பல்லிலிப்புக்கள் – இரண்டு

     கேயெல்.நப்லா (நப்லி) (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை)

01

    கால் நீட்டித் தூங்கும்

    கருத்தியல்கள் நடுவே

    கறிவேப்பிலை வாசம்

    நாசியுடன் கலந்து

    அடிவயிற்றில் பசியைச் சுரக்கும்…

  அடுப்பில் வேகும்

    அரிசியை ஒரு தரம்

    அழுத்தமாய்ப் பார்த்து வெளிவரும் போது…

    அடிவயிறு சுரந்தவன் ஒருவன்

    அளந்தான்…

    பார்வையில் இருந்த ஏக்கம்…

    சில்லறை சிணுங்கிய கைகளில் திணித்து

    ‘போய் வா’ என்றார் தலைமை…
 

    பல்லிலித்தான் –

    கறிவேப்பிலை வாசம் துளைத்ததோ என்னவோ…

    இருந்தும் என்ன பயன்….

    கால் நீட்டித் தூங்கும் கருத்தியல்கள் நடுவே…

       02

    யாரென்று இதுவரை அறியாத ஒருவர்…

    வா வென்று அழைக்கும் வார்த்தைக்கு முன்னே…

    சோ வென்று பெய்தார் மழையாகிப் போனோம்…

    காட்சிக்கு நடுவே

    கைதட்டல் சிரிப்பும்

    அலுமாரிக்குப் பின்னால் மூச்சடைத்தது…

    கர்ஜிப்பு என்று கரைந்தது நிமிடம்

    கேட்டதெல்லாம் ஊளையிடும் சத்தம் தான்…

    பதிலுக்கு என்ன –

    பல்லிலித்தார் தலைமை…

    பத்திரப்படுத்திய காகிதத்தை

    குளிர்பானமாக்கி

    ‘பெருமை’யை காத்தார்…

 
   வெந்தது அரிசி

    மனமில்லை

    மனமில்லை

    கறிவேப்பிலை வாசம் கசந்தது……

“காசிருக்க வேண்டும்

    இல்லையென்றால்

    நக்கித்திண்ணி நீயென்றார்”

    அறிவுரைகள் எல்லாம் தற்கொலை முயற்சி.

    தூங்கிக்கிடக்கும்

    கருத்தியல்கள் நடுவே

    விருந்தாளியும் பிச்சைக்காரனும்…
      

    இருந்தும் என்ன பயன்…

    கழிவு தான் கறிவேப்பிலை…

      

 

       

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *