எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது

 யமுனா ராஜேந்திரன்

எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது

முக்காடு போடாததற்கும் மது அருந்தியது மாதிரி நடித்ததற்கும் ஈரானிய அரசு இந்தத் திரைப்படத்தின் நாயகியான மெர்ஸீயா பாத்திரத்தை ஏற்ற மெர்ஸீயா வபாமெருக்கு 90 கசையடிகளும் ஒராண்டு சிறைத்தண்டனையும் தருமானால் அதனைக் காட்டுமிராண்டித்தனம் எனும் சொல்லில் அல்லாத வேறு சொல்லில் குறிப்பிடுதல் முடியாது.உலக சினிமாவில் ஆர்வமுள்ளவர்கள் எவரும் ஜாபர் பனாஹியின் த வைட் பலூன், த ஸர்க்கிள், மோசன் மஹ்மல் பப்பின் கப்பா மற்றும் கந்தஹார், அப்பாஸ் கியோராஸ்தாமியின் குளோஸப் போன்ற ஈரானியப் படங்களை மறக்க முடியாது. திரைப்படக் கரு மற்றும் சொல்முறை எனும் அளவில் உலக சினிமா ரசிகர்களிடமும் திரைப்பட இயக்குனர்களிடமும் மிகப்பெரும் பாதிப்புக்களை உருவாக்கிய, எம் கால உலகின் அறநெருக்கடிகள் குறித்த திரைப்படங்கள் இவைகள்.ஜாபர் பனாஹி

எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது

தற்போது ஈரானிய அரசினால் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதுடன் 20 ஆண்டுகள் திரைப்படம் செய்யக் கூடாது எனவும், திரைப்பட விழாக்களில் பங்குபெறக் கூடாது எனவும் தடைவிதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஈரானியத் தேர்தல் குறித்து ஒரு திரைப்படம் உருவாக்கினார் என்பதும், அரசை விமர்சிக்க முனைந்தார் என்பதும் அவர் மீதான குற்றம்.மோசன் மஹ்மல்பப் ஈரானிலிருந்து வெளியேறி தற்போது பாரிஸில் வாழ்ந்து வருகிறார். இன்றைய ஜனாதிபதி அகமதிநெஜாத்திற்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவரும் கலாச்சாரவாதியுமான மகமது குசைன் கருபியை ஆதரித்தது அவர் செய்த குற்றம். மோஸன் மஹ்மல்பப் பற்றி குளோஸப் எனும் படமெடுத்த இயக்குனர் அப்பாஸ் கியரோஸ்தாமி, ஜாபர் பனாஹியை விடுதலை செய்யக் கோரியிருக்கிறார். ஜாபர் பனாஹியை விடுதலை செய்யக் கோரி மார்டின் ஸ்கோரசிஸே, ஆலிவர் ஸ்டோன், ரோபர்ட் ரெட்போர்ட், கொப்பாலோ, மைக்கேல் மூர் போன்ற அமெரிக்க விமர்சனத் திரைக் கலைஞர்கள், இயக்குனர்கள் கோரியிருக்கிறார்கள். பனாஹி உலகின் சொத்து என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

 ஈரானிய மற்றும் உலகக் கலைஞர்கள் அனைவரதும் குரல்களை நிராகரித்தபடி, தனது நாட்டினது திரைப்படக் கலைஞர்களின் மீதான அடக்குமுறையைத் தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறார் இன்றைய ஈரானிய ஜனாதிபதியான அகமதிநெஜாத். ஜாபர் பனாஹியை அடுத்து, 2011 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி, மெரீஸா வபாமெர் எனும் ஈரானிய நடிகைக்கு ஓராண்டு சிறைவாசமும் 90 கசையடிகளும் தண்டனையாகத் தரப்பட்டிருக்கிறது. எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது (My Tehran for Sale : 2009) எனும் ஈரானிய-ஆஸ்திரேலியப் படத்தில் நடித்தது மெரீஸா செய்த குற்றம்.

ஈரானிய நெறிமுறைகளின்படி முக்காடு போடாமல் தலையை மழித்துக் கொண்டும், மது அருந்துவது மாதிரியும் நடித்தது அவர் செய்த குற்றம். ஈரானிய அரசு அனுமதி இல்லாமல் இந்தப்படம் ஈரானில் படம் பிடிக்கப்பட்டது என ஈரானிய அரசு சொல்லும் பிறிதொரு குற்றச்சாட்டை அந்தப்படத்தின் ஈரானிய – ஆஸ்திரேலியப் பெண் இயக்குனரும் கவிஞருமான கிரானாஸ் முஸாவி மறுத்திருக்கிறார். படப்பிடிப்புக்கான அனைத்துவிதமான அரசு அனுமதிகளும் பெற்று நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்புவித்த பின்பே படப்பிடிப்பு நடத்தியிருப்பதாகவும், அரசு பொய் சொல்கிறது எனவும் சொல்லியிருக்கிறார் முஸாவி.

ஈரானிய சினிமா குறித்த பாராட்டுணர்வு உலகெங்கிலும் இருக்கும் அதே நேரத்தில், அந்தப் பாராட்டுணர்வுகளின் பின் இரண்டு விடயங்கள் அமுங்கிக் கிடப்பதை ஈரானிய சமூகத்தையும் சினிமாவையும் ஒருசேரப் பார்ப்பவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஈரானிய சினிமா என்பது பெண்ணொடுக்குமுறை சினிமா, பெண்களின் ஆளுமையை நிராகரித்த சினிமா என்பது ஒரு அமுங்கிய விஷயம். பிறிதொன்று குழந்தைகளின் பார்வையில் மட்டுமே, அவர்களது கள்ளமின்மையினூடு மட்டுமே, அவர்களது பூஞ்சையான உடம்பின் தன்மையை ஒத்தது போல மட்டுமே ஈரானிய சமூகம் குறித்த எந்த விமர்சனத்தை எவரும் வைக்க முடியும் என்பது பிறிதொரு அமுங்கிக் கிடக்கும் விஷயம்.

எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது

குறைந்தபட்ச வெளிப்படைத் தன்மையுடன் ஈரானிய மத அடிப்படைவாதிகளையும் கலாச்சார பொலீசையும் விமர்சிக்கும் அல்லது ஆப்கானிய அகதிகளை இனவாதத் தன்மையுடன் கேவலமாக நடத்தும் அரசு நடைமுறைகளை மேலோட்டமாக விமர்சித்தால் கூட அவர்களுக்கான இடம் சிறைச்சாலையாகத்தான் முடியும். பிற சிறுபான்மை இனத்தவரை ஒதுக்கும் ஈரானிய அரசியல் குறித்து மிஷேல் பூக்கோவும் குறிப்பிட்டிருப்பதை ஒருவர் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

ஜாபர் பனாஹியின் ஸர்க்கிள் கலாச்சார பொலீஸ் குறித்த கடுமையான விமர்சனம் கொண்ட படம். ஆப்கான் அகதிகள் குறித்து பல படங்களை மொஹ்மல் பப் குடும்பக் கலைஞர்கள் எடுத்திருக்கிறார்கள். பனாஹி சிறையில் இருக்கிறார். மஹ்மல் பப் குடும்பக் கலைஞர்கள் பாரிஸில் நாடு கடந்து வாழ்கிறார்கள்.

எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது எனும் திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் தெஹ்ரான் நகரத்தையும், அதனது நடுத்தரவர்க்க யுவதிகள் மற்றும் இளைஞர்களது வாழ்வையும் எதிர்ப்புணர்வையும் ஈரானிய படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிற எவரும் அந்தப் படங்களில் பார்த்திருக்க முடியாது. இதுவரையிலும் வெளியுலகை எட்டிய ஈரானியப் படங்களில் தொண்ணூற்று ஒன்பது சதவீதமான படங்கள் கிராமிய வாழ்வும் குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் பற்றிய, நிலவும் சமூக அமைப்பை அப்படியே ஏற்றுக் குமைந்தபடி வாழும் ஆற்றாமை நிறைந்த மனிதர்கள் பற்றியதுதான்.

எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது படம் காட்டும் தெஹ்ரான் நகரம் அன்றாட வாழ்வில் நிம்மதியற்ற, கலகம் புரியும், தனித்து வாழும், மரபு மீறிய பாலுறவுத் தேட்டமும், மதுவின் மீதான நாட்டமும், கஞ்சா புகையின் காட்டமுமாக வாழும், தமது அடையாளங்களை நிலைநாட்டத் துடிக்கும் யுவதிகள் பற்றிய, இளைஞர்கள் பற்றிய திரைப்படமாக இருக்கிறது.

96 நிமிடங்கள் கொண்ட இந்தத் திரைப்படம் இரண்டு பெண் பாத்திரங்கள் ஒரு ஆண் பாத்திரத்தைச் சுற்றியதாகப் பின்னப்பட்டிருக்கிறது. பிரதான பெண் பாத்திரமான மெர்ஸீயா ஒரு நாடக நடிகை, அதனோடு ஒரு ஆடை வடிவமைப்பாளர். தனது இயல்பான ஈடுபாடுகளால் அவரது தந்தையால் அவளைச் சகிக்க முடியாது ஆனபோது, வீட்டிலிருந்து வெளியேறி, ஒரு போதும் வீடு திரும்ப முடியாத நிலைமையில் தனித்து வாழ்பவள்.

மெர்ஸீயாவின் தோழியும் உளவியல் சிகச்சையாளருமான ஸதாப் பிறிதொரு பெண் பாத்திரம். மூன்றாவதாக வருகிறவர், 14 வயதில் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து இன்று வளர்ந்த இளைஞனாக ஈரானுக்குத் திரும்பியிருக்கிற ஸாமன். ஸாமன் ஸதாப்பின் தோழன். ஸதாப் ஸாமனை மெர்ஸீயாவுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாள். பரஸ்பரம் காதலில் வீழும் ஸமானும் மெர்ஸீயாவும் ஆஸ்திரேலிய நகரான அடிலெய்டுக்குக் குடிபெயர்வது திட்டம்.

திரைப்படத்தில் பார்வையாளன் நுழைவதற்கு முன்பாகவே படத்தில் இந்த உறவுகளும் பிரச்சினைகளும் படத்தில் நிலைநாட்டப்பட்டு விடுகிறது. படத்தின் துவக்கம் அடுக்காக வேறு வேறு நிகழ்வுகளை நமக்கு முன் திறந்து விடுகிறது. தெஹ்ரான் நகரத்திலிருந்து வெகுதூரம் ஒதுங்கிய ஒரு கொட்டகையில் நடக்கும் டிஸ்கோ ஒன்றில் கலாச்சார பொலீஸ் நுழைந்து யுவதிகளையும் இளைஞர்களையும் வாகனத்தில் ஏற்றுவதுடன் ஒரு நிகழ்வு துவங்குகிறது. நள்ளிரவில் அந்த இடத்தில் பாலுறவுக்கென ஒதுங்கும் ஸாமன்-மெர்ஸீயா உறவு இந்தச் சம்பவத்தையொட்டி விரிகிறது.

அடுத்த காட்சியில் ஒரு டிரக்கின் இருட்டில் அமர்ந்தபடி மெர்ஸீயா பயணம் செய்கிறாள். இதனைத் தொடர்ந்து தெஹ்ரானிலிருந்து ரகசியமாக வெளியேறிய அவளது ஆஸ்திரேலியப் பயணம் சொல்லப்படுகிறது. அடுத்ததாக ஆஸ்திரேலியக் குடிவரவு அதிகாரிகள் அவனை விசாரிக்கிற பிறிதொரு காட்சி, இரண்டு வருடங்களாக விசாரணைக் கைதியாக அடைபட்டிருக்கும் அவளது வாழ்வைத் தொடர்ந்து செல்கிறது.

எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது

மெர்ஸீயா பிற நண்பர்களுடன் சேர்ந்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மைமிங் நாடகம் என்றேனும் அரங்கேறும் என நம்புகிறாள். சேகுவேரா, ழான் பவுன் ஸார்த்தர், ஸால்வடார் டாலி என்பதாக அவளது ஈடுபாடுகள் இருக்கிறது. டிஸ்கோ நடன நிகழ்வில் புகுந்து கைது செய்யும் கலாச்சார பொலீஸ், மைமிங் தியேட்டர் கலைஞர்களையும் அவர்களது ஒத்திகையின்போது கைது செய்கிறது. மெர்ஸீயாவும் அவளொத்த கலைஞர்களும் அவளது தோழியும் உளவியல் சிகிச்சையாளருமான ஸதாப்பின் இல்லத்தில் குழுமிக் கவிதையும் மதுவும் கஞ்சாவுமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா சென்று மணந்து கொள்ளும் திட்டத்துடன் மெர்ஸீயாவுக்கு மருத்துவச் சான்றிதழ் பெற முனைகிறான் ஸாமன். மெர்ஸீயா ஹெச்ஐவி பாசிட்டிவ் என்பது தெரியவர, ஏற்கனவே கடன் சுமையிலும் தனித்தும் வாழும் ஸாமன், அவனுக்கு இருக்கிற பல பிரச்சினைகளில் இதையும் தன்னால் ஏற்க முடியாது என்றபடி அவளை தெஹ்ரானில் விட்டு ஆஸ்திரேலியா திரும்புகிறான்.தகப்பனாலும் ஒதுக்கப்பட்டு, தனது நாடகக் கனவுகளும் சிதைக்கப்பட்டு, திசையற்றுத் தவிக்கும் மெர்ஸீயா சட்டமீறல் வழிமுறைகளில் ஆஸ்திரேலியா சென்று ஸாமனைச் சந்திக்க முடிவெடுக்கிறாள்.

தனது ஆபரணங்கள், கைக்கடிகாரம், புத்தகங்கள், வடிவமைக்கப்பட்ட ஆடைகள், புகைப்படங்கள், ஓவியங்கள் என அனைத்தையும் விற்றுவிட்டு, தனது தோழி ஸதாப் இவளுக்காக விரும்பி விற்ற அவளது ஆபரணங்களின் விற்பனைத் தொகையையும் சேர்த்துக் கொண்டு, ஒரு டிரக்கின் மூலம் அவளது ஆஸ்திரேலியப் பயணம் தொடங்குகிறது. சட்டமீறல் வழிமுறைகளில் ஆஸ்திரேலியா வந்து சேரும் அவள், இரண்டு ஆண்டுகள் விசாரணைச் சிறையில் அடைக்கப்படுகிறாள். ஈரானிய அரசினால் அவளது உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை என்பதால், அவளது அகதி விண்ணப்பம் ஏற்கப்படுவதில்லை. ஸாமன் அவளுடன் தொடர்பு கொள்வதுமில்லை. ஆஸ்திரேலியாவிலிருந்து மறுபடியும் தெஹ்ரான் திரும்பும் மெர்ஸீயா தெஹ்ரான் நகரத்தின் இருளில் அலைந்து திரிந்தபடி வண்ண வெளிச்சத்தினுள் மறைந்து போவதுடன் படம் முடிகிறது.

கதை சொல்லப்படும் போக்கில் மெர்ஸீயா மற்றும் ஸதாப் தோழிகளின் வயதொத்த தெஹ்ரான் நகரத்து யுவதிகளதும் இளைஞர்களதும் பற்பல கதைகள் வந்து போகிறது. சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக மூன்று மாத கர்ப்பத்தைக் கலைக்க அலையும் இளம் பெண் கதறலுடன் மருத்துவமனையிலிருந்து விரட்டியடிக்கப்படுகிறாள். விவாகரத்துப் பெற்றபின்பும் தனது குழந்தையின் காபந்துக்காக வழக்குமன்றில் அலைந்து கொண்டிருக்கிறாள் ஒரு இளம் தாய். ஸதாப் தொடர்ந்து சட்டமீறல்களைச் செய்து கொண்டு அதற்கான தண்டப் பணத்தினையும் கட்டிக் கொண்டிருக்கிறாள். முடியாதவர்கள் கசையடிபடுகிறார்கள். டிஸ்கோ நடனத்தில் கலந்து கொண்ட யுவதிகளும் இளைஞர்களும் கசையடி வாங்குவதற்காக வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள்.

டிஸ்கோவிற்குக் காவலாக அமர்ந்தபடி பாடலிசைக்கும் ஆப்கானிய அகதிக் குடும்பத்தவர் விரட்டப்படுகிறார்கள். மெர்ஸீயாவின் வயது முதிர்ந்த பேராசிரியர் நிலுபர் எனும் சிறுமிக்கு நேரில் மெர்ஸீயாவை படுக்கைக்கு அழைக்கிறார். ஆஸ்திரேலிய குடிவரவுச் சட்டங்களின் இரக்கமற்ற மனிதத் தன்மையற்ற சட்டங்களைச் சாடுகிறார் மெர்ஸீயா. தான் இரண்டு வருடங்களாக விசாரணைச் சிறையில் இருக்கப் பலர் ஏழு வருடங்களாகக் குழந்தைகளுடன் அங்கு தங்கியிருப்பதை அவர் குடிவரவு அதிகாரிக்குச் சுட்டிக் காட்டுகிறார். நிலுபர் எனும் பெண் குழந்தை வளர்ந்த ஆண் பெண்களுக்கு இடையிலான வன்முறையின் சாட்சியமாக இருக்கிறாள்.

திரைப்படம் எனும் அளவில் எல்லா விதமான ஜானர் அளவுகோல்களையும் இந்தப் படத்தின் கதை சொல்லல் உடைத்திருக்கிறது. மைமிங் தியேட்டர் நிகழ்வு, மதுவிருந்தில் கவிதை வாசிப்பு, அண்டை வீட்டு ஆன்ட்டியுடன் குழந்தையின் பயணம், குடிவரவு விசாரணை நிகழ்வு, டிஸ்கோ என ஆவணப்படம், கதைப்படம், குடும்ப வீடியோப் பதிவு என அனைத்தும் கலந்தபடி, நேர்கோட்டுக் கதை சொல்லலைக் கலைத்தபடி படம் பயணிக்கிறது.

இரண்டு காட்சிகள் எந்தப் பார்வையாளனையும் அந்தர மனநிலையில் சஞ்சரிக்கச் செய்துவிடும். தோழி ஸதாப்பையும், தெஹ்ரான் நகரத்தையும் விட்டு மெர்ஸீயா விடைபெறப்போகும் முன்பு தெஹ்ரான் நகரத்திற்கு வெளியிலுள்ள மேட்டுப்பகுதிக்கு வருகிறார்கள் தோழிகள். தனக்கு மிகவிருப்பமான இரு புத்தகங்களை ஸதாப்பிடம் கையளிக்கிறாள் மெர்ஸீயா. புகைபிடித்தபடி இணைந்து பாடிக் கொண்டிருந்த தோழிகளுக்கிடையில் இப்போது கனத்த மௌனம் வீழ்கிறது. ஸதாப்பிடமிருந்து நடந்து கொஞ்சதூரம் செல்லும் மெர்ஸீயா சிறிய குன்று போன்ற இடத்திலிருந்து தெஹ்ரான் நகரத்தைப் பார்க்கிறாள். நகரத்தைப் பார்த்து வயிற்றை எக்கி தொண்டைகிழிய கதறத் துவங்குகிறாள். உடைத்துக் கொண்டுவரும் அழுகையை அடக்க முயலும் ஸதாப்பின் அகண்ட முகம் நமக்கு அருகாமையில் தெரிகிறது.

ஆஸ்திரேலிய அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இறுதியில் தெஹ்ரான் திரும்பும் மெர்ஸீயா தெஹ்ரான் நகரத்தில் இலக்கற்று அலைந்து திரிகிறபோது, தற்போது அமெரிக்காவில் நாடு கடந்து வாழும் ஈரானியப் பாடகன் மோசன் நம்ஜோவின் நியூ கான்டியன் ஐடியாலஜி எனும் பாடல் எமது இதயத்தை அறுத்துக் கொண்டு எழுகிறது. ஐரோப்பியரல்லாத மக்களுக்கு மனிதமேன்மையை உபதேசிக்கும் ஐரோப்பியரின் இரட்டை வாழ்க்கைமுறை, எமது நாட்டு அரசுகளின் ஒடுக்குமுறை, பெண்களின் மீதான காதலற்ற ஜடவயமான பாலுறவு போன்றவற்றைக் குறித்த பாடல் அது.

மோசன் நம்ஜோவின் இசையின் சமகாலத் தன்மையை அறிய ஒருவர் அவர் பாடிய ஹஸ்தா லா ஸ்டம்பா கமான்டன்ட சே குவேரா பாடலையும் கேட்கலாம். இந்தத் திரைப்படம் இதுவரை அறியப்பட்ட ஈரான் குறித்த கிராமிய சித்திரத்தினையும் அழுது வடியும் ஈரானிய மக்கள் குறித்த கிளர்ச்சியூட்டும் கீழைத்தேய பிம்பங்களையும் முற்றிலும் நிராகரித்திருக்கிறது. நம்பிக்கையும் நம்பிக்கையிழப்பும், விடுதலைத் தேட்டமும் அவஸ்தையும், இலட்சிய வேட்கையும் கொண்ட ஈரானின் புதிய தலைமுறையின் பாடுகளையும் சந்தோஷங்களையும் இத்திரைப்படம் முன்வைத்திருக்கிறது. ஈரான் அரசும் சமூகமும் அதனது அடிப்படைவாதிகளும் கலாச்சார பொலீசும் குறித்த கடுமையான விமர்சனங்களை இப்படம் கொண்டிருக்கிறது. சம அளவில் ஆஸ்திரேலியக் குடிவரவுக் கொள்கைகளின் இரட்டை முகத்தையும் அவர்களது மனித உரிமை நாடகங்களையும் விமர்சிக்கிறது.

முக்காடு போடாததற்கும் மது அருந்தியது மாதிரி நடித்ததற்கும் ஈரானிய அரசு இந்தத் திரைப்படத்தின் நாயகியான மெர்ஸீயா பாத்திரத்தை ஏற்ற மெர்ஸீயா வபாமெருக்கு 90 கசையடிகளும் ஒராண்டு சிறைத்தண்டனையும் தருமானால் அதனைக் காட்டுமிராண்டித்தனம் எனும் சொல்லில் அல்லாத வேறு சொல்லில் குறிப்பிடுதல் முடியாது.

கதாநாயகியின் பாத்திரப் பெயரும் மெர்ஸீயா. நடிகையின் இயற்பெயரும் மெர்ஸீயா. படத்தின் இயக்குனர் முஸாவி இப்படத்தின் கதை மெர்ஸீயாவினதும் தனதும் ஸாமனதும் சொந்த வாழ்வு அனுபவங்களின் மீதான, தனது சமகாலத் தோழன் தோழியரதும் கதை எனக் குறிப்பிடுகிறார். ஸாமனாக நடித்தவர் முஸாவியின் பள்ளித் தோழர். மெர்ஸீயா அவரது நாடகப் பள்ளித் தோழி. ஸதாப்பாக நடித்தவர் முஸாவியின் கல்லூரித் தோழி. ஓரு வகையில் இப்படம் இயல்பில் நாடகக் கலைஞரான மெர்ஸீயாவின் சொந்தக் கதை. பிறிதொரு வகையில் இது படத்தின் இயக்குனர் முஸாவியினது தலைமுறையினரின் கதை.

ஐரோப்பிய யூனியன் கலாச்சாரப் பிரிவு மெர்ஸீயா வபாமெருக்குத் தரப்பட்ட தண்டனையைக் கண்டித்திருக்கிறது. இதனாலும், இயக்குனர் முஸாவி ஆஸ்திரேலியாவில் வாழும் ஈரானியர் என்பதாலும், இதனை ஏகாபத்திய சதி என்றோ அல்லது ஐரோப்பிய மையவாதம் என்றோ, ஈரானிய ஜனாதிபதி அகமதிநஜாத்தை ஆதரிக்கிற அவரது கலாச்சார நண்பரான மகிந்த ராஜபக்சே என்கிற பௌத்த-சிங்கள அடிப்படைவாதி போலச் சொல்லலாம். ராஜபக்சே, பிரசன்ன விதானகேயின் பௌர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம் எனும் திரைப்படத்தினை தனது ராணுவத்தைக் கேவலப்படுத்துகிறது எனத் தடை செய்தார். அகமதிநெஜாத் எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது படத்தை நடிகை முக்காடு போடாததற்கும், மது அருந்தியது போல நடித்ததற்காகவும் தடைசெய்து கதாநாயகியையும் தண்டித்திருக்கிறார்.

எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது படத்தில் வரும் ஒரு மைமிங் தியேட்டர் காட்சி இது: தரையில் தவழ்ந்தபடி மேலெழும், வலியில் அவதியுறம் ஆண்களும் பெண்களும் தொடர்ந்து சித்திரவதையாளர்களால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். எழ முயலும் ஒவ்வொரு முறையும் அவர்கள் தரையில் அடித்துச் சாய்க்கப்படுகிறார்கள். சிலர் கொல்லப்படுகிறார்கள். என்றாலும் ஒருவரையொருவர் தொற்றியபடி எழுந்து, கைக்கெட்டிய தூரத்தில் தெரியும் ஜன்னல் சட்டங்களை நோக்கி அவர்கள் பறவையின் சிறகுகள் போலக் கைகளை விரித்தபடி விரைகிறார்கள்.

ஜன்னல்கள் திறவுபடவேண்டும் அல்லது உடைபட வேண்டும் என்பதுதான் எவரதும் விருப்பமாக இருக்கும்.

 

 

2 Comments on “எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது”

  1. மிகுந்த மனத்தாக்கத்தை ஏற்படுத்தும் காத்திரமான பதிவு. அதனை உயிரோட்டம் ததும்ப தனக்கே உரித்தான தனித்துவ மொழி நடையில் நமக்குத் தந்திருக்கும் யமுனா ராஜேந்திரனுக்கும், நல்ல பல பதிவுகளையே தொடர்ந்தும் பகிரும் ஊடறுவுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    மிக்க அன்புடன்,
    லறீனா அப்துல் ஹக்
    (இலங்கை)

  2. “எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது”என்ற சொல்லாட்சியே திகைக்க வைக்கிறது.திடுக்கிட வைக்கிறது.தமிழக அல்லது இந்தியச் சினிமாச்சூழலில் இப்படியான் சித்தரிப்புகள் இன்னும் 100 வருடங்களுக்கு சாத்தியமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *