இரு கரைகளாலும் கைவிடப்பட்டு…

 -பொன்மலர்

smile_docu_pic  படைப்பின் ஒழுங்கில் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட சிறு பிசகலால் திரிந்த பால்பேத சிக்கலகளுக்குப் பொறுப்பு இவர்களல்ல. மீளும் கதியற்று வாழ்க்கை நதியின் சுழிகளில் சிக்கித் திணறும் இவர்களைப் பார்த்து கைவிட்ட கரைகள் இரண்டும் கைகொட்டி சிரிப்பவைகளாகின்றன.

 திருநங்கை வித்யா தனது சுயமான பால் அடையாளத்தை மீட்க மேற்கொண்ட போராட்டங்களை இந்நேர்காணல் வழியாக உங்களிடம் சொல்கிறார்:
 

?.உங்கள் குடும்பச் சூழல் பற்றி சொல்லுங்கள்…
 

 திருச்சி மாவட்டம் புத்தூர் அருகில் உய்யக் கொண்டான் புறநகர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்தேன். சின்னவயதில் என்னுடைய பெயர் சரவணன். எனக்கு அப்பா இருக்காங்க. ஆனால் அம்மா சிறுவயதாக இருக்கும்போதே இறந்து விட்டாங்க. நான் எனது அக்கா அரவணைப்பில் இருந்தேன். மிகவும் வறுமையில் வாடிய சூழலிலும் என் அப்பா வட்டிக்கு வாங்கி என்னை எம்.ஏ., (பட்டய மொழி) படிக்க வைத்தார். சிறுவயது முதலே அக்காவின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய அனைத்தையும் பயன்படுத்த விருப்பம் ஏற்பட்டது. பல முறை இதற்காக அடியும் கூட வாங்கியிருக்கிறேன். அப்படி இருந்தும மீண்டும் எனக்குள் பெண்மைத் தன்மைதான் இருந்தது.
 

?ஒரு முழுமையான பெண்ணாக மாறவேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

ஒருநாள் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தபோது என் அருகில் செந்தில் என்பவர் உட்கார்ந்தார். அவருடைய செய்கையும் தோற்றமும் என்னைப் போலவே இருந்ததால் நான் அவரிடம் பேசத் தொடங்கினேன். அவர்தான் ‘திருநங்கையாக மாறுவதற்கு நிறைய தொண்டு நிறுவனங்கள் இருக்கிறது. அதிலே போய்ச் சொன்னால் அவங்க உதவுவாங்க’ என்று கூறினார். நான் வீட்டில் போய் என் அப்பாவிடம் ‘அப்பா எனக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட்டது. நான் அங்கு போய் வேலைக்குச் சேருகிறேன். இனிமேல் நான் வரமாட்டேன்’ என்று கூறினேன். ‘சரி போ’ என்று சொல்லி, எங்க அப்பா கிளம்பிவிட்டார். நான் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பி வெளியே வரும்பொழுது என் அப்பா வேலையில் இருந்து திரும்பி வந்தபோது என்னைப் பார்த்து அழுதார். நான் சென்னை வந்ததும் நேரு என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரும், நானும் ஒரு மேன்சனில் தங்கியிருந்தோம். அவரிடம் ‘எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கிக் கொடுங்க. நான் ஒரு பெண்ணாகத்தான் இருக்க விரும்புகிறேன்’ என்று சொன்னேன். ஆனால் அவர் என்னிடம் ‘அப்படி இருந்தால் உனக்கு வேலை கிடைக்காது. கொஞ்ச நாள் வேலை பார். பின்னர் பார்த்துக்கொள்ளலாம்’ என்றார். ஆனாலும் என் மனது அதற்கு இடம் கொடுக்கவில்லை. இந்த மாதிரி கொடுமையை அனுபவிப்பதைவிட பேசாமல் செத்துவிடலாம் என்ற நினைவு எனக்குள் அதிகமாக ஆர்ப்பரித்தது. அதன் பின்புதான் எனக்கு அருணா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் நான் புனேக்குச் சென்று அங்கு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன். இந்தச் சமுதாயத்தில் எங்களைப் போன்றோர் செய்து கொண்டிருப்பது ஒன்று விபச்சாரம் அல்லது பிச்சையெடுத்தல். என் மனது விபச்சாரத்திற்கு இடம் கொடுக்கவில்லை. நான் புனேயில் இரயிலில் பிச்சை எடுத்தேன். நான் அங்கு தினம் தினம் நிறைய கஷ்டங்கள் பட்டேன். சாப்பாட்டிற்கே பெரும் பிரச்சினை.
 

? படிக்கிற காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி இருந்தது?

 நான் பள்ளிக்கூடம் படிக்கும்பொழுது என்னை “சரவணன் ஒரு அறிவா(அலி) படிப்பா(அலி)” என்றுதான் கூறுவார்கள். நான் வரிசையில் நிற்கும்போது யதார்த்தமாக எனக்கு நம்பர் 9 வந்துவிடும். உடனே மாணவர்கள் ‘கரெக்டான இடத்திற்குத்தான் அந்த நம்பர் போயிருக்கு’ என்றெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. நான் பள்ளியில் யாருடனும் பேசமாட்டேன். ஆசிரியர்கள் மத்தியிலும் என் நிலைமை அப்படித்தான் இருந்தது.
 

? சரவணனாக இருக்கும்பொழுது யாரிடமாவது காதல் வயப்பட்டீர்களா?

ஆமாம். அது ஒரு பெண்ணிடம் அல்ல. அது ஒரு ஆணிடம். என்னுடன் கூடப் படித்த பையன் கொழுகொழு என்று அழகாக இருப்பான்.
 

உங்களை பாலியல் ரீதியாக அடையாளப்படுத்திக்கொள்ள சந்தித்த கஷ்டங்கள்?

smile_docu_pic

பெயராலும், பாலின அடையாளத்திலும் நான் இழந்தவை பல. நூலக அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு, சிம் கார்டு என சகல விதத்திலும் அங்கீகாரமின்றியும் அருவெறுப்புக்குள்ளாகியும் கடந்த 3 வருடங்களைத் தாய்நாடு ஈன்றெடுத்த அகதியாய் வலம் வருகிறேன்.பெயர் மாற்றத்திற்கு தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, சென்னைக்கு விண்ணப்பப் படிவம் அனுப்பினேன். பெயர் மாற்றத்திற்கெனச் சில காரணங்கள் குறிக்கப்பட்டிருந்தது. உம். மதமாற்றம், Astrology, Neumorology, என்கிற ரீதியில் சில…
நானோ எனது பாலினச் சிக்கலை எதுவும் குறிப்பிடாமல் பொதுவாக I want my name with no regional. Religious and gender identity என்று குறித்திருந்தேன். சரியாக 15வது நாளில் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வந்தது. அதில் நிராகரிப்பிற்கான காரணமாகக் கொடுக்கப்பட்ட பட்டியலில் அனைத்தையும் பேனாவால் அடித்துவிட்டு, ஒரு மூலையில் பென்சிலால் “இங்கு மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும்” என்று எழுதியிருந்தது.

ஆத்திரம், அழுகை எல்லாமே இருந்தாலும் என்ன செய்வதென்று தெரியாத நிலை, நண்பர் ஒருவரின் அறிவுரையின்படி மதுரையில் உள்ள பெண்ணிய ஆர்வலரும், வழக்கறிஞருமான ரஜினி அவர்களைச் சந்தித்து என் பிரச்சினையை விளக்கினேன். அவரது வழிநடத்தலின் கீழ் பிப்ரவரி 2005ல், நான் பிறந்த ஊரான திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும், நாங்கள் வசித்த பகுதியைச் சார்ந்த தாசில்தார் அவர்களுக்கும், இவற்றோடு தலைமைச் செயலகத்திற்கும் எனது பிரச்சினையைத் தெளிவாகக் கூறி அனைவருக்கும் மனு ஒன்றினை அனுப்பி எனக்குப் பெயர் மற்றும் பாலின மாற்றம் ஏற்படுத்தித் தர வேண்டிக்கொண்டேன். சில நாட்கள் கழித்து திருச்சி தாசில்தார் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. மூன்று முறை நேர்முகத் தேர்வும், சில விசாரணைகளும் முடித்தபின் எனது பெயர் மற்றும் பாலின மாற்ற விண்ணப்பத்தினைத் தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, சென்னைக்கு மீண்டும் அனுப்பிவைத்தனர். எனக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டது. ஆனால், பதில் வரவேயில்லை. பிறகு நேரில் சென்ற பிறகு கடிதம் அனுப்புவதாகச் சொன்னார்கள்.
smile_docu_pic. 2jpg
பல மாத இடைவெளிக்குப் பின், பால்மாற்று அறுவைச்சிகிச்சை மேற்கொண்டதன் மருத்துவச் சான்றிதழ் அனுப்பக் கோரி பதில் வந்தது. எனது பால்மாற்று சிகிச்சையோ அங்கீகாரமின்றி மேற்கொள்ளப்பட்டது. மேலும், அதற்கான அங்கீகாரமோ, புரிதலோ கூட இல்லாத சூழலில் நான் என்ன செய்வது? அதற்கும் என்னிடம் வழி இல்லாத சூழலில் நான் என்ன செய்வது? அதற்கும் என்னிடம் வழி இருந்தது. பால்மாற்று சிகிச்சை முடித்த சில மாதங்களில் குடல்வால் வளர்ச்சி காரணமாக எனக்கு வேறொரு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அச்சிகிச்சை முடிந்து நான் வெளியேறியபோது discharge குறிப்பில் எனக்கு ஏற்கெனவே, பால் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை ஆதாரமாக எடுத்துக்கொள்ளுமாறு அனுப்பியிருந்தேன். ஆனால் பால்மாற்று சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்தான் சான்றிதழ் தரவேண்டுமென மீண்டும் மறுத்துவிட்டனர். இதிலேயே அரையாண்டு கழிந்துவிட்டது. அவர்கள் அனுப்பிய மறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரஜினியின் உதவியுடன் வழக்குப் பதிவு செய்தேன். நான்கு மாதங்கள் கழித்து எனது பெயர் மாற்றத்தினை 7 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது. சந்தோசத்தின் உச்சியில், மிகப்பெரிய வெற்றியடைந்த களிப்போடு காத்திருந்தேன். 7 வாரங்களை அதிகபட்சம் 2 மாதங்களாகக் காத்திருந்தேன். 3 மாதங்கள் ஆனது. பதிலே இல்லை. பொறுக்க முடியாமல் சென்னை வந்து நேரடியாக அலுவலகத்தில் விசாரித்தபோது, தீர்ப்பில் பரிந்துரைக்கத்தான் சொன்னார்கள்.

 நாங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது என்று முடித்துக் கொண்டனர். அடக்கமுடியாத ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு என் நிலையை விளக்கி, பரிந்துரையை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கான காரணம் வேண்டும் என சண்டையிட்ட பின் மருத்துவச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாற்றித்தர முடியும் என்றார்கள்.மருத்துவச் சான்று வேண்டுமெனில் அதற்கான வழியை மேற்கொள்ளுங்கள். இல்லையெனில், கோர்ட் அவமதிப்பு மற்றும் மானநஷ்ட வழக்குத் தொடருவேன் என்று பூச்சாண்டி காட்டியபின் கடிதம் அனுப்புவதாகச் சொன்னார்கள். பல நாட்களுக்குப்பின் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து மருத்துவச் சான்றிதழ் பெறுமாறு எனக்கும், என்னைச் சோதித்து சான்றளிக்குமாறு மருத்துவமனைக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

மருத்துவமனையில் சென்று சான்றிதழ் வாங்குவதற்கு 3 வாரங்கள் ஆனது. அலுவலகத்தில் சில நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின் மருத்துவர்களால் சில நாட்கள் அலைக்கழிக்கப்பட்டேன். அதைவிடக் கொடுமை, அங்குள்ள சில அலுவலர்களால் ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் ஆளானது. அனைத்தையும் பொறுமையுடன் சகித்துக்கொண்டு இது ஒரு முன்மாதிரியாக அனைவருக்கும் உதவும் என்று காத்திருந்தேன். காத்திருப்பு, அதீத தாமதம், சென்னை விஜயம். ஆவலோடு கேட்டால், “எங்களுக்கும், காப்பி வந்துச்சு. ஆனா, அதுல Medical examination seems she can reared as Female ன்னுதான் இருக்கு. She is female அப்படின்னு வரல. அதனால மாத்த முடியாது” என்று சொன்னார்கள். “இப்போதும பொறுத்துக்கொண்டு நான் “அதெப்படி, பிறப்பான நான் பொண்ணா இருந்தா அத எங்க அப்பா, அம்மா ஆரம்பத்திலேயே பாலினம்னு குறிச்சிருப்பாங்களே… இப்படிப் பொறக்கப் போயிதானே இந்தக் கஷ்டமெல்லாம்” என்று விவாதம் நடந்தது. பிறகு பெயர் மாற்றத்திற்குச் சம்மதித்தார்கள். நான் நிம்மதி பெருமூச்சு விட்டபோது செப்டம்பர் 2006.

பிறகு டீனிடம் பேசணும், அங்க கேக்கணும், G.O. வரலைன்னு ஏகப்பட்ட சமாளிப்புகள். பொறுத்தது வரை பொறுத்த நான் நேரடியாக ஒருநாள் அலுவலகம் சென்று, மேலதிகாரி அனைவர் முன்பாகவும் கொதித்தெழுந்து சண்டை போட்டதன் பயனாக பேர் மட்டும் மாத்துரதுன்னா பரவால்ல. பாலினம் வேற மாத்தணும்னல. அதனால் எப்படின்னு பேசிட்டு இருக்கறோம் அதான் லேட்டு” என்று உயரதிகாரி ஒருவர் சொன்னார்.
சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் காத்திருந்தேன். இதற்கிடையில் மதுரையை விட்டு சென்னைக்கு மாறி வந்தாச்சு.

பிறகு பெயர் மாற்றக் குறிப்பினைக் குறிப்பிட்டு ரூ. 1,645/-னை கட்டுமாறு கடிதம் கிடைத்தது. வழக்கமான பெயர் மாற்றத் தொகையோ வெறும் 410 தான். தொகையோ பல மடங்கு கூடுதல். மேலும் பெயர் மாற்றம் மட்டுமே குறிப்பிட்டிருந்த்து. மீண்டும் நேரில் சண்டை போட்டும் பயனில்லை. சரி பெயராவது மாறட்டும் என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும் என்னிடம் இருந்ததோ ரூ.500. பிறகு அதற்கு மேல் பணம் திரட்ட முயன்று, தோற்று ஒருவழியாக சென்னை பல்கலைக்கழக கன்னடத்துறை பேராசிரியர் திருமதி. தமிழ்ச்செல்வி அவர்கள் கொடுத்து உதவினார்கள் (ஒருமுறை தொலைபேசியிலும், ஒருமுறை நேரிலும் மட்டுமே அறிமுகம்).
பணம் கட்டி முடித்து, ஜனவரி 2008 புது வருடம் புத்தம் புதிதாய் எனக்குத் தொடரும் என்று காத்திருந்தேன். ஜனவரி சோர்வாய்ச் சென்று முடிந்தது. பிப்ரவரியும் வந்தது, பெயர் மாற்றம் என மனதை அரித்துக்கொண்டிருப்பது நின்றுவிட்ட பிறகு மதுரையிலிருந்து நேறு ஆன்ட்டி கால் செய்து என் பெயர் மாற்ற அறிவிப்புக் கடிதம் கிடைத்த செய்தியைச் சொன்னார். நண்பர்களே என் வாழ்நாளில் தீர்க்க முடியாத சிக்கல் ஒரு பாதியைத் தீர்த்துவிட்ட மகிழ்ச்சியை உங்களுக்கு சொல்லாமல் யாரிடம் சொல்வேன்.

கலை, இலக்கிய ஆர்வம் எப்படி வந்தது? 
 

 smile_docu_pic. 3jpg

  

நான் சிறுவயதிலேயே தனிமையில் அதிக நேரம் இருந்ததால், நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது. நாடகத்திலும் கூட நான் நடித்திருக்கிறேன். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துதான் இப்பொழுது ‘நான் வித்யா’ என்ற நூலையும் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

தற்பொழுது உங்கள் குடும்பம் வித்யாவாகிய உங்களை ஏற்றுக்கொள்கிறதா? 

 என் குடும்பத்தினரிடம், யாரேனும் ஒருவர் போய் இதைப்பற்றி அவர்களிடம் எடுத்துக்கூறி, அவர்களை மாற்றி என்னை ஏற்றுக் கொள்ள வைப்பார்களா? அப்படி ஒருவர் இருப்பாரா?

உங்களுடைய எதிர்கால லட்சியம்?

சிறுவயதில் தொலைக்காட்சிகளில் ரம்பா, மீனா, குஷ்பு இவர்களைப் பார்க்கும்பொழுது நாமும் இவர்களைப்போல மேக்கப் செய்துகொண்டு நடிகை ஆகவேண்டும் என விரும்பினேன். அப்பொழுது கூட நடிகனாக விரும்பவில்லை
முதன்முதலில் என்னை நடிக்கத்தான் கூப்பிட்டார்கள். நான் கேமராவிற்கு முன்பு நிற்பதைவிட, கேமராவிற்குப் பின் நிற்பதை விரும்பியதால், அசிஸ்டென்ட் இயக்குனராக இருக்கிறேன்.

உங்கள் வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் என்று எதை நினைக்கிறீர்கள்?

நான் முதலில் அறுவைச்சிகிச்சை செய்தவுடன் இனிமேல் ‘நான் ஒரு பெண்’தான் என்கிற உணர்வு எனக்குள் வந்ததுதான் என் வாழ்வில் மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகும். அந்த நாளை நான் என் வாழ்வில் மிகப்பெரிய நாளாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
 

தற்பொழுது உங்களுக்கு ஏதாவது காதல் ஈடுபாடு யார் மீதாவது ஏற்பட்டு இருக்கிறதா?

ஆமாம். அவர் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் எங்களுக்குத் திருமணம் நடக்கலாம்.

பொதுவாகவே காதலிக்கும் ஆண்களிடம் பாலியல் திருப்தி மற்றும் கருவுற்று குழந்தை பெற்றுத் தர வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் இருக்குமே?

என்னைப் பற்றி தொடக்கத்தில் இருந்தே நன்கு தெரிந்துகொண்டவர் அவர். எனக்கு எல்லா ஆதரவும் அவர்தான். குழந்தை பற்றி எங்களுக்கிடையே ஒரு கருத்து முடிவு வைத்திருக்கிறோம். ஆணோ அல்லது பெண்ணோ ஏதாவது ஒரு குழந்தையை நாங்கள் தத்து எடுத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறோம்.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். திருநங்கைகளுக்காகப் போராடுகிற ஒரு கட்சி இருந்தால், அந்தக் கட்சியில் சேர்ந்து ஒத்துழைப்பேன்.

திருநங்கைகளுக்காகப் போராடுவீர்களா?

நிச்சயமாகப் போராடுவேன். பிறர்போல ரேஷன் கார்டு, வீடு கேட்டுப் போராடாமல் கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு இதற்காகப் போராடுவேன். கல்வி, வேலைவாய்ப்பு இருந்தால் நாங்களே வீடு, உணவு எல்லாம் தேடிக்கொள்ள முடியும் அல்லவா.வித்யாவுடன் பேசிவிட்டுத் திரும்புகையில், அவர் அடைந்த அவமானங்களும், துயரங்களும் மனதை ஒருபுறம் வருத்தினாலும் போராடி வென்ற அவரது துணிச்சல் எல்லாவற்றையும்விட மனதில் மேலோங்கி நிற்கிறது.

ஊடறுவுக்கு இவ் நேர்காணலை அனுப்பித் தந்த ரஜனிக்கும்  அத்துடன் இது வெளிவந்த இணையம் மற்றும் சஞ்சிகைகளுக்கும் நன்றிகள்

  

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *