கிளிநொச்சியின் கிராமங்களில் வீடுவீடாகச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தினரை அச்சுறுத்தியே தமிழ்ப் பெண்களை இராணுவத்துக்குச் சேர்த்துக்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சில அமைப்புக்கள் தமது சரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. விழுது அமைப்பின் பணிப்பாளர் நாயகம் சாந்தி சச்சிதானந்தன் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், “தமிழ்ப் பெண் போராளிகளை இராணுவம் நடத்திய முறை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், இராணுவத்துக்குத் தமிழ்ப் பெண்களை இணைத்துக்கொள்வது பொருத்தமதனதல்ல” எனத் தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சியின் கிராமங்களில் வீடுவீடாகச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தினரை அச்சுறுத்தியே தமிழ்ப் பெண்களை இராணுவத்துக்குச் சேர்த்துக்கொண்டனர். இராணுவத்தில் இணைவதற்குத் தேவையான பாடசாலை விடுப்புச் சான்றிதழ் மற்றும் கிராமசேவகரின் நற்சான்றிதழ் என்பனவும் இராணுவத்தினராலேயே பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவங்களால் கிளிநொச்சியே அதிர்ந்து போயிருக்கின்றது.இராணுவத்துக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதாயின் அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். அதிலுள்ள நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும். ஆனால், கிளிநொச்சியில் எந்தவிதமான பகிரங்க அறிவித்தலும் இல்லாமல் தமிழ்ப் பெண்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கிளிநொச்சியைச் சேர்ந்த அரச அதிகாரி ஒருவர் தமிழ்லீடருக்குத் தெரிவித்தார். இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றிருக்கின்றது எனவும் அவர் கூறுகின்றார். இது தொடர்பாகக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன.

போர் முடிவுக்கு வந்து கிளிநொச்சியில் மீள்குகுடியேற்றமும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், கிளிநொச்சி தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. மக்கள் குடியிருப்புக்களுடன் இணைந்ததாக இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் பொதுமக்களின் வீடுகளுக்குள் சென்றுவரும் சம்பவங்கள் இங்கு சகஜமாகவே இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கிளிநொச்சியிலுள்ள கிருஷ்ணபுரம், மலையாளபுரம் உட்பட சில கிராமங்களில் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்துக்கு ஒருவராவது இராணுவத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என அச்சுறுத்தியுள்ளார்கள். தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைந்துகொள்வதன் மூலமாகவே அரசாங்கம் சர்வதேச ரீதியாக எதிர்கொள்ளும் நெருக்கடிகளிலிருந்து விடுபடமுடியும் எனவும் இவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். தமக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் படையினர் எச்சரித்திருக்கின்றார்கள்.

தொடர்ச்சியாக வீடுவீடாகச் சென்ற இராணுவத்தினர் கொடுத்த இவ்வாறான எச்சரிக்கையைத் தொடர்ந்தே பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு வீட்டில் இருந்த தமது பெண் பிள்ளைகளை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வதற்கு கட்டாயத்தின் பெயரில் பெற்றோர் இணங்கினார்கள்.குடும்பநிலை காரணமாகவும், மாதாந்தம் 30,000 ருபா சம்பளமும் வேறு வசதிகளும் வழங்கப்படும் என்பதால்தான் தாம் தமது பிள்ளைகளை இராணுவத்தில் இணைய அனுமதிவழங்கியதாகச் சொல்லலுமாறும் இராணுவத்தினரே பெற்றோருக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்கள். அடிப்படைச் சம்பளம் உட்பட மாதாந்தம் 50,000 ரூபா வரையில் கிடைக்கும் என இவர்களுக்கு இராணுவத்தினரால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இராணுவத்தில் புதிதாக இணைக்கப்படும் ஒருவருக்கு இந்தளவு சம்வளம் ஆரம்பத்தில் வழங்கப்படுவதில்லை என கிளிநொச்சியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி தெரிவிக்கின்றார். ஆக, இந்த இராணுவ ஆட்சேர்ப்புக்குப் பின்னணியில் கட்டாயப்படுத்தலும், ஆசைவார்த்தைகளும் இருந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.100 க்கு குறையாமல் தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு தினங்களாக இராணுவத்தினர் குறிப்பிட்ட பெண்களையும் அழைத்துக்கொண்டு பாடசாலைகளுக்கும் கிராமசேவகர் அலுவலகங்களுக்கும் நேரில் சென்றுவருவதைக் காணக்கூடியதாக இருந்தது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்களால் மக்கள் அதிர்ந்துபோயிருக்கின்றார்கள். முற்றுமுழுதாக இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பகுதியாக கிளிநொச்சி இருப்பதால் இது தொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குக் கூட அச்சமடைந்தவர்களாகவே மக்கள் உள்ளார்கள். முதற்கட்டமாக 109 தமிழ்ப் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதைப் போல மேலும் சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதால் மக்கள் அச்சமடைந்தவர்களாகவும், நடைபபிணங்களாகவுமே காணப்படுகின்றார்கள்.
இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்ப் பிரமுகர்கள் சிலரும் துணைபோயிருக்கின்றார்கள். முன்னாள் அரசாங்க அதிபர் உட்பட முக்கிய பிரமுகர்கள் சிலர் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் நேரில் பங்குகொண்டுள்ளார்கள். தமிழ்ப் பிரமுகர்களின் அங்கீகாரத்துடனேயே இந்த ஆட்சேர்ப்பு இடம்பெற்றதாகக் காட்டிக்கொள்வதற்கு இதன் மூலம் இராணுவம் முற்பட்டுள்ளது.

நேற்றைய நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் இரவு கேளிக்கை களியாட்ட நிகழ்வுகளும் இராணுவத்தினரால் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்ப் பெண்களைப் பயணமாக வைத்து இராணுவத்தினர் நடத்தும் ஆபத்தான விளையாட்டையிட்டு பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாய்திறக்காமலிருப்பது கிளிநொச்சி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. தமது பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கு யாருமே இல்லையா இந்த நிலைமைகள் எந்தளவுக்குத் தொடரப்போகின்றன என்ற கேள்விக்குறியுடன்தான் மக்கள் உள்ளார்கள்.

இதேவேளையில் இந்த சம்பவம் தொடர்பாக பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சில அமைப்புக்கள் தமது சரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. விழுது அமைப்பின் பணிப்பாளர் நாயகம் சாந்தி சச்சிதானந்தன் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், “தமிழ்ப் பெண் போராளிகளை இராணுவம் நடத்திய முறை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், இராணுவத்துக்குத் தமிழ்ப் பெண்களை இணைத்துக்கொள்வது பொருத்தமதனதல்ல” எனத் தெரிவித்திருந்தார்.

 

நன்றி  ..http://tamilarul.com/?p=11419

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *