காலையில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் மாலையில் பூசாவிற்கு …?

சந்தியா இஸ்மாயில்

பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு அறிக்கை!

 காலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண்ணை மாலையில் எவ்வித மருத்துவ உதவியும் வழங்காது புகையிரதத்தில் பூசாவிற்கு கொண்டு சென்றமையானது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் பெண்கள் உரிமைகள், மேம்பாடு பற்றி பெருமை பேசி வருகின்றது. என்று குற்றம் சாட்டி பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு,
 
இலங்கையில் மூன்று தசாப்தகாலத்திற்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்த காலத்தில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அடிக்கடி இடம்பெற்று வந்த திடீர் இராணுவ சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள், வகைதொகையற்ற கைதுகள் என்பன, 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து குறைந்திருந்தன. ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற  திடீர் இராணுவ  சுற்றிவளைப்புகள், வகை தொகையற்ற கைதுகளினால், வடமாகணத்தில்  மீண்டும் பதட்ட சூழல் தலை தூக்கியுள்ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, உள்நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக இல்லாது ஒழிக்கப்பட்டது என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது புலிகள் மீள்எழுச்சி பெறுவதாகக் கூறி இராணுவம் மீண்டும் ஆங்காங்கே  சுற்றிவளைப்புகள், தேடுதல் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது. இந்த இராணுவ நடவடிக்கைகளின்போது, ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் என வயது, பால் வித்தியாசமின்றி பலரையும் இராணுவம் கைது செய்து வருகின்றது. அந்த வகையில் சென்ற மார்ச் மாதம் 11 ஆம் திகதியன்று, சர்மிளா கஜீபன் என்ற 26 வயது, கர்ப்பிணிப் பெண்ணைக் கைது செய்து மறுநாள் 12 ஆம் திகதி ரயில் மூலமாகப் படயினர் கொழும்பில் உள்ள குற்றத் தடுப்புப் பிரிவிற்கு (நாலாம் மாடி) கொண்டு சென்றனர். அந்த வேளை, இந்தத் திடீர் கைது மற்றும் விசாரணைகள் காரணமாக மூன்று மாதக் கர்ப்பமாக இருந்த சர்மிளாவின் கரு 14 ஆம் திகதியன்று காலை கலைந்து விட்டது.
 
இருப்பினும் அந்த நிலைமையில் சாதாரணமாக  ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகளோ, மருத்துவ கவனிப்போ அவருக்கு வழங்கப்படவில்லை. மாறாக அதே நிலைமையில் கொழும்பில் இருந்து மீண்டும் ரயில் மூலமாக, அவரை பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு சென்றுள்னனர். பூஸா முகாமி;ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து அவர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். சந்தேகத்தின் அடிப்படையிலேயே சர்மிளா கஜீபனைக் கைது செய்துள்ளதாகக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கோபி என்ற நபரின் மனைவியே சர்மிளா என்றும், கோபி இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காகவே சர்மிளாவைத் தாங்கள் கைது செய்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், தனது கணவனுடைய பெயர் கஜீபன் எனவும், அவர் கிளிநொச்சி இயக்கச்சியைச் சேர்ந்தவர் எனவும், சவூதி அரேபியாவில் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பியவர் என்றும் சர்மிளா கூறுகின்றார். இவ்வாறே கஜீபனின் தாயாராகிய செல்வநாயகி இராசமலர் என்ற 63 வயது பெண்ணையும் கைது செய்து பூஸா முகாமில் தடுத்து வைத்திருக்கின்றனர். தனது மகனுடைய பெயர் கோபி அல்ல என்றும், கஜீபன் என்பவரே தனது மகன் என்றும் அவரும் கூறுகின்றார். செல்வநாயகி இராசமலர் யுத்த காலத்தில், ஷெல் வீச்சுச் சம்பவம் ஒன்றில் காயமடைந்துள்ளார். இவருடைய உடலில் ஈரலுக்கு அருகில் ஷெல்  துண்டு ஒன்று எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது. அறுவைச் சிகிச்சையின் மூலமாகவும் அதனை அகற்ற முடியாது என்ற காரணத்தினால், அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ உதவி அவசியமாக இருக்கின்றது. அப்படி இருந்தும் பூஸா தடுப்பு முகாமில் இவருக்கும் எவ்வித மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேபோன்று மார்ச் மாதம் 13 ஆம் திகதி கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கோபி என்ற சந்தேக நபரை, தனது வீட்டில் தங்க வைத்திருந்தார் எனக் கூறி கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியும் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர், காணாமல் போயுள்ள தனது மகன்மாரைத் தேடி அலைந்து பலரிடமும் இதுபற்றி முறையிடுகின்ற  ஒரு தாயாராவார். அவர் கைது செய்யப்பட்ட அன்று அவருடைய வீட்டை, இராணுவம் சுற்றி வளைத்தபோது, சந்தேக நபரான கோபி என்பவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் கைத்துப்பாக்கியால் சுட்டு, காயப்படுத்தியதாகவும், அவரையே ஜெயக்குமாரி தனது வீட்டில் தங்க வைத்திருந்தார் எனறும் ஜெயக்குமாரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
 
ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவும் (13 வயது) தாயாருடன் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளின் மூலமாக கிளிநொச்சியில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஜெயக்குமாரியின் வீட்டில் இருந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை. இந்தப் பெண்கள் தவிர, வேறு பலரும் அண்மைக் காலமாக சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு முகாம்களிலும், குற்றத்தடுப்புப் பிரிவுகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோபியின் காதலி என்ற சந்தேகத்தின் பேரில் நிதர்சனா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறவினர்களிடம் இருந்து அதிக பணத்தை, ஏன் இவர் பெறுகின்றார் என்று வினா எழுப்பி, இவர் கைது செய்யப்பட்டு;ள்ளார்.
 
யுத்தத்தினால் கணவன் மற்றும் சகோதரர்களை இழந்த 22 வயதுடைய பெண்ணாகிய  இரவீந்திரன் வானதி என்பவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார். சந்தேகத்தின் பேரில் கைதான இந்தப் பெண் உடல் மற்றும் உளரீதியில் பெரிதும் பாதிப்படைந்துள்ளார். எனினும் அவருக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் அனைவரும், நேரடியாக எந்தவிதமான சட்டவிரோதச் செயற்பாடுகளிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தமது குடும்ப அங்கத்தவர்களான ஆண்கள் மீது இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்தப் பெண்களின் உடல் மற்றும் உளரீதியான நிலைமையை, கைது செய்தவர்களும், அவர்களைத் தடுத்து வைத்திருப்பவர்களும் கருத்தில் கொள்ளவில்லை. அவ்வாறு கவனத்திற்கொண்டு, அவர்களுக்கான மனிதாபிமானச் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக சர்மிளா கஜீபன் என்ற மூன்று மாத கர்ப்பிணிப் பெண் குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணையின் போது, மன உளைச்சலுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகியதன் காரணமாகவே அவருடைய கரு கலைந்துள்ளது. ஆயினும் மனிதாபிமான ரீதியில், அவருக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை. அது மட்டுமல்லாமல், விசாரணைகளின் போது ஆண் அதிகாரிகள் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் பெண்களிடம் அநாகரீகவார்த்தைப் பிரயோகம் செய்வதுடன், அவர்களை ஏசுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம், சட்டத்திற்கு அமைவாக அவர்கள் நடக்கத் தவறியிருப்பதுடன், அடிப்படை மனித உரிமைகளையும் மீறியுள்ளனர். சர்மிளா கைது செய்யப்பட்டபோது, அவருடைய வீட்டைச் சுற்றி வளைத்து நின்று விசாரணை நடத்திய சிவில் உடை அணிந்த இராணுவத்தினரிடமும் பொலிசாரிடமும் ‘நீங்கள் யார்? பொலிசார் எனில் அடையாள அட்டையைக் காட்டுங்கள்;’ என அவர்  கேட்டபோது, அவரை அவர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளினால் ஏசி, மிகவும் அநாகரிகமாக நடந்துள்ளார்கள்.
 
இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் அது தொடர்பான தீர்மானங்களும் விளைவுகளும் ஆண்களினாலேயே ஆரம்பிக்கப்பட்டு, ஆண்களினாலேயே முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், யுத்தத்தின் விளைவுகளையும் அதன் அதன் தாக்கத்தையும், இன்று வரை பெண்களே அனுபவித்து வருகின்றார்கள்.
அந்த வகையில் தற்போது கூட ஆண்களில் ஏற்படுகின்ற சந்தேகம் மற்றும் குற்றங்களுக்காக அவர்களைச் சார்ந்து வாழுகின்ற பெண்களே கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இங்கு கைது செய்யப்பட்டுள்ள பெண்களை, அதிகாரிகள் மனிதர்கள் போல நடத்துவதாகத் தெரியவில்லை. காலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண்ணை மாலையில் எவ்வித மருத்துவ உதவியும் வழங்காது புகையிரதத்தில் பூசாவிற்கு கொண்டு சென்றமையானது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் பெண்கள் உரிமைகள், மேம்பாடு பற்றி பெருமை பேசி வருகின்றது. அத்துடன், வருடந் தோறும் பெண்கள் தினத்தை வெகு கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றது. இந்த நிலையில் நாட்டினிலே பெண்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
 
இன்று இலங்கையில் தாயுடன் பிள்ளைகள் சேர்ந்து வாழமுடியாத துர்ப்பாக்கியமும், பிள்ளைகளைக் காணாது தேடுகின்ற தாய்மாரும், கணவனைக் காணவில்லை என நீதிகேட்கின்ற மனைவிமாரும், குடும்ப உறுப்பினர்களுக்காக குற்றம் சுமத்தப்பட்டு கொடுமைகளைத் தாங்குகின்றவர்களுமாக, பெண்கள்  சொல்ல முடியாத வேதனைகளை அனுபவிக்கின்றார்கள். இவ்வாறான, அத்து மீறிய ஏதேச்சதிகாரமான செயற்பாடுகளைப் பெண்கள் மீது திணிப்பதை பொறுப்பு வாய்ந்த அதிகராரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன், இராணுவமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு பெண்களை விசாரணை செய்வதையும் கைவிட வேண்டும். பெண்களைக் கைது செய்யும்போதும், விசாரணை செய்யும்போதும், சட்ட ரீதியான செயற்பாடுகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாததாகும்.  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *