ஆண்மையச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெண்ணிய வெறுப்பாளர்கள்

யுகாயினி 

   பெண் என்ற ஒற்றை அடையாளம், நடுநிலையான பெண்ணிய தீர்வுகளுக்கு போதுமானதல்ல என்ற எண்ணம் இவர்களால் முன்வைக்கப்படுகிறது. பெண்ணுடல், பெண்ணின் உணர்வுகள், பெண்மொழி என பல தளங்களில் பெண்ணியமுன்னெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர்கள் கருதுகிறார்கள். இக்கருத்துக்களோடு உடன் படாத பெண்கள், மறைபொருளாக ஆணாதிக்கத்தை ஏனைய பெண்கள் மீது செலுத்தி வருகின்றனர்.

பெண்ணியம் என்றாலே முகத்தைச் சுழிக்கும் ஆதிக்க வாசிகள் நிறைந்த இந்தச் சமூகத்திலே, பெண்ணிய முன்னெடுப்புக்கள் பல முனைஅழுத்தங்களையும், தடைகளையும் சந்தித்து வருகிறது. பெண்ணியம் தொடர்பான பழமையான பார்வையை மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெண்விடுதலையை எட்டிட முடியாது என்பதை இற்றை வரையிலான முன்னெடுப்புக்கள் தோற்று போனதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த நிலை
யில் மேற்கத்திய பெண்ணியத்தை அடியொற்றிய செயற்பாடுகளிலிருந்து விடுபட்டு பெண்ணியம் குறித்த நவீனப் பார்வையை முன்வைப்பதில் புத்தாயிரமாண்டில் ஒரு கூட்டு அசைவியக்கம் மேலெழுந்து வருகின்ற போது பெண்ணிய வெறுப்பாளர்கள் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றனர்.

தமக்குச் சற்று சாதகமாக இருந்த பழமையான பெண்ணியப் பார்வையை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்ட சிலரும் கூட நவீன பெண்ணிய முன்னெடுப்புகளை நிராகரிக்கின்றனர். பெண்ணுடல், பெண்மொழி முதலான புதிய பார்வைகள் ஆபாசம் எனவும் சமூக சீர்கேட்டுக்கு வித்திடுமென்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பெண்ணியம் பேசுபவர்கள், இவர்களது எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் பெண்ணியம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதா விடுவதா என்று புரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.

பெண் சார்ந்த, பெண் குறியீடு சார்ந்த உணர்வுகளை புதிய மொழியில் வெளியிட ஏனைய பெண்ணிய வாதிகள் தடங்கிப் போயுள்ள நிலையிலும் புதிய மிலேனிய நவீன பெண்ணியவாதிகள் எண்ணிக்கையில் குறைந்தளவில் இருப்பினும் கூட, முன்வைத்த காலை தடை தாண்டி முன்வைத்து பயணிக்கிறார்கள். பெண் தன் உடலைக் கொண்டாடுவதும், தன் உணர்வு களை மதிப்பதும், தனக்கான மொழியில் எழுதுவம் கூட, இரண்டாம் தளத்திலிருந்து பெண்ணை உயர்த்த உதவும் என இவர்கள் கருதுகிறார்கள். இக்கருத்தில் உள்ள யதார்த்தத்தைக் கண்டே ஆணாதிக்க வாதிகள் நவீன பெண்ணியவாதிகளைக் கண்டு அஞ்சுவதும், அவர்களை ஓரம் கட்டுவதுமாக செயற்படுகிறார்கள். எனினும் தமது உணர்வுகளை தாம் வெளியிடும் போது அது பல்லாயிரம் பெண்களின் உணர்வுகளாகத்தான் இருக்கும் என நவீன பெண்ணிய வாதிகள் நம்புகின்றனர்.

 பெண் என்ற ஒற்றை அடையாளம், நடுநிலையான பெண்ணிய தீர்வுகளுக்கு போதுமானதல்ல என்ற எண்ணம் இவர்களால் முன்வைக்கப்படுகிறது. பெண்ணுடல், பெண்ணின் உணர்வுகள், பெண்மொழி என பல தளங்களில் பெண்ணியமுன்னெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர்கள் கருதுகிறார்கள். இக்கருத்துக்களோடு உடன் படாத பெண்கள், மறைபொருளாக ஆணாதிக்கத்தை ஏனைய பெண்கள் மீது செலுத்தி வருகின்றனர். ஆண் மனோபாவத்தை அகப்படுத்திய பார்வை என நவீன பெண்ணியவாதிகளை பழமைசார் பெண்ணியவாதிகள் நிராகரிப்பது எவ்வளவு அபத்தமானது. வெள்வேறு காலங்களில் வேறு வேறு விதமாக பெண்களின் பிரச்சினைகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, அவை பரந்த உரையாடல்களாகி தெளிவு பெறப்பட்டமைபோன்றே இன்றை நவீன பெண்ணிய வாதிகளின் கருத்துகளும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமேயன்றி, அவற்றைப் புறம் தள்ளுதல் நியாயமாகாது. சமூகத்தில் மூடி மறைக்கப்பட்டிருந்த பல்வேறு விடயங்களை துணிச்சலுடனும், நிதானத்துடனும் நவீன பெண்ணியவாதிகள் தட்டியெழுப்புகின்றனர்.

சாதி, இனம், பண்பாடு, அரசியல் எல்லாவற்றிலும் பிரிக்கப்பட்டு பிளவுபட்டிருந்தாலும் ‘பெண்’ என்ற நிலையில் அவளுக்குள்ள அடிப்படை பிரச்சினை பற்றி நுணுகி ஆய்ந்து அவற்றிற்கான தீர்வினை காணவேண்டும் என நவீன பெண்ணிய வாதிகள் கருதுகின்றார்கள். ஆணாதிக்க பார்வையூடாகவும், ஆண் மொழியின் அழுத்தங்க@டாகவும் இது அசாத்தியம் என்றே கருதப் படுவதனாலேயே பெண்மொழி பற்றிய உரத்த சிந்தனை மேலெழுந்து வருகிறது எனலாம். இன்று நாம் பயன்படுத்துகின்ற சொற்கள் ஆண் வர்க்கத்தினருடையது. ஆணாதிக்கத்தை தொடர்ந்து பேண உதவுபவை. எனவே தான் பெண் மொழி விடுதலைக்கான பாதை யைச் செதுக்கும் என பெண்கள் நம்புகிறார்கள்.
மேலைப் பெண்களின் பெண்ணியச் சிந்தனைகளை இன்றும் தொத்திக் கொண்டிருக்கும் நிலை மாறிட வேண்டும். புரையோடிப் போன விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாத பெண்ணியச் சிந்தனைகளால் பெண்ணிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திட முடியாது. காலத்தால் இறுகிப்போன பழமைவாத சிந்தனைகளை விடுத்து, நவீன பார்வையுடன் எமது சிந்தனையில் இயங்கும் ஒடுக்குமுறைவடிவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விடிவு பெற வேண்டும். மதம், தத்துவம் என்பவற்றிற்கு அப்பால் மொழியிலும் பெண்கள் கட்டுப்படுத்தபட்டுள்ளார்கள்.

மேலும் அவர்களது இருப்பு சார்ந்த வெளிகளுடன் கட்டிப் போடப்பட்டுள்ளார்கள். எனவே பெண்ணை அவள் இருப்புச் சார்ந்த வெளிகளிலிருந்தும் உடலை ஆக்கிரமிக்கும் சிந்தனைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும். இதுவே பெண் விடுதலைக்கான வழியாகும்.

(ஞானம் – கலை இலக்கிய சஞ்சிகை – ஒக்டோபர் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *