கூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம்.

கொற்றவை (மாசெஸ் அமைப்பு.)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் 10.10.12  ஆனந்த விகடன் இதழுக்களித்த பேட்டியில் கூடங்குளம் போராட்டம் குறித்தும், போராட்ட தலைவர்கள் குறித்தும், ஏனைய மக்கள் போராட்டம் குறித்தும்  தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு மூத்த அரசியல்வாதி பொதுவுடைமைச் சிந்தனையுடைய ஒரு கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து கொண்டு உதிர்த்திருக்கும் இப்பொறுப்பற்ற சொற்கள் மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. மக்கள் போராட்டம் குறித்தும், கூடங்குளம் அணு உலை குறித்த அவரது கருத்தும், போராட்டத்தலைவர் குறித்த அவரது ஏளனமான வார்த்தைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 

”கூடங்குளமோ…குருவிக் குளமோ…அணு மின் நிலையங்கள் வேண்டும். இப்போது போராடும் பாதிரியார்கள் ஜப்பானில் குண்டு போடும்போது என்ன செய்தார்கள்?” என்று கேட்கிறார்.  மற்றொரு பதிலில் ”……. பாதிரியார்களுக்கு மின்சாரத்தைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு மின்சாரம்தான் முக்கியம்!” என்கிறார்.  மக்களை குழி தோண்டி புதைத்து விட்டு யாருக்காக அந்த மின்சாரம் என்று தா.பாண்டியன் அவர்கள் விளக்க வேண்டும்.

 ஏறத்தாழ 40 வருட கடும் உழைப்பைச் செலுத்தி, உடல் நலம் பாதிக்கப்பட்டு, குழந்தைகளைக் கூட வறுமைக்கு இரையாக்கி, மக்களின் பொது எதிரி யார், அவர்கள் எவ்வகையில்  மக்களைச் சுரண்டுவார்கள் என்பதை விஞ்ஞானபூர்வமாக விளக்கிய பேராசான் காரல் மார்க்சைப் படித்த ஒருவர் அணு சக்தியில் மின்சாரம் தயாரிப்பதை ஆதரித்து பேசுவதும், மக்களது போராட்டங்களைக் கொச்சை படுத்திப் பேசுவதும் வியப்பளிக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது. அதை விடக் கொடுமை “போராடினால் எல்லாம் கிடைத்துவிடுமா” என்று கேட்டிருக்கிறார். “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என்று காரல் மார்க்ஸ் எதற்கு சொன்னார், கூடிக் கும்மாளம் போடவா. ஒன்று கூடி உங்கள் உரிமைகளுக்காகப் போராடுங்கள் என்பதற்காகத் தானே. கூடங்குள இயக்கத்தை கும்பமேளாவோடு தொடர்பு படுத்தி அங்கும் மக்கள் கூடுகிறார்கள் என்ற பதிலின் மூலம் தனது கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு கும்பமேளாதான் என்கிற அவரது கருத்தை நமக்கு உணர்த்துகிறது.

 மக்கள் போராட்டம் குறித்து, கூடங்குளம் போராட்டக்காரர்கள் குறித்து தா. பாண்டியன் பகிர்ந்துள்ள கருத்துக்களை, அதில் வெளிப்படும் மத வெறுப்பை  அடிப்படையாகக் கொண்டு அவரது மக்கள் விரோதப் போக்கை கண்டிப்பதோடு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசெஸ் கேட்டுக்கொள்கிறது.

 

இப்படிக்கு

கொற்றவை

மாசெஸ் அமைப்பு.

சென்னை.

 

நகல் 1 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மாநிலத் தலைமை அலுவலகம்

நகல் 2 இந்தியக் கம்யூனிஸ் கட்சி – மாநில நிர்வாகக் குழு.

நகல் 3 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மைய்ய நிர்வாக் குழு.

 மேற்சொன்ன அறிக்கையில் கையெழுத்திட விரும்புவோர் உங்களின் பெயர்களை இங்கு பதிவு செய்யவும்.  இவ்வறிக்கை நாளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனுப்பி வைக்கப்படும். முகப்புத்தகத்தில் நிறைய தோழர்கள்,எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் தஙக்ள் ஆதரவுகளைத் தெரிவித்துள்ளனர். 

 

 

 

 

1 Comment on “கூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம்.”

  1. இந்த மாதிரி அரசியல்வியாதிகளுக்கு கார்ல்மார்க்ஸாவது! லெனினாவது!

    காசுக்காய் / சுகபோக வாழ்க்கைக்காய் சொந்த மக்களையே காவுகொடுக்கத் தயங்காத இவர் போன்றவர்களுக்கு என்ன கொள்கைப்பிடிப்பு இருக்கப் போகிறது?

    தா. பாண்டியனின் அடாவடித்தனமான மனிதாபிமானமற்ற கருத்துக்களை நாமும் மிக வன்மையாய்க் கண்டிக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *