வன்முறைகளற்ற ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேட்பாளர்கள் முன்வரவேண்டும் – அனர்த்த முகாமைத்துவத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு

அன்னபூரணி (மட்டக்களப்பு)

 தேர்தல் காலங்களிலும் அதற்குப் பின்னரும் இன மத ரீதியிலான துவேஷத்தை தூண்டாத, வன்முறைகளற்ற ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இக் கூட்டமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.மக்களது பங்களிப்புடனான நல்லாட்சிக்காக பெண்களதும் சகலரதும் பங்களிப்பை அனைத்து கொள்கை செயற்பாடுகளிலும் உறுதிப்படுத்தல் வேண்டும்.

போருக்குப் பின்னான வாழ்க்கைச் சூழலில் பெண்களின் பங்களிப்பும் பாதுகாப்பும் தொடர்பாக ஐ.நா சபையினால் நிறைவேற்றப்பட்டதும் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதுமான ஐ.நா தீர்மானம் 1325 இனை மாகாணசபையில் ஏற்றுக்கொண்டு சகல தளங்களிலும் செயற்படுத்தல் சிறப்பானதாகும்.

சகல அபிவிருத்தித் திட்டங்களும் வெளிப்பாட்டுத் தன்மையுடனும் பெண்கள் மற்றும் பரந்துபட்ட சமூகத்தின் பங்களிப்புடனும் பொறுப்புக்கூறும் வகையில் முன்னெடுக்கப்பட்டால் சிறப்பான அபிவிருத்தி கிட்டும்.

கிழக்கு மாகாணத்தில் காலங்காலமாக இருந்த இயற்கைச் சூழல் கட்டமைப்பை பேணக்கூடிய கொள்கைகளை உருவாக்கல், குறுகிய கால இலாபங்களுக்காக இயற்கைச்சூழல் எந்த வகையிலும் பலியிடப்படாதிருத்தல் வேண்டும்.

மாகாணத்திற்குரிய நீண்ட கால பொருளாதார திட்டங்கள் வகுப்பதில் மக்களின் பங்களிப்பு இருப்பதுடன் பெண்களின் கௌரவத்தையும் சுயாதீனத்தையும் பேணக்கூடிய நிலைபேறான வாழ்வாதாரங்களை பேணுல், உருவாக்கலுடன், கிழக்கு மாகாண பெண்களது வாழ்வாதார அடிப்படைகளான சிறியளவான மீன்பிடி, விவசாயம் போன்றவற்றை பேணுதல், மேம்படுத்தல் முக்கியமானதாகும்.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களது பிரத்தியேகத் தேவைகள் கருத்தில் எடுக்கப்பட்டு விசேட திட்டங்கள் வகுக்கப்படல்.வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்களின் உரிமைகளும் பாதுகாப்பும் மாகாணசபையால் உறுதிப்படுத்தப்பட்டு, மாகாணசபையானது பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான கொள்கைகள், நடைமுறைகளை வகுத்துச் செயற்படல் வேண்டும்.

மாகாணத்திற்கான சுகாதாரத் திட்டமிடலின்போது பெண்களுக்கான சுகாதாரத் தேவைகள் பிரத்தியேகக் கவனத்திற்கு எடுக்கப்பட்டு, மேலும் இப் பிரதேசத்திற்குரிய பாரம்பரிய வைத்திய முறைமைகளை பேணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *