“ஆஷிகா”வின் இரண்டு கவிதைகள்

ஆஷிகா, கொழும்பு – 12 இலங்கை

நாளை…

நோயின் கூடல்
உடம்போடு
மனதின் பிணியால்…

துணைக்குரியவன்
தொலைவினில்
துன்பங்கள்
அருகினில்…

காதலுக்காய்
தேடுகிறேன்
காமத்திற்காயல்ல
கட்டியவன்
சென்ற திசையில்…
கண்கள்
நிறைகிறது
உன் நினைவுகள்
நெஞ்சினில்
நிறைகையில்….

நித்தமும்
குரல் கேட்ட
பின்னும்
முகம் நோக்க
ஏங்குகிறேன்….

கடல் நோக்கும்
குப்பத்து மலரின்
குமுறல்கள்
உணருகிறேன்…
உருகுகிறேன்……..

மணங்கமழும்
மழலையில்
மனந்திறக்க
வழியறியாது….

சிணுங்கலில்
முகஞ் சுளித்திடும்
செல்வனை
காண்கையில்

தந்தையைத்
தேடும்
தளிரை நினைக்கையில்
இரட்டிப்பாகிறது
இன்னல்கள்….

தாயுள்ளம்
சேயுள்ளம்
சேர்ந்து மகிழ
நீ சேரும்
நாள் எப்போது?……

***** 
பச்சை மரம் 

முதிர்கன்னி
முடிந்து வைத்த
ஆசைகள்
அவிழும் முன்
முடியப் போகிறது
இவள் வாழ்க்கை…

புகழ் பெற்ற
புற்று நோய்
முற்றுகையிட்டது
இவள் ப+வுடலில்
வெற்றிக் களிப்போடு….

விதியினை நோவதா?……
இல்லை
படைத்தவன்
பரீட்சையென சொல்வதா?…..

பாவையவள்
பலதும் எண்ணியே
பரிதவித்தாள்
பரிதாபமாக….

நோயது செய்யும்
வேதனைத் தாங்கும்
அவள் உள்ளம்
சுற்றம் தரும்
வதையில்
புழுவாய் துடிக்கிறது…

தாயென ஒருத்தி
தரணியில்
வாழ்ந்திருப்பின்
தனித்திருக்க மாட்டேன்
எனத் தவிக்கிறாள்
தனியாக…
 

உற்றவர்கள்
உறவினர்கள்
வெட்டிப் பேசும்
சுட்டுப் பேச்சில்
பட்டுப் போனது
பச்சை மரம்……

ரணமான புண்களுக்கு
ஆறுதல் மருந்தை
ஆதங்கத்தோடு
தேடுகிறாள்
இறைவனடியில்
இறுதியாக………..

(ஆஷிகா போன்ற புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்க ஊடறு களம் அமைத்துக் கொடுக்கும்)

1 Comment on ““ஆஷிகா”வின் இரண்டு கவிதைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *