உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக இன்று டிஜிபியிடம் செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் குழு அளித்த கடிதம்

கவின்மலர்

சிறுசேரி சிப்காட்டில் உள்ள டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த உமாமகேஸ்வரியின் துயர்நிறைந்த கொலை நடந்துள்ள இந்த சூழ்நிலையில் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள ஊடகவியலாளர்களும், வழக்கறிஞர்களும், மென்பொருள் பணியாளர்களும், பெண்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்களுமாகிய நாங்கள் பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்…

இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக காவல்துறை இந்த வழக்கை சிஙி-சிமிஞி விசாரணைக்கு மாற்றியிருப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கின் விசாரணையை வெளிப்படையாகவும், வழிமுறைகளை சரியாகவும் பின்பற்றி, பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் முன் வைக்கின்றோம். விரைவான காவல்துறை, நீதிமன்ற விசாரணையை வரவேற்கும் அதே நேரத்தில் குடிமக்களின் அடிப்படை உரிமையான, நேர்மையான விசாரணை வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும்.

இந்த வழக்கில் பெண்ணை காணவில்லை என்ற புகார் பிப்ரவரி 14 ஆம் திகதியே கொடுக்கப்பட்டிருந்தாலும், புகாரின் முக்கியத்துவத்தை உணர்ந்து உள்ளூர் காவல்துறை அதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காதது போலவே தெரிகின்றது. அந்த பெண்ணின் உடலை கண்டு பிடித்த பின்னர் தான் விசாரணை சற்று வேகமாக செல்கின்றது, அதே போல அந்த பெண் பணிபுரிந்த டாட்டா கன்சல்டன்சி நிறுவனமும் சரி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமும் அந்த பெண்ணின் உடலைக்கண்டு பிடிக்கும் வரை எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை, அதே போல தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணைக் காணவில்லை என்று காவல்துறையில் அந்த பெண்ணின் அப்பா புகாரளித்த பின்னரும் அவர்கள் எந்த வினையும் ஆற்றாமல் அமைதியாக இருந்தது போலவே தெரிகின்றது.

உமா மகேஸ்வரியின் உடல் சிப்காட் வளாகத்தில் உள்ள மையச் சாலைக்கு மிக அருகிலுள்ள புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய அச்சத்தையும், அரசினால் தொழிற்சாலை வளர்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அரசினால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஒரு வளாகத்தில் உள்ள பாதுகாப்பு பற்றிய முக்கிய கேள்விகளையும் எழுப்புகின்றது..

பிப்ரவரி 24 அன்று இந்த வழக்கை சரியாக விசாரிக்கக் கோரியும்,பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் நடந்த ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் குறிப்பாக நாவலூர், சிறுசேரியில் வீடு எடுத்து தங்கியிருக்கும் பெண்கள் சிப்காட்டிலிருந்து நாவலூர், சிறுசேரி செல்லும் சாலைகளும், சிப்காட்டின் உள்ளே உள்ள சாலைகளும் வெளிச்சமற்று இருட்டாகவே இருக்கின்றன,

இதனால் அலுவலகத்தில் இருந்து இரவு நேரங்களில் வேலை முடித்துவிட்டு செல்லும் பெண்களும், ஆண்களும் பாதுகாப்பற்றே உணர்கின்றார்கள் என கூறியது இங்கே
குறிப்பிடத்தக்கது. சிப்காட் நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு வளாகத்தினுள்ளும், மற்ற பகுதிகளுக்கு செல்லும் சாலைகளிலும் போதிய வெளிச்சம் ஏற்படுத்தித் தரவேண்டும். அதேபோல காவல் துறையும் இந்த சாலைகளில் போதிய வெளிச்சம் உள்ளதா என்றும், தேவையான இடங்களில் காவல்துறை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து உறுதியளிக்க வேண்டுகின்றோம். இந்த பணிகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலவரம்பிற்குள் நிறைவேற்றப் படவேண்டும்.

தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு மிகவும் உதவிகரமான அரசாக உள்ளது, அதே போல வரி செலுத்தும் குடிமக்களாகிய நாங்கள் தகவல் தொழில் நுட்பதுறை நிறுவனங்கள் எல்லாம் அதிக
சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று கோருகின்றோம். இந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பல்வேறு சமூகநல செயல்திட்டங்கள் நடந்து வருவதை எங்களுக்கு தெரிந்த போதிலும், பணியிடப்பாதுகாப்பு தொடர்பாக இன்னும் அதிக செயல்பாட்டை நிறுவனங்களிடமும், அது நடைமுறைப் படுத்தப்படுகின்றதா என்பதை அரசும் உறுதிப் படுத்தவேண்டும் என்று கோருகின்றோம்.
பணியிடம் என்பது வேலை பார்க்கும் அலுவலகத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை, அங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு செல்லும் பாதைகளும் அதில் அடங்கும் என்பதையும் இங்கே தெளிவுபடுத்த விரும்புகின்றோம்…
இந்த நேரத்தில் பின்வரும் கோரிக்கைகளை நாங்கள் வைக்கின்றோம்:
அ. அலுவலக வாகனங்கள் மைய, போதிய வெளிச்சமுள்ள சாலைகளில் மட்டுமே செல்ல வேண்டும், இதை தவிர்த்து வேறு ஆள் நடமாட்டம் இல்லாத,தனியான சாலைகளில் செல்வதில்லை என்பதை அலுவலகங்கள் உறுதிப் படுத்தவேண்டும். இந்த வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சில வழிமுறைகளையும் அலுவலகங்கள் அமல் படுத்தவேண்டும்.பணியாளர் பாதுகாப்பிற்கு ஏதேனும் நடந்தால் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என அரசு அலுவலகங்களுக்கும், வாகன ஏற்பாட்டாளர்களுக்கும் உரிய அறிவிப்பு கொடுக்கவேண்டும்.

ஆ. எல்லா தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப வளாகங்கள், வளாகங்களுக்கு உள்ளும் அரசு போக்குவரத்து கண்டிப்பாக இருக்கும்படி செய்யவேண்டும். இந்த பேருந்துகள் சரியான கால இடைவெளியில் இயக்கப்படவேண்டும், பேருந்து நிறுத்தங்களும் சரியான இடைவெளிகளில் இருக்கவேண்டும்.தொடர்ச்சியான, நம்பிக்கையான அரசு போக்குவரத்தே சாலைப்பாதுகாப்பின் அடிப்படையாகும்.மேலும் அரசு போக்குவரத்தில் பணியாற்றுபவர்கள் மக்களுக்கும், அரசிற்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் உள்ளதால், போக்குவரத்து பாதுகாப்பான ஒன்றாக இருக்கும்.
இறுதியாக போக்குவரத்து தொடர்பாக இன்னொன்றையும் அலுவலகங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும், பெரும்பாலான ஊழியர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்கள் வீட்டிற்கு செல்ல ஒரு மணியிலிருந்து, இரண்டு மணிநேரம் கூட ஆகின்றது, அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அவர்கள் எந்த நேரத்திற்கு வீட்டைச் சென்றடைகின்றார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். இதை மனதில் வைத்துக்கொண்டு உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பான பயண ஏற்பாடுகளை அலுகவலகங்கள் செய்யவேண்டும்.
சென்னை மாநகரகாவல்துறை ஆணையாளர் அவர்கள் பணியிடத்திலும், பொது இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக எல்லா மக்களும் கலந்துகொள்ளும் வகையில் ஒரு சந்திப்பு வைக்க வேண்டுமென்றும், அதில் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களிலிருந்தும், அந்த அலுவலக நிர்வாகத்திலிருந்தும், பெண்களை அதிக எண்ணிக்கையில் பணிக்கமர்த்தியுள்ள பல்வேறு சிறப்புபொருளாதார மண்டலங்களிலிருந்தும், பெண்கள் அமைப்புகள், சமூக உரிமை அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்து அவர்களது பொதுவான பிரச்சனைகள் தொடர்பாகவும், இந்த நகரத்தை எப்படி பெண்களுக்கும், ஆண்களுக்கும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனைகள் பெற்றால் அது சரியான வழி முறையாக இருக்கும்.

சம்பந்தப்பட்டவர்கள் இதிலுள்ள ஆலோசனைகளை சரியான முறையில் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.பெண்களின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் எந்த நடவடிக்கையும் பெண்ணின் வேலை செய்யும் உரிமையையும், அவளது சுதந்திரத்தையும், எங்கும் செல்லும் உரிமையையும் மறுத்து விடக்கூடாது. அதேபோல பெண்கள் வெளியில் செல்ல அதிககட்டுப்பாடுகள் விதிப்பதும், அவர்களது வாழ்க்கை முறையை மாற்றுவதும் நடந்து விடக்கூடாது.இதற்கு பதிலாக பொறுப்புணர்வுடன் கூடிய பெண்களுக்கும், ஆண்களுக்குமான பாதுகாப்பையே நாங்கள் கோருகின்றோம்.

V.Geetha, Writer
Oviya, Women Rights Activists
A. Marx, Civil rights activist
Ira.Jawahar, Journalist
Ambai, Writer
Arul Mozhi, Advocate
Gnani Sankaran, journalist
Prof. Saraswathi, Human Rights Activist
A.Mangai, Writer/Theatre Activist
Revathy, Film Maker/Writer
Kavin Malar, Writer/Journalist
Kavitha Muralidharan, Journalist
Rajini, Advocate
Malathi Mythri, Writer
kalpana karunakaran, Activist
Kutty Revathy, Writer
Uma Sakthi, Writer/Journalist
Ramya kannan, Journalist
Manoharan, Advocate
Suganthi, Journalist
Sugitha, Journalist
Nalini Rajan, Academic
Geetha Narayanan, Development Professional
Sreedevi Arun, Journalist
Vani Doraisamy, Journalist
Priyamvadha, journalist
Chandra, Writer
Shreesha Reddy, Journalist
Jeny Dolly, Media person/Activist
Senthil, Co-ordinator-Save Tamils Movement
Parimala , Save Tamils Movement
Lakshmi Subramaniyan, Journalist
A.Kumaresan, Journalist
Geetha Ramaseshan, Advocate
Karhtiykeyan, Advocate
Parameswari, Writer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *