ஆணாதிக்க வக்கிரங்களும் பலியாகும் பெண் உடல்களும்

-ஜீவசகாப்தன் -நன்றி  பொங்குதமிழ்

பெண்கள் எப்போதெல்லாம் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறார்களோ அப்போதெல்லாம், பெண்களின் உடை குறித்த அறிவுரைகள் நாடு முழுவதுமுள்ள பெண் சமூக காவலர்களிடமிருந்து வழங்கப்படும். சரி, நாகரிக உடை அணிந்துகொண்டு சென்றால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்படுவார்கள் என்று பெண்கள் சேலை அணிந்தோ, சுடிதார் அணிந்தோ சென்றால், அப்போதும் உமா மகேசுவரிகள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்வார்கள் தெரியுமா? ‘பெண்கள் இரவு நேரத்தில் தனியாக வரக்கூடாது. அதுவும் ஆண் துணை இல்லாமல் வரக்கூடாது.’ இதுதான் ஒவ்வொருமுறை பெண்கள் பாதிக்கப்படும் போது, கலாச்சார காவலர்களின் கூக்குரலாக இருக்கிறது. உண்மையில் பெண்கள் அணியும் உடைதான் பிரச்சனையா? இல்லை அவர்கள் தனியாக வருவதுதான் பிரச்சனைக்கு காரணமா? தான் செய்யும் ஒவ்வொரு தவறிற்கும் இந்த ஆணாதிக்க உலகம் தரும் மழுப்பல்தான் இந்த பதில்கள்.


மாற வேண்டியது உடை அல்ல உளவியல்

தந்தை வழிச் சமூக மனநிலையில் ஆழமாக வேரூன்றி இருக்கும் இந்திய மனங்கள் பெண்களை பண்டமாகதான் இன்னும் பார்க்கின்றன. தாய், தங்கை போன்ற உறவுகள் தன்னால் பாதுகாக்கப்பட வேண்டிய பொருட்கள். அதாவது, தன்னை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்கள். மனைவி என்பவள் தான் நுகர வேண்டிய, தான் மட்டும் நுகர வேண்டிய பொருள். அந்த பொருள் பிறர் கைப்பட்டால் கெட்டுப்போய் விடும். கெட்டு போய்விடும் என்கிற பதமே பெண்ணை இந்த ஆண் உலகம் மனிதப் பிறவியாக பாவிக்கவில்லை என்பதை காட்டுகிறது. கெட்டுப்போன பெண்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கெட்டு போன ஆண்களை நாம் கேள்விப்பட்டதில்லை. ஆண் சம்மந்தப்படாது பெண்கள் மட்டும் தனியாக எப்படி கெட்டுப் போக முடியும்? துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று பெண்களுக்கு சொல்லித் தரும் ஆணாதிக்க சமூகம், துஷ்டர்களை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை உணர வேண்டும். இன்றளவும் படித்த இளைஞர்கள்கூட ஒரு பெண்ணை மதிப்பிட அவள் பாலியல் ஒழுக்கத்தை மட்டுமே அளவுகோளாக வைக்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

பெண் கல்வி பெறுவதை ஒழுக்கத்துடன் தொடர்புபடுத்திய வைதீக மரபு

உமா மகேசுவரியின் கொடூர மரணத்திற்கு பிறகு, தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி) பெண்கள் வேலை பார்ப்பதை கேள்விக்குட்படுத்தும் விவாதங்களும் அரங்கேறி வருகின்றன. ஜ.டி யில் பெண்கள் இரவு பணிபார்ப்பது, தனியாக தங்கி வேலைபார்ப்பது என அனைத்தும் விமர்சனத்திற்குட்படுத்தப்படுகிறது. இரவு நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமைதானே. பெண்ணும் சமூகத்தின் உற்பத்தி சக்தியில் ஈடுபடுகிறாள் என்றால் அரசிற்கு லாபம்தானே. இந்த கண்ணோட்டத்தில் சிந்திக்க மறுக்கிறது பழமைவாத இந்திய மனநிலை. ஏன் இரவில் பணிபுரிகிறாள்? ஏன் தனியாக நடக்கிறாள்? என்று அவளது உரிமையில் கைவைக்கத்தான் துடியாய் துடிக்கிறார்கள். இந்த மனநிலை என்பது பரத்தையர் காலத்திலிருந்து கார்ப்பரேட் காலம் வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. குடும்ப மகளிர், விலை மகளிர் என பெண்களை பகுக்கிறது வைதீக மரபு. இதில், குடும்ப மகளிருக்கு வீட்டிற்கு வெளியில் செல்வதற்கோ, கல்வி பயில்வதற்கோ உரிமை கிடையாது. பேதையாய் இருப்பதே பெண்ணிற்கான பெருமையாக உருவகப்படுத்துகிறது. ஆனால், விலைமகளிருக்கோ, கல்வி, நாட்டியம் பயிலும் உரிமை உள்ளது. ஆகவே, இன்றளவும் உயர் கல்வி கற்கும் பெண்களை, வேலைக்குச் செல்லும் பெண்களை, சுயமாக சிந்திக்கும் பெண்களை நடத்தை கெட்டவர்கள், வீட்டிற்கு அடங்காதவர்கள், திமிர் பிடித்தவள் என்று ஆணாதிக்க சமூகம் வசைபாடி கொண்டிருக்கிறது.

கடுமையான தண்டனைகள் குற்றங்களைத் தடுக்குமா

உமா மகேசுவரி போன்ற பெண்கள் ஆண்களின் காம இச்சைக்கு பலியானதற்கு பிறகு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று நமது வெகுசனம் கூக்குரலிடுகிறது. ஆனால், உண்மையில் இந்த சமூகம்தான் குற்றவாளிகளை வளர்த்துவிடுகிறது. சிறுவயதில் இருந்தே பெண்ணுக்கும், ஆணிற்கும் தனிதனியான பழக்க வழக்கங்களை கற்பித்தது யார்? ஆணிற்கு தனி ஒழுக்கம், பெண்ணிற்கு கூடுதல் ஒழுக்கத்தையும் கற்பித்தது யார் குற்றம்? பெண்ணை பொருளாக மட்டுமே பாவிக்கக் கற்றுக் கொடுத்த இந்தக் குடும்பம், சக உயிராக பார்க்கக் கற்றுக் கொடுக்கவில்லையே. சினிமா, ஊடகம், பத்திரிகை என சமூக உறுப்புகள் அனைத்தும், பெண்ணின் உடலை கவர்ச்சியாக பாவிக்கத்தானே கற்றுத் தருகின்றன. மறு புறமோ, பெண்களுக்கு தாலி, கற்பு, கலாச்சாரம், பதி பக்தி என வகுப்பு எடுக்கின்றன. நம் சமூகத்தின் இந்த முரண்பாட்ட பார்வைதான் இது போன்ற பாலியல் வக்கிரங்கள் நடைபெற தூண்டிவிடுகின்றன. இது போன்ற காரணிகளை ஆராயாமல் மரணதண்டனை கொடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு வராது.

வட இந்திய இளைஞர்கள்
 
இன்று பெரும்பாலும் குலை நடுங்க வைக்கும் சம்பவங்கள் அனைத்தையும் செய்வது வட இந்திய இளைஞர்கள். தமிழகம் போன்ற மாநிலங்களில் வட இந்தியர்கள் அடித்தட்டு வேலைக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர். அரசு இவர்களுக்கு முறையான கல்வியையோ, வேலைவாய்ப்பையோ வழங்குவதில்லை. இதனால் இவர்கள் குடிபெயரும் மாநிலங்கள் அனைத்திலும் பூர்விக குடிகளால் அந்நியப்படுத்தப்படுகின்றனர். இவர்களில் பலர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மைதான். அதே சமயம் பல குற்றங்களில் காவல்துறையினரால் வட இந்திய இளைஞர்கள் திட்டமிட்டு குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர். வட இந்திய இளைஞர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கோ, அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்வதற்கோ அமைப்புகள் இல்லை.

உமா மகேசுவரி வழக்கில் கூட, காவல்துறையினரின் குற்றப் பத்திரிக்கை சற்று குழப்பமாகவே இருக்கிறது. குற்றவாளி தப்பிக்க வைக்கப்படுகிறாரோ என்கிற எண்ணம் எழுகிறது. வட இந்திய இளைஞர்களை குற்றவாளிகளாக காட்ட முனையும் காவல்துறை, தமிழக நலனை சுரண்டும் வட இந்திய பனியா முதலாளிகளுக்கு வால் பிடிக்கிறது. மார்வாடிகளின் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட தமிழர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எத்தனை கந்து வட்டி மார்வாடிகளை காவல்துறை கைது செய்திருக்கிறது.

உடனடிக் கடமைகள்

உடனடி தேவை பாலியல் கல்விதான். பாலியல் கல்வியை புகட்டினால் பண்பாடு போய்விடும் என்று பதறும் ஆசாமிகள் பாலின சமத்துவத்திற்கு எதிரானவர்கள். 12 வயதிலிருந்தே பாலியல் கல்வியை துவங்கினால்தான் ஆணிற்கும், பெண்ணிற்கும் 16 வயதிலிருந்தாவது, எதிர் பாலினரை மதிக்கின்ற பண்பு வரும். பெண்களின் மாதாந்திர பிரச்சனை, உடலுறவு குறித்த தெளிவான புரிதல் எந்த ஆணிற்கும் இருப்பதில்லை. முறைப்படுத்தப்படாத ஆணின் அறிவு வக்கிர பாதைக்கு செல்கிறது. ஒரு புறம் நுகர்வு கலாச்சாரம் பாலியல் வேட்கையை உச்சபட்சமாக தூண்டி விடுகிறது. மறுபுறம் அடிப்படை வாதம் பெண்ணை வீட்டிற்குள் பெட்டி பாம்பாக அடைக்க பார்க்கிறது. இந்த இரண்டு ஆயுதங்களையும எதிர்கொள்ளும் வல்லமை படைத்த போராளியாக ஒவ்வொரு பெண்ணும் மாற வேண்டும்.அப்போதுதான் உமா மகேசுவரிகளை நம்மால் காப்பாற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *