தமாரா எனும் தானியா: சேகுவேராவுடன் மரணமுற்ற கெரில்லா போராளி

யமுனா ராஜேந்திரன்
thaniya அர்ஜன்டீனாவில் ஜெர்மனியப் பெற்றொருக்குப் பிறந்த தானியா எனும் பெண் கெரில்லா போராளி சேகுவேராவின் ரகசியக் காதலியாக இருந்தார் என்பது பிறிதொரு பொய். பொலிவியாவில் சே குவேராவினது கெரில்லாக் குழவின் ஒரே பெண் போராளியான தான்யா எனும் தமாரா ஒரே சமயத்தில் கியூபாவின் உளவாளியாகவும், சோவியத் மற்றும் கிழக்கு ஜெர்மன் உளவாளியாகவும் இருந்து,

சேகுவேராவின் கெரில்லா யுத்தததைச் சிதைப்பதிலும் அவரது படுகொலையிலும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ ஈடுபட்டது என்பது சே குவேராவின் வரலாற்றை அறிந்த அனைவரும் அறிந்தவொரு உண்மை. சே குவேரா பற்றி அமெரிக்க சார்பு ஊடகங்களில் இரண்டுவிதமான பொய்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது உண்டு. பிடல் காஸ்ட்ரோவுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால்தான், பிடலுக்குத் தெரியாமல் கியூபாவிலிருந்து ரகசியமாக வெளியேறி சே குவேரா பொலிவியாவில் கெரில்லா யுத்தத்தைத் துவக்கினார் என்பது ஒரு பொய். இந்தப் பொய்யை குவேராவின் வரலாற்றை எழுதிய காஸ்ட்டநாடாவும் வாந்தியெடுக்கிறார்.

thaniyaஅர்ஜன்டீனாவில் ஜெர்மனியப் பெற்றொருக்குப் பிறந்த தானியா எனும் பெண் கெரில்லா போராளி சேகுவேராவின் ரகசியக் காதலியாக இருந்தார் என்பது பிறிதொரு பொய். பொலிவியாவில் சே குவேராவினது கெரில்லாக் குழவின் ஒரே பெண் போராளியான தான்யா எனும் தமாரா ஒரே சமயத்தில் கியூபாவின் உளவாளியாகவும், சோவியத் மற்றும் கிழக்கு ஜெர்மன் உளவாளியாகவும் இருந்து, சே குவேராவைக் காட்டிக் கொடுத்து அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தார் என்றும் கேவலமான கதைகளை அவர்கள் பரப்பி வந்தார்கள். அதனோடு சேர்த்து குவேரா குழுவின் போராளிகளோடு பாலுறவில் ஈடுபட்ட தான்யா தனது பிறப்புறுப்பில் ஏற்பட்ட புற்றுநோயினால் மரணமுற்றார் எனும் அருவருப்பான கதைகளைக் கூட அவர்கள் கட்டவிழ்த்துவிட்டார்கள்கம்யூனிச நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமான முரண்பாடு உச்சத்திலிருந்த தொண்ணூறுகள் வரையிலான உலகில் நிலவிய அரசியல் காரணங்களால், இந்த அருவருப்பான குற்றச்சாட்டுக்களின் பின் பல்வேறு போராளிகளின் வாழ்வும், கியூப அரசு சார்ந்த உலக கெரில்லா யுத்த அரசியல் ரகசியங்களும் இருந்ததால், இந்த அவதூறுகளுக்கு எல்லாம் அவ்வப்போது பதில்கள் தருவது சாத்தியமில்லாமல் இருந்தது.

இரண்டு நிகழ்வுகள் இந்த தடையை முடிவுக்குக் கொண்டுவந்தன. 1989 ஆம் ஆண்டு துவங்கிய கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளின் வீழச்சி தொண்ணூறுகளின் ஆரம்ப ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 1997 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் லீ ஆன்டர்ஸன் எழுதிய சே குவேராவின் வாழ்க்கை வரலாறு, சே குவேராவின் பொலிவியா யுத்தம் குறித்த முழு உண்மைகளையும் உலகுக்கு முன்வைத்தது.

தொடர்ந்து பெரும்பாலுமான இலத்தீனமெரிக்க நாடுகளில் வட அமெரிக்க எதிர்ப்பு இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். சே குவேராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சில வருடங்களில் அவரது சக கெரில்லாவான தானியாவின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது.அதுவரையிலும் ரகசியமெனப் பாதுகாக்கப்பட்ட சோவியத், கிழக்கு ஜெர்மன், கியூபா ஆவணங்கள் வெளியுலுகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டன. சே குவேராவிற்கும் தானியாவுக்கும் இருந்த கெரில்லா யுத்தம் சார்ந்த அனைத்து அவதூறுகளும் இதனால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

சே குவேராவின் மீதும் தானியாவின் மீதுமான, அதனோடு பிடல் காஸ்ட்ரோவின் மீதுமான வரலாற்றுக் கறைகள் அனைத்தையும் துடைத்தழித்தபடி 2005 ஆம் ஆண்டு தானியாவின் வாழ்வும் மரணமும் குறித்த ஒரு நூல் (Tania : Undercover with Che Guevara in Bolivia : 2005) ஆஸ்திரேலியப் பதிப்பகமான ஓசன் வழி வெளியானது. தானியாவின் காதலரும், கியூப உளவுத்துறை அதிகாரியும், ஆப்ரோ கரீபியரும், கியூப விடுதலைப் போராளியும் ஆன யுலிசஸ் எஸ்ட்ராடா இந்த நூலினை எழுதியிருக்கிறார்.

356 பக்கங்கள் கொண்ட இந்த நூல் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் 162 பக்கங்கள் தான்யாவின் பிறப்பு முதல், சே குவேராவுடனான அவரது அரசியல் தோழமை ஈறாக, அவரது மரணம் வரையிலான வாழக்கை வரலாற்றை முன்வைக்கிறது. 194 பக்கங்கள் கியூப, சோவியத், கிழக்கு ஐரோப்பிய உளவுத்துறை ஆவணங்களோடு, தனது இரண்டு ஆண்டு கெரில்லாப் பயிற்சி தொடர்பாக தான்யா கியூப உளவுத்துறைக்கு எழுதிய ஆவணங்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆவணங்கள் திட்டவட்டமாக முன்வைக்கும் உண்மைகள் இதுதான்:

(1). 1967 அக்டோபர் 9 ஆம் நாள் பொலிவியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிவிய யுத்தத்திற்கான முன்தயாரிப்பை சே குவேரா 1963 ஆம் ஆண்டிலேயே துவங்கி விடுகிறார். சே குவேரா பொலிவியாவைத் தேர்ந்து கொண்டதற்கான காரணம் என்ன? இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவதாக புவியியல் ரீதியில் பொலிவியா இலத்தீனமெரிக்கக் கண்டத்தின் மையமான நாடாக இருந்தது. இங்கு உருவாக்கப்படும் கெரில்லா யுத்தம் என்பது முழு இலத்தீனமெரிக்கக் கண்டத்திலும்; பரவுவதற்கான வாயப்புக்கள் அதிகம். இரண்டாவதாக சே பொலிவியாவில் தனது நடவடிக்கைகளைத் துவங்குவதற்குத் தேர்ந்து கொண்ட மலைப் பகுதி தனது சொந்த நாடான அர்ஜன்டீனாவுக்கு அருகில் இருந்தது.

சே குவேரா இலத்தீனமெரிக்க கண்டம் தழுவிய புரட்சியைத் திட்டமிட்டவர். அதனால்தான் அவரது பொலிவிய கெரில்லாக் குழு என்பது அனைத்து இலத்தீனமெரிக்கப் போராளிகளையும் கொண்டதாக அமைந்தது. பொலிவியாவுக்குப் புறப்படும் முன்பாக சே குவேரா தனது கியூப அரசுப் பதவிகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை, கியூபக் குடியுரிமையையும் அவர் விட்டுச் செல்கிறார். தேசம் சார்ந்த எல்லைகளைக் கடந்த உலகப் புரட்சியாளர் என்பதை நடைமுறையில் காட்டியவராக அவர் இருந்தார். இதே காரணத்திற்காகத்தான் ஆப்ரிக்காவுக்குச் சென்று தான்சானியாவிலும் காங்கோவிலும் அவர் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இவ்வகையில் சே குவேரா ஒரு உதாரணமான சர்வதேசீயப் புரட்சியாளனாகத் திகழ்ந்தார்.

(2). இலத்தீனமெரிக்கக் கண்டம் தழுவிய புரட்சிக்கான தயாரிப்புக்காக அவர் தேர்ந்து கொண்ட ஆளுமைதான் தானியா. தானியாவுக்கு எந்தவிதமான பொறுப்புக் கொடுக்கப்படப் போகிறது என்பதனை அறிவிக்காமலேயே, 1963 ஆம் ஆண்டு அவருக்கான உளவுத்துறைப் பயிற்சிகளையும், மாறுவேடத்தில் அடையாளமற்று உலகின் வேறுவேறு நகர்களில் திரிந்து உளவறியும் மனஅமைவையும், தற்காப்புக் கலையையும், தகவல் பறிமாற்றப் பயிற்சியையும் பெறுவதற்கு அவரைத் தேர்வு செய்தார் சே குவேரா.

இரண்டு ஆண்டுப் பயிற்சியின் பின்பாக 1964 அக்டோபர் மாதம் தான்யா பொலிவியாவினுள் நுழைகிறார். பொலிவியாவின் ஆளும் வர்க்கத்துடன், அதனது ராணுவ சர்வாதிகாரி பாரியன்டாசுடன், ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் தானியா பொலிவியப் படைவலிமை, அரசின் அரசியல் நகர்வுகள் குறித்த தகவல்களை குவேராவுக்குத் தருகிறார். அதனைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குவேரா ரமோன் எனும் பெயரில், மாறுவேடத்தில் பொலிவியாவுக்குள் நுழைகிறார்.

தான்யா, சே குவேராவை முதன்முதலாக 1960 ஆம் ஆண்டு சேகுவேரா ஒரு வர்த்தகக் கண்காட்சிக்காக கிழக்கு ஜெர்மனிக்கு விஜயம் செய்கிறபோது மொழிபெயர்ப்பாளராக அவரைச் சந்திக்கிறார். கியூபப் புரட்சியினால் ஆகர்ஷிக்கப்பட்டு கியூபாவில் தன்னார்வ உழைப்பிற்காக அவர் கியூபா வருகிறார். சே குவேராவுடன் கட்டிடம் கட்டுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். ஜேர்மன், ஸ்பானிஷ், ரஸ்ய, இத்தாலி மொழியில் தேர்ச்சி கொண்ட, ஜெர்மன் கம்யூனிஸ்ட்டுகளின் மகளான, அர்ஜன்டினாவில் பிறந்த, இலட்சியப் பிடிப்பு கொண்ட இந்த இளம் பெண் தனது உலகப் புரட்சிக்கான விதைகளை பொலிவியாவில் ஊன்றுவாள் எனும் நம்பிக்கையைப் பெறுகிறார்.

இலத்தீனமெரிக்கப் புரட்சிக்காக ஆபரேஷன் பென்டாஷ்மா (Operaion Fantasma) எனும் திட்டம் வகுக்கப்படுகிறது. ஓன்று, இரண்டு, மூன்று வியட்நாம்களை உலகில் விதைக்கும் திட்டத்தின் பகுதியாக இலத்தீனமெரிக்காவில் அதனைத் துவங்க நினைக்கிறார் சே குவேரா.

சேகுவேராவின் திட்டத்தினை நிறைவேற்ற அவரது கட்டளையை ஏற்று பொலிவியா சென்ற தானியா, சே குவேராவிற்கு முன்பாகவே பொலிவிய ராணுவத்தினரால் கொல்லப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார். தான்யாவின் மரணத்தைப் பொலிவிய வானொலி அறிவிக்கிறபோது சே குவேரா முதலில் அதனை நம்ப மறுக்கிறார். சே குவேராவுக்கு முன்பாகக் கியூபாவை விட்டு பொலிவியா சென்ற, குவேராவுக்கு முன்பாகவே மரணத்தைத் தழுவிய தான்யாவிவின் உடல், குவேரா இறந்து முப்பது ஆண்டுகளின் பின், கியூபாவுக்கு கொண்ட செல்லப்பட்ட ஓராண்டு கழித்து, தான்யா கொல்லப்பட்டு 31 ஆண்டுகளின் பின், அவரது உடல் 13 அக்டோபர் 1998 ஆம் ஆண்டு பொலிவியாவின் வெலிகிரண்டா மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிவிய கெரில்லா யுத்தத்தில் தான்யா கொல்லப்பட்ட போது அவருக்கு 29 வயதே ஆகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *