முதல் பெண்!

முனைவர் இரா. சாவித்திரி(http://maattru.com)

பெண்Tapputi

பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான நூல் வரிசையில் பேரா. சோ. மோகனா எழுதியுள்ள “முதல் பெண்” என்ற நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அறிவியல் இயற்பியல், கணிதவியல், வானவியல், வேதியியல் ஆகிய துறைகளில் முதல் கண்டுபிடிப்புகளைச் செய்தவர்கள் பெருமைக்குரியவர்கள். உலகுக்கு நன்மை செய்த இவர்கள் பலரின் பங்களிப்பு பதிவு செய்யப்படாததால் மக்களுக்கு அறிமுகமில்லாமல் உள்ளனர். அவர்களை அறிமுகப்படுத்தும் மிகப்பெரிய சேவையினை முதல்பெண் என்ற நூல் செய்கிறது. முதல் பெண்மணிகள் அறுவரை அவர்கள் கண்டுபிடிப்புகளோடு சுவையாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மோகனா.

பெண்கள் ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்தைக் கட்டிக்காக்கவும் முன்னோக்கி நகர்த்தவும் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி அரும்பணியாற்றியுள்ளனர் என்று அணிந்துரையில் வழக்குரைஞர் இராசமாணிக்கம் கூறிய கூற்றுக்கு மிக நம்பகமான சான்று இந்நூல் என்பதை முதல் பெண் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. கிரேக்க மேதை பித்தாகரஸ் பற்றியும் அவர் தியரி பற்றியும் அறிவோம். ஆனால் அவர் வாழ்க்கைக்குப்பின் உள்ள அவர் மனைவி கணிதமேதை தியானோ, அவருடைய திறமைகள், பதிவுகள், அவருடைய மூன்று மகள்கள் டாமோ, மைய்யா, அரிக்னோட் ஆகியோரின் சாதனைகள், பித்தாகரஸ் நிறுவனம் பற்றிய அரிய தகவல்கள் நமக்கு வியப்பூட்டுகின்றன. உலகின் முதல் வேதி விஞ்ஞானி (பெண்) தப்புட்டி பெலாட்டிகல்ளம் எகிப்தில் சைப்ரஸில் பிறந்த இவர் 4000 ஆண்டுகளுக்கு முன் நறுமணத் தைலத்தை முதன் முதலில் தயாரித்தவர் என்றபெருமையைப் பெறுகின்றார். என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறார் ஆசிரியர். கி.பி. 2005-இல் இத்தாலியத் தொல்லியல் துறை சார்ந்த பேராசிரியர்கள் ஆய்வு செய்து கூறிய நம்பகமான செய்திகள். 4000 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட அதே பாத்திரங்களில் நறுமணத்தைலம் தயார் செய்ததும் அதில் ஆலிவ்எண்ணெய், கொத்தமல்லி, பாதாம் நறுமணச்செடி மைர்ட்ஸ் பார்லி, கோஸ்மரி முதலியன உள்ளன என்பவை நமக்குக் கிடைக்கும் கூடுதல் தகவல்கள்.

பெண்

வானவியலாளர் கரோல் ஜெமிசன் (1956) பொறியாளர், விஞ்ஞானி, மருத்துவர். எதையும் சாதிக்க வேண்டும் என்ற மனத் திண்மை உடைய இவர் 1988-இல் நாசாவில் விண்வெளி ஓடத்தில் பறந்தார். விண்ணில் பறந்த முதல் கறுப்பினப்பெண் என்று சரித்திரம் படைக்கிறார் கரோல் ஜெமிசன். விண்வெளியில் பறக்கும்போது மனிதர்கள் எலும்பு செல்களில் ஏற்படும் மாற்றம், தேய்மானம் குறித்த ஆராய்ச்சித் தேடலில் எட்டாவது நாள் விண்வெளியில் பறக்கும்போது சுழியன் ஈர்ப்பு விசையால் விண்வெளி நோயும் எலும்பு இழப்பும் நிகழ்ந்துள்ளது என்பதைக் கண்டுபிடித்தார் என்பது முக்கிய தகவல்.

உலகின் முதல் பெண் எழுத்தாளர், வானவியலாளர் பாபிலோனில் தோன்றிய என்ஹெடுன்னா. 1925-இல் எடுக்கப்பட்ட அகழ்வுகளில் ஒரு வட்டத்தட்டில் அவரது உருவமும் அவரது தீரச் செயல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமேரிய இலக்கியங்களின் ஷேக்ஸ்பியர் என்று பாராட்டப்படும் இவர் மதகுருவாக நியமிக்கப்பட்டார். வானவியல் மற்றும் கணிதத்தின் முன்னோடிகளில் ஒருவரான இவரின் செயல்பாடுகள் தத்துவஞானியாகவும் அறிவும் புலமையும் மிக்க இலக்கிய மேதையாகவும் இவரைக் காட்டுகின்றன.

உலகின் முதல் பெண் விஞ்ஞானி ஹைப்பேஷியா (கி.பி. 355) அலெக்ஸாண்டிரியாவில் பிறந்த இவர் அறிவியல் மீது தீராத வேட்கை கொண்டவர். தந்தை பேராசிரியர் தியோனிடம் கற்பித்தலின் அடிப்படை விதிகளையும், சொல்லாடலின் செப்பிடு வித்தைகளையும் கற்றவர். அதனால் ஆய்வு நோக்குடன் மாணவர்களுக்குக் கணிதம் கற்பித்தவர். ஹைப்பேஷியாவின் சமகால ஆண் தத்துவ ஞானிகள் அனைவரையும் விட மிகச் சிறந்த அறிவாளி என்று சாக்ரடீஸ், மன்னர் பைசாண்டிஸ் போன்றோர்களால் பாராட்டப்படுகிறார். எண் கணிதக் கொள்கைகளை உருவாக்கிய இவர் கணிதம் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார்.

இவருடைய செல்வாக்கும் பெருமையும் கண்டு பொறாமை கொண்ட கொடூரக்கும்பல் ஒன்று (கி.பி. 415 –  மார்ச் 8இல்) ரதத்திலிருந்து அவரை வீசியெறிந்து  கொடூரமாகத் தாக்கியது. அவரின் சதைத்துண்டுகள் வீதி முழுவதும் வீசி எறியப்படுகின்றன. மிச்ச எலும்பையும் சதையையும் போட்டு ஒன்றாக எரிக்கின்றனர். எவ்வளவு பெரிய கொடுமை! மிருகங்கள் பறவைகள் தம் இனத்தைத் தமக்கு எதிரியாக என்றும் நினைப்பதில்லை. மிக உயர்ந்த மனித இனம் தம் இனத்தை எப்படி சித்திரவதை செய்து அழித்திருக்கிறது என்ற பேருண்மை ஹைப்பேஷியாவின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உண்மைகளை எத்தனை காலம் மூடிமறைக்க முடியும்? கடந்த 200 ஆண்டுகளாக ஹைப்பேஷியாவை உலகம் சிறந்த வானவியலாளராக மரியாதை செய்கிறது. 1884-ம் ஆண்டு செவ்வாய்க்கு அப்பால் உள்ள அஸ்டிராய்டு வளைய அடுக்கொன்றிற்கு ஹைபேஷியா என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுகிறது.

அலெக்ஸாண்டிரா இலியானி இத்தாலியில் தோன்றிய உடலியலாளர். இறந்த உடலை அறுத்து அந்த உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் வேறு வண்ணம் உள்ள திரவம் ஏற்றினார். அப்போதுதான் இரத்தக் குழாய்கள் உடலின் எந்தெந்த இடத்துக்குச் செல்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டும் என்பதனால் முதன்முதலில் இவ்வாறு பதிவு செய்து அந்தக் கால மருத்துவர்களுக்கு பக்க பலமாகவும் உறுதுணையாகவும் இருந்தார். உயிரைப் பணயம் வைத்து உடலை அறுத்து சேவை செய்த இலியானியின் பங்களிப்பினை முதல் பெண்ணில் விரிவாகக் காணலாம்.

இறந்த உடலை அறுப்பது தெய்வக்குற்றம் என்றும் அதற்கு தண்டனை தூக்கு, கொலை என்று வழங்கப்பட்ட காலத்தில் மருத்துவப்புரட்சி ஏற்படும் காலம் வரை நடந்த நிகழ்ச்சிகள் – தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளை அபகரித்து அந்த உடலை மாணவர்களுக்குக் காட்டும் மருத்துவர் – கல்லறையிலிருந்து உடலைத் திருடி அறுவை நடத்துதல் –  பிணத்தட்டுப்பாடு போன்ற செய்திகளைச் சுவைபட விவரிக்கிறார் ஆசிரியர். நவீன உடலியலின் தந்தையான ஆண்ரியாஸ் (16ஆம் நாள்) வேசலியஸ் பற்றிய தகவல்கள், மருத்துவம் தொடர்பான வேறு பல தகவல்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன.

வட இந்தியாவில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் சுஷ்ருதா இந்தியாவின் அறுவை சிகிச்சை பிதாமகர் இவர். மனித உடற்கூறு பற்றிய பதிவு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பாப்பிரஸ் மரப்பட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டிரியாவில் தோன்றிய ஹீரோபிலஸ் உலகின் முதல் உடலியல் பள்ளி நடத்தியவர். முதன் முதலில் கட்டளை நரம்புகளுக்கும், உணர்ச்சி நரம்புகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிநதவர் இவரே.இந்திய சுதந்திரத்திற்காக 1780-களில் வாளேந்திப் போர் புரிந்து வெள்ளையரை எதிர்த்த முதல் இந்தியப் பெண் வேலுநாச்சியார் வரலாற்றைப் பெருமிதம் கொள்ள வைக்கும் வகையில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

வேலு நாச்சியார் மிகச் சிறந்த போர்ப் பயிற்சி பெற்றவர். 7 மொழிகள் கற்றறிந்தவர். சிவகங்கையை ஆட்சி புரிந்த இவரது துணைவர் முத்து வடுகனாதர் வெள்ளையருடன் போரிட்டு 10000 வீரர்களுடன் வீரமரணம் அடைந்தபோதும் இவர் மனம் தளராமல் விருப்பாட்சியில் இரண்டு ஆண்டுகள் தங்கி படைதிரட்டி நாட்டை மீட்டு எடுத்த முயற்சி பெரிய சாதனை.
தானே படைத்தளபதியாய் படை நடத்திச் சென்று வெள்ளையரை விரட்டி, வெள்ளைப் படைகளின் வெடிமருந்துக் கிடங்குகளை அழித்தார். 1780-இல் சிவகங்கை ராணியாகி ஆண்டார். வேலுநாச்சியாரின் வீரத்தைப் போற்றும் வகையில் இந்திய அரசு டிசம்பர் 2008-இல் வேலுநாச்சியார் உருவம் பொறித்த அஞ்சல்தலை வெளியிட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம் இவர் பெயரால் வேலு நாச்சியார் வளாகம் என்றழைக்கப்படுகிறது. வரலாற்றைப் பதிவு செய்வதில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பேத உண்மை. கால தாமதமாகவாவது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சுவையான தகவல்களைத் தந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

விறுவிறுப்பான எளிய இனிய தமிழ்நடை கதை சொல்வது போல் சுவாரசியமாக செய்திகளைத் தொகுத்துத்தரும் பாங்கு, அறிவியலாளர் வாழ்க்கை வரலாறுகளை சுவையாகவும் நகைச்சுவையாகவும் சொல்வது சிறப்பு.

 ஊடறுவில் முதல் பெண் பற்றிய அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *