“ஊடறு” பற்றி…

ஊடறு பற்றி நட்பு இணையத்தளத்தில்-க. சித்திரசேனன் எழுதிய  குறிப்பு

இணைய அறிமுகம்

ஊடறு  – oodaru.com –   udaru.blogdrive.com

இந்த வாரம் நாம் காணவிருப்பது ‘ஊடறு’ என்ற தமிழ் இணையம். இதன் முகப்புப் பகுதியில் ஒரு விழிமூடப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் ஒற்றை விழி மட்டும் இருக்க, இதனருகே ஊடறு என்று எழுதப்பட்டுள்ளது. இவ்விணையத்தின் முகப்புப்பகுதி கருநீலக் கலரில் உள்ளது. இதில் உள்ள தலைப்புகள் யாவும் வெள்ளைக் கலரில் பளிச்சிடுகின்றன. இம்முகப்பில்  கடலில் படகு சென்றவாறு உள்ள படத்திற்கருகே ‘அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரல்’  என்ற வாசகம் உள்ளது. இதன் இடதுபுறத்தில் INfO, ஆர்வலர்கள், உள்ளீடுகள், ஓவியம் / புகைப்படம், கவிதைகள், குறும்படங்கள், நூல்கள் போன்ற தலைப்புகளில் பல கருத்துக் குவியல்கள் உள்ளன.இத்தலைப்பில் ‘உள்ளீடுகள்’ என்ற பகுதிக்குள் சென்றால் ‘ஊடறு பெண்குரல் அவிழ்க்கும் இணைய இதழ்’ பகுதி உள்ளது. இதில் பெண்ணுக்கெதிரான தீண்டாமை, வன்முறை, குறும்பட விழா போன்ற பல தலைப்புகளில் செய்திகள் உள்ளன. மேலும் 2005 முதல் 2010 வரை வந்த பெண்ணியம் சார்ந்த செய்திகள் பல உள்ளன. கவிதைகள் என்ற தலைப்பில் 49 பெண் கவிஞர்களின் பெண்ணியம் சார்ந்த சிறந்த கவிதைகள் இப்பகுதியில் உள்ளன. ஓவியம் / புகைப்படம் என்ற தலைப்பில் சுவாமியின் கோரமான அழிவுப் புகைப்படங்கள் உள்ளன. மேலும் குறும்படமும் ஆவணப்படமும் சேர்ந்து மொத்தம் 27 உள்ளன. நூல்கள் என்ற தலைப்பிற்குள் புது உலகம் எமை நோக்கி, ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர் – 2004, அனார் ஓவியம், வரையாத தூரிகை, சொல்லாத சேதிகள், உரத்துப் பேச, உயிர்வெளி, வன்மம், மை போன்ற பல நூல்களின் தொகுப்புகள் உள்ளன.

இம்முகப்பின் இடது ஓரத்தில் ‘அண்மைப் பதிவுகள்’ என்ற தலைப்பில் பல செய்திகள் உள்ளன. இதன் கீழ் ‘கருத்தாடல்கள்’ என்ற தலைப்பிலும் பல செய்திகள் உள்ளன. ‘வகைகள்’ என்ற தலைப்பில் அரங்கியல், அறிவிப்பு, இதழியல், உரையாடல், கட்டுரை, கவிதை, சினிமா / குறும்படம், சிறுகதை, செவ்வி, பதிவு, மடல், விமர்சனம், வேண்டுகோள் என்ற பல தலைப்புகளில் தலைப்பு சார்ந்த கருத்துக்கள், கட்டுரைகள் பல உள்ளன. இவ்விணையத்தின் முகப்பின் நடுவில் உள்ள பகுதிகளில் உள்ளூர் முதல் உலகம் வரை பெண்களுக்கெதிரான செய்திகள், வாழ்விழந்த பெண்களின் நேர்காணல் எனப் பல பெண்ணிய கருத்துக்கள் உள்ளன. ஆக மொத்தம் இந்த இணையமானது முழுக்க முழுக்க பெண்கள் சார்ந்த இணையமாக மட்டுமல்லாமல் பெண்ணியச் சிந்தனையோடு கூடிய கருத்துக்களே அதிகம் இடம்பெற்றுள்ளது. பெண்களுக்கான மொத்த தரவுகளைக் கூறுகிறது என்பதிலும் ஐயமில்லை. 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *