காக்கா முட்டை

பவநீதா லோகநாதன் (இலங்கை)

காக்கா முட்டை படத்திற்கு தேசிய விருது கிடைத்த போது கூட எனக்குள் எந்த ஆர்வத்தையும் நான் உணரவில்லை படம் வெளியாகி சிலநாள் கழித்து பார்க்க நேர்ந்தது . ஏற்கனவே கதை தெரியும் என்பதால் ஏனோ தானோ என்ற உணர்வு மட்டுமே .

ஆனால் பார்க்க பார்க்க மகிழ்ச்சி எனக்குள் மெல்லிய சாரல் போல பரவ ஆரம்பித்தது .எதை எல்லாம் கொண்டாடலாம் என்ற வரையறைக்குள் வறுமை என்பது இல்லை ஆனால் படம் ஏழ்மையை கொண்டாடியதை பார்த்த பின்னர் எப்படி இதை சராசரி தமிழ் சினிமாவாக கடந்து போக முடியும் ?

 

காக்கா முட்டை –நான் உணர்ந்ததை கொஞ்சம் பகிர்கிறேன் ;  –

 காக்கா முட்டை

கதை நாயகர்களின் பெயர் இதுதான் 2 சிறுவர்கள் மூத்தவன் பெரிய காக்கா முட்டை சிறியவன் சின்ன காக்கா முட்டை புறநகர் பகுதியான சேரியில் ஒரு சிறு குடும்பம் அந்த குடும்பத்தில் 2 சிறுவர்கள் . அப்பா சிறையில், அம்மாவும் அப்பத்தாவும் ஒரு குட்டி நாயும் சிறிய அறையில் குடும்பமாக வாழ்கிறார்கள் . பீட்சா கடை திறக்கப்படுகிறது.சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைபடுகிறார்கள் . தினமும் 1௦ ருபாய் சம்பாதிக்கும் சிறுவர்கள் எப்படி 300 ரூபாய் பீட்சாவை சாப்பிட்டார்கள் ? இதுதான் படத்தின் கதை சிறுவர்கள் இருவரும் காக்கா முட்டை குடித்து வளர்கிறார்கள் .இதனால் அனைவரும் கேலி செய்கிறார்கள். தாய்திட்டும் போது,அப்பத்தா ”காக்காவும் பறவை தானே நம்ம கூடவே இருக்குது.முட்டை விக்குற வெலைல அதை வாங்க முடியுமா ?” என்று பேரன்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் .காக்கைகள் கூடு கட்டி வாழும் மரமும் மரம் சார்ந்த இடமும் திடிரென்று ஒருநாள் பூட்டப்படுகிறது. வியாபார ஸ்தலமாக மாறுவதால் மரம் அறுக்கப்பட்டு அகற்றப்பட்டு இறுதியில் மிகப்பெரிய பீட்சா கடை அங்கு திறக்கபடுகிறது .

இந்தக் காட்சிகளை வெறும்காட்சிகளாக பார்க்கமுடியாது . இதுதான் நிகழ்கால வரலாறு. அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவு கூட ஏழைகளுக்கு எட்டாது என்பதோடு அந்த காக்கைகளாக உருவகிக்கப்படுவது குப்பத்து மனிதர்களைத்தான் .

அழகழகான பறவைகளுக்கு மத்தியில்தான் காக்கைகளும் வாழ்கின்றன காக்கைகளை யாரும் விரும்புவதில்லை செல்லப்பறவையாக வளர்ப்பதுமில்லை புறநகர் குதி மக்கள் நமக்கருகில் இருந்தாலும் அவர்களை நாம் அண்டுவதில்லை

காக்கையும் ஒரு பறவை தானே என்று தோன்றாத போது அவர்களும் நம் போல மனிதர்கள்தானே என்று தோன்றுவதில்லை . காக்கைகளுக்கான வாழிடம் தந்த மரம் அழிக்கப்படும்காட்சி முக்கியமானது. உலகம் முழுவதும் பெருமுதலாளிகள் எளிய மனிதர்களின் வாழ்வை எப்படி கணப்பொழுதில் மாற்றியமைக்கின்றார்கள் என்பதற்கு இதுவே காட்சி விளக்கம். தங்களுடையதாக எண்ணி மகிழ்ச்சியாக வாழ்வைக்கழிக்கும் இடங்களை பன்னாட்டு வியாபாரத்துக்காக அரசாங்கமும் பெருமுதலாளிகளும் கைப்பற்றுகையில் சுலபமாக அகற்றபடுகிறது அனைத்தும் . (பழங்குடியினரை அகற்ற முற்படும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் கூட இக்காட்சியோடு ஒத்துப்போகும் ). கவனிப்பாரற்ற காக்கைகள் போல அந்த புறநகர்மக்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் பறிக்கப்படும் அவர்களின் வாழ்விடங்கள் , மாற்றி அமைக்கப்படும் வாழ்க்கை என்பதை பிரதிநிதித்துவப்படுத்தும் 2 சிறுவர்களுக்கும் காக்கா முட்டை என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் படத்தை குறியீடு அரசியல் என்றெல்லாம் நாம் அணுகுகிறோம்

சாதாரண மக்கள் எப்படி அணுகுகிறார்கள் என்றால் ஆச்சர்யமும் குற்றஉணர்சியுமாக அணுகுகிறார்கள் . சாதாரண, கீழ்நடுத்தர,நடுத்தரமக்களின் பிரச்சினை அத்தியாவசிய பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவதுதான் .

போதுமான பணமின்றி தேவைகள் வரிசைகட்டி நிற்க மனஅழுத்தத்துக்கு உட்பட்டு இயல்பு வாழ்வின் சந்தோஷங்களை புறக்கணிகின்றார்கள் .காக்கா முட்டை உலகம், நமக்கும் கீழ் தினமும் 1௦ ருபாய் சம்பாதிக்க போராடும் குடும்பங்கள் இருக்கின்றன என்ற மனநிலையும் அவர்களின் மகிழ்ச்சியினைப் பார்க்கையில் ஏழ்மையைக் எப்படி கொண்டாடி வாழ்கிறார்கள் என்ற ஆச்சர்யமும் ஏற்படுத்துகிறது .சின்ன காக்கமுட்டையின் சிரிப்பு மனதை விட்டு அகலாததன் காரணம் நான் எப்போது கடைசியாக சிரித்தேன் என்பது ஞாபகம் வர மறுப்பதுதான்  தினமும் தெருவில் இதே போல சிறுவர்களை காண்கிறோம், கடந்து போகிறோம் அவர்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லை .

இந்த குற்ற உணர்ச்சி கூட படத்தை ஏற்றுகொள்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது .

 

சிறுவர்களின் அக உலக மகிழ்வு மிக நேர்த்தியாக செயற்கை தன்மை இல்லாமல் படைக்கப்பட்டிருப்பது எமக்கான அடுத்த ஆச்சர்யம். ஏழைகள் நல்ல உடை போட்டாலும் ஏழை தான் என்று உணர்த்தபடும் கட்டம் இன்றைய நிலையை ஒரே காட்சியில் வெளிபடுத்தியுள்ளார்கள். இந்த ஏழை சிறுவர்களோடு பேசும் அந்த பணக்கார பையன் இருவருக்குமான தடுப்பு வேலி , எச்சில் பீட்சாவை சாப்பிட மறுக்கும் கோபம் , பெற்றோரை மீறி அவர்கள் வாங்கித்தந்த உடையை விற்கும் சிறுவர்கள் , காக்கா முட்டை சிறுவர்களை கேலி பேசும் ஏனைய சிறுவர்கள் … அந்த அப்பத்தா ,எப்போதும் மெல்லிய சோகம் வழியும் அம்மா ஐஸ்வர்யா , அன்புகாட்டும் பழரசம் இன்னும் நிறைய மனிதர்கள் ’’வாழ்ந்திருக்கின்றார்கள். ‘’

 

கலைப்படைப்போடு எடுக்கப்படும் படங்கள் கமர்சியல் வெற்றி பெறுவது என்பது முக்கியம் அதுதான் சினிமாவின் வெற்றியும் கூட . காக்கமுட்டை அதனை சாத்தித்து விட்டிருக்கிறது . சிறந்த திரைக்கதைகளுக்கு மட்டுமே கிடைக்கும் வெற்றி இது . படத்தின் திரைக்கதையும் அதை திரையில் காட்சிப்படுத்தியவிதமும் சினிமாவில் கற்றுக்கொள்ள நினைக்கும் நபர்களுக்கு உதவும் .

கதாநாயகர்களின் நிஜமுகம் என்ன ?

எப்போதும் நடிகர்கள் நடிகர்களாகவே சினிமாவில் தோன்றினாலும் அவர்கள் எல்லோருமே நல்லவர்களாகவே வருவார்கள் .

படத்தில் சிம்பு வருகிறார் அவராகவே வருகிறார் . -ராகுகாலம் வரபோகிறது என்றதும் தோன்றுகிறார் .

ஏன் சிம்பு ரசசாதம் சாப்பிட மாட்டனா என்று கேள்வி கேட்கிறார்கள்

இறுதியில் சிம்புவிடம் சிறுவர்கள் பற்றி கேட்க

அது பற்றி தெரியாது நான் அதற்கு பொறுப்பல்ல என்கிறார் . -திரையில் மக்களுக்காக போராடும் கதாநயகனின் நிஜமான சமுக அக்கறை ,

அவனது மக்கள் பற்றிய அடையாளமும் உடைந்து விழும் -சிறிய அழுத்தமான காட்சி அது .

சிம்பு எப்படி நடிக்க ஒப்புகொண்டார் ?தனுஷே நடிக்காதபோது சிம்பு எப்படி நடிக்க ஒப்புகொண்டார் . சிம்பு தன் கதாபாத்திரத்தினை தெரிந்தே தான் நடித்தாரா என்பது ஆச்சர்யமாக இருக்கிறது .:)

 

பள்ளிக்கூடம் அனுப்ப முடியாத வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லாத சூழ்நிலை ஆனால் வீட்டில் இலவசமாக 2  TV  .மக்களை அவர்களின் முன்னேற்றத்தை புரிந்து கொள்ளாத அவர்களின் சுய முன்னேற்றத்தை விரும்பாத அரசாங்கத்தின் இன்றைய நிலையை எடுத்துக்காட்டும் கட்டம் . மீடியாக்கள் எப்போதும் பிரச்சினைகளை மட்டுமே தேடி அலையும்.

பிரச்சினைகளை பற்றி பேசி பணம் பார்க்குமே ஒழிய என்றுமே தீர்வுகளை கொடுக்காது. மக்கள் பார்வைக்கு எடுத்து செல்வது மட்டுமே எமது வேலை என்று கூறும் மீடியாக்களின் முகம் படத்தின் இரண்டாம் பகுதியில் வருகிறது .சாதாரண அரசியல் வாதிகள் அவர்களின் கைக் கூலிகள் போலியான சமுக போராளிகள் என்று எல்லோரையும் படத்தில் காட்டுகிறார்கள் . அவரவர் விருப்பத்திற்கு புரிதல்களுக்கு ஏற்ப கட்டமைத்துகொள்ளலாம் .

 

பணம் என்பது வாழ்வின் மையப்புள்ளி என்று மாறிய பிறகு பணத்துக்கான தேவையும் தேடலும் அதிகரித்துள்ளது . பணக்காரர்களுக்குதான் எப்போதும் அதிகமாக பணத்தை பெருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஏழைகளுக்கு,நடுத்தரவர்க்க மனிதர்களுக்கு தமது தேவைகள் நிறைவேறியது போக மேலதிகமாக சிறுதொகைப்பணம் இருந்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் . கணவனை மீட்க மனைவி பணம் தேடுகிறாள் சிறுவர்கள் பீட்சாவிற்கு பணம் சேர்கிறார்கள்

இவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் எப்படி பணம் பறிக்க ஆசைப்படுகிறார்கள் என்பதன் மூலம் சுயநலமான மனிதர்களின் முகங்களை எமக்கு காட்டுகிறார்கள் . இறுதியில் சிறுவர்களை பீட்சா சாப்பிட வைக்கும் பாபு ஆண்டனியின் சாமர்த்தியம்தான் இன்றைய வியாபார உலகம் இன்று கைகாளுவதுஉனக்கு எப்போதும் பீட்சா இலவசம் என்கிறார், அரசாங்கமும் இதையே தான் காலம் காலமாக செய்கிறது .மக்களை துன்புறுத்தி வேட்டையாடிவிட்டு ஏதாவது ஒரு இலவச நாடகத்தை அரங்கேற்றி மறைத்து விடுகிறது . ‘இலவசம்‘ என்ற ஒற்றை வார்த்தையில் எல்லாமே அடங்கிப்போகிறது . பன்னாட்டு வியாபார நிறுவனங்களும் இதைதான் செய்கின்றன. பெரிய தொழிலதிபர்கள் ஏழைகளுக்கு சிறு உதவிகள் வழங்குவதன் மூலம் தங்களது கறுப்பு பணத்தை மறைத்துகொள்கிறார்கள். ஏன் இன்று உலகின் மிகபெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய திரைப்படங்களுக்கு பங்களிப்பு செய்வதன் பின்னணியில் கூட மிகபெரிய தந்திரம் இருக்கிறது. இந்த படம் கூட அப்படி ஒரு நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட படைப்புதான் .இது பற்றி பேசினால் அது மற்றொரு கட்டுரையாக அது நீண்டுவிடும் யி

 உணவு அரசியல் ,வரக்க வேறுபாடு , பெரு முதலாளிகள், பன்னாட்டு வர்த்தகம் எதிர்கால இந்தியா ,சேரிகளின் வாழ்வியல் இப்படி படம் பல விடயங்களை பேசுகிறது . ஒரு சில காட்சிகளை தவிர மற்ற அனைத்தும் இயல்பாக திரைக்கதையில் அமைந்துவிடுகிறது . நெருடல் இல்லா உழைப்பும் திறமையும் நிச்சயம் கொண்டாடப்படவேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *