தீக்குளித்தல் “தியாக”மல்ல

ஓவியா இந்தியா

sengodi

இதனை எப்படி நேர்மையான அரசியல் நடத்தும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியும்?ஒரு குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் மீது கோபம்தான் மிகையாக வரும். அரசியல் வெளியில் மட்டும் அது எப்படி தியாகமாகிறது? இல்லை அதுதான் தியாகமென்றால் உயிரோடிருக்கின்ற நாமெல்லாம் யார் பாவிகளா? வெறும் சோறு தின்பதற்காக வாழுகின்ற பிண்டங்களா? அப்படிப்பட்ட நமக்கு அவர்களை வாழ்த்த என்ன தகுதி இருக்கிறது? சாவதற்கு அவர்கள்……. அவர்களுக்கு வாழ்த்துக் கவிதை பாட நாம் எல்லோருமா? தீக்குளித்தலை தியாகம் என்று சொல்வது இனியும் பலரை தீக்குளிக்கச் சொல்வதற்கு சமம்.

****

இந்தக்கட்டுரைக்கு இந்தத் தலைப்பை கொடுப்பதற்கு முன் என் மனதுக்குள் ஒரு பெரிய போரட்டமெழுந்தது. இறுதியாக இந்த வரிசையில் தன்னை மாய்த்துக் கொண்ட செங்கொடி முகம் கண்ணுக்குள் வந்தது. அந்தக் குழந்தையின் உணர்வை அவமதித்ததாகி விடுமோ என்றஅச்சம் வந்தது. ஆனால் அதனையும் மீறி அந்தக் குழந்தை இறந்தது நியாயமேயில்லை என்ற எனது உணர்வு மேலோங்கியது. இந்தத் தலைப்பு அந்தக் குழந்தை மீது வைத்த பாசத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல இன்னும் இனியும் இந்த தமிழ் மண்ணில் பிறக்க இருக்கும் தமிழ் உயிர்களின் மீதான கவலையும் அக்கறையுமேயாகும்.

மொழிப் போராட்ட வரலாற்றில் இருந்துதான் இதன் முதல் அத்தியாயம் துவங்குகிறது. இதுதிராவிட இயக்கம் வளர்த்த பண்பாடு என்று எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரியாரின் திராவிடர் கழகம் நிச்சயமாக இப்படி ஒரு பண்பாட்டிற்கு எந்த விதத்திலும் மூலமாகவோ வேராகவோ இருந்ததேயில்லை என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். ஏனெனில் பெரியார் மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இயக்கம் கண்டவர்.அவ்வழியில் மிகப் பெரிய சுய சிந்தனையாளராக முகிழ்த்தவர். அச்சிந்தனைகளின் வழி இமயம் என உயர்ந்தவர். அதன் உச்சமாக அவருடைய கீழ்க் காணும் சிந்தனைகளை உணர்ந்து பார்க்க வேண்டும், பொது வாழ்க்கைக்காக தனது தனி வாழ்க்கையை துறப்பதை தியாகம் என்று வர்ணிப்பதையே அவர் மறுதலிக்கிறார்.

sengodi

பொது வாழ்க்கை எனக்கு மன நிறைவைத் நான் பொது வாழ்க்கையில் இருக்கிறேன். இது எப்படி தியாகமாகும் என்று கேட்டவர் அவர். யாருடைய உயிரும் (அவர் எதிர்த்தவர்கள் அவரை எதிர்த்தவர்கள் உயிர் உட்பட) எந்தப் பெயரிலும் பறிக்கப்படுவதை அவர் ஒருபோதும் ஒரு வழிமுறையாக ஏற்றுக் கொண்டதில்லை. காந்தி அகிம்சாவரதி என்று உலகில் பரப்புரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்ணாவிரதம் என்ற பெயரில் தனது உடலையும் உயிரையும் ஒரு மிரட்டல் ஆயுதமாக வைத்து தன்னை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களை பணிய வைப்பது மனித நேயம் என்ற பண்புக்கு விரோதமானது என்பதுடன் மனித இனம் போரைத் தவிர்த்து ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் தனது முரண்களைக் களைந்து மேன்மேலும் பண்பட்ட சமூகமாக முன்னேற முடியும் என்ற நாகரீக அரசியலுக்கு முட்டுக்கட்டை போடக் கூடியது என்பதை ஆழ்ந்து சிந்திப்பவர்கள் உணர முடியும். எனவேதான் பெரியார் தன்னைத் தானே வருத்தும் உண்ணாவிரதம் சண்டித்தனம் என்று கூறினார். எனவே தீக்குளித்தல் என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தெ £டர்பு படுத்த முடியுமே தவிர திராவிடர் கழகத்துடன் தொடர்பு படுத்த முடியாது.

இது ஏன்நிகழ்ந்தது எனில் திராவிடர் கழகம் அறிவை முன்னிலைப் படுத்திய இடத்தில் திராவிடர் முன்னேற்றக் கழகம் உணர்ச்சியை முன்னிலைப் படுத்தியது. அதன் விளைவுதான் அதன் தலைவர்களை பின்னாளில் தான் சிறைப்பட்டால் தீக்குளித்த தொண்டர்களை வாழ்த்தி கவிதைகள் எழுதவும் மேலும் உணர்ச்சியைத் தூண்டி பேசவும் வைத்தது.

 

மொ ழிப் போராட்டம் அதன்பின் தலைவர்கள் மீது கொண்ட எசமான விசுவாசம் இப்படி தொடர்ந்த தீக்குளிப்புகள் வரிசை ஒரு மிக நீண்ட இடைவெளியை சந்தித்தது. மொழிப் போராட்டத்துக்குப் பின் திமுக மற்றும் மதிமுக தலைவர்களுக்காக தீக்குளிப்புகள் நடந்த போது இது திராவிட இயக்கத்தின் மீதான ஒட்டுமொத்த விமர்சனமாக மாறியது. ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் இந்த விமர்சனம் வலுவாக எடுத்தாளப் பட்டிருப்பதை நாம் காணலாம். இவ்வாறு எதிரிகளின் வலுவான விமர்சனத்துக்கு ஆளானதை உணர்ந்தோ உணராமலோ தொட்டதற்கும் உணர்ச்சி வசப்பட்டு தீக்குளித்தல் என்பது ஒரு முடிவுக்கு வந்தது போலிருந்தது. இப்போது தீக்குளித்தல் என்பது முத்துக் குமாருக்குப் பிறகு ஈழப் பிரச்சனை முன்னுக்கு வருகின்ற போது நிகழத் துவங்கியிருக்கிறது. முத்துக் குமாரைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 14 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது செங்கொடியைத் தொடர்ந்து ஒருவர் தீக்குளித்ததாக செய்தி வந்தது.

இன்று உலகெங்கும் ஈழத் தமிழர்கள் பரவி நிற்கிறார்கள். தங்கள் தாயகத்திற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முருகதாசன் என்ற ஒரு நபர் மட்டுமே தீக்குளித்திருக்கிறார். ஈழத் தமிழர்கள் தங்கள் கடமையை உணர்ந்திருக்கிறார்கள் உயிரிழத்தல் என்பதன் வலியை முழுமையாக உணர்ந்தவர்கள் அவர்கள். உயிர் அவர்களுக்கு மிக முக்கியமானது. இதில் இன்னொரு முக்கியமான விசயத்தை பதிவு செய்ய வேண்டும். இதைக் குறித்து கவலையுடன் பேசிக் கொண்டிருந்த போது ஊடறு தோழி றஞ்சி கேட்டார்,சொந்தத்தை,உற்ற உறவுகளை இழந்து விட்டு நிற்கும் நாங்கள் யாரும் தீக்குளிக்கவில்லை. ஏன் உங்க தோழியர் இப்படி செய்து விட்டார்? அவர் மேலும் ஒரு தகவலைத் தெரிவித்தார். வெளிநாட்டில் சுவிட்சர்லாந்து ஐ,நா, அலுவலகம் முன்பாக முருகதாசன் தீக்குளித்த தகவல் மட்டும்தான் உங்களுக்கு தெரியும். ஆனால் அந்நாட்டில் அதற்காக அவரைப் பெற்றோர் 50000 பவுண்ட் பணம் அபராதமாகக் கட்டினார்கள் என்பதும் அவருக்கு பெட்ரோல் வாங்க உதவிய நண்பர்கள் கைது செய்யப் பட்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். தீக்குளித்தல் பொது இடத்தில் பொது மக்களை இடையூறு செய்யும் ஒரு செயலாக அந்நாடுகளில் கருதப்படுகிறது,(public nuisance)இந்த நேரத்தில் இதே தீக்குளித்தல் என்ற ஆயுதத்தை மண்டல் எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தி எவ்வாறு கோஸ்வாமி என்ற பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை பலியிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். அந்த சமூகத்தின் நன்மைக்காக அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு திட்டத்தை அந்த சமூகத்தவர் ஒருவரை நெருப்பிலிட்டு எதிர்த்த அநிநியாயத்தையும் நாம் பார்த்தோம். ஏன் இராஜஸ்தானில் எரிக்கப்பட்ட ரூப் கன்வர் முகம் கூட நமக்குள் வந்துதான் போகிறது. ஏன் இந்த எதிர்மறை உதாரணங்களை நான் சொல்கிறேனென்றால் நமது செயல் மட்டுமல்ல அது உருவாக்கும் சமூகத் தடமும் முக்கியமானது என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.

மொழிப் போராட்டத்தில் வெந்து மடிந்த அளிணியம்பாளையம் வீரப்பன், கீழப்பளுவூர் சின்னசாமி, கீரனூர் முத்து, கோடம்பாக்கம் சிவலிங்கம், மற்றும் மாயவரம் சாரங்கபாணி இன்று நம் முன்னால் முத்துக் குமார், செங்கொடி இவர்கள் தியாகிகள் தாம். ஆனால் இவர்கள் உருவாக்கியிருக்கும் தீக்குளித்தல் என்ற சமூகத் தடம் அழிக்கப் பட வேண்டியதேயழிய தியாகம் என்று ஏற்றிப் போற்றப் பட வேண்டிய ஒன்றல்ல, (தீலிபனை என்னால் இந்த வரிசையில் வைத்துப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் தீலிபன் தொடர்ந்து செயல்பட்ட ஒரு தீவிர அரசியல் போராளி மற்றும் முன்னணி செயல்பாட்டாளர். தன்னுடைய இயக்கத்தின் தொடர்ச்சியான ஒரு முடிவில் உண்ணாநிலை என்ற நிலையை அவர் எடுத்தார். எனவே அதனை நான் இதில் சேர்க்கவில்லை) செங்கொடி பத்தொன்பது வயதுப் பெண். காஞ்சி மக்கள் மன்றம் ஒரு முன்னோடியாக பெண்களைக் கொண்ட அமைப்பு. சாதி மதம் குடும்பம் என்ற அமைப்புகளை மறுத்து மிக முற்போக்கான ஒரு சமூகக் கூட்டு வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்தி புதிய தடங்களை சமூகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று எங்களால் நம்பிக்கையோடு பார்க்கப் பட்டுக் கொண்டிருக்கும் அமைப்பு. அந்தக் கூட்டு வாழ்க்கையில் ஒரு உறுப்பினர் செங்கொடி. இந்தப்பெண் வளர்ந்து வருகின்ற பட்சத்தில் இவர் எதிர்நோக்கி வெற்றி கொள்ள வேண்டிய எத்தனையோ சமூகப் போராட்டங்கள் களத்தில் இருக்கின்றன. ஆனால் அத்தனையையும் விட்டு விட்டு தன் சாவு ஒரு மிகப் பெரிய எழுச்சியை உண்டு பண்ணி பேரறிவாளன் சாந்தன் முருகனை மீட்டு விடும் என்று உணர்ச்சி வசப் பட்ட முடிவுக்கு ஏன் செங்கொடி போக நேரிட்டது?

முத்துக் குமாருடைய சாவு அதனைத் தொடர்ந்து 14 பேர்களின் உயிர்த்தியாகம் இந்த மண்ணில் ஏற்படுத்திய விளைவுகள் செங்கொடியை வழி நடத்தியதா அல்லது முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தினால்தான் தமிழ் மண்ணில் ஈழப் பிரச்சனையையே தமிழர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது இந்த அளவுக்குக் கூ ட பேச மாட்டார்கள் என்று அவர் புரிந்து வைத்திருந்தாரா என்பது நமக்குப் புரியவில்லை. பத்தொன்பது வயதே நிரம்பிய செங்கொடிக்கு யாரும் தீக்குளித்திருக்காத அந்த என்பதுகளில் ஈழப் பிரச்சனை தமிழர்களின் வெகு உக்கிரமான பிரச்சனையாக இருந்தது என்பதும் ஜெயவர்த்தனேக்குப் பாடை கட்டி தெருவுக்கு தெரு ஒப்பாரி பாடப் பட்ட எழுச்சியும் தெரிந்திருக்க அல்லது புரிந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் முத்துக்குமார் மரணம் பற்றி என்ன பிம்பம் இந்தப் பெண்ணுக்குக் கட்டியெழுப்பப் பட்டது என்று புரியவில்லை.

 

முத்துக்குமார் உடலை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லக் கூட தமிழர்களால் அன்று முடியவில்லை என்பதுதானே உண்மை? முத்துக் குமார் கேட்டுக் கொண்ட எதுவும் இன்று வரை நடவிக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக எத்தனையோ நடந்து விட்டது. முத்துக்குமாரோ, முத்துக் குமாருக்குப் பின் தீக்குளித்த தமிழர்களோ இன்று இந்த செங்கொடியோ ஈழத்தமிழர் பிரச்சனைக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எந்த இயக்கத்தின் உறுப்பினர்களுமல்ல. முத்துக்குமாருக்குப் பின் இறந்து போன சிலர் விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்தவர்கள். செங்கொடிக்காவது ஓர் அமைப்பு இருக்கிறது. முத்துக்குமார் கூ ட எந்த அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல. இப்படி எந்த அமைப்பின் செயல் திட்டத்திலும் செயல்பட்டிராத ஆனால் இந்த உணர்ச்சிகளை மட்டும் உள்வாங்கி தாங்கள் நினைக்கிற எந்த விடுதலையாக இருந்தாலும் அதற்கென இருக்கின்ற அரசியல் வெளிகள் அதன் இயக்கங்கள் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் இவர்கள் எடுக்கின்ற முடிவுதான் இந்ததீக்குளித்தல் என்பது.

 

 

இதனை எப்படி நேர்மையான அரசியல் நடத்தும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியும்?ஒரு குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் மீது கோபம்தான் மிகையாக வரும். அரசியல் வெளியில் மட்டும் அது எப்படி தியாகமாகிறது? இல்லை அதுதான் தியாகமென்றால் உயிரோடிருக்கின்ற நாமெல்லாம் யார் பாவிகளா? வெறும் சோறு தின்பதற்காக வாழுகின்ற பிண்டங்களா? அப்படிப்பட்ட நமக்கு அவர்களை வாழ்த்த என்ன தகுதி இருக்கிறது? சாவதற்கு அவர்கள்……. அவர்களுக்கு வாழ்த்துக் கவிதை பாட நாம் எல்லோருமா? தீக்குளித்தலை தியாகம் என்று சொல்வது இனியும் பலரை தீக்குளிக்கச் சொல்வதற்கு சமம். செங்கொடியின் மரணத்தன்று நான் காஞ்சி சென்றிருந்தேன். ஆனால் அவரது அடக்க நாள் நிகழ்ச்சியை தொலைக்காட்சியிலேதான் பார்த்தேன். நிறைய சிறு குழந்தைகள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்திய போது இந்தக் குழந்தைகள் மனதில் என்ன செய்தியை இந்த மரணம் சொல்லும் என்ற பயம் எழுந்தது.

அந்த பயத்தில்தான் இந்தக் கட்டுரை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. சிறு சிறு குழுக்களாக இருந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் தோழர்கள் இளவயதினரை பயிற்றுவிக்கும் போது போராட மட்டுமல்ல வாழ்க்கையை நேசிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டிய சமூகப் பொறுப்பு தங்களுக்கிருப்பதை உணர வேண்டும். தன்னுடைய மகன் பேரறிவாளன் மற்றும் சாந்தன், முருகன் விடுதலைக்காக அனைத்து இயக்கங்களுடனும் இணைந்து நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் அற்புதாம்பாளின் தீரமிக்க நெஞ்சோடு இணைந்து நிற்போம். தீக்குளித்தல் தவறு என்பதை வரும் தலைமுறைக்கு அழுத்திச் சொல்வோம். இன்று தமிழர்கள் அரசியல் வெளியில் பலவீனமாகத்தான் இருக்கிறோம். நாம் நினைப்பதெல்லாம் உடனுக்குடன் நடக்கும் எதார்த்தத்தில் நாம் இல்லை. இன்று வரை இராஜபட்சேயை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியவில்லை. ஊக்கமிழக்கச் செய்வதற்காக சொல்லவில்லை. பயணம் நீளம் என்பதை உணர்த்துவதற்காக மட்டுமே சொல்கிறேன். இந்நிலையில் இதுபோன்ற உணர்ச்சிகளை வளர்ப்பதை விட்டு விட்டு அறிவார்ந்த அரசியல் பாதை குறித்த சிந்தனைகளை வளர்த்தெடுப்போம்.

 

 

3 Comments on “தீக்குளித்தல் “தியாக”மல்ல”

  1. வெறும் சோறு தின்பதற்காக வாழுகின்ற பிண்டங்களா? அப்படிப்பட்ட நமக்கு அவர்களை வாழ்த்த என்ன தகுதி இருக்கிறது? சாவதற்கு அவர்கள்……. அவர்களுக்கு வாழ்த்துக் கவிதை பாட நாம் எல்லோருமா

  2. சீமானும் வைகோவும் நெடுமாறனும் ஏன் தீக்குளிக்க மாட்டார்கள் அவர்கள் குடும்பம் அவர்கள் பிள்ளைகள் நல்லா வாழட்டும் ஏழை எளியதுகள் தீகஇகுளிக்கட்டும் சீமான் முடிந்தால் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளி பார்ப்பம்இவர்களிடம் நான் சவால் விடுகிறேன். எனது 4 குடும்பத்தினரை ஈழப்போராட்டத்தில் இழந்தேன் எனது மகனை என் கண்முண்னே கொன்றதை பார்த்துக் கொண்டிருந்தேன் அப்ப கூட நான் சாகவேணும் என்று தோன்றவில்லை ஆனால் இவர்கள் தங்கள் பழைபஇபுகு;காக சாவடிக்கிறார்கள். வைகோ சீமான் போன்ற துர்க்கிரிகளால் தான் எமது ஈழப்போராட்டம நாசசமாகியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *