அனாரின் (பொய் ) அவதூறு.

றஞ்சி (சுவிஸ்)


„காலச்சுவடு தொடரும் பயணம் – காற்றின் பிரகாசம்“ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழ்-161 இல் அனார் எழுதிய கட்டுரையில் என்னைப்பற்றியும் ஊடறு பற்றியும் இவ்வாறு எழுதியுள்ளார்.

“ ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறு அமைப்பு வெளியிடுவதற்குக் கேட்டிருந்தது. சேரனிடம் முன்னுரை பெற்று, தொகுப்பைக் கொண்டுவர வேண்டும் என்பது எனக்கிருந்த நீண்ட நாள் ஆசை. அது சரிநிகர் ஊடாகவும் ‘மரணத்தினுள் வாழ்வோம்’ தொகுப்பினூடாகவும் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு. எனவே ஊடறு றஞ்சி தன் அன்றைய அரசியல் நிலைப்பாட்டால் சேரனிடம் முன்னுரை வாங்கினால் என்னுடைய புத்தகத்தை அவர்கள் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்தார்.இந்தக் கட்டளையை மீறினால், ஊடறுவிலிருந்து என்றைக்குமாக என்னைத் தள்ளி வைப்பதாக றஞ்சி அன்பாக மிரட்டினார். நானும் அன்பாக விலகிக்கொண்டேன்.“

இதை வாசித்தபோது அதிர்ச்சியடைந்தேன். காரணம் இதில் சொல்லப்பட்டது அத்தனையும் பொய் என்பதுதான்.

1.   அனாரின் எந்தவொரு கவிதைத் தொகுப்பையும், எந்தத் தருணத்திலும் ஊடறு வெளியிடப் போவதாக  கேட்கவேயில்லை. அவரும் எம்மிடம் அது பற்றிப் பேசவேயில்லை.

அனார்  பிரபல்யமான பதிப்பகங்களினூடாகத்தான் தனது கவிதைத் தொகுப்பைக் கொண்டு வரவேண்டும் என தம்மிடம் கூறியிருந்ததாக ஊடறுவின் சக தோழி ஆழியாள் கூறுகிறார். (அனார் ஆழியாளுக்கு எழுதிய கடிதம் இதற்குச் சாட்சி)

 2.   சேரனிடம் முகவுரை வாங்கினால் ஊடறு அனாரின் தொகுப்பை கொண்டுவராது என்று கட்டளை (?) இட்டதாக சொல்வதும் முழுப்பொய். இன்னும் மேலே போய் இந்தக் கட்டளையை மீறினால் (?) ஊடறு தள்ளிவைக்கும்(?) என புனைந்து ஒரு அவதூறையே செய்திருக்கிறார். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
ஊடறுவை சேரனுக்கு எதிராய் நிறுத்தும் மலிவான நோக்கம் தனது தொகுப்பை காலச்சுவட்டினூடாக வெளிக்கொணரத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் 2008 இல் அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்த பிறகே அதற்கான முகவுரையை சேரன் எழுதியிருந்தது எமக்குத் தெரியும்.

 நாம் முரண்பாடு உடைய அரசியல் உள்ளவர்களுடன் ஒரே மேடையில் பேசுகிறோம். குறிப்பிட்ட வேலைத்திட்டங்களில் அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றோம். அதேபோல் ஊடறுவில் எழுதும் எல்லோருமே பல்வேறுபட்ட அரசியல் அடையாளங்களுடனும் பல முரண்பட்ட கருத்துக்களுடனும் உள்ளவர்கள் தான்.  இன்றுவரை இவர்கள் எல்லோரும் ஊடறுவில் ஏதோவொரு பொதுப்புள்ளியில் இணைந்து எழுதி வருகின்றார்கள். இப்படியிருக்க சேரன் முகவுரை எழுதுவது பற்றியோ அல்லது வேறு யாராவது எழுதுவது பற்றியோ அனாருக்கு அறிவுறுத்த அல்லது (அவர் பாசையில்) “கட்டளையிட“ நாம் யார்?

கடந்த 6 வருடங்களுக்கு முன் நான் சொன்னதாக ஒரு கட்டுக்கதையை என் மீதான குற்றச்சாட்டாக அனார் உருவகித்திருப்பது காரியத்தனம் சார்ந்தது அல்லது காழ்ப்புணர்வு சார்ந்தது. கடந்த 6 வருடங்களாக அனாரின் பேட்டிகள், கவிதைகள், குறிப்புகள் என எல்லாத் தளங்களிலும் வெளிவந்தபோது வராத இந்த அவதூறு இப்போ வந்திருக்கிறது.

 
ஒருவேளை அனாரின் காழ்ப்புணர்வு இங்கிருந்து தொடங்கியுமிருக்கலாம்.

–    2007ம் ஆண்டு எம்மால் வெளியிடப்பட்ட மலையகப்பெண்களின் கவிதைத்தொகுபப்பான „இசைபிழியப்பட்ட வீணை“ இல் இடம்பெற்ற ஜே. அன்னால் குளோரி“ என்ற மலையகக் கவிஞையின் கவிதை தன்னுடைய கவிதை வரிகளை கொண்டிருக்கின்றது என்று எம்முடன் வாதிட்டார். அந்தக் கவிதையில் வந்த வரிகள் தன்னுடைய கவிதை வரிகள் என குற்றம் சாட்டினார். அத் தொகுப்புக்காக கவிதைகளை ஊடறுவுக்கு சேகரித்து அனுப்பிய தோழர் வே. தினகரனுக்கும் அனார் தொலைபேசியில் இதுபற்றி முறையிட்டு விமர்சித்துள்ளார்.

ஆனால் அந்தக் கவிதை பற்றி நாம் ஆராய்ந்தபோது, மலையகக் கவிஞை ஜே. அன்னால் குளோரி“ 2003 இல் அந்தக் கவிதையை எழுதி அது மலையகப் பத்திரிகையில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது என அறிந்தோம். இதை நாம் அனாருக்கு தெரியப்படுத்தியுமிருந்தோம். அனாரின் தொகுப்பு ‘ஓவியம் வரையாத தூரிகை’ 2005 இல் வெளிவந்திருந்தது.  மலையகக் கவிஞை ஜே. அன்னால் குளோரி“ தன்; கவிதையை 2003 இல் எழுதியிருக்கிறார் என நாம் அனாருக்கு அறிவித்த போது கோபமாக “அப்போ நான் பார்த்து எழுதியதாக நினைக்கின்றீர்களா?“ என எம்முடன் விசனம் கொண்டார்.

 இது நிகழ்ந்தது 2007இல். ஆனால் அந்த நிகழ்வுக்குப் பின்னரும் அனார் தனது தொகுப்பிற்கான கவிதை விமர்சனங்களை பிரசுரிப்பதற்காக (தனது „அன்பாக விலகிக்கொண்டதையும்“ மீறி) ஊடறுவுக்கு அனுப்பியிருந்தார். 2008 இல் இதே கவிதைத் தொகுப்புக்கு ஓட்டமாவடி அரபாத்தினாலும், மாரிமகேந்திரனாலும் எழுதப்பட்ட விமர்சனங்களை ஊடறுவில் பிரசுரிக்குமாறு அவரேதான் அனுப்பியும் வைத்திருந்தார். எல்லாவற்றையும்; நாம் தொடர்ந்து ஊடறுவில் பிரசுரித்துள்ளோம். அந்த தொடுப்புகள் (லிங்ஸ்) கீழே உள்ளன.

அத்தோடு அனார் 2008ம் ஆண்டு வரை ஊடறுவுக்கு எழுதி அனுப்பிய கவிதைகள் அனைத்தும் ஊடறுவின் கவிஞைகள் பகுதியில் இன்றும் உள்ளது. அதன் தொடுப்பும் கீழே உள்ளது.

இந்தக் கட்டுக் கதையையும் அவதூறையும் அனார் புனைந்திருப்பதற்கு நாம் மௌனமாக இருந்துவிடலாம். ஆனால் அதை நாம் மறுக்காமல் இருப்பது என்பது ஏற்றுக்கொள்வதுதான் என்று பொருள்படவும்கூடும் என்பதால் இந்த மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கவேண்டி ஏற்பட்டிருக்கிறது.

தொடுப்புக்கள்

அனார் கவிதைகள் 2008- FEb

ஓவியம் வரையாத தூரிகை… அறிமுகம்:  2005

அனாரின் “ஓவியம் வரையாத தூரிகை” கவிதை நூலுக்கு வடகிழக்கு மாகாண அமைச்சின் இலக்கிய விருது — தகவல் : – ஏ. எம் அஸீம் (இலங்கை) 2006

எனக்கு கவிதை முகம்’  அறிமுகம்  2007

அனாரின் மனக்குகை ஓவியங்களை முன்னிறுத்தி  சில  குறிப்புகள்:- ஓட்டமாவடி அறபாத் (இலங்கை) 2008
எனக்கு கவிதை முகம்’ அனாரின் நவீன கவிதைகள் பற்றிய சில ஞாபகக் குறிப்புகள் – மாரி மகேந்திரன் (இலங்கை)2008

சொற்களால் நிறமழிக்கும் உரையாடல்(அனார், சித்ரலேகா)

பேட்டியும் போட்டோ ஒப்பர்சூனிட்டியும்

பேட்டியும் போட்டோ ஒப்பர்சூனிட்டியும் 2

14 Comments on “அனாரின் (பொய் ) அவதூறு.”

  1. என்ன றஞ்சி அக்கா எல்ர்ரக்கும் உங்க மேல ஒரு இது…

  2. ஒருவரின் எண்ணங்கள் இன்னொருவருக்கு உருவாகாது என்பதாகவும், உருவாகக்கூடாது என்பதாகனாரின் கருத்து இருக்கிறது.ல்’ இசை பிழியப்பட்ட வீணையில் ‘வந்துள்ள கவிதைகள் ஏலவே பல்வேறு பத்திரிக்கைகள்,இலக்கிய இதழ்களில் வெளிவந்தவையே.அதனை தொகுத்தனுப்பியது நான்.என்னளிவில் அனார் 6 வருடம்க்களின் பின் இப்பிரச்சினையை கிஇள்ப்பியது ஏன் எனப்புரிய வில்லை.

  3. 2010, ம் ஆண்டளவில் என நினைக்கிறேன். தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது, அனார் தனது கவிதைஒன்றை அல்லது அதன் சில வரிகளை ”இசை பிழியப்பட்ட வீணை” என்ற தொகுப்பில் சுரியகலா என்ற ஒருவரின் கவிதையாக வந்திருப்பதாகச் சொன்னார். அனாரின் கவிதையை கலா கையாண்டாரா அல்லது, மாறி நிகழ்ந்ததா அறியமுடியாத விசயம். குறித்த கவிதை வெளிவந்த மலையக இதழை அதன் ஆண்டுடன் இங்கு தருவதும், அனார் தான் எழுதி பிரசுரிக்கப்பட்ட ஆண்டை அதன் ஆதாரங்களுடனும் இங்கு முன்வைக்கும்போது, குறித்த பிரச்சினை முடிவடைந்துவிடும்.

    குறித்த தொகுப்பை வெளியிட்டவர்கள், அனார் குற்றஞ்சாட்டியதாகவும், அது ஏற்கனவே, வேறு இதழில் வந்திருப்பதாலும் பிரச்சினைக்குரிய கவிதையை தொகுப்பில் இணைத்ததாகச் சொல்லுவது நியாயமற்றது. தனது கவிதைக்கு வேறொருவர் உரிமைகொண்டாடுவதன் அசெளாகரிகம் பற்றி அனார் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு, ஆதாரங்களுடன் தொகுப்பாளர்கள் பொறுப்புக்கூறவேண்டும்.

    இப்போது, பொதுவெளிக்கு இந்தப் பிரச்சினை வந்திருப்பதால், இரண்டு கவிதைகளும் எழுதப்பட்ட (பிரசுரமான)காலகட்டத்தையும், இதழ்களின் பெயர்களையும் அறியத்தருவதே முறையாகும்.

  4. வே.தினகரன் அவர்களுக்கு..

    எத்தனை ஆண்டுகள் பிந்தி இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டிருக்கிறது என்பது ஒரு குறையல்ல. குறித்த பிரச்சினை தொடர்பான விசயம் பேசப்படுகிறது என்பதே முக்கியமானது.

    சுரிய கலாவின் கவிதை வெளிவந்த இதழை எதுவென்று அறியத்தருவது நல்லது. அதை ஸ்கேன் பண்ணி இங்கு பதிவிட்டாலும் அறியமுடியுமல்லவா? அதை ஏன் நீங்கள் செய்யவில்லை?

  5. இசைபிழியப்பட்ட வீணை தொகுப்பில் ”சூரியகலா” என்ற ஒருவரின் கவிதை இல்லையே…. பெயரை சரிபாருங்கள் ரஞ்சி.

  6. thanks றியாஸ் குரானா not a ஜே. அன்னால் குளோரி“

  7. அனாரின் புகாருக்கு தங்களின் விரிவான பதில் கண்டேன்.. உங்கள் நிலை நன்கு புரிகிறது .. உங்களின் அதிர்ச்சியும், நம்பிக்கை குலைக்க பட்டத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியது … அதே நேரம், ஏன் இப்படி அனார் சொல்ல வேண்டுமென்ற எண்ணமும், இதனால் வரும் பின் விளைவுகளை ஏன் அவர் யோசிக்கவில்லை என்ற எண்ணமும் , வருத்தபடுத்துகிறது..

    என்றாலும், சொல்லுபவர்கள் ஏதேனும் ஒன்றை சொல்லிக்கொண்டே இருக்கக்கூடும் . இது ஒரு புறம் உளைச்சல் .. மேலும், நடக்காத ஒன்றை நடந்தாய் ஒருவர் கூறுவதும், அதன் உண்மை நிலையை ஒருவர் விளக்குவதும் ,இலக்கிய உலகே இப்படித்தான் என்று எல்லோரும் பேசுவது மேலும் மெய்பிக்க படுகிறது.. ஏன் இப்படி நடக்க வேண்டும் என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.. என்றாலும் இப்படி நடந்து கொண்டேதான் இருக்கிறது.. சமீபத்தில் நானும் சில வருத்தங்களை கடந்தேன்…

    இதுவும் கடந்து போகும் .. நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்..

    நிறைந்த தோழமையுடன் ,

    இன்பா சுப்ரமணியன் ,சென்னை

  8. றஞ்சி மேடம்,

    2007ல் நீங்கள் அனாரை தள்ளி வைத்ததாக உங்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால் 2008ல் கூட தனது கவிதைகளை கட்டுரைகள் உங்களுக்கு அனுப்பியிருக்கிறார். ஊடறுவில் அவற்றை வெளியிட்டிருக்கிறீர்கள். அதற்கான ஆதாரங்களை முன் வைத்திருக்கிறீர்கள்.

    காலச்சுவடை வாழ்த்துவது அவரது விருப்பம். அதற்கு ஊடறு இணையத்தளத்தை கூண்டில் ஏற்றுவது நேர்மையான செயல் இல்லை.

    விஜய்

  9. http://anarsrilanka.blogspot.com/2013/05/httpwww.html அனார் முன்வைத்திருக்கும் ஆதாரம் இங்கே…

    அன்பின் ரஞ்சி அவர்களுக்கு..

    அனார் தனது ம(ர)ணப் பந்தல் என்ற கவிதை 2002 ஆம் ஆண்டு எக்ஸில் இதழில் முதன் முதலாக வெளிவந்த ஆதாரங்களை முன்வைத்திருக்கிறார். நீங்கள் ஆராய்ச்சி செய்து, 2003 ம் ஆண்டு, மலையக இதழில் வெளிவந்ததாக கண்டுபித்துவிட்டு, இசைபிழியப்பட்ட வீணை என்ற தொகுப்பில் இணைத்ததாக சுட்டிக்காட்டியிருந்தீர்களே, அதற்கான ஆதாரங்கள் எங்கே? காத்திருக்கிறோம்.

    மிகச் சரியான ஆதாரங்கள் இல்லாமல் ஒருவருடைய பிரதியை வேறொருவர் எழுதியதாக கருதி, தொகுப்பாக்கம் செய்வது மிகமோசமானதும் பொறுப்பற்றதுமான நடைமுறையாகும். அதுவும் குறித்த படைப்பாளி, அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தும் சுமார் 06 வருடங்கள் பொறுப்பில்லாமலிருந்தது மிகவும் கீழ்த்தரமான செயல் என்றே நினைக்கிறேன்.

    சில வேளை, 2002ம் ஆண்டுக்கு முன்னதாக ஏதாவது, சிற்றிதழில் ஏதாவதொரு பெயரில் யாராவது இந்தக் கவிதையை எழுதியிருப்பதாக நீங்கள் ஆதாரங்களை முன்வைத்தால் என்ன செய்வதென்று தெரியாததால், மேலும் எழுதவில்லை.

    அனாரின் குற்றச்சாட்டிற்கு நியாயமாக நீங்கள் பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும். அந்தப் புத்தகத்தின் தொகுப்பாளர் என்ற வகையில். இதையாவது ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். குறைந்த பட்சம் அதற்கு மன்னிப்பு கேட்க்கவாவது, உங்கள் இலக்கிய நாகரீகத்தில் இடம் இருக்கிறதா ரஞ்சி?

    இல்லை என்றால் அதற்கு என்னிடம் வேறு பதில் இருக்கிறது.

  10. அனாரின் ம(ர)ணப் பந்தல் கவிதையே பிரதிசெய்யப்பட்டு மலையக் கவிதைகள் என்ற தொகுதியில் வேறொருவரின் பெயரில் பிரசுரமாகி இருப்பதாக நம்பும்படியாக உள்ளது. அனார் கவிதையை எழுதிய காலமும், அவை பிரசுரமாகியதற்கான ஆதாரங்களையும் அவர் இணைத்துள்ளதைக் கவனத்தில் கொள்ளும்போது ஜே.அன்னல் குளோரி என்ற பெயர் உடைய அவள் அல்லது அவர் அதையே பிரதிபண்ணியது இலக்கியத் திருட்டு மாத்திரமன்றி அதனைக் கவனத்திற் கொள்ளாது பிரசுரம் செய்தது தொகுப்பாளர்களின் சந்தேகத்திற்கிடமற்ற தவறு. மேலும் அனார் அப்போது அதனைச் சுட்டிக்காட்டியும் பொருட்படுத்தவேண்டாம் என்று அவரிடம் கேட்கப்பட்டது கவிஞனை அவமதிப்பது.

  11. அனாரின் கருத்தின் உண்மைத்தன்மை பற்றி எதுவும் கூறமுடியாது .என்றாலும் எனக்கு நன்றாக நினைவு உள்ளது. ‘அன்னால் குளோரி’ என்றபெயரில் இலக்கிய இதழொன்றில் வெளிவந்த கவிதையைதான் நான் தொகுத்து அனுப்பினேன்.இதன் பொறுப்பு எனக்குறியது. றஞ்சி நான் தொகுத்தனுப்பியதை அச்சிட்டார். அந்த கவிதை அனாருடையது என்பது அதுவரை எனக்கும் தெரியாது. அனாரின் எல்லா கவிதைகளையும் படித்துப்பார்க்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கவில்லை. றஞ்சி மீது குற்றம் சாட்டுவதில் பின்னுள்ள அரசியல் எதுவென்று நான் அறிய விரும்பவில்லை. தவிரவும் அவரின் குற்றச்சாட்டை மறுத்து நிரூபிக்கும் பொறுப்பு எனக்கானது
    . அந்த இதழை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் இங்கு அதன் பிரதியை இணைப்பு செய்கிறேன். 6 வருடங்கள் பற்றி சொன்னது குறித்த கவிதை வெளிவந்த இதழை தேடிப்பிடிப்பதில் உள்ள சிரமம் கருத்திதான். ஒரு வெகுஜன ஊடகம் ஒன்றில் கருத்து பகிர்ந்து கொள்பவர்கள் கிடைக்கும்கருத்து சுதந்திரத்தை கொஞ்சம் நாகரிகமாகவும் பயன்படுத்திக் கொள்வது அவசியமானது

  12. அனாரின் கவிதை குறித்த பிரச்சினை தனிப்பட்ட ரஞ்சி – அனார் பற்றிய பிரச்சினை அல்ல. அது நமது பதிப்புத்துறையின் தொழின்முறை ஒழுக்கவிழுமியங்களுடன் தொடர்பு பட்டது. ஈழத்தின் பதிப்புத்துறை தொழிற்றுறைசார் விழுமியங்களுடன் வளர்க்கப்படாததால் அது பற்றிய புரிதலின்மையால் அல்லற்படுகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்.

    முன்னதாக பெயல் மணக்கும் பொழுது தொகுப்பிலும் சில தவறுகள் இடம்பெற்றிருந்தமை பலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம். தவறு எங்கே நடைபெற்றுள்ளது என்று கண்டடைந்து அதைத் திருத்திக் கொள்வதே இதைச் செம்மைப்படுத்துவதற்கான வழி.

    முதலாவது இக்கவிதைத் தொகுப்பைத் தொகுத்தவர்களுக்கும் பதிப்பித்தவர்களுக்கும் இதில் பொறுப்பிருக்கிறது. தினகரன் தான் தொகுத்தனுப்பியவற்றை ரஞ்சி அச்சிட்டார் என்கிறார். அவ்வாறாயின் தொகுப்பில் தொகுப்பாளராக தினகரனின் பெயர் இருந்திருத்தல் வேண்டும். தினகரன் குறிப்பிடுவதைப் போல ரஞ்சி அச்சிடுதல் பணியை மட்டும் மேற்கொண்டிருப்பின் ரஞ்சி; இதற்குப் பொறுப்பானவராக மாட்டார். தினகரன் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் தொகுப்பில் தொகுத்தவர்கள் பெயராக ரஞ்சி மற்றும் தேவாவின் பெயர்கள் தான் இருக்கின்றன. பதிப்பித்தவர்களும் அவர்களே. ஆகவே தொகுப்பின்படி தினகரன் அல்ல பொறுப்பு. ரஞ்சியும் தேவாவுமே.

    தொகுப்பாளர் மற்றும் பதிப்பாளர்கள் என்ற வகையில் ரஞ்சியும் தேவாவும் தொகுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைக்குரிய கவிஞர்களின் மூலப்பிரதியைப் பார்வையிட்டிருக்க வேண்டும். அக்கவிஞர்களிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். முறைப்படி அவை செய்யப்படாமையால் தான் இந்தக் குழறுபடி நேர வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்பதே என் அபிப்பிராயம்.
    இவ்வாறான தொகுப்புக்களை பதிப்பிக்கும் போது படைப்பின் உரிமையாளரான படைப்பாளியின் அனுமதி இன்றி எவ்வாறு தொகுத்தலும் பதிப்பித்தலும் சாத்தியம் என்பதனை தொகுப்பாளர்களும் பதிப்பாளர்களும் தான் விளக்க வேண்டும்.

    இதனால் தான் முன்னரே சுட்டிக்காட்டினேன் தொழிற்றுறை ஒழுக்கவிழுமியங்கள் கடைப்பிடிக்கப்படாததன் விளைவே இதுவென.

    இவ்வாறு சுட்டுவது மலையகப் பெண் கவிஞர்களின் கவிதைகளைப் பதிப்பிக்க வேண்டும் என தொகுப்பாளர்கள் எடுத்த முயற்சியை குறைத்து மதிப்பிடுவதாகனக் கருதத் தேவையில்லை. அவை அவசியம். ஆனால் அவை மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் தான் பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது.

    தொகுப்பிலுள்ள கவிஞர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தால் தினகரன் ஆறு வருடத்திற்குப் பிறகா என்று வருந்தத் தேவையுமில்லை. ரஞ்சி இப்படி மௌனம் காக்க வேண்டிய அவசியமுமில்லை.

    தொகுப்பாளர்களான ரஞ்சியும் தேவாவும் மௌனம் கலைத்து திறந்த மனத்துடன் உரையாடுவது எதிர்காலத்தில் அவர்கள் மட்டுமல்ல பதிப்புத் துறையில் ஈடுபடும் எவரும் மீpளவும் இவ்வாறான தவறுகளுக்கு ஆளாகாதிருப்பதற்கான வழியை ஏற்படுத்தும்.

    பிற்குறிப்பு: அனாரின் கவிதை தான் இசை பிழியப்பட்ட வீணையில் அன்னால் குளோரி பெயரில் பதிவாகியிருக்கிறது என்பதில் ஐயமேதுமிருப்பதாகத் தெரியவில்லை. அதற்கான ஒரு கவிஞையின் மனவுளைச்சலைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் திருடி என்கிற கடுமையான வார்த்தைளைப் பாவிப்பதை அனார் தவிர்த்திருக்கலாம். அன்னல் குளோரி உண்மையிலேயே மலையகப் பெண்ணாக இருந்து கவிதைகள் பால் நாட்டம் கொண்டவராக இருந்து அனாரின் கவிதையின் ஈர்ப்பில் தனது பெயரில் அதனைப் பதிவு செய்திருக்கலாம். அது தவறு தான். ஆனால் அவர் திருடியது ஒரு நல்ல கவிதையைத் தானே. அது நல்ல கவிதை எனப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்திருக்கிறது அல்லவா? மலையகத்திலிருந்து வந்த தொகுப்பு என்பதற்காக கவிதைகளாக ஆகாத ஒரு தொகுப்புக்கு முன்னுரை எழுதும் பக்குவம் பெற்ற அனார் இதற்காக இவ்வளவு கடினமான வார்த்தையைப் பாவித்து அவரைத் திட்டியிருக்கத் தேவையில்லை. அவருடனான உரையாடல் தன்தவறுக்கு தலை குனியவும் தனக்கான கவிதையை அவர் கண்டடையவும் வழி கோலியிருக்குமல்லவா?

    பல ஆரம்ப எழுத்தாளர்கள் இவ்வாறு செய்வதை நான் அவதானித்திருக்கிறேன்.

  13. Subashini Nallaiah
    அனார்தான் பதில் சொல்லியாச்சுதே.
    திருட்டு மோகினிகளே , உங்களுக்கெல்லாம் ஓர் இலக்கியம், ஊடறு…

  14. அனார் கவிதை எழுதுவதை விட விவாதத்தை திசைதிருப்பி விடுவதில் எவ்வளவு கெட்டிக்காரி என்று புரிகிறது (தேர்தலில் குதித்தால் கிழக்கு மாகண முதலமச்சராக வர சான்ஸ் இருக்கு).

    இங்கு விவாதம் ஊடறு ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை கொண்டு வருவது சம்மந்தமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *