வேரோடி விழுதெறிந்து – ஒரு நூலகவியலாளரின் தமிழ் இலக்கியப்பதிவு

பாமினி

Verodi வேரோடி விழுதெறிந்து  – ஒரு நூலகவியலாளரின் தமிழ் இலக்கியப்பதிவு எனது தேடலை ஊக்குவிக்கும் தொகுப்பாக அமைந்திருந்தது. இக்கட்டுரைகளில் எழுப்பப்படும் பல வினாக்கள் பல புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது.

 வேரோடி விழுதெறிந்து  –  ஒரு நூலகவியலாளரின் தமிழ் இலக்கியப்பதிவு (என்.செல்வராஜா)

ஓர் அறிமுகம்

அண்மையில் நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் வேரோடி விழுதெறிந்து   வாசிக்க முடிந்தது.புத்தகத்தின் மீதான முதல் பார்வையே எனக்கு எங்களூர் ஆலமரத்தை நினைவு கூர வைக்கிறது. கருத்தாழமும், வனப்புமிக்க அட்டைப்படமும் என்னை வாசிக்கத் தூண்டின என்றால் அது மிகையாகாது. இருபத்திற்குமேற்பட்ட நூல்கள் மற்றும் பெருந்தொகையான நேரத்தை செலவிட்டு தயாரிக்கும் அவசியமானதும், பிரபல்யமானதுமான நூல் திரட்டின் ஆசிரியரான இவரின் நூலொன்றை நான் வாசிப்பது இதுவே முதல்தடவையாகும்.  

வேரோடி விழுதெறிந்து   இலங்கையிலுள்ள ஞானம் பதிப்பகத்தின் வெளியீடாக இந்த ஆண்டு வெளிவந்துள்ளது.192 பக்கங்களையுடைய இந்நூல் எழுத்தாளரின் வெவ்வேறு காலப்பகுதிகளில், பல்வேறு வெளியீடுகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. நூலின் உள்ளடக்கம் தாயகம், அயலகம், புகலிடம் என வரையறுக்கப்பட்டு இத் தலைப்புக்களின் கீழ் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தாயகம் தொடர்பான கட்டுரைகளின் கருப்பொருளாக வடப்புலப்பெயர்வு தொடர்பான படைப்புக்கள் பதிவாகியுள்ளன.பாரிய இடப்பெயர்வு நடைபெற்ற 1995 காலப்பகுதியில் எதிர்நோக்கிய பிரச்சனைகள், வரலாற்றை பிரதிபலிக்கும் அக்காலப் படைப்புக்களின் பதிவுகள், சிதைந்து போனவை பற்றிய விபரங்களும் மிக நேர்த்தியாக பதிவும் பகிர்வும் செய்யப்பட்டுள்ளன.

ஈழத்தின் பத்திரிகை வரலாறு பற்றிய பார்வையை வெளிப்படுத்துகிறது மூன்றாவது கட்டுரை. இதையடுத்து சுனாமி தொடர்பான இலக்கியங்கள் பற்றியும், நூல்வெளியீட்டு முயற்சிகளில் கல்வெட்டுகள் பற்றிக் கூறும் பயனுள்ள தகவல்கள் பலவற்றையும் கொண்டுள்ளது இக்கட்டுரை. கல்வெட்டுக்கள் எழுதுவது, வெளியிடுவது தொடர்பாக எனக்கிருந்த பார்வையை விசாலித்துக் கொள்ள இது எனக்கு உதவியுள்ளது. கல்வெட்டுக்கள் மூலம் சரித்திர, வரலாற்றுக்கு தேவையான பல வியடங்களை அறியக்கூடியதாக இருப்பதை இக்கட்டுரை விளக்குகிறது. ஈழத்தவர் வழங்கிய நடனக்கலை நூல்கள் தலைப்பிலான கட்டுரை, ஈழத்தவரின் நடன, கலைக்கான பங்களிப்பினை விரிவாகப் பதிவு செய்கிறது, ஈழத்தின் சின்னமேளம் எனப்பெயர் பெற்ற அழிந்து போகும் கலைவடிவம் பற்றியும், இன்னும் பலமுக்கிய விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறது.

Verodiஅயலகப்பிரிவினுள் சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழில்  இலக்கிய முயற்சிகள் பற்றியும், மலேசியாவில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் இலக்கிய முயற்சிகள் மற்றும் படைப்பு முயற்சிகள் தொடர்பான விடயங்களைக் குறிப்பிடுகிறது. இக்கட்டுரையின் மூலம் இலங்கைத்தமிழருக்கும் மலேசியவிற்குமான வரலாற்று ரீதியான தொடர்புகளையும், ஈழத்தமிழர்களின் இலக்கிய பங்களிப்புக்களும் ஈழத்தமிழர்களின் வரலாற்றின் பிறிதொரு பக்கத்தைக் காணச் செய்கிறது.ஈழத்தமிழர்களின்  இலக்கிய வெளியீடுகள் தொடர்பாகவும் அவை சந்தித்த, சந்திக்கும் சவால்கள் தொடர்பான பயனுள்ள கட்டுரையிது. இந்திய இலக்கியங்களுக்கு சிறந்த சந்தையாக இலங்கையும், ஏன் புலம்பெயர்ந்த நாடுகள் அமைந்துள்ளன தொடர்பான அரசியலை நாம் புரிந்து கொள்ள ஒர் சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

புகலிடம் பற்றிய பிரிவில் பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் பற்றிய இலக்கியப்பதிவுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களின் தோற்றம், வளர்ச்சி, ஊடகத்துறையின் வளர்ச்சி என்பன விரிவாக பேசப்படுகிறது. அத்துடன் புலம்பெயர்ந்தோரின் படைப்புக்களை வெளியிடுவது, விநியோகிப்பது தொடர்பான யதார்த்தநிலையையும் கட்டுரைகள் சுட்டிக்காட்டுகின்றன.

நான் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தொடர்பாக மேலெழுந்தவாரியாக விடயங்களைக் குறிப்பிட்டுச் செல்லும் போது  இவை எமக்கு பரீட்சயமானவைதானே என எண்ணத் தோன்றலாம், ஆனால் இக்கட்டுரைகளை தொடராக, முழுமையாக வாசித்து அசைபோடும் போது ஈழத்தமிழர்களின் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, விரிவாக்கம் பற்றிய எமது சிந்தனைத்தளத்தை விரிவாக்கும் பலவிடயங்களையும் காலக்குறிப்புக்களையும் இக்கட்டுரைகள் உள்ளடக்கியுள்ளன. தமிழியல் வெளியீட்டுத் தொடர்பகம் : ஈழத்தமிழ்த்தேசிய நூலகத்திற்கான ஒரு முன்னோடி என்ற கட்டுரையை இலக்கியம், இலக்கிய வரலாறு தொடர்பாக ஆர்வமுள்ள நாம் வாசிப்பது நன்மை பயக்கும். இதில் உலகம் முழுவதும் பரந்து வாழ்பவர்கள் எவ்வாறு வெளியீடுகளை காப்பது, ஆவணப்படுத்துவது போன்ற விடயங்கள் படிப்படியாக சொல்லப்பட்டு வருகிறது.

இறுதியில் பின்லாந்தின் இலக்கியபணி தொடர்பாகவும், யேர்மனியில் வெளிவந்த அகராதி பற்றியது எனப் பலகாத்திரமான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. தளராத எழுத்து நடையும், செழுமையான தமிழும், கட்டுரைத்தேர்வும், வரிசைப்படுத்தலும் இவற்றில் இழையோடும் மையஇழையும் இத்தொகுப்பின் சிறப்பம்சங்களாகும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நாம் வரலாற்றுடனும், ஈழத்தமிழரின் இலக்கிய முயற்சிகளுடனும் பயனிக்க கூடியதாக இருக்கிறது.

நாம் எழுதும் போது பயன்படுத்தப்படும் மூலப்பிரதிகளின் விபரங்களை தெளிவாக குறிப்பிடுவது எழுத்தாளர்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாகும். இப்பண்பு எல்லாக் கட்டுரைகளிலும் இறுக்கமாக கடைபிடிக்கப்பட்டுள்ளது.

வேரோடி விழுதெறிந்து  – ஒரு நூலகவியலாளரின் தமிழ் இலக்கியப்பதிவு எனது தேடலை ஊக்குவிக்கும் தொகுப்பாக அமைந்திருந்தது. இக்கட்டுரைகளில் எழுப்பப்படும் பல வினாக்கள் பல புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது.

2009

1 Comment on “வேரோடி விழுதெறிந்து – ஒரு நூலகவியலாளரின் தமிழ் இலக்கியப்பதிவு”

  1. எனது நூலை அறிமுகம்செய்துவைத்தமைக்கு நன்றி. அண்மைக்கால வெளியீடான தேடலே வாழ்க்கையாய் என்ற நூலை அனுப்பிவைத்திருக்கிறேன். நேரமுள்ளபோது அறிமுகம் செய்யவும்.
    அன்புடன்
    என்.செல்வராஜா
    London
    selvan@ntlworld.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *