சர்வதேச திரைப்பட விழாவில் கண்டதும் கேட்டதும்

புதியமாதவி (மும்பை)

ராஜேஷ் எஸ் ஜாலாவின் “படிக்கட்டுகளில்” (at the stairs) ஆவணப்படம் வாரணாசியில் மரணத்திற்காக காத்திருக்கும் மூன்று வயதான கைம்பெண்களைப் பற்றியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதையைப் போல ! சுருங்கிய தோல்கள், திறந்திருக்கும் முதுகுப்ப்பகுதி, படிக்கட்டுகளில் மெதுவாக ஏறும் அவள் கால்கள், காமிரா அவள் கால்களைக் காட்டும்.. அவள் ஏறிப்போகும் சபதம் மட்டுமே…
மும்பையில்கடந்த 3 முதல் 9 வரை (3 – 9 பிப் 2012) ஆவணப்படங்கள், குறும்படங்கள், அனிமேஷன் படங்களுக்கான (12th MIFF) 12 வது சர்வதேச திரைப்பட விழா நடந்தது. அரபிக்கடலோரம், ஜிலுஜிலுனு காற்று, நான்கு திரையரங்குகள் ஒரே காம்பவுண்டில்.மராத்திய மாநில அரசும் இந்திய தகவல் ஒலிபரப்பு துறையுடன் இணைந்து நடத்தும் நிகழ்வு… இதில் பார்த்த பல படங்களின் பெயர்களும் வாயில் நுழையாத டைரக்டர்களின் பெயர்களும் மறந்துவிடலாம். அல்லது நீங்கள் அப்படி எல்லாம் மறந்துவிடக் கூடாது என்று அவர்கள் பார்க்க வந்த அனைவருக்கும் வழங்கிய திரையிடப்பட்ட ப்டங்கள் குறித்த 333 பக்கங்கள் கொண்ட கையேடு பழைய பேப்பருடன் சேர்ந்து பழையன கழிதலாகிவிடும். ஆனால் பார்த்த சில படங்களும் சில காட்சிகளும் அந்தக் காட்சிகள் ஏற்படுத்திய தாக்கங்களும் எப்போதும் நமக்குள் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்.

ராஜேஷ் எஸ் ஜாலாவின் “படிக்கட்டுகளில்” (at the stairs) ஆவணப்படம் வாரணாசியில் மரணத்திற்காக காத்திருக்கும் மூன்று வயதான கைம்பெண்களைப் பற்றியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதையைப் போல ! சுருங்கிய தோல்கள், திறந்திருக்கும் முதுகுப்ப்பகுதி, படிக்கட்டுகளில் மெதுவாக ஏறும் அவள் கால்கள், காமிரா அவள் கால்களைக் காட்டும்.. அவள் ஏறிப்போகும் சபதம் மட்டுமே .. ஏறிப்போன்வள் சன்னல் வழியாக வீதியைப் பார்க்கும் காட்சி இன்னொரு கவிதையாக விரியும்.  சன்னலோரம், புனித கங்கைக்கரையின் இரவு நேரம், அவள் பார்க்கும் காட்சி.. இப்போதும் அவள் முதுகு மட்டுமே தெரியும்… அவள் பார்க்கிற காட்சியைஅப்படியே நமக்கும் காட்டுகின்ற விதத்தில் காமிரா நகரும். வீதியில் சன்னலுக்கு கீழே ரிகார்ட் டான்ஸ் இளம் பெண்கள் ஆடிக்கொண்டிருப்பார்கள், சுற்றி மக்கள்கூட்டம்உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும். அதற்கு இன்னொரு பக்கத்தில்

மனிகர்னிகா என்ற எப்போதும் பிணங்கள் எரிந்துக் கொண்டிருக்கும் மயானம், காட்சி மேலிருந்து பார்க்கும் அவள் கோணத்தில் பார்வையாளருக்கும் தெரியும்.. இந்தி – போஜ்பூரியில் தயாரிக்கப்பட்ட 29 நிமிடங்கள் ஓடிய ஆவணப்படம் வாழ்க்கை, மரணம், உடல், ஆன்மா (ஆவி), கங்கை, புனிதம், நம்பிக்கைகள். கேள்விக்குட்படுத்தி, மரணத்திற்காக காத்திருக்கும் வாழ்க்கையை அற்புதமான ஒளிச்சேர்க்கையில் கவித்துவமாகப் பேசியது.

ஆப்கானிஸ்தான் குறும்படம் உறைவிடம் ” ( shelter) இது அவருடைய முதல் அனிமேஷன் படம் . 6 நிமிடங்களில் அவர் காட்டிய காட்சியும் கருத்தும் பக்கம்எழுதக்கூடிய அளவுக்கு கருத்துகளை உள்ளடக்கியதாக இருந்தது. வீடில்லாத ஓர் அனாதைச் சிறுவன், தெருவில் ஒரு மரச் சட்டத்திற்குள் தலையையும் உடலில் பாதியையும் மறைத்துக் கொண்டு மரத்தடியில் உறங்கும் காட்சி. அந்த மரத்தில் ஒரு ப்றவைதான் அவன் நேசிக்கும் நண்பனாக உறவாக இருக்கிறது. இரவில் தூரத்தில் தெரியும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சட்டென விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இருள் சூழ்ந்தக் கருமையான இரவு.. தூரத்தில் பறக்கும் விமானங்களில் ஓசை…. குண்டுகள் வெடிக்கும் சத்தம்.. அவவளவுதான்…போரின் அழிவு… மழை பொழியும் காட்சி.. சிதைந்து கிடக்கும் அந்த மண்ணில் நெளிந்து ஊர்ந்து செல்லும் ஓரு புழு, ஒரு வண்டு…போரின் பேரழிவுக்குப் பிறகும் உயிர்ப்புடன் இயங்குதலின் அவசியத்தைக் காட்டுவதாகவும் எல்லாம் எப்போதும்  எதனாலும் அழிக்கப்படுவதில்லை என்ற தத்துவத்தையும் அவரவர் கண்ணோட்டத்தில் இக்காட்சி உணர்த்தியது.

கிளைகளில்லாத மெட்டை

மரத்தில் காணவில்லை அவன் பறவையை. மெதுவாக அவனருகே மீண்டும் அந்தப் பறவையின் கீச்கீச் ஒலி… அவன் இப்போது எழுந்து நடக்கிறான். ஒரு காலுடன் கம்பு ஊன்றிக்கொண்டு. குண்டு தாக்குதலில் அவன் ஒருகாலை இழந்துவிட்டான் என்பது நமக்குப் புரிகிறது.அவன் அந்த இடத்தை விட்டு மரக்கம்பை ஊன்றி நடந்துச் செல்கிறான், அவன் நேசித்த அந்தப் பறவை அவன் அதற்காக உருவாக்கி கொடுத்திருக்கும் கூட்டிலிருந்து கத்திக் கொண்டிருக்கிறது. பட்டுப்போன அந்த மொட்டை மரக்கிளையில் அவனுடைய இன்னொரு காலணி – ஷூ இப்போது அந்தப் பறவைக்கான கூடாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிகச் செலவில்லாமல் பார்ப்பவர்களை மருட்டாத மிகவும் சாதாரணமான அனிமேஷன் காட்சிகளுடன் பார்வையாளன் மனசை விட்டு நீங்காத ஒரு குறும்படத்தைக் கொடுக்க முடியும் என்பதையும் நமக்கு உணர்த்தி இருக்கிறது இக்குறும்படம்.

தோழர் எஸ். சோமீதரன் நெறியாள்கையில் ‘முல்லைத் தீவு சகா”. ஏற்கனவே குறுந்தகடில் பார்த்திருந்ததால் சோமிதரனுடன் படம் ஒலிபரப்புக்கு முன்பே அதுகுறித்த ஐயப்பாடுகளையும் ஊகங்களையும் பேசிக்கொள்ள முடிந்தது. 2006ல் முல்லைத்தீவில் நடந்த கண்ணகி கூத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது இதுதான் இந்த மண்ணில் நடக்கும் இறுதிக் கண்ணகிக் கூத்து என்ற எண்ணம் மேலோங்க அதை அப்படியே வீடியோ படமாக்கி இருக்கிறார் சோமி. அதன் பின் போரின் இறுதி நாட்களில் அங்கிருந்த காலக்கட்டத்தில் சில் காட்சிகளை
எடுத்திருக்கிறார். மற்றும் சில காட்சிகள் ஊடகங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெற்று அனைத்தையும் முல்லைத் தீவு சகா என்ற பெயரில் ஆவணப்படுத்தி இருக்கிறார். ‘இந்தப் ப்டத்தைப் பார்த்து நீங்கள் ரசிக்க முடியாது’ என்ற ஒற்றை வரி அறிமுகத்துடன் மேடையிலிருந்து இறங்கினார் சோமி. அரங்கு நிறைந்தக் கூட்டம். தாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த ஓர் இனப்படுகொலையைக் கண்டு மவுனத்தில் உறைந்து போயிருந்தார்கள் மும்பை சீமான்களும் சீமாட்டிகளும். கண்ணகி கூத்தும் அதில் தொடர்ந்து ஒலிக்கும் ஒப்பாரி குரலும் முல்லைத் தீவின் கடைசி நாட்களுடன் தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை கண்ணகிக் கூத்தின் கனமான பொருளறிந்தவர்களால் உள்வாங்கிக் கொண்ட அளவுக்கு பிற மொழிக்காரர்களால் புரிந்துக் கொண்டிருக்க முடியுமா ? என்ற கேள்வி படம் முடிந்து வெளியில் வரும் போது பூதகாரமாக துரத்தியது. இம்மாதிரி கனமான சமூகப் பிரச்சனைகளை மொழி எல்லைகள்த் தாண்டி எடுத்துச் செல்லும்போது மொழியை மட்டும் கூரிய ஆயுதமாகக் கொண்டு காட்சிப்படுத்தி இருப்பதைத் தவிர்த்து வேறு உத்திகளைக் கண்டடைய வேண்டும்.

மனித சமூகத்தை தேசம், மதம் , மொழி என்று பிரிக்கும் எல்லைக் கோடுகளைப் பற்றி வடநாட்டில் நிறைய கலை இலக்கியப் பதிவுகள் வெளிவந்திருக்கின்றன. எல்லைக் கோடுகளால் அவர்கள்தான் மிக அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் .ப்ஞ்சாப் பகுதி இந்தியாவிலும் உண்டு, பாகிஸ்தானிலும் உண்டு. ஆனால் வங்கதேச எல்லைக் கோடுகள் இந்திய மக்களுக்கு கொடுத்திருக்கும் ஊடகங்கள் அதிகம் காட்டாத நாமறியாத ஒரு பிரச்சனை, எல்லைக் கோட்டருகில் வாழும் விவசாயிகளின் வாழ்விடங்கள் இந்தியாவில், அவர்கள் வாழ்வாதரமான விளைநிலம் வங்கதேசத்தில்! தினமும் வயலுக்குப் போகும் போதும் மாலையில் திரும்பும் போது எல்லைக்காவல் படையினர் நடத்தும் சோதனைகள், அடையாள அட்டையை ஒருநாள் மறந்து விட்டு வந்துவிட்டால் கூட அன்று வயலுக்குப் போக முடியாது! அன்றாட வாழ்வில் அவர்கள் அனுபவிக்கும் இப்பிரச்சனைகள் நமக்கெல்லாம் புதியது.

திரைப்பட விழாவில் தன் குறும்படம் போட்டிக்கான தரவரிசையில் இடம் பெறவில்லை என்பதால் தமிழ்நாட்டின் பெண் இயக்குநர் ஒருவர் தன் குறும்படத்தைத் திரும்ப பெற்றுக்கொண்டதாக திரைப்படக் குழுவினர் பேசிக் கொண்டார்கள். இருக்கலாம்!. தமிழ் நாட்டிலிருந்து அதிகமான குறும்படங்களோ ஆவணப்படங்களோ வரவில்லை
என்கிற ஆதங்கம் எனக்கும் இருக்கத்தான் செய்தது.

 

1 Comment on “சர்வதேச திரைப்பட விழாவில் கண்டதும் கேட்டதும்”

  1. மிகவும் சுவாரஷ்யமான இந்த ஆக்கம் பாதியில் நிற்பதுபோல இருக்கிறதே! முழுவதும் பதிவேற்றப்படத் தவறிவிட்டதா என அறியத்தாருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *