாவியாருடன் கலந்துரையாடும் போது பெண்கள் பரதநாட்டிய ஆட்டங்களில் ஈடுபடுகின்றனரே இவை எவ்வாறு சாத்தியப்படுகின்றது. அதற்கு அண்ணாவியார் தரும் விளக்கம் பரதநாட்டியம் ஒரு குறித்த நேர வரையறைக்குள் முடிந்து விடும். ஆனால் ‘கூத்து அப்படியன்று. மாத கணக்கு வருஷக் கணக்கா ஆடப்பழகுவம். அதோட அரங்கேற்றத்திற்குக் கிட்டத் தட்ட ஒரு நாள் செலவழிக்கப்படுகின்றது. ஏழு அல்லது எட்டு மணித்தியாலங்கள் கொண்டது  கூத்தாட்டம். ஆனால் பரத நாட்டியம் மூன்று மணித்தியாலங்கள் எண்டு வைத்தாலும் ஆடிமுடிக்கலாம் தானே ‘(தம்பிமுத்து அண்ணாவியார் ) எனப் பதில் தந்தார். எனவே இக்கூத்தாற்றுகையின் போது தவிர்க்க முடியாத சவாலாக அமைந்தது உடல் ரீதியான பிரச்சினையா?…….

மாதவிலக்குக் காலங்களில் ஆடியதால் கூடுதலான இரத்தப் போக்கும் வயிற்றுவலி, இடுப்புவலி, சோர்வுக் களைப்பு இதன் மூலமாக அடிக்கடி வைத்தியசாலைக்குச் செல்வதும் முக்கிய பிரச்சினையாகக் காணப்பட்டது. ‘எனக்கு இந்தக் கூத்து ஆடினதால நிறய விசயம் பயனுள்ளதா அமைஞ்சது. ஆனா எனக்கு வந்து உடம்பில பிரச்சன இருந்தது. ஏற்கனவே தொடந்து கூத்தாடினத்தால கூடுதலான பிளிடிங் ( இரத்தப் போக்கு) இருந்தது. இதோட கூத்தாடுனதால இது கனக்கயா போய் கொஸ்பிற்றல்ல இருந்து ரீட்மென்ட் எடுத்து இருந்தன். அப்ப அதால பிறகு பிறகு கூத்து ஆடேலாமப் போயித்து. திரும்பவும் ஆடினா அப்பிடிப் பிரச்சன வரும் எண்ட பயம் வந்துத்து.’ ( தோழி 2- தீபகங்கா)

அத்தோடு மேற்குறித்த பிரச்சினை காரணமாக மாதாந்தம் வைத்தியசாலை சென்று தடுப்பூசிகளை ஏற்றல் போன்ற சம்பவங்கள் இக்கூத்தாற்றுகையில் இடம் பெற்ற சம்பவங்களே. இவ்வாறான நடைமுறை பெரும் பிரச்சினையாக அமைந்தது. ‘நான் அரங்கேற்றத்துல ஆடுண பிறகு சரியான இடுப்பு வலியா இருந்தது. அம்பாறயில மென்சஸ்சோட (மாதவிலக்கு) ஆடுண பிறகுதான் சரியான இடுப்புவலி. அதுக்கு இப்பயும், மாசம் முடிய முடிய ஊசி போட்டுக்கொண்டு வாறன்.’ ( தோழி 1-ரேவதி) 
  
மேலும், நேர முகாமைத்துவம் பெண் மாணவர்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருந்தது. ஊருக்குள் போய்ப் பழகுவதிலும், அரங்கேற்றம், பல்வேறு களரி ஏற்றங்களின் போதும் கூத்தாற்றுகையினை முடித்துவிட்டு வீடு திரும்பும் வேளை எப்போதும் இருள் சூழ்ந்த வேளையாகவே இருக்கும். இதனால் பெரும் நெருக்கடியாக அமைந்தது.

அத்தோடு உள ரீதியாக தாக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஊருக்குள் சென்று பழகும் காலங்களில் கட்டியக்;காரன் ஆட்டம் சரியில்லை என முகத்திற்கு நேரே கூறினர். இது ஆரம்பத்தில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தாலும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். பாடல்களில் அழகுத் தன்மை குறைவு. ஆட்டத்தில் அசைவு போதாமை என்ற கருத்துக்கள் பகிரப்படும் வேளைகளில் சிற்சில மன அழுத்தங்கள் மாணவர் மத்தியில் ஏற்பட்டன. ‘எல்லாரும் பழகிக் கொண்டு இருக்ககுள சுபோவ பாத்துச் சொல்லுவாங்க நல்லாப் பாடுது எண்டு குறி;ப்பிட்டு சொல்ற நேரம் நம்மளப் பாத்து என்ன சொல்லப் போறாங்க. நம்ம ஆடுறம்மா பாடுறம்மா எண்ட டவுட் எனக்குள இருந்தது. அப்ப நான் ஐயோ நான் நல்லாச் செய்றனா, செய்யணும் அண்ணாவியார் ஏசுவாரோ. சில நேரம் சத்தமா அப்பிடி வை இப்பிடி வை எண்டு பேசும் போது  மனசுக்குள பயந்தன்.( தோழி 1- ரேவதி) 
கூத்துக்குரிய பாத்திரம் ஏற்கும் போது ஏற்பட்ட பிரச்சினையாக  வேடஉடை, ஒப்பனை, சதங்கை போன்றன அணிந்து ஆடும்போது களைத்துப் போன மாணவர்களுக்கு உடல்வலுச் சேர்க்கவில்லை. ஆடிவரும் மணல்பரப்பும், ஆதரவு வழங்கவில்லை. சாதாரண உடைகளில் ஆடிப்பழக்கப்பட்ட மாணவர்களுக்குக் கூத்து உடை, ஆபரணங்கள் அணிந்து ஆடுவது சிரமமாகவே இருந்தது. இவற்றைப் பொறுத்துக் கொண்டு  ஆடுவது சவாலாகவே அமைந்தது.

அரங்கேற்றுக் கூத்தாற்றுகைகளை முடித்துவிட்டு செல்லும் போது போக்குவரத்து வசதி என்பது  பிரதான பிரச்சினையாகவே இருந்தது. மூன்று, நான்கு மாதங்கள் தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு முகம் கொடுத்து ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகம்,   கிராமம் என்ற இடங்களுக்குச் சென்று வருவது பொருளாதார ரீதியிலும் சிக்கலை ஏற்படுத்தியது. போக்குவரத்துச் செலவு என்பது கூடுதலாக இடம்பெற்றது.(இக் கருத்து அனைத்து ஆற்றுகை மாணவர்களுக்கும் பொருந்தியிருந்தது). நான்காம் களரி ஏற்றம் அம்பாறையில் இடம் பெற்ற போது ஆற்றுகை செய்து முடித்துவிட்டு நீண்ட தூரம் நடந்து வந்து குறித்த இடம் சேர்வது அவதூறு நிலையை ஏற்படுத்தி இருந்தது. ஆற்றுகையை முடித்து குறித்த இடத்திற்கு வந்து வாகனத்திற்காக காத்து நின்று பயணம் செய்து வீடு வந்தடையும் போது அதிக நேரம் செலவிடப்பட்டது. இவ்வாறு தாமதித்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டு இருக்கும் வேளைகளில் வாகனச் சாரதி வேகம் குறைந்து வாகனத்தைச் செலுத்துவதும் சில நேரங்களில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது நித்திரை தூங்குவதுமான செயற்பாட்டில் வாகனச் சாரதியை மாணவர்கள் கடிந்து வசை பாடிக் கொண்டே வருவதுமான செயற்பாடுகளும் இடம்பெற்றன. இதனால் மாணவர்கள் உளச்சிக்கலுக்காளாகினர்.

இங்கு உடல் களைப்பு  வலியாலும், நேர தாமதத்தினாலும் வீட்டு உறுப்பினர்களின் நிலைப்பாடு பற்றி எண்ணி உளக் குமுறல்களுக்குள் சிக்கி உள நெருக்கடியைப் பெற்றனர். இதனால் பெற்றோருக்குப் பதில் சொல்வதிலும், சில மாணவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருக்கும், அவர் வீட்டாருக்கும் பதில் சொல்வது முக்கிய பிரச்சினையாக இருந்தது. மேற்குறித்த சம்பவங்களினால்  துறைத்தலைவர், ஏற்பாட்டாளர், இணைப்பாளர் போன்றோருடன் சில கருத்து முரன்பாடுகளும் ஏற்பட்டன.

குடும்பம், சமூக ரீதியான பிரச்சினைகளும் மாணவர்களுக்கு இருந்தன. சென்ற வருடம் மாமாங்கப் பிள்ளையார் கோயில் அரங்கேற்றத்தின் போது சமூகம் இவ்வாறு பேசியது. ‘இங்கு பெண் வேடம் கட்டியாடியது பெண்ணா, ஆணா’ என்ற கேள்விகள் எழுந்தன. இளைஞர் கூட்டம் மத்தியில் கேலிப் பேச்சுக்களும் பேசப்பட்டன. இதனைக் கேள்வியுற்ற குடும்பத்தினர் அடுத்தடுத்த அரங்கேற்றங்களுக்கு மாணவர்களை தடுத்துக் கொண்டனர். எதிர்ப்பு நிலை என்பதற்கு அப்பால் ‘ஆடு ஆனா கோயில்ல வேணாம்’ என்றனர். இதனால் ஆற்றுகையை மாணவரால் தொடர முடியவில்லை. குடும்பத்தை மீறி ஆட முடியாத நிலைப்பாடு நிலவியது. ‘கோயில்ல ஆடுறதப் பாத்து உங்கட புள்ள கூத்தாடிச்சே எண்டு ஒரு மாதிச் சொன்னாங்க’ இதனால் குடும்பத்தினர் விரும்பவில்லை. இதற்கு அப்பால் எதிர்கால திருமண வாழ்க்கையை கருத்திற் கொண்டு பயப்பட்டனர். ‘பாடம் படிப்பு விஷயம் சரி பழகி அரங்கேற்றம் செய்தாச்சி இப்ப அதுக்குரிய டெஸ்ட்டும் முடிஞ்சி இன்னும் என்ன ஆட்டம்’ என முடிவெடுத்தனர்;.  இதனால் முற்றாக ஆடுவதற்கு தடை விதித்தனர்.

எனவே மேற்குறித்த விடயங்கள் ஒவ்வொன்றும் கூத்தாற்றுகையின் போது மாணவர்கள் எதிர் கொண்ட உடல், உள சமூக ரீதியான பிரச்சினைகளே இவற்றுக்கு முகங்கொடுத்து பழக்கப்பட்ட நிலையில் தற்போது இவற்றுக்குள் ஈடுகொடுத்தும் வழி முறைகளைக் கண்டு பிடித்தும் திட்டமிட்டு தமது கருமங்களைக் ஆற்றக்கூடிய பக்குவமும் பெற்றதோடு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சவால்களை எதிர் கொண்டு எதிர் நீச்சல் இடும் ஆற்றலைப் பெற்றுள்ளனர்.
  
கூத்தரங்கின் அடிப்படை இயல்புகளான ‘ செய்வதனுடாகக் கற்றல்.’ செவியேறல், மனன முறை என்பன ஆற்றல்களை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் செய்கின்ற அம்சமாகும். செயல்வழிக் கல்வி என்ற மறுசீரமைப்பு, திட்ட அமுலாக்கல்களும் ஏற்கனவே வடிவமைக்கப் பட்டிருக்கின்ற வழிமுறைக்குள் சரணாகதி அடைந்து விடுவனவாகவே காணப்படுகின்றன. இது முக்கியமான கலைவழிக் கற்கை முறையாகக் காணப்படுகின்றது. கூத்து ஆற்றுகை என்ற இலக்கை நோக்கி திறந்த வெளிச் சூழலில் மாணவர்கள் கற்றனர். அண்ணாவியார் உள்ளிட்ட மூத்தோரின் பட்டை தீட்டுதல்களும் தொடர்ச்சியான பங்கெடுப்பும் புதிய ஆளுமைகளை, அடுத்த தலைமுறைகளை கூத்தரங்கில் உருவாக்கி விடுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளில் பல்வேறு பிரச்சினைகளும், சவால்களும் ஏற்பட்டன. மேற்குறித்தவை குடும்பம், சமூக ரீதியாகவும் ஏற்படத் தவறவில்லை. கண்டியரசன் கூத்தூற்றுகையில் பங்கு பற்றும் அனேகர் பெண்களே. இதனால் இவர்களுக்கே மேற்குறித்த பிரச்சினைகள் நிலவிற்று. அந்த வகையில் ஆற்றுகையில் ஈடுபடத்தொடங்கிய நாட்களிலிருந்து இறுதிக்களரி ஏற்றம் வரை குடும்ப அங்கத்தவர்கள் சிற்சில சந்தர்ப்பங்களில் உடன்படத் தவறிக் கொண்டனர். சதங்கை அணி விழாவின் போது பெற்றோர்கள், உறவினர்கள் வந்து பார்வையிட்டனர். அப்போது மாணவர்களை மிகச் சிறப்பாகப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் காசு மாலைகளும், பூமாலைகளும் அணிவித்து கழுத்தை நிறைத்தனர். இவ்வாறு பாராட்டிருந்த போதும், அரங்கேற்ற நிகழ்வில் மேற்குறித்தவாறே பாராட்டி புகைப்படங்களையும் பிடித்துக் கொண்டு மகிழ்ந்தனர். இச்செயற்பாடு இரண்டாம், மூன்றாம் களரி ஏற்றத்திலும் தொடர்ந்தது. ஆனால் அடுத்தடுத்த களரி ஏற்றங்களுக்கு மாணவர்களின் இவ்வாற்றுகைக்கு வீட்டார் அனுமதிக்கவில்லை. மாணவர்கள் வீட்டாரை சமாளித்துச் சமாதானம் செய்துகொண்டு களரி ஏற்றங்களில் ஈடுபட்டனர். அவர்களின் உடன்பாடு இல்லாமல் பங்கேற்றமையால் மாணவர்களுக்குத் திருப்தி இன்மையாகவே இருந்தது. அதன் பின்னான ஆற்றுகையின் போது குடும்பத்தினர் முற்றாகத் தடுத்து நிறுத்திக் கொண்டனர். இதற்குப் பல காரணங்களை முன் வைத்தனர்.

உடல் ரீதியான பிரச்சினைகளைக் காரணம் காட்டி, உடல் நலனில் அக்கறை கொண்டு கூத்தாற்றுகையைத் தடுத்து நிறுத்தினர். இவ்வாறிருக்க கூத்தாற்றுகைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகையில் ஏன் திரும்பத் திரும்ப இக்கூத்தினை ஆடவேண்டும். ஒரே கூத்தினை எத்தனை தடவை ஆற்றுகை செய்வீர்கள் என்ற கேள்விகளை எழுப்பினர். ‘ ஓரே இந்தக் கூத்தத்தானா ஆடுற எண்டு கேக்காங்கடி’ (பூசணியாள் – சுபோஜினி) இதனாலும் தடுத்து நிறுத்தி விட்டனர்.

அத்தோடு பாடத் திட்டத்திற்காகப் படித்துப் பயிற்சி எடுத்து ஆடிப்பழகி அரங்கேற்றம் செய்து அதற்கான பெறுபேறுகளையும் பெற்ற பின் பாடத்திட்டம் முடிந்த பின் திரும்ப ஏன் ஆடுவது என்ற கேள்வி எழுப்பப்பட்டதால் தொடர்ந்து மேற்கொள்ள குடும்பத்தினர் தடையாக இருந்தனர். மேலும் அரங்கேற்றம் முடித்த பின் திரும்பத் திரும்ப கோயில்களில் ஆற்றுகை செய்வதற்கான தேவை என்ன? பல்கலைக்கழகப் பாடத்திட்டதிற்கு அமைவாக செயற்பட்டு முடிந்த பிற்பாடு பல்கலைக்கழகங்களிலேயே ஆற்றுகைகளை நிகழ்த்த வேண்டும் என்பதை குடும்பத்தினர் விரும்பினார்கள் அத்துடன் அனுமதியும்; தந்தார்கள். இதனால் கூத்தாற்றுகைகளைப் பல்வேறு இடங்களில் ஆற்றுகை செய்ய முடியாமல் போனது.

கோயில்களில் நிகழ்த்துவதை அனுமதிக்கவில்லை. கூத்து ஒரு சமூக கலை பாரம்பரியமாக கோயில்களிலே நடத்தப்பட்டு வரும் கலை எனவே ஏன் இப்படியான கட்டுப்பாடுகளைத் திணித்து விடுகின்றீர்கள் என மாணவர்கள் கேள்வி எழுப்ப அதற்கு அவர்கள் தரும் விளக்கம் கோயில்கள் பிரபல்யமானது பலர் ஒன்றுணையும் இடம் எனவே அனைவரும் பார்வையிடுவர். சமூகம் அதையிதைக் கதைக்கும், (சமூகம் என்பது நாமும் தான் என்பதை மறந்து விட்டார்கள்) வினையமான பேச்சுக்களுக்கு இடம் இருக்கும். இதனால் குடும்பத்தினருக்கு சலன நிலை தோன்றி விடுகிறது. குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டாலும் ஏனையவர்கள் வினாவும் போது மனம் கஷ்டமாக இருப்பதை உணர்ந்தார்கள். அத்தோடு தம் பிள்ளைகளை வித்தியாசமான வியப்பான விமர்சனப் பார்வையில்ப் பார்க்கும் போதும் இது தொடர்பான அர்த்தமற்ற வினாக்களை ஏவும் போதும் ஏன் ஆற்றுகைக்கு அனுமதித்தோம், உடன்பட்டோம் என்ற மனச்சஞ்சலத்தையும், சலனத்தையும் அடைகின்றனர். மேலும் சில எதிர்காலச் சிக்கலுக்கு முகங்கொடுக்க வேண்டிய பய உணர்வும் அவர்களுக்கு இருந்தது. திருமண நடைமுறைகள் என்று வரும் போது சிலர் விரும்புவார்கள்; பலர் வெறுப்பார்கள்;. எனவே இது தொடர்பான எதிர்காலச் சிக்கலில் இருந்து தவிர்த்துக் கொள்வதற்கும் விடுபட்டுக் கொள்வதற்குமான தீர்வு ஆற்றுகையைத் தவிர்த்தலே சிறந்த வழியென்ற கருத்தியல்களைக் கொண்டிருந்தனர். அது மட்டுமின்றி திருமண நிச்சயம் முடிந்த மாணவர்களின் குடும்பம் கூட இதற்கு உடன்பட்டுக் கொண்டது. காரணம் செய்த திருமண நிச்சயம் சீர்குலையக் கூடும் என்ற ஐயமும் இருந்ததோடு சமூகத்தில் உள்ளவர்கள் வீண் பேச்சுக்களைப் பேசி இவற்றைக் குழப்பி விடுவார்கள் என்ற தடுமாற்றமும் குடும்பங்கள் மத்தியில் நிலவியது.
  
உடல்ப் பலவீனம் ஏற்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கமும் குடும்பங்கள் மத்தியில் நிலவியது. இதனால் தம் பிள்ளைகள் கூடுதலான ஆட்டங்களைச் செய்வதனால் உடல் பாகங்களில் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கமும் அவர்கள் மனதில் திடங்கொண்டு இருந்தமையும் இவ்வாற்றுகைகளுக்கு பங்கம் விளைவிப்பதாகவே அமைந்தன.

மேலும் கூத்தின் மரபு ஆண்கள் பங்கேற்பது பெண்கள் பங்கேற்பதில்லை. இவ்வாறான கருத்தியல்களுக்குள் இருந்து வந்தவர்களாகையால் கூத்தில்ப் பெண்கள் ஆடுவதா என்ற கீழான பார்வையும் குறுகிய நோக்கினையும் கொண்டிருந்தமையினால் இவ்வாற்றுகை அம்சங்களில் இக்கருத்தியல்கள் பற்றிப்பிடித்துக் கொண்டமையால் தொடர்ந்து செயற்பட முடியாமல்ப் போனது. நேர முகாமைத்துவம் இன்மை காரணமாக குடும்பத்தினர் மாணவர்களை கடிந்து கொண்டனர். இருட்டில் வீடுகளுக்குத் திரும்புவதும் நள்ளிரவில் குடும்பத்தவர்களை நித்திரையில் இருந்து எழுப்பி தொந்தரவு செய்வதும் நள்ளிரவில் பிரதான வீதிகளுக்கு வரச்சொல்லி அவர்களைக் காக்க வைப்பதும் வெறுப்புணர்வினை ஏற்படுத்தி விட்டது. அத்தோடு ஆற்றுகைக்காக தூர இடங்களுக்குச் சென்று தங்குவதுமான செயற்பாடுகள் உடன்பாடின்மையாகவே அவர்களுக்கு இருந்தது.

கூத்தாற்றுகைக்காக போடும் ஒப்பனைகளின் போது ஏற்படும் விளைவுகள் பற்றி ஆழமாக சிந்தித்தார்கள். தோல்ச் சுகாதாரம் பற்றி அதீத அக்கறைக் கொண்டும் நோய்களில் இருந்து பாதுகாக்க எண்ணுவதும் மணல்களுக்குள் கால்களை இழுத்து உரசி ஆடும் போது வெளியாகும் தூசு துணிக்கைகள் மூலம் ஏற்படும் தடுமல், இருமல், தும்மல், ஆஸ்த்துமா போன்ற நோய்களுக்கு உட்படுத்தப்படலாம் என்ற பீதியும் காணப்பட்டது. இவ்வாறான தாக்கத்திற்கு உட்ப்பட்டு மாணவர்கள் அவதிப்பட்ட சந்தர்ப்பங்கள் பயிற்சிக் காலங்களிலும் ஆற்றுகைக் காலங்களிலும் இடம்பெற்றன. எனவே இவற்றுக்கான முன்னேற்பாடாக ஆற்றுகைச் செயற்பாட்டில் கைவைத்தார்கள், கருவியாக்கிக் கொண்டார்கள். தற்போதைய கல்விச் சூழலில் புதிய பாடத்திட்டம் பற்றிய விளக்கத் தெளிவின்மை இழையோடியிருந்தது. இதனால் செயல் முறைக் கல்வி, சமூக மையச் செயற்பாடு போன்ற தற்போதைய கற்றல் கற்பித்தல் முறைகள் பற்றி பூரண விளக்கம்  இல்லாமையின் காரணமாக கூத்தாற்றுகைப் பங்குப் பற்றலின் தார்ப்பரியம் விளங்காமை வருந்தத்தக்கது.

இவ்வாறான விளக்கமின்மை தொடர்ச்சியான செயற்பாட்டு முன்னெடுப்பிற்கு இடையூறாக அமைந்தது. அத்தோடு கூத்தாற்றுகை பங்கு பற்றல், பல்வேறு களரியேற்றம், தூர இட ஆற்றுகை போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டு ‘ நடைமுறைச் சாத்தியம் இன்மை’ என்ற கருத்தினை எடுத்துக் கொண்டு குறுகிய வட்டத்திற்;குள் சிந்தித்தார்கள். இதனாலும் ஆற்றுகைகளைத் தொடர முடியாமல் போனது. இவ்வாறான குடும்ப, சமூக ரீதியான பிரச்சினைகளால் பெண் மாணவர்கள் ஆற்றுகையில் இடம்பெறாமல் போனமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஏனைய கூத்தர்களும் பி;ன்வாங்கிக் கொண்டார்கள்.

மாணவர்களைப் பொறுத்த மட்டில் மேற்குறித்த பிரச்சினைகளை எதிர்நோக்கி இருந்த போதும் விரிவுரையாளர்கள் தமது குடும்பத்தில் குடும்பத் தலைவர்களாக இருப்பதால் முழுப்பொறுப்பும் அவர்களையே சார்ந்தது. இதனால் அவர்களே பொறுப்பினைச் சுமக்கும் நிலையில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினார்கள். விரிவுரைகள், அலுவலக வேலைகள், தனிப்பட்ட சுயவேலைகள் போன்றவற்றிலும் கூத்தாற்றுகைத் தொடர்பான வேலைகளிலும் குடும்பம் என்ற ரீதியில் பல்தரப்பட்ட வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தமை சவாலாகவே காணப்பட்டன.

எனவே மேற்குறித்த பல விடயங்கள் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்குச் சவாலாக அமைந்ததோடு பிரச்சினையாகவும் இடம்பிடித்துக் கொண்டது.  இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருந்தபோதும் நாளடைவில் இவற்றின் தாக்கம் அதிகரித்தமையால் மாணவர்கள் மத்தியில் குடும்பங்களை மீறியும், பகைத்துக் கொண்டும் பிற்பட்ட ஆற்றுகைகளை தொடர முடியாமல் போனமை வருந்தத்தக்க விடயமே.

                      

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *