நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் பாலியல் சித்திரவதைகள்-

image

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் பலர் தாங்கள் துன்புறுத்தலுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உள்ளாகியதாக, அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. டேவிட் கோர்லட் என்ற செய்தியாளர் கடந்த மாதம் உல்லாசப்பயணி என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பலரை சந்தித்துள்ளார். நாடு திரும்பிய அந்த ஊடகவியலாளர் தனது அனுபவத்தை ஊடகம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகம் கொண்டே எம்மீது அளுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தாங்கள் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் இலங்கையில் நரகத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இலங்கை பாதுகாப்பு படையினராலேயே இவ்வாறான துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தாங்கள் கடத்தப்பட்டு தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்குள்ளாகின்றனர் என்றும், லஞ்சம் வழங்கினால் மாத்திரமே தங்களை விடுவிக்கின்றனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட ஊடகவியலாளர், தான் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே இலங்கை சென்று அவர்களைச் சந்தித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். தான் சந்தித்த சிலர் மிக மோசமான சித்திரவதைகள் காரணமாக முற்றாக உடைந்து போயுள்ளனர் என்றும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதற்தடவை இலங்கையிலிருந்து தப்பியோட முயன்ற வேளை கைது செய்யப்பட்டு தான் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டார் என்றும் தான் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற வேளை அங்கிருந்து திருப்பியனுப்பட்டுள்ளார் என்றும் இலங்கை பெண்ணொருவர் குறிப்பிட்டார் என அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் மிகுந்த அச்சத்திலிருந்தார், அதனால் நாட்டை விட்டுவெளியேற முயன்றார், அவர் தற்போது பாதுகாப்பு கருதி வேறு நாட்டிலிருக்கிறார் எனவும் அந்த உடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை வானில் கடத்தப்பட்டு லஞ்சம் வழங்கப்படும் வரை சித்திரவதை அனுபவித்தவர்களின் கதைகளுமுள்ளன. மூன்று கிழமை தடுத்துவைக்கப்பட்டு பலரால் பாலியல் துன்புறுத்தப்பட்ட பெண் ஒருவரையும் தான் சந்தித்தார் என்றும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.

 Thanks – http://sankamam.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *