மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான் ‘சுதந்திர தினம்”

ndpfத்திரி

http://www.ndpfront.com/tamil/

http://www.ndpfront.com/sinhala/

http://www.ndpfront.net/english/

http://www.tamilcircle.net/

கை அறிக்கை :  

 

மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான்

 

 ‘சுதந்திர தினம்”

 மரணத்தைவிடக் கொடுமையான, கொடூரமான, வாழமுடியாத வாழ்க்கைதான் இது. இதில் தன்னுயிரை விடுதலையின் பெயரால் தியாகம் செய்வதைவிட, தன்னை மக்களுக்காக அர்ப்பணித்துப் போராடுவதென்பது கடினமானது. இந்த நிலையை புரிந்துகொண்டு ‘சுதந்திர தினம்” யாருக்கு என்பதை புரிந்துகொள்ளுதல்  அவசியம்.                             மக்கள் தம்மை தாம் ஆளாதவரை, மக்களுக்குச் சுதந்திரம் கிடையாது. இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், பாலின் பெயரால்…, மக்களைப் பிளந்து, அவர்களை மோதவிட்டு ஆள்வதை குறிக்கின்றதே ‘சுதந்திர தினம்” இதன் மூலம் மக்களை ஒடுக்கியும், சுரண்டியும் வாழ்கின்றவர்களின் ‘சுதந்திரத்தை”த் தான், ‘சுதந்திரம்” என்கின்றனர்.தங்கள் மேலான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடத மக்களுக்கு சுதந்திரம் கிடையாது. இப்படி இன்று நினைத்தாற்கூட, மரணம் தான் பரிசாகக் கிடைகின்றது. அரசு வழங்கும் உத்தியோகபூர்வமற்ற மரணதண்டனை என்பது, காணாமல் போதல் மூலம் நிறைவு செய்யப்படுகின்றது. இப்படி வகைதொகையின்றி காணாமல் போனவர்கள், போகின்றவர்கள் பட்டியல் முடிவின்றித் தொடருகின்றது. இங்கு யார்தான் ‘சுதந்திரத்தை” கொண்டாடுகின்றனர். நாட்டு மக்களா!? அல்லது இதை செய்யும் ஆளும் வர்க்கமா!? சொல்லுங்கள்.      

 இன்று இலங்கையில் மக்களுக்குச் சுதந்திரமில்லை. தாம் விரும்பிய அரசியலைச் செய்ய சுதத்திரமில்லை. தாம் நினைத்ததைச் சொல்லச் சுதந்திரமில்லை. தமக்காகப் போராட சுதந்திரமில்லை. உண்ணவும், உடுக்கவும், உறைவிடத்துக்கு கூட வழியில்லாத மக்கள் கூட்டத்தினது சுதந்திரத்திற்கான அர்த்தம் தான் என்ன? எழுதவும், பேசவும், அவர்கள் விரும்பிய அரசியல் செய்யவும் உரிமை அற்றிருக்கின்றபோது, இவைகளே மரணத்துக்குரிய குற்றங்களாக இருக்கும் நிலையில் ‘ஜனநாயகம்” “சுதந்திரம்” என்று கூறுவது எதனை? ஆக யாருக்கு ‘சுதந்திரம்”!? எதற்குத்தான் ‘சுதந்திரம்”!? சொல்லுங்கள்.

 பாராளுமன்றச் சாக்கடையில், ‘ஜனநாயகத்தின்” பெயரில் புரள்வதற்கு ‘சுதந்திரம்”, மக்களைச் சுரண்டி வாழும் சுரண்டும் வர்க்கங்களுக்கு ‘சுதந்திரம்”. மக்களை சமூக ரீதியாக பிளந்து, மோதவிட்டு ஆள்வதற்கு ‘சுதந்திரம்”. கூலிக் கும்பலாக நக்கிப் பிழைக்க ‘சுதந்திரம்”, காணாமல் போனவர்களாக்கி கொன்று குவிக்க ‘சுதந்திரம்”. நிலமைகள் இவ்வாறிருக்கும் போது, சொல்லுங்கள் மக்களுக்கு சுதந்திரம் என்னவென்று.

 சிங்களவனுக்கு ‘சுதந்திரம்” என்று சொல்லும் குறுந்தேசியப் பொய்யை நம்பாதே. இது எங்கள் ‘சுதந்திரம்” என்றுகூறும் பெருந்தேசிய பொய்யை நம்பாதே. மக்களை ஒடுக்கி, அவர்களைப் பிளந்து கூறும் ‘சுதந்திரம்” பற்றிய விளக்கங்கள் மோசடியானவை –  புரட்டுத்தனமானவை.      

 புலிப் ‘பயங்கரவாதத்தைக்” காட்டி மக்களை ஒடுக்கியாண்ட அரச பயங்கரவாதம், இன்று புலி வருகிறது இதோ வந்துவிட்டது என்று பீதியூட்டி மக்களை ஆள முனைகின்றது. மக்களை மிரட்டி அடிபணியவைக்க முனைகின்றது. அனைத்துக்கும் தொடர்ந்து புலி முத்திரை குத்தி, சமூகத்தின் உயிர் மூச்சை நிறுத்திவிட முனைகின்றது. மறுதளத்தில் சுதந்திர மூச்சுகளைக் கடத்தி, அவர்களைக் காணாமல் போனவராக்கி விடுகின்றது.  எங்கும் எதிலும் இராணுவம் நுழைகின்றது. சட்டவிரோத கொலைகாரக் கும்பலொன்று புலானாய்வின் பெயரால் சுதந்திரமாக ஆட்டம் போடுகின்றது. அரசின் குடும்ப சர்வாதிகாரம், இராணுவ சர்வாதிகாரமாக மாற்றப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியில் மாபியாக் கும்பலொன்று கொழுத்து வருகின்றது.அன்னியரின் சுரண்டலும் சூறையாடலும் தொடரும் வண்ணம் தேசிய இனவாத உணர்வுகள் ஊட்டப்படுகின்றது. உற்பத்தியில் ஈடுபடாத நிதிமூலதனம், நாட்டின் வரவு செலவில் அண்ணளவாக 50சதவீதத்தை சட்டபூர்வமாகவே கொள்ளையிடுகின்றது. சுதந்திரத்தின் மகிமையே இதுதான்.

 யுத்தத்தின் பின்னான வடக்கு கிழக்கு மக்களின் ‘சுதந்திரம்” என்பது, இராணுவ முகாமுக்குள் வாழ்தல்தான். இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்குக் கூட, இராணுவத்திடம் அனுமதி கோரவேண்டும் என்ற அளவுக்கு எங்கும் எதிலும் இராணுவத் தலையீடுகளும், அத்துமீறல்களும் தொடர்கின்றன. இப்படி இராணுவத்தின் கீழ் வாழ்வதைத்தான் தமிழ்மக்கள் விரும்பிய ‘சுதந்திரம்” என்கின்றது அரசு. இதைத்தான் புலிகளிடம் இருந்து மீட்டதாக பீற்றிக்கொள்ளும் வண்ணம் இராணுவ ஆட்சி நடக்கின்றது. அரச கைக்கூலிகளும், மக்களை அடக்கியாண்டு தின்று கொழுக்கும் தங்கள் கொழுப்பைத்தான் ‘சுதந்திரம்” என்கின்றனர்.

 யுத்தத்தில் வாழ்விழந்த மக்கள் குடியிருக்க வீடு இல்லை. உழைத்து வாழ தொழில் இல்லை. உழுதுவாழ மூலதனமில்லை. மக்களை பிச்சைப் பாத்திரங்களுடன் நிற்கவைத்து, பிச்சை போடுகின்றது அரசு. வாழ்வதற்காக தங்கள் உடலையே விற்கின்ற அவலம். வடக்கு – கிழக்கில் ஒரு இலட்சம் விதவைகள். வடக்கில் மட்டும் 4300 குழந்தைகள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில். இதைவிட 9678 குழந்தைகளை பராமரிக்கும் உற்றார் உறவினர்கள். இவை அரச புள்ளி விபரங்கள். மொத்தத்தில் வடக்கில் மட்டும் 14000 குழந்தைகள் பெற்றோரை இழந்துவிட்டனர். விதவைகள் சமூகமாக, அனாதைக் குழந்தைகள் சமூகமாக, ‘சுதந்திரத்தின்” பெயரில் அவர்களை கொன்றது யார்? சொல்லுங்கள். இப்படி வாழவைத்தவர்கள்தான், ‘சுதந்திரம்” கொண்டாடுகின்றனர்.

 உன் சமூகத்தை திரும்பிப் பார். புலியில் இருந்த பெண் போராளிகள் யுத்த அவலத்தை மட்டுமல்ல, ஆணாதிக்கத்தின் பொது விளைவை மட்டுமல்ல, குரூரமான ஆணாதிக்க சமூக புறக்கணிப்புகளையும் அனுபவிப்பது தான், இன்று அவளுக்குரிய ‘சுதந்திரமாகி”விட்டது.

 எங்கும் அவலம், எதிலும் அவலம். யுத்தம் கொன்றதைவிட அமைதியான – இழிவான வாழ்வு கொல்வது தான் கொடுமையானது, கொடூரமானது. இதையெல்லாம் தட்டிக் கேட்கும் சிங்களவர்களும், முஸ்லீம்களும்; கூட, ‘சுதந்திர” இலங்கையில் இன்று காணாமல் போகின்றனர். இவையெல்லாம் யுத்தத்தின் பின்னான சுதந்திரம். இந்த நிலையை உருவாக்குபவன், இதையே நாட்டின் பொது அமைதியாக சமூக இருப்பாக்க முனைபவன் என்ன நினைக்கின்றானோ, அதுவே ‘சுதந்திரத்தின்” வரைவிலக்கணமாகின்றது. இதைப் பார்த்து மகிழ்ச்சியாக வாழ்பவனின் வக்கிரமான இரசனையே, மக்களை அடிமையாக அடங்கி வாழக்கோருகின்றது. இதைத்தான் தங்களின் ‘சுதந்திர” தினமாக அவர்கள், மக்களுக்கு எதிராக கொண்டாடுகின்றனர்.

 

 

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

04.02.2012

 

தொடர்பு மின்னஞ்சல் :  ndpfront@gmail.com

 கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்

1 Comment on “மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான் ‘சுதந்திர தினம்””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *