ராஜினி திரணகம. 23.2.1954 – 21.9.1989

என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப் படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும். (15.09.1989ம் திகதி ராஜினி தன் நண்பர் ஒருவருக்கு இறுதியாக எழுதிய கடிதத்திலிருந்து)
ராஜினி திரணகம. 23.2.1954 – 21.9.1989

http://udaruold.blogdrive.com/archive/69.html(September 25, 2005)

 ராஜினி திரணகம. 23.2..1954 இல் யாழ் நடுத்தர வர்க்கக் குடும்பமொன்றில் பிறந்தவர். 1973ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி பயின்றார். இக்காலப் பகுதியில் மனித உரிமை மற்றும் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். கெலனிய பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளராக இருந்த மனித உரிமையாளரான தயாபால திரணகமவை பின்னர் மணந்துகொண்டார். இவருக்கு இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். புத்திஜீவிகள் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்க, இவர் யாழ்ப்பாணம் திரும்பினார். அப்போது யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் ஒரு விரிவுரையாளராக தனது பணியைத் தொடங்கினார். மனித உரிமைகள் சம்பந்தமாகவும் தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியல் சம்பந்தமான அரசியலில் தீவிர விமர்சனப் பார்வையுடன் செயற்பட்டார். தனது நேரடிச் சந்திப்புகள், ஆய்வுகள் எல்லாவற்றையும் தொகுத்து Broken palmyrah என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினார். விடுதலைப் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களின் மீதான விமர்சனங்கள் மட்டுமன்றி இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்களையும் அவர்களால் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜகங்களையும் ராஜினி விமர்சித்திருந்தார்.

ஆனால் 21.9.1989 அன்று பல்கலைக் கழகத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்த வேளை வீதியில் வைத்து இரு துப்பாக்கி இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். உரிமைகோரப்படாத இந்தக் கொலையைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்பது விரைவிலேயே வெளித்தெரியவந்தது.


பெண்களும் ஆயுதங்களும் : (முறிந்த பனையிலிருந்து)

எங்களின் சமூக அமைப்பும் பெண்களின் சிருஷ்டிபூர்வமான சுயமான கருத்து வெளிப்பாடுகளுக்கிருந்த கட்டுப்பாடுகளும் சீதனமுறையின் கொடுமைகளும் ஆரம்பகட்டத்தில் பெண்களைப் போராட்ட இயக்கத்திற்குள் சேரத்தூண்டியது. இதனைவிடக் கடந்த பத்தாண்டு காலப் போராட்டங்களால் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை, அரச பயங்கரவாதத்திற்குப் பெருந்தொகை ஆண்கள் பலியானமை, அகதிகளாகவும் புலம்பெயர்பவர்களாகவும் ஆண்கள் உலகெங்கும் சிதறிப் பரவியமை போன்றவையும் பெண்கள் ஆயுதமேந்திப் போராட முன்வந்தமைக்குத் துணை நின்ற முக்கிய காரணிகளில் சிலவாகும். ஆனால் இளம் பெண்களை போராட்டங்களை நோக்கிக் கவர்ந்து இழுத்ததது. விடுதலை நோக்கிய சூழலும் வாசிக்கக் கிடைத்த போராட்ட இலக்கியங்களும் உலகளாவிய பெண்களின் போராட்ட அனுபவங்களும் போராட்டங்களிலிருந்து தாங்கள் தள்ளிவைக்கப் பட்டிருக்கிறோம் என்ற கிளர்ச்சியுணர்வுமே என்று சொல்வது மிகைப்படக் கூறியதாகும்.

1980 களின் நடுப்பகுதியிலிருந்து இயக்கங்களுக்கு பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். புளொட், ஈபிஆர்எல்எப் போன்ற இயக்கங்களில் குறிப்பிடத்தக்க அளவிலும் விடுதலைப் புலிகளில் குறைவான அளவிலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டனர். பிறகே பெண் போராளிகளின் வளர்ச்சி புலிகள் அமைப்பில் துரிதமாக அதிகரித்தது. விடுதலைப்புலிகளின் பெண் பிரிவானது “சுதந்திரப் பறவைகள்” என்று அழைக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் வடமராட்சித் தாக்குதலும் அதைத் தொடர்ந்து பெருந்தொகையில் ஆண்கள் கைதுசெய்யப்பட்டதுமே பெண்களின் சேர்ப்பிற்குத் தூண்டுகோலாக அமைந்தது. விடுதலைப் புலிகளும் பெண்களைச் சேர்ப்பதையே இப்போது தமது இலக்காக்கிக் கொண்டிருந்தனர். போராட்டத்தில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆர்வத்துடன் முன்வந்து கொண்டிருந்த இளம் பெண்களை அவர்கள் துரித கதியில் சேர்த்துக் கொண்டனர்.

இவை எல்லாம் சேர்ந்து மாறுதல்களைப் பிரதிபலித்தனவாயினும் சமூகத்தில் இவற்றின் தாக்கம் அத்துணை திட்டவட்டமானதாக இருக்கவில்லை. மணியம் தோட்டத்தில் “புளொட்” அமைப்பைச் சேர்ந்த சில பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற கதைகள் சமூகத்தின் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அதற்காகப் பெண்களைத்தான் குற்றம் சாட்டியது.

மற்ற இயக்கங்களைப் போலன்றி ஈபிஆர்எல்எப் ஐச் சேர்ந்த பெண்கள் தமது கருத்துக்களை வலியுறுத்துவதில் உறுதியாகவே இருந்துள்ளனர். நெருக்கடியான கட்டங்களில் தெளிவான நேர்மையான அரசியல் நிலைப்பாட்டினையும் இப் பெண்கள் முன்வைத்திருந்தனர். உதாரணமாக ரெலோ உறுப்பினர்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தபோது, ஈபிஆர்எல்எப் ஈரோஸ், ரெலோ, எல்ரிரிஈ ஆகிய இயக்கங்களின் ஐக்கிய முன்னணியான ஈஎன்எல்எப் இல் ஈபிஆர்எல்எப் இயக்கம் மட்டுமே இதனை எதிர்த்து கண்டனங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டது. இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை இவ் இயக்கத்தின் பெண் உறுப்பினர்களே முன்னின்று நடத்தினர். இந்தச் செயலானது ஈஎன்எல்எப் இல் அங்கம் வகித்த மற்ற இயக்கங்களின் போக்கிலிருந்து ஈபிஆர்எல்எப் ஐ வேறுபடுத்திக் காட்டுகிறது. “ஈரோஸ்” இந்த விசயத்தில் “தந்திரோபாய ரீதியில்” அமைதிகாத்ததுடன் விடுதலைப் புலிகளுடன் அனுசரித்துப் போகவும் வழி ஏற்படுத்திக் கொண்டது. பின்னால் விடுதலைப் புலிகளால் ஈபிஆர்எல்எப் அழித்தொழிக்கப்பட்டபோது அதிலுள்ள பெண்களை விடுதலைப் புலிகள் அடித்துத் தாக்கியுள்ளனர். அவ்வாறு அப் பெண்களை அடிக்கும்போது விடுதலைப் புலிகளின் பிரபல உறுப்பினர் ஒருவர் சொல்லியிருக்கிறார், “உங்களுக்கெல்லாம் என்ன விடுதலையும் மண்ணாங்கட்டியும்! நீங்கள் எல்லாம் போய் குசினியிக்கை இருங்கோ. அதுதான் உங்களுக்கெல்லாம் சரியான இடம்.”

இந்த மனப்பாங்கானது விடுதலைப் புலிகள் மத்தியிலுள்ள பெண்கள் மத்தியிலும் ஊறிப்போயிருந்தது. உதாரணத்திற்கு விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பெண்கள் சிலரிடம் உரையாடியபோது சமூகம் விதித்துள்ள சில நடைமுறைகளை விட்டு, ஆகவும் விலகி நிற்பது சரியல்ல என்றும், ஆகவே தாங்கள் முன்னரேயே ஆயுதம் எந்திவிட்டது தவறென்றும் அவர்கள் கூறினர். சுத்த இராணுவத்தையே அச்சாணியாகக் கொண்டியங்கும் ஒரு இயக்கத்திலிருந்து வந்த இவர்கள் இவ்வாறு கூறுவது ஆச்சரியமான விசயமாக இருக்கிறது.

இராணுவ ரீதியான இயக்கங்களை உற்று நோக்கினால் அதிலுள்ள ஆண்களுக்கிடையிலான சகோதர உறவு மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். ஆண்மையின் பெருமிதமே அவர்களின் வீரசாகசங்களின் உந்துசக்தியாக உள்ளது. விடுதலைப் புலிகளின் சரித்திரத்தைப் பார்த்தால் இந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் காணப்படும் அல்லது அவர்கள்மீது திணிக்கப்பட்டிருக்கும் இத்தகைய ஒரு அனுசரணையான போக்கு ஆச்சரியப்பட வைக்கும் என்றல்லத்தான். பெண்களைத் தீங்கு விளைவிப்பவர்களாகவும் ஆண்கள் தங்கள் இலட்சியங்களிலிருந்து பிறழ்ந்து போவதற்கும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள் என்றும், ஒரு காலத்தில் கருதிய விடுதலைப் புலிகள், இயக்கத்தில் உள்ள ஆண்கள் பெண்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற தடையையும் விதித்திருந்தது.

நமது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஈபிஆர்எல்எப்பைச் சேர்ந்த பெண்கள்கூட அவர்களின் போராட்டக் குணாம்சம் ஒருபுறமிருக்க, அத்தனை பெரிய தாக்கமான அபிப்பிராயம் எதையும் ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒருவித மானசீகக் கருத்துக் கொண்டவர்களாய் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டும் போயிருந்தனர். நடைமுறையில் நிலவும் அரசியல் விழிப்புணர்ச்சியையும் சமூகத்தின் புறநிலை யதார்த்தங்களையும் தேசியப் போராட்டத்தையும், பெண்களது பிரிவுகளின் குறுகிய வரலாற்றையும் கருத்திற் கொண்டு நோக்கும்போது பெண்கள் பிரிவானது தெளிவான திட்டவட்டமான கருத்தோட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது வெறும் கனவாகத்தான் போயிருக்கும். இயக்கங்களில் இருந்த எந்த ஒரு பெண்கள் பிரிவினரும் நமது ஸ்தூலமான நிலைமைகளின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற கோட்பாடு வரையறைகளை வகுத்துக் கொண்டு செயல் பூர்வமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருந்தனர். பெண்களை மாத்திரமே இதற்குக் குற்றவாளியாக்க முடியாது. உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்காக அவர்கள் முயற்சித்திருந்தாலும் அதை வெளிப்படுத்தி சாதித்துக் கொள்வதற்கான வழிவகைகள் தடுக்கப்பட்டிருப்பதுடன் அவர்களது முயற்சிகள் கூட காலில் போட்டு மிதித்துத் துவம்சம் செய்யப்பட்டிருக்கும்.

எமது சமூக படிமுறை ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டு ஆணாதிக்கக் கருத்துகளில் மூழ்கிப் போயும் உள்ளது. தனிப்பட்ட உறவுகளிலும் சமூக கலாச்சார ஒழுங்கு விதிகளிலும் சரி ஒவ்வொரு அம்சத்திலும் பெண்ணின் நிலைப்பாடானது ஆணாதிக்க அச்சில் தான் உருவமைக்கப்படுகிறது. இது போன்ற ஒரு சமூகத்தில் எந்தக் கருத்தோட்டத்தின் கீழ் போராட்டம் கட்டி எழுப்பப்பட்டுள்ளதோ அந்த மேலாதிக்கம் வகிக்கும் கருத்தோட்டமே மிகமிக குறுகலான பழமையை மீட்கின்ற வெறும் மனோரஞ்சகமான ஆண் கதாநாயகர்களை, ஆண் வீரத்தை மெச்சும் பிம்பங்களாலேயே தெளித்து விடப்பட்ட கருத்தியலாக அமைந்து போகுமானால், தேசியவாதமானது தீவிரமான நாட்டுப்பற்று வாதமாகவும் போய்க் கொண்டிருந்தால் – இத்தகைய நிலையில் பெண் விடுதலைக்கான எண்ணக்கரு என்பது இம்மாதிரியான போராட்டத்தின் உள்மையத்திற்கும் எதிராகவே செயற்படப் போகின்ற ஒன்று என்று தான் அர்த்தமாகும்.

நன்றி முறிந்த பனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *