அதிசயத் தீவும் விசித்திர தீர்ப்பும்

ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை)     

 ஆராய்ச்சி மணி ஒலித்ததும்

அரண்மனைக் கதவுகள் திறக்கப்பட்டன.

அழகிய ஆபரணங்களுடன்

முறுக்கும் மிடுக்குமாக

சிம்மாசனத்தே வீற்றிருந்து

 மக்களின் மனுக்களை

 செவியேற்றுக் கொண்டிருந்தான் அரசன்.

கைகளில் நிழற்படங்களை ஏந்திய அந்த பெண்கள்

அழுதுகொண்டிருந்தார்கள்

ஒரு பெண் காணாமல்போனவனின் மனைவி எனவும்,

மற்றையவள் காணாமல்போனவனின் தாய் எனவும்

அறிமுகப்படுத்தினர்

முதலாமவள் மூன்றாவதாய் பிறந்தவளுக்கு

லேபல் தேடிக்கொண்டிருந்தாள்

கணவன் காணாமல்போகையில்

அவள் கரிப்பிணியாய் இருந்தாளாம்

பழிகூறி புறந்தள்ளுவோருக்கு

பதில்கூறி பத்தினியெனப் பறைசாற்ற

அவன் வேண்டும் என்றாள்

வாய்தர்க்கம், வம்புகளில் நாட்டமற்றவர் என் கணவர்

வயலில் நாற்று நட்டு நாளும் கஞ்சளந்தார்

நாதியற்று நடுவழியே நிற்கிறோம்

நியாயமாய் தீர்ப்பளியும் அரசே எமக்கென்றாள்

இரண்டாமவளோ மனம் இருப்பிழந்த துயரிலிருந்தாள்

சுண்ணாம்பு நிற வான் கொண்டுபோன மகன்

இருக்கிறானா இல்லையா அவனுக்கு ஆனதென்ன

பதில் வேணுமென்றாள்

படித்தவன், பல்கலை நுழையக் காத்திருக்கையில்

விசாரணையென்று அழைத்தனர்

இன்னுமா முடியலை விசாரணையென

குழறினாள்

மீசையை முறுக்கிக் கொண்டே

சஞ்சலம் சிறுதுமில்லாது

அனைத்தையும் செவிசாய்த்தான் அரசன்

இதனிடையே உத்தரவுக்கு காத்திருந்து பொறுமையிழந்த

பெரும் திரளானதொரு கூட்டம் அரண்மனையினுள் நுழைந்தது

எங்கள் வயல் நிலங்கள்

அடையாளம் அறியாதோரால்

ஆதாரமின்றி உரிமைகோரப்படுகிறதென

சில குரல்களும்,

எங்கள் வாழிடங்கள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுகிறதென

சில குரல்களும் ஆக்ரோ~pத்தன

விசித்திரமான வழக்குகளால்

அரசவையில் பெரும் குழப்பம் உண்டாயிற்று

சினத்தில் சிவந்திருந்தது அரசனின் திருவதனம்

அவன் நிறைவேற்றப்போகும் தீர்ப்பை

பேராவலுடன் எதிர்பார்த்திருந்தது அவை

“இவர்கள் அனைவரையும் பிடித்து

பாதாள சிறையில் அடையுங்கள்

இவர்கள் குழப்பவாதிகள்

புரளிகளாலும், கட்டுக்கதைகளாலும்

நம் தீவின் அமைதியைக் கெடுக்க முயற்சிப்பவர்கள்

இவர்கள் அந்நிய சக்திகளின் கையாட்கள்

இவர்களின் தந்திரோபாயத்தை நாமறிவோம்;

தாமதிக்கவேண்டாம்… இழுத்துச் செல்லுங்கள்”

ராஜாதி ராஜன்… மன்னாதி மன்னன்

நீடூழி வாழ்க… நீண்ட காலம் அரசாழ்க…

சபையோர் எழுந்துநின்று வாழ்த்த

தீர்ப்பளித்த திருப்தியுடன்

வாழ்த்தியோரை ஆசிர்வதித்து

அகமகிழ்ந்தான் அரசன்…!!

1 Comment on “அதிசயத் தீவும் விசித்திர தீர்ப்பும்”

  1. வாழ்வும் அதன் இயங்கியலும் அனேகமான சந்தர்ப்பங்களில் ஒரே மையப்புள்ளியைத் தொட்டுத்தொட்டு மீள்கின்றன.

    வாழைச்சேனை அமர் (நீ வரும் காலைப்பொழுது- 2004) “அரசி” கவிதையில்,

    “ஆராய்ச்சி மணி ஒலித்தது

    அமைச்சர் காவலாளிகள் அணிதிரள
    அரியாசனத்தில் அமர்ந்தாள் அரசி
    ………………………..
    ………………………..
    ………………………..
    அரசி சிரித்தாள்
    ‘யாரங்கே
    இந்தக் குடியானவன்
    ஜனநாயகத்தைத் தூஷிக்கிறான்
    சுதந்திரத்தை எல்லைமீறிக் கேட்கிறான்
    அரசை நிந்தனை செய்கிறான்
    இழுத்துச் சென்று சிறையில் அடையுங்கள்’

    மந்திரிப் பிரதானிகள்
    மாட்சிமை தங்கிய மகாராணியை
    வாழ்த்தி நின்றனர்

    “இத்துடன் சபை கலைகிறது” (2000)

    என்று எழுதுகிறார்.

    எனவே,

    ஆண்டுகள் மாறலாம், அரசாட்சிகள் மாறலாம். ஆனால், மக்களின் அவலங்கள் மட்டும் அதேவிதமாய் அல்லது முன்பிருந்ததைவிடவும் கூடுதலாய் தொடர்ந்தவாறே இருக்கின்றன என்பதையே இக்கவிதை உணர்த்துகிறது. வாழ்த்துக்கள், ஷர்மிளா! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *