மணலூர் மணியம்மாள் ஆண் சமூகத்தை திகைக்க வைத்த பெண்போராளி

சசிகலா (நன்றி -http://puthagampesuthu.com/)

 

pathaiyil padintha adikalந்தவொரு சமுதாயப் போராட்டத்திலும் சரிபாதியானப் பெண்கள் பங்கு பெறாவிடில், அப்போராட்டம் வெற்றியடையாது என்ற கூற்று. தேசியவ¤டுதலைப் போராட்டத்திற்கும் உகந்ததே. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது பல வீரப் பெண்மணிகளின் தியாகங்களும் போராட்டங்களுமே. அந்தவொரு வரிசையில் சரித்திரத்தில் ஆழமாகப் பதியப்படாத மணலூர் மணியம்மை என்ற வீராங்கனையின் சுதந்திரப் பேராட்ட வரலாற்றைப் புதினமாக்கி உலகிற்கு அறியச் செய்திருக்கிறார் அண்மையில் மறைந்த ராஜம் கிருஷ்ணன். பெண் சாதனையாளர்களை வரலாற்றில் பதிவு செய்து அனைவருக்கும் அறியச் செய்யும் பணியை பெரும்பாலும் பெண்களே செய்ய வேண்டியுள்ளது என்பதையும் சற்றுக் கவலையோடு அணுக வேண்டியுள்ளது. இத்தகையச் சூழலில் ராஜம் கிருஷ்ணன் பெருமுயற்சிகள் மேற்கொண்டு, கள ஆய்வுகள் செய்து மணலூர் மணியம்மையைப் பற்றி பல விவரங்களைத் தொகுத்து ஒரு விறுவிறுப்பான நாவலை நமக்கு வழங்கியிருக்கிறார். மணியம்மையின் வீரதீரப் போராட்டங்களின்   ஒளி  சற்றும் மங்கிவிடாமல் அதேவேளையில் நாவலை சுவைபடவும், பல திருப்புமுனைகளுடனும், புத்தகத்தைக் கீழே வைக்க மனமின்றி, படித்து முடிக்கத் தூண்டும் வகையில் எழுதுவது ராஜம் கிருஷ்ணனுக்கே உரித்தான எழுத்துத் திறன்.

இந்நாவலின் கதைக்களம் கீழத்தஞ்சையில் உள்ள மணலூர். 1980களில் உழவர் பெருமக்களின் நிலையை நேரில் கண்டு, விவரங்கள் சேகரிக்கச் சென்றிருந்த எழுத்தாளர், மணலூர் மணியம்மாள்  என்று அறியப் பெண்மணியைப் பற்றி அவரோடு வாழ்ந்திருந்த மக்கள் மூலம் கேள்விப்பட்டு, வியந்து, அப்பெண்மணியின் அளப்பரிய தியாகத்தை உலகறியச் செய்ய வேண்டியது தனது கடமை என்று உணர்ந்திருக்கிறார். அவர்தம் முன்னுரையில்  ஒரு முட்பாதையில் குடும்ப உறவுகள், சமுதாய உறவுகள் எல்லாம் எதிர்ப்புக்களாக மாறிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் (ஆண்) ஆதிக்கங்களையும் எதிர்த்து ஒரு பெண் தேசியவாதியாக, சமுதாயவாதியாக நின்று தாழ்த்தப்பட்ட பண்ணையடிமைகளுக்கும், உழைப்பாளருக்கும் நிதி கோரிப் போராடி இறுதியில் ஒரு தியாகியாகவே தன் இன்னுயிரையும் ஈந்தாள்ÕÕ என்று குறிப்பிட்டிருக்கிறார். 1930-40 காலக்கட்டங்களில் குறிப்பாகத் திருமணமாகி கணவனை இழந்த பெண்கள் தங்கள் சுயத்தைத் தொலைத்து பெண்ணடிமைத்தளைகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த நிலையில் இன்றைய நவீனக் காலக் கட்டத்தில் பெரும்பாலான பெண்கள் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கமுடியாத மணலூர் மணியம்மாளின் புரட்சிகர செயல்பாடுகளுக்கு, வரலாற்று முக்கியத்துவம் ஏன் தரப்படவில்லை என்ற ஆதங்கம் இந்நாவலை படித்துக் கொண்டிருக்கும்போதே இயல்பாக  எழுகிறது.

pathaiyil padintha adikal

சனாதான சமயக் கொள்கைகளில் ஊறிப் போன பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் மணியம்மாள். அவர் விருப்பத்திற்கிடமின்றி இளம் வயதிலேயே இரண்டாந்தாரமாக ஒரு பணக்காரனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டு இளம் வயதிலேயே விதவையுமானவர். விதவை என்றொரு அவல வாழ்க்கை மேற்கொள்ள அவருக்கு மனம் வெதும்புகிறது. அவ்வாழ்க்கையை உதறித்தள்ள மகாத்மா காந்தியின் பிரவேசம் ஒரு வலுவான காரணமாகிறது. சுதந்திரப்  போராட்டங்கள் தீவிரமடைந்துக் கொண்டிருந்த அச்சமயத்தில் ஆண்களும், பெண்களும் காங்கிரஸில் இணைவது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்ததால், மணியம்மாளும் காங்கிரஸில் இணைய எத்தடையும்  இருக்கவில்லை.போராட்டங்களிலும், கூட்டங்களிலும் கலந்து கொள்ள வெளியே வரும் சந்தர்ப்பங்களில், மணியம்மாள் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான பண்ணையில் பணிபுரிந்த விவசாயிகள் குறிப்பாகப் பெண்கள்  ‘‘நடுவாள்’’ என்கிற ஏஜெண்டினால் சுரண்டப்படுவதையும், அவமானப்படுத்துவதையும் கண்டு பொங்கியெழுந்து, அவர்களுக்கு சுயமரியாதையுடன்  கூடிய சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க  அவரே பண்ணை மேற்பார்வையை எடுத்துக் கொள்கிறார்.
இதனால் அவருக்குப் பண்ணையார்களிடமிருந்தும், ஏஜெண்டுகளிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்புகிறது. தன்னை விதவை என்று குத்திக்காட்டி சின்னப் பண்ணை என்பவன் மணியம்மாளை ‘‘போடிமொட்ட’’ என்று சிறுமைப்படுத்தியப்பொழுது, விதவைக் கோலத்தைக் களைய முடிவு செய்கிறார். ஆண்களைப் போலவே வேட்டியையும், சட்டையையும், துண்டையும் அணிந்ததோடு மட்டுமல்லாமல், வ¤தவையின் அடையாளமான மழித்தத் தலையில் முடி வளர்த்து கிராப் வைத்து அனைவரையும் வியப்பிலாழ்த்துகிறார். இவருடைய இத்தோற்றமும் செயல்பாடுகளும் இவரை தன் குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்துகின்றன. பெண்ணடிமைத் தனத்தில் ஊறிப்போன ஒரு சமுதாயத்திலிருந்து கொண்டே, அடிமைத்தனத்தை சாகும் வகையில் மணியம்மாள் எடுத்த  இத்துணிச்சலான  முடிவுதான்  ராஜம் கிருஷ்ணன் இந்த நாவலை எழுதுவதற்கு  முதற்காரணமாயிருந்திருக்கிறது.

கள்பானை உடைப்புப் போராட்டம், தலித் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் பணி, அவர்களுக்கு சுகாதாரத்தை வலியுறுத்துவது என்று இந்நாவல் முழுவதும் மணியம்மையின் பணிகள் விரிந்து கொண்டே போகின்றன.  இதனால் அவருக்குக் கொலை மிரட்டல்களும், பல எதிர்ப்புக் குரல்களும் வருகின்றன. தன் சமுதாய சேவையைத் தங்கு தடையின்றித் தொடர்ந்திட தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து, சிலம்பக் கலையையும் கற்றுத் தேர்ந்தவராகிறார். மணியம்மையின் சிலம்ப சுழற்சியைப் பற்றி ராஜம் கிருஷ்ணன் விவரித்து எழுதும்போது பெருமித உணர்வு அவரது எழுத்துகளில் மிளிர்வதை கவனிக்காமல் இருக்க முடியாது.
சுதந்திரப் போராட்டத்தில் பண்ணையடிமைகளை ஈடுபடுத்தி, கல்வி கொடுத்து அவர்களது நியாயமான உரிமைகளுக்குக் குரல் கொடுத்து அவர்கள் அடிமை வாழ்விலிருந்து விடுபட மணியம்மாள் பெரு முயற்சிகள் தொடர்ந்து எடுப்பதினால், அவர் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டன. தன்னுடைய குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பல எதிர்ப்புகளுக்கிடையில் தன்னந்தனியாகவே காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து வழக்குகளிடமிருந்து மீண்டது மட்டுமல்லாமல் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு சாதகமாகத் தீர்ப்புகள் வரவும் காரணமாயிருந்திருக்கிறார். சுதந்திரத்திற்குப் பிறகு  காங்கிரஸ் கட்சியின் மூலமாக இன்னும் சிறந்த முறையில்  மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்தவருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. கட்சியில் ஒரு பெண்ணாகிய தனக்கு பதவி வழங்க விருப்பமின்றித் தன்னை கண்ணியக்குறைவாக அக்கட்சியில் சில ஆண்கள் நடத்துவதைக் கண்டும், பணம் படைத்தவர்களுக்கே  காங்கிரஸ் கட்சி பக்கபலமாக இருப்பதைக் கண்டும் சினமுற்று கட்சியை விட்டு வெளியேறுகிறார். காங்கிரஸ்… இது ஆதிக்கக் கட்சி பெண் விரோத, மக்கள் விரோதக் கட்சி, இக்கட்சியை ஒழிப்பேன் என்ற சூளுரை எடுக்க வேண்டுமென்¢ற ஆத்திரத்தில் மணியம்மாள் இருந்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

சுதந்திரத்திற்குப் பிறகும் ஏழைகள் நிலையில் எந்த மாற்றமுமில்லை என்று மணியம்மாள் உணர்ந்ததனாலேயே தொழிலாளர்கள் நலம் காக்கும் செங்கொடி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார். மக்களை அணி திரட்டி பல  அமைப்புக் கூட்டங்கள் நடத்தி, தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைக்கிறார். குழந்தைகள் கல்வியை மேம்படுத்துவது, செறிவான  போராட்டங்கள் நடத்த புத்தக வாசிப்பின்  வலிமையை மக்களிடம் எடுத்துச் சொல்வது, சங்கம் அமைப்பது, பெண் தொழிலாளர்களை முதன் முதலாக ஊர்வலத்தில் பங்கெடுக்க வைப்பது என மணியம்மாள் அயராது உழைக்கின்றார்.

கட்சியின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்த அரசு, கட்சியின் முன்னணி ஊழியர்களைக் கைது செய்து கொண்டிருக்கும் சமயத்தில், கட்சித் தொண்டர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க பலமுறை தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டிருந்தார். அனைத்தையும் மீறி வழக்குப் பதியப்பட்டு சிறை செல்லவும் நேரிடுகிறது. ஏழெட்டு ஆண்டுகள் சிறை வாசத்தின் பொழுதுதான் மணியம்மாளுக்கு சிறையிலிருந்த ஷாஜாதியுடனும், ஜானகியுடனும் நட்பு மேலும் இறுகுகிறது. மணியம்மாள் நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது அவருக்கு சகலவிதங்களிலும் உதவியாயிருந்தவர் பின்னர் தோன்றிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சார்ந்த ருக்மணி அவர்கள்தான்.

செங்கொடி இயக்கத்திலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாக மணியம்மாள் வருத்தமுற்றதாக ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்கிறார். ஆனாலும் மக்கள் பணியைத் தொடர்ந்து மணியம்மை செய்து வந்ததாக நாவலில் குறிப்பிடப்படுகிறது. மணியம்மாளின் துயரமான முடிவில் உள்ள மர்மம் அவிழ்க்கப்படாமலேயே  நாவல் முடிவுறுகிறது. இப்புதினத்தைப் படித்து முடித்த பொழுது கதாபாத்திரங்கள் நம் கண்முன்னே நிற்பது போன்ற உணர்வை எழுத்தில் கொண்டு வரும் திறன் பெற்ற எழுத்தாளரை இழந்துவிட்டோம் என்ற வருத்தம் மேலோங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *