வாழ்வை சிதைக்கும் சுய வன்முறை

தீக்குளித்தலை ஒழிப்போம்!

ப்ரீத்தி, மு.ஆதவன் -படங்கள்: ஆர்.சுரேந்தர்  (நன்றி புதிய வாழ்வியல் .கொம்)

தீக்குளித்தலை ஒழிப்போம்!தற்கொலை மரணங்களில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் தமிழகம்தான், தீக்குளிப்பு மரணத்திலும் முதலிடத்தில் இருக்கிறது. 2012ம் ஆண்டில், தமிழகத்தில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் என்கிறது தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம். இந்த எண்ணிக்கையில், 13.9 சதவீதம் பேர் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில் பெண்கள் 63.1%, ஆண்கள் 36.9% என்கிறது பதிவு.

பிரச்னைகளின் தீர்வாக தோன்றும் ஒரு நொடி முட்டாள்தனம்; கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் சண்டையின் உச்சக்கட்டம்; தவறான உறவை கைவிடச் சொல்லி துணையை பயமுறுத்தும் ஓர் ஆயுதம்; கோபக்கார, ஊதாரி அல்லது குடிகாரக் கணவனுக்கு பாடம் புகட்டும் பழிவாங்கல்; காதல் தோல்வியை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம்; தன் தவறை மறைப்பதற்கானத் தப்பித்தல்; கவனிக்கப்படாமல் இருக்கும் தனது கோரிக்கையின் மீது நடத்தப்படும் கவன ஈர்ப்பு & உணர்ச்சிகரமானத் தருணங்களில் நிதானமிழந்து, ’ஒரு நொடி கோபம், மறு நொடி மரணம்’ என அரங்கேறிவிடுகிறது தீக்குளிப்பு என்னும் பெருந்துயரம்.

தற்கொலை மரணங்களில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் தமிழகம்தான், தீக்குளிப்பு மரணத்திலும் முதலிடத்தில் இருக்கிறது. 2012ம் ஆண்டில், தமிழகத்தில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் என்கிறது தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம். இந்த எண்ணிக்கையில், 13.9 சதவீதம் பேர் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில் பெண்கள் 63.1%, ஆண்கள் 36.9% என்கிறது பதிவு.

தீக்குளித்தலை ஒழிப்போம்!

தீக்குளித்து தற்கொலைக்கு முயல்வதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, குடும்ப வன்முறை மற்றும் உறவுச் சிக்கல்களால் நிகழ்வது. பெரும்பாலும் இதற்கு பெண்களே பலியாகின்றனர். சில வேளை, காப்பாற்ற முயல்கிற கணவர்களும் குடும்ப உறுப்பினர் களும் பாதிக்கப்படுகின்றனர். இரண்டாவது வகை, சமூக மற்றும் அரசியல் காரணங்களுக் காக தன்னை கொளுத்திக் கொள்வது. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, குடும்ப பிரச்னைகளுக்காக தீக்குளிப்பதுதான் மிக மிக அதிகம்.

வட சென்னையில் வசிக்கும் சாந்தினி, தீ வைத்து தற்கொலைக்கு முயன்று, நு£லிழையில் உயிர் தப்பியவர். முகத்தின் வலது பக்கமும், வலது உடல்பாகமும் கருகிவிட்டன. புகைப் படம் எடுக்க அனுமதிக்காத அவர் நம்மிடம் பேசினார்.

“குடிகாரப் புருஷன், தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அசிங்கமாகப் பேசி அவமானப் படுத்தியதையும், சந்தேகப் பட்டு அடித்ததையும் என்னால் சகிக்க முடிய வில்லை. கணவரைத் திருத்த எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். பலனில்லை. ஒரு நாள் இரவில் அவர் போதை யின் உச்சத்தில் திட்ட, எனக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை. சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து, உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டேன். அதை அணைக்கும் நிலையில்கூட கணவர் இல்லை. அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றி விட்டனர்.

இப்போது கணவரும் என்னுடன் இல்லை. 4 வயதுப் பெண் குழந்தையுடன் அம்மா வீட்டிலேயே தங்கிவிட்டேன். வீட்டை விட்டு எங்குமே வெளியில் செல்வதில்லை. இப்படியொரு வாழ்க்கை வாழ்வதற்கு, அப்போதே முடிந்து போயிருக்கலாம்” என்கிறார்.

பெரும்பாலான பெண்கள் கணவரை அச்சுறுத் தவோ திருத்தவோ நினைத்துதான் தீ வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அந்த முடிவு அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. மாறாக அவர்களின் உருவத்தை சிதைப்பதோடு வாழ்நாள் முழுவதும் தனிமையில் தள்ளிவிடுகிறது. கூடுதலாக, திருத்த முயன்ற கணவர் முழுவதுமாக தன்னை கைவிட்டு வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதை தடுக்க முடியாத நிலைக்கும் தள்ளுகிறது. சென்னை பட்டாளத்தைச் சேர்ந்த ஆனந்திக்கு தற்போது 25 வயதாகிறது. 21 வயதில் அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

‘‘நானும் என் கணவரும் காதலித்து திருமணம் செஞ்சுகிட்டோம். என் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வச்சிருந்ததால எங்களுக்குள்ள சண்டை வந்துச்சு. ஏமாற்றம் தாங்க முடியாம மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கிட்டேன். உயிரை யும் கொடுக்கத் துணிஞ்ச என் அன்பை புரிஞ்சுகிட்டு என் கணவர் திரும்பி வருவார்னு நெனச்சேன். ஆனால் என் தோல் கருகினதுதான் மிச்சம். என் உருவம் இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா சத்தியமா இதை செஞ்சிருக்கமாட்டேன். கடைசியில என் கணவர் என்னை அப்படியே விட்டுட்டு, தொடர்பு வச்சிருந்த பொண் ணோட வாழப் போயிட்டார். இன்னிக்கு வீட்டு வேலைகளை செய்து வாழ்க்கையை ஓட்டு றேன். என் மகனை நான்தான் வளர்க்கிறேன். என்னோட தவறான முடிவால என் உருவத்தை நானே சிதைச்சுக்கிட்டேன். என்னால எங்கயுமே போக முடியல.

தீக்குளிக்கிறதுக்கு முன்னால இருந்த ஆனந்தியா, என் பழைய உருவத்தை எப்பவுமே நான் திரும்ப பெற முடியாது’’ என்று வருந்துகிறார்.
பிற தற்கொலை வழிகளைப் போல அல்லாமல் தீக்குளிப்பது ஒன்றுதான் ஒருநொடி உந்துதலில் நிகழ்ந்துவிடுகிறது. அதுவரை தற்கொலை பற்றி சிந்தனைகூட இல்லாதவர்கள், கணநேரக் கோபத்தில், விரக்தியில், வாக்குவாதத்தில் தீக்குளிக்கும் முடிவை எடுக்கின்றனர். செத்துப் போகும் எண்ணமில்லாத அவர்கள், பெரும்பாலும் தன்னை எப்படியா வது காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த விபரீத முடிவை நாடுகின்றனர். தீக்காயத் தின் வலியை, வேதனையை, எரிச் சலை அவர்கள் குறைத்து மதிப் பிடுகின்றனர். காப்பாற்றப்பட்டால் அதன் பின்னர் ஒருபோதும் தன் வாழ்க்கையும் உருவமும் பழைய மாதிரி திரும்பாது என்பதை சாந்தினியைப் போல, ஆனந்தி யைப் போல அறியாதவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்.

பெரிய பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாமல் தீக்குளிப்பது ஒரு பக்கமெனில், சிறிய, அற்பமான காரணங்களுக்கும் சிலர் இம்முடிவைத் தேடுகின்றனர். சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த கணவன் மனைவிக்கி டையே டிவி நிகழ்ச்சி பார்ப்பதில் சண்டை வந்தது. மனைவி சீரியல் பார்க்க வேண்டும் என்று சொல்ல, கணவன் 20&20 கிரிக்கெட் மேட்ச் பார்க்க விரும்பினார். வாய்த் தகராறு வலுத்ததில் மனைவி சட்டென மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டார்.

இப்படியாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காயப் பிரிவிற்கு தினம் ஒருவராவது எரிந்த நிலையில் வந்து சேர்கின்றனர். எப்படியாவது காப்பாற்றுங்கள், இல்லை கொன்று விடுங்கள் எரிச்சல் தாங்க முடியவில்லை என்று இந்த இரண்டில் ஏதோ ஒரே கோரிக்கைதான் இவர்களுக்கு. மன வெடிப்பிலும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் அவசரப்பட்டவர்கள் உயிருக்காக வும் வலிதாங்க முடியாமலும் படும் துயரம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

“கணவர் குடித்துவிட்டு சண்டை போடுவது, தவறான உறவு வைத்துக் கொள்வது, குடும்பத்திற்கு தேவையான கடமையை செய்ய தவறுவது போன்ற பல காரணங்களுக்காக பெண்கள் தீக்குளிக்கின்றனர். பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் அதை தாங்கிக் கொள்ளும் மனபக்குவம் இல்லாமல் தற்கொலைக்கு முயல்கின்றனர். இன்றைய நிலையில் தற்கொலைகளுக்கான முக்கியக் காரணம் ‘தவறான உறவால் ஏற்படும் மனக்கஷ்டம்’ என உறுதியாகச் சொல்ல கூடிய அளவிற்கு தீக்குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீப்புண் சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் ஜெகன் மோகன்.

கருகி காயங்களோடு வந்து சேர்கிற வர்களுக்கு தீயின் வீரியம் புரியவில்லை என்பதுதான் மருத்துவர்களின் ஆதங்கம். சமையல் செய்யும் போது குக்கர் சுட்டு விட்டால் என்ன காயம் ஏற்படுமோ அது போலத்தான் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாலும் ஏற்படும் என்று நிறைய பேர் நினைக்கின்றனர். இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு. சூடான பாத்திரம் சுட்டால் படக்கென கையை எடுத்துவிடுவோம். அதற்கே அந்த இடம் வெந்து விடும். ஆனால் மண்ணெண் ணெய்யை உடலில் ஊற்றிக் கொள்ளும் போது தீ உடலை முழுமையாக தின்று விடுகிறது.

தீக்குளித்தவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டால், அவர்களின் வயது, காயத்தின் அளவைப் பொறுத்து உயிர் பிழைக்க வைக்க வாய்ப் பிருக்கிறது என்கிற மருத்துவர் ஜெகன் மோகன், ‘‘50 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் தீக்காயங்களோடு வருபவரின் நிலை கவலைக்கிடமானது. முக்கியமாக முகம், கை, ஆசனவாய் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை தர வேண்டும். மூச்சுக் குழாயில் பாதிப்பு அதிகமாக இருந்தால் பிழைப்பது கடினம். ‘வெறும் தோல் மட்டும் தானே காயமாகியிருக்கு. என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க’’ என்று சொல்கின்றனர். தோல்தான் நம் உடலின் மிக பெரிய உறுப்பு. நம் உடலை, உள்ளுறுப்பு களை பாதுகாக்கிற போர்வை எனும் போது தீயால் தோல் எரிக்கப்பட்டால், உடலில் கிருமிகள் பரவி, காப்பாற்ற முடியாத அளவுக்கு போய்விடும். எனவே தோல் தானே என்ற அலட்சியத்தில் தீ வைத்துக் கொள்ள துணியாதீர்’’ என்று எச்சரிக்கிறார்.

தீக்குளித்தலை ஒரு விபரீத விளையாட்டு எனலாம். ஏனெனில் செத்துவிடலாம் என்று நினைக்கும் பலர் குற்றுயிராக காப்பாற்றப்பட்டு உருவம் சிதைந்து வாழ்வைத் தொடர நேரிடும். எப்படியாவது காப்பாற்றப்படுவோம் என்று நினைத்து தீ வைத்துக் கொள் வோர் காப்பாற்றுங்கள் என கெஞ்சியும் உயிர் போய் விடும் வாய்ப்பு அதிகம். தீக்குளிக்கும் போது உடல் முழுவதும் உண்டாகும் தீக்காயம் தரும் எரிச்சல் கற்பனை செய்ய முடியாதது. தோலை மாற்றி அறுவை சிகிச்சை செய்தால் பல மாதங்களுக்குப் பிறகு ஓரள விற்கு சரியாகும். இல்லையெனில் காயம்பட்ட இடம் சுருங்கி இழுத்துக் கொள்ளும். இதனால் இயல்பாக இருக்க முடியாது. வலித்துக் கொண்டே இருக்கும்.

‘‘மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்ட போது நெருப்பு என் மேல் இருக்கிறது என்ற உணர்வு இருந்தது. தண்ணீர் ஊற்றி அணைத்த பின்புதான், அதன் வலியையும் எரிச்சலையும் உணர்ந் தேன். இன்றுவரை அந்த எரிச்சலை என்னால் மறக்க முடியாது. என்னை மருத்துவமனையில் அனுமதித்தபின் ஒரு களிம்பு தடவினார்கள். பின்பு காட்டன் துணியால் மொத்தமாக என் உடலை சேர்த்துக் கட்டி, ஒரு நாள் கழித்து அவிழ்த்த போது, தோல் அப்படியே துணியில் ஒட்டிக் கொண்டு வந்து விட்டது. ரத்தமும் தோலும் சேர்ந்து அழுகிய நாற்றத்தோடு நான் ஆடையில்லாமல் கிடந்தேன். என்னை சுத்தப்படுத்தியவர் ஓர் ஆண். எனக்கு அப்போது கூச்சத்தைவிட, வலியும் எரிச்சலும் ஒழிந்து குணமானால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

என் உடலில் இருந்து எழும் துர்நாற்றத்தை என்னாலேயே தாங்க முடியாது. சுத்தப்படுத்தும் நபர் துணியை மிக வேகமாக இழுத்து இழுத்துக் கட்டுவார். ஆனால் அந்த கட்டை அவிழ்க்கும் போது, உயிர் போய் திரும்ப வரும். ஒரு மாதம் கழித்து டெட்டால் சோப்பில் குளிக்க வைத்தார் கள். உடல் முழுவதும் சளி போல நாற்றம் பிடித்த திரவம் வெளியேறியது. நான்கு முறைக்கு மேல் குளித்தாலும் பிசுபிசுப்பு போகவில்லை. ஆடை அணியும் போது காயத்தில் பட்டு உடலெல்லாம் எரியும். இதுவரை 8 அறுவைச் சிகிச்சைகள் நடந் திருக்கிறது. தொடையிலிருந்து தோலை எடுத்து, கழுத்தில் தோல் இழந்த பகுதியில் ஒட்ட வைத்தார்கள். எனக்கு இன்றும் கழுத்து இறுக்குகிறது. அதனால் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளப் போகிறேன். நான் சாக நினைக்கவில்லை. ஆனால் செத்த மாதிரிதான். இதுவொரு வாழ்க்கையா என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து என்னை போல முட்டாள்தனமாக யாரும் நடந்து கொள்ளாதீர்கள்” என்கிறார் ஆனந்தி.

மருத்துவச் சிகிச்சையால் தீக்குளித்தவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டு, அவர்களின் வலி சிறிது குறைக்கப்பட்டாலும், அதன் பின்னர்தான் அவர்களின் உண்மையான துயரம் தொடங்குகிறது. தன் உருவத்தைப் பார்த்து தீக்காயம் அடைந்த வர்களின் மனநிலை வெகுவாக பாதிப்பதால் உயிர் வாழ விருப்பம் இருக்காது. சிகிச்சை முடிந்த பின்னர் வீட்டுக்கு சென்று தூக்குப் போட்டுக் கொள்பவர்களும் உண்டு. தீக்குளிப்பு உண்டாக் கிய உருவச் சிதைவால் வாழ்வை தொலைக் கிறவர்கள் மனதைத் தேற்றும் வகையில் மனநல ஆலோசனை வழங்குவது அவசியமாகிறது.

“தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று, தோல்வியடைந்த பலருக்கும் அதற்கடுத்து வாழ்வைத் தொடர்வதில் விருப்பம் இருப்பதில்லை. உடலில் ஏற்படும் காயங்கள், அவர்களின் மனதிலும் ஆறாத வடுக்களாக தங்கிவிடுகின்றன. அதனால் ஏற்படும் குற்றவுணர்ச்சியும் தாழ்வு மனப்பான்மையும் அவர்களை வாட்டுகிறது. குடும்பத்தினர், உறவினர், நெருங்கிய நண்பர்கள் ஆகியோருடன் பேசுவது குறைந்துவிடும். தனிமையை நாடுவர். வீட்டுக்குள்ளேயே முடங்குவார்கள். இதனால், மீண்டும் அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் தீக்காயமடைந்தோருக்கான மனநல ஆலோசனை வழங்கும் சுரேஷ்குமார்.

தீக்குளித்தவர் திருமணமான பெண்ணாக இருந்தால், குழந்தைகள் தாயை நீண்ட காலம் பிரிந்திருக்க நேர்கிறது. பாதிப்பு மோசமாக இருந்தால், குழந்தைகளால் தாயை அடையாளம் காணமுடியாமல் கூடப் போகலாம். இது தாயென்ற முறையில் அந்த பெண்ணுக்கு கடும் மன உளைச்சலை உண்டாக் கும். ஒரு தாயாக, மனைவியாக, அல்லது தந்தையாக அவர்க ளால் முழுமையாகச் செயல்பட முடியாமல் கூட போகலாம். மொத்தத்தில் உடல், மன, சமூக, பொருளாதார நெருக்கடிகளை அவர்கள் வாழ்க்கை முழுவதும் சந்திக்க வேண்டியிருக்கிறது.

எல்லா தற்கொலையுமே கொடியதுதான். தவறான, நியாயப்படுத்த முடியாத முடிவு தான். ஆனால் வேதனையற்ற, வலியற்ற வழிகள் பல இருக்கும் போது தீக்குளித்தல் எனும் கொடூர முடிவை ஏன் நாடுகின்ற னர்? “நகர்புறங்களில்தான் தீக்குளிக்கும் நிகழ்வுகள் அதிகம். கிராமங்களில் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்வது அதிகம் நிகழ்கிறது. மண்ணெண் ணெய், பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் நகரங்களில் எளிதில் கையில் கிடைக்கின்றன. தவிர மன அழுத்தத்தில் பலநாள் யோசித்து திட்டமிட்டு தற்கொலை செய்து

கொள்கிறவர்களுக்கும், உணர்ச்சிவசப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. கணநேரத்தில் எதிர்வினையாற்ற விரும்புகிறவர்களே தீக்குளித்தல் எனும் கொடூர முடிவைத் தேடுகின்ற னர். அதற்கு முந்தைய நொடிவரை, தான் இப்படி செய்வோம் என அவர்களுக்கே தெரியாமல் இருக்கலாம்’’ என்கிறார் சென்னை யில் செயல்பட்டு வரும் சிநேகா தற்கொலை தடுப்பு அமைப்பின் செய்தி ஒருங்கிணைப்பாளர் சங்கர் நாராயணன்.

நோய்களை போல தீக்குளித்த லையும் வரும் முன் காப்பதுதான் சிறந்தது. குடும்ப வன்முறை மற்றும் உறவுச் சிக்கல்கள்தான் இந்த கொடுமைக்கு முக்கிய காரணம் என்பதால் அந்த மாதிரி சூழல் நிலவும் போது உணர்ச்சிவசப் படாமல் எதிர்கொள்ளவும் கையாள வும் பழக வேண்டும். ‘‘கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சாதாரண சச்சரவுகள் வளர்ந்து பெரிய வாய்ச்சண்டையாக மாறுவ துண்டு. விட்டுக் கொடுப்பதன் மூலமும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயல்வதன் மூலமும் சிறு விஷயங்களால் ஏற்படப் போகும் குடும்பப் பிரச்னைகளை தவிர்க்க முடியும். விலை மதிப்பற்ற உயிரை விடுவதைவிட, தவறு செய்யும் கணவனை விட்டுப் பிரிவது மேலாகும். அல்லது சட்டப் படி கணவனின் மீது புகார் அளித்து நீதி கோரலாம். இது ஆண்களுக்கும் பொருந்தும்’’ என்கிறார் வழக்குரைஞர் ஜெய பிரகாஷ்.

திருமண உறவில் எதிர்கொள்ளும் சிக்கல்களைவிட பெண் என்ற முறையில் குடும்ப வன்முறையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளே அதிகம். இந்தியாவி லுள்ள மூன்றில் இரண்டு பங்கு திருமணமான பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

பொருளாதாரரீதியாக கணவரைச் சார்ந்திருப் பது, உரிமைகள் பற்றி விழிப்புணர்வு இல்லாதது, குழந்தைகளை விட்டுப் பிரிய முடியாமை மற்றும் அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை, தன்னம் பிக்கையில்லாதது, சமூக அழுத்தம், ஆதரவு இல்லாத நிலை போன்ற காரணிகள் குடும்ப வன்முறைகளைத் தாங்கிக் கொண்டு, கொடுமைப்படுத்துபவர்களிடமே அவர்களை தொடர்ந்து இருக்க வைக்கிறது. சட்டங் கள் பெண்களுக்கு ஏட்டளவில் சம உரிமைகள் அளித்தாலும், ஆண் மைய உலகில் அவர்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போவதால்தான் இம்மாதிரி உயிரை மாய்த்துக் கொள்ள முயல்கிறார்கள்.

Òகுடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக காவல் உதவி ஆணையரிடம் சென்று புகார் அளிக்கலாம். மேலும் மாவட்ட சமூக நல பெண் அதிகாரியிடம் சென்று புகாரை நேரடியாக கொடுத்து, அவரவர் புகாருக்கேற்ப அதை குற்ற வழக்காக மாற்றி தண்டனை வாங்கித் தரவும் வாய்ப் புண்டு. பாதிக்கப்பட்ட பெண் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பினால் தன் கணவருக்கும் அவரது குடும்பத்திற்கும் சேர்த்தே அரசு சார்பாக ஆலோசனைகள் வழங்கப்படும். பெண்ணின் விருப் பத்திற்கேற்ப சேர்ந்து வாழவும் தனித்து வாழவும் உதவிகள்

வழங்கப்படும். தீக்குளித்து பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்திற்கு மீண்டும் செல்ல விரும்ப வில்லை எனில் அரசு பாதுகாப்பு காப்பகத்தில் தங்கலாம். பெண்ணுக்கான பராமரிப்பு செலவு தொகையை பெண்ணின் கணவரும் அவரது குடும்பமும் அல்லது பெண்ணின் பெற்றோரும், சகோதரனும் கட்டாயமாக தர வேண்டும். திருமணமாகி ஏழு வருடங்களுக்குள்ளே மனதளவிலும் உடலளவிலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பெண்களை பாதுகாப்பதற்கு அரசு காப்பகம் உள்ளதுÓ என்கிறார் வழக்குரைஞர் ஜெயபிரகாஷ்.

குடும்ப வாழ்க்கையில் முரண்பாடுகளும் பிரச்னைகளும் நேரிடுவது இயற்கை தான். இதற்கு முடிவாக மரணத்தை நாடாமல், தீர்வுகளை காண முயலலாம். ‘‘பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பி லேயே தீக்குளிப்புகள் நிகழ்கின்றன என்பதால் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள பயில வேண்டும். குடும்ப பெரியவர்களின் உதவியை நாடுவது, அவர்களும் எதிராக இருந்தால் அந்த பகுதியில் இருக்கும் ஏதேனும் தொண்டு நிறுவனத் தின் உதவியை நாடுவது நல்ல தீர்வாக இருக்கும். தொண்டு நிறுவனத்தில் உள்ள மன நல ஆலோசகர் கள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் கவுன்சலிங் கொடுப்பார்கள். தேவைப்பட்டால் உங்களுக்கான சட்ட உதவியையும் வேலை வாய்ப்பையும் உருவாக் கித் தருவார்கள். நாங்கள் எங்கள் அமைப்பில் அதைதான் செய்கிறோம். வாழ்க்கையை நடத்த எவ்வளவோ வழிகள் இருக்கும் போது அதை முடித்துக் கொள்ளத் துடிக்காதீர்கள்’’ என்கிறார் சர்வதேச குற்றத் தடுப்பு மற்றும் பாதிக்கப் பட்டோர் நலம் (பிசிவிசி) அமைப்பின் செயல் அலுவலர் பிரசன்னா.

உருவம்தான் ஒருவரின் அடையாளம் எனும் போது அதை அளிக்கும் தீக்குளித் தலை தீர்வாக நினைக்கலாமா? அறியாமை யிலும் உணர்ச்சி வேகத்திலும் நிகழ்த்தப் படும் இந்த சுய வன்முறை மிக கொடிய முடிவு என்ற விழிப்புணர்வை பெறுவது ஒன்றே தீக்குளித்தலை ஒழிப்பதற்கான ஒரே வழி!
தீண்டும் போது…

உடலின் மிகப்பெரிய உறுப்பே தோல் தான். இது அனைத்து உறுப்புகளையும் போர்த்திப் பாது காப்பதுடன், உடலுக்கு வடிவத்தையும் அளிக்கிறது. முக்கியமாக, உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பது தோல் தான். உடலின் நீர்ச்சத்தைப் பாதுகாப்பதும் இதுதான். தீப்புண் என்பது தோல் செல்களையும் திசுவையும் அழிக்கிறது. மனிதனின் தோல் எபிடெர் மிஸ், டெர்மிஸ், ஹைபோடெர்மிஸ் என மூன்று அடுக்குகளைக் கொண்டது. தீப்புண்களின் அளவு, ஆழம், தோலின் மூன்று அடுக்குகளில் எந்தெந்த அடுக்குகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து தீக்காயத்தின் அளவை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம்.

முதல் நிலை தீப்புண்கள்: எபிடெர்மிஸ் எனப் படும் தோலின் மேலடுக்கில் ஏற்படும் சேதம். மேலோட்டமான காயமாதலால் புண் சில நாட்களில் ஆறிவிடும். தோல் மீண்டும் வளர்ந்துவிடும். ஆரம்பத்தில் வீக்கத்துடன் வலி இருக்கலாம். பொதுவாக தழும்பு ஏற்படாது.
இரண்டாம் நிலை தீப்புண்கள்: இது தோலின் எபிடெர்மிஸ் மற்றும் டெர்மிஸ் அடுக்குகள் பாதிக்கப்படும் நிலையாகும். தோலில் சுருக்கம், தழும்பாகுதல் மற்றும் தடித்தல் போன்றவை ஏற்படும். குணமாக 6 மாதங்கள் ஆகலாம்.

மூன்றாம் நிலை தீப்புண்கள்: எபிடெர்மிஸ், டெர்மிஸ், ஹைப்போடெர்மிஸ் ஆகிய மூன்று அடுக்குகளும் காயமடையும் நிலை. தோல் முழுவதும் சேதமடைவதுடன், நரம்பு முனைகள், ரோமக்கால்கள், சுரப்பிகள் மற்றும் ரத்தக்குழாய் களை இது சேதப்படுத்துகிறது. இதற்கு தோல் பதிய (கிராஃப்டிங்) சிகிச்சைத் தேவைப்படலாம். குணமடைய பல ஆண்டுகள்கூடத் தேவைப்படலாம். நான்காம் நிலை தீப்புண்கள்: தோலின் மூன்று அடுக்குகளையும் தாண்டி எலும்பு, தசைகள் சேதமடையும் நிலை. மிகவும் அரிதாகவே நடக்கிறது. உயிர் பிழைப்பது கடினம்.

தீக்காயத்துக்கான
முதலுதவி
றீ முதலில் எரிவதை நிறுத்த வேண்டும். மண்ணெண் ணையோ பெட்ரோலோ எது நெருப்புக்கு காரணமோ, அதை அந்த இடத்திலிருந்து உடனடியாக அப்புறப் படுத்த வேண்டும். நீர் ஊற்றி முதலில் நெருப்பை அணைத்தாக வேண்டும்.
றீ காயத்தின் மீது போர்வை எடுத்து போர்த்துவதோ அல்லது சாக்கைக் கொண்டு அணைப்பதோ கூடாது. இதனால் எரிந்த தோலில் துணி ஒட்டிக் கொண்டு காயங்கள் பெரிதாகுமே தவிர குறையாது. காயத்திலி ருந்து வரக்கூடிய வெப்பத்தை தண்ணீர் மட்டுமே தணிக்கும், மேலும் காயம் ஆழமாகாதபடி தடுக்கும்.
றீ முடிந்தவரை உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திலி ருக்கும் ஆடையை நீக்க வேண்டும். ஏனெனில் வெப்பத்தைத் தக்க வைக்கும் பண்பு ஆடைக்கு உண்டு. மேலும் காயம்பட்ட தோலில் துணி ஒட்டிக் கொண்டு அதை மேலும் அதிகப்படுத்தலாம்.
றீ காயத்தின்மீது நாமாக எந்த க்ரீமையும் பயன்படுத்தக் கூடாது. ஒட்டிக்கொள்ளும் எதையும் காயத்தை மூட பயன்படுத்தக் கூடாது.
றீ பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மோதிரம், பிரேஸ் லெட், கைக்கடிகாரம் போன்றவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
றீ தண்ணீரை ஊற்றினால் கொப்புளம் வருகிறது என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். கொப்புளம் வந்தால் நீங்கள் நிம்மதியடையலாம். ஏனென்றால் காயம் உள்ளே செல்லவில்லை என்பதன் அறிகுறியே கொப்புளம். அதே நேரத்தில் காயம் மிகவும் ஆழமாக இருந்தாலும் கொப்புளம் வராது. இவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் என்று அர்த்தம். கொப்புளத்தைக் கிள்ளக்கூடாது. இது கிருமித் தொற்றை உண்டாக்கும்.

றீ ஒரு சிலர் பேனா மையை தடவி வருவதால் எது காயம் என்று கண்டுபிடிப்பதற்கே கடினமாக இருக்கும். காயத்தில் ராசாயனம் கலந்து தீவிர புண்ணாக மாறிவிடும். எனவே பேனா மை தடவக்கூடாது.
றீ தீப்பற்றிக் கொண்டவரை மீட்டவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு விரைவாக பாதிக்கப் பட்டவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

தீர்விருக்கும் போது தீக்குளிப்பு ஏன்?
பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே தீக்குளிப்புகள் நிகழ்கின்றன என்பதால் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள பயில வேண்டும். குடும்ப பெரியவர்களின் உதவியை நாடுவது, அவர்களும் எதிராக இருந்தால் அந்த பகுதியில் இருக்கும் ஏதேனும் தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடுவது நல்ல தீர்வாக இருக்கும். தொண்டு நிறுவனத்தில் உள்ள மன நல ஆலோசகர்கள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் கவுன்சலிங் கொடுப்பார்கள். தேவைப்பட்டால் உங்களுக்கான சட்ட உதவியையும் வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தருவார்கள்.

தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா?
தற்கொலை நிகழாமல் தடுக்க சென்னையில் உள்ள சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் செயல்பட்டு வருகிறது. தற்கொலை எண்ணம் உள்ளோர், இந்த அமைப்பின் தொலைபேசி சேவை எண்களைத் தொடர்புகொண்டால், அவர்களின் பிரச்னைகளை முழுமையாகக் கேட்டறிந்து, தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட ஆலோசனைகள் வழங்குவர்.
தொடர்புக்கு: 044&2464 0050, 2464 0060.

குடும்ப
வன்முறையை
தடுத்து நிறுத்த
பிசிவிசி ஹெல்ப் லைன்: 044 & 4311 1143,
044 & 4301 6742,
1800 102 7282

அரசு மருத்துவமனையின் சேவை!
தனியார் மருத்துவமனைகள் இத்தனை பெருகி யுள்ள நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைப் பிரிவுதான் பாதிக்கப்படுகிறவர் களுக்கான ஒரே புகலிடம். ஆனால் இங்கு போதுமான இடவசதி இல்லை. தற்காலிகமாக இரண்டு கூடுதல் அறைகளை மருத்துவமனையின் முதல்வர் ஒதுக்கி யளித்துள்ளார். புது கட்டடங்களை அமைத்துத் தரவும் 15 செவிலியர்களை கூடுதலாக வேலையில் சேர்க்கவும் அரசு முனைப்பாக உள்ளது. ஆனால், தீக்காய சிகிச்சைப் பிரிவில் வேலை செய்ய பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. தற்போது அங்குள்ள 11 மருத்துவர்களும், 11 செவிலியர்களும் முழு மனதுடன், ஒரே குழுவாக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். மருத்துவப் பணியாளர்களுடன் தீக்காயமடைந்து பிழைத்து வந்தவர்கள் சிலரும் தன்னை போல் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்வதை மருத்துவமனை யில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *