சாதனைத் -தமிழ் மகளும் -சாதித் தலைவர்களும்

 புதியமாதவி மும்பை

நண்பர் குணாவின் மனைவி பள்ளி ஆசிரியர் என்பதால் பலர் அவரைத் தொடர்பு கொண்டு மாணவி பிரேமாவைக் குறித்து விசாரித்தார்களாம். எந்த ஊர்? என்று கேட்டிருந்தால் கூட பரவாயில்லை! எந்தச் சாதி என்பதை அறிந்து கொள்வதில் ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வம் காட்டியதாகச் சொன்னார். அதிலும் குறிப்பாக தமிழ்ச் சங்கம் வைத்து நடத்தும் தலைவர்கள் சிலரும் அடக்கம் என்றார்.  
 மாநகராட்சி பள்ளியில் படித்த தமிழ்ப் பெண் பிரேமா அகில இந்திய அளவில் சி.ஏ தேர்வில் முதல் மாணவியாக வந்து சாதனைப் புரிந்ததை ஊடகங்களும் குறிப்பாக தமிழ் பத்திரிகைகளும் கொண்டாடி முடித்துவிட்டன.

மும்பையில் புறநகர் தி.மு.க வினர்  உடனடியாக பிரேமாவைச் சந்தித்துரூபாய் ஒரு இலட்சம் பணமாகக் கொடுத்து செய்தி வெளியிட எப்போதும் எதிலும் போட்டிப் போடும் அதிமுக வும் சளைக்காமல் ரூபாய் 10 இலட்சம் வழங்க உடனடியாக உத்திரவு … (இந்த மாதிரி நாலு பேருக்கு நல்லது செய்வதில் உங்களின் போட்டி தொடர வாழ்த்துகிறோம்!!!)

சென்னையிலிருந்து பிரபல பத்திரிகையாளர், ஏற்கனவே மும்பையில் கொஞ்ச காலம் வாழ்ந்தவர் எப்படியோ என் கைபேசி எண்ணைப் பெற்று பிரேமா குறித்து ஸ்பெஷல் செய்தி ஏதாவது கிடைக்குமா? என்று கேட்டார்.
எனக்கு அவருக்கு எவ்விதத்திலும் உதவ முடியவில்லை என்பது கொஞ்சம்
வருத்தமாகத்தான் இருந்தது.

சிந்தனையாளர் சங்கமத்தின் கூட்டத்தில் கடந்த ஞாயிறு (3/2/13) காலையில் நடந்தக் கூட்டத்தில் நண்பர் கவிஞர் குணா அவர்கள் சொன்ன செய்தி தமிழினம் சாதி அடையாளத்தை எந்த அளவுக்கு தன் அடையாளமாகக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது.

நண்பர் குணாவின் மனைவி பள்ளி ஆசிரியர் என்பதால் பலர் அவரைத் தொடர்பு கொண்டு மாணவி பிரேமாவைக் குறித்து விசாரித்தார்களாம். எந்த ஊர்? என்று கேட்டிருந்தால் கூட பரவாயில்லை! எந்தச் சாதி என்பதை அறிந்து கொள்வதில் ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வம் காட்டியதாகச் சொன்னார். அதிலும் குறிப்பாக தமிழ்ச் சங்கம் வைத்து நடத்தும் தலைவர்கள் சிலரும் அடக்கம் என்றார். அதில் ஒரு தமிழ்ச் சங்கத் தலைவர் அந்தப் பொண்ணு நம்ம சாதி இல்லே என்று சொல்லி ரொம்பவே அலுத்துக் கொண்டாராம்.

பிரேமாவின் சாதி தெரிந்து கொண்டால், அந்தக் குறிப்பிட்ட சாதியினர் பிரேமாவின் சாதனையை தங்கள் சாதியின் சாதனையாக கல்வி கேள்விகளில் உயர்ந்தவர்கள் தங்கள் சாதியினர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் கேட்டு அந்த வாய்ப்பு தங்கள் சாதிக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.

பல மைல்கள்  தாண்டி பிழைப்புக்காக மராட்டிய மண்ணில் வந்து வாழும் தமிழினம் தன் அடையாளமாக தூக்கிச் சுமந்து கொண்டிருப்பது சாதியா? சாதி அடையாளம் தான் தமிழனின் அடையாளமா?

தமிழனம் சாதிக் காப்பாற்றும் இனம்
தமிழ்மொழி சாதிக் காப்பாற்றும் மொழி

என்று தந்தை பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறது.

பிரேமாவின் சாதி அடையாளம் எனக்குத் தேவையில்லை, ஏன் அவள் தமிழ்ப் பெண் என்ற இனம் சார்ந்த பெருமையை விட என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருப்பது பிரேமா தன் ஆரம்பக் கல்வியை அவருடைய தாய் மொழியான தமிழ்மொழியில் தான் படித்தார் என்பதும் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மாநகராட்சி பள்ளியில் படித்தவர் , ஒரு பாடமாக தன் தாய்மொழியான தமிழ்மொழியைப் படித்தவர் என்பதும் மட்டுமே  .

கான்வென்ட் பள்ளி கூடங்களை நோக்கி படை எடுத்து அது மட்டுமே தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உத்திரவாதமான கல்வியைத் தரமுடியும் என்ற இன்றைய பெற்றோர்களுக்கு பிரேமாவின் சாதனை
உண்மையை உணர்த்தும் ஒரு மின்னல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *