ஊடகத் துறையில் பெண்களின் செயற்திறன் மிக்க பங்களிப்பு

யுகாயினி (இலங்கை)

media ஊடகத் துறையில்பெண்கள் பரவலாக பணியாற்ற ஆரம்பித்த பின்னர் அவர்களது தற்துணிவும் செயற்திறனும் மேம்பட்டு வருவதை மறுக்க முடியாது. தாம் பேசாப் பொருட்களல்ல, ஆண்களைப் போன்ற சமமான மனிதப் பிறவிகள் என்பதை நிரூபிக்குமாப் போல் அவர்களது திறமைகள் வெளிப்படுத்தப் படுகின்றன

கல்வியால் கிடைத்த வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் இன்றைய பெண்களை தலை நிமிர வைத்துள்ளன. பெண்கள் இன்று பல துறைகளில் தடம் பதித்து வெற்றியீட்டுவதுடன் சாதனைகளும் படைத்து வருகிறார்கள். தங்கி வாழ்தல் என்ற நிலையிலிருந்து மாறி தாமாகவே உழைத்துப் பொருளீட்டி, தமது நிலையை மேம்படுத்தவும் பெண்ணியச் சிந்தனைகளின்  பரம்பலானது அவர்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது.
 

இன்றைய பெண்கள் கடின தொழில்களிலிருந்து நிர்வாகம் மற்றும் அறிவியல் வளர்ச்சியான துறைகள் வரை பணியாற்று கிறார்கள். இதன் பெறு பேறாக வீட்டுக்குள் அடுப்பங்கரையில்  இருந்த பெண் இன்று  வெளியுலகுடன்  தன்னைச் சங்கமமாக்கிக் கொண்டுள்ளாள். இந்த வகையில் ஆபத்து நிறைந்த ஊடகத் துறையிலும் இன்று பல பெண்கள் காலடி எடுத்து வைத்து சாதனை புரிவதைப் பார்க்கும் போது ஸருமிதமாக இருக்கின்றது.எனினும் கூட ஒரு விடயத்தை கவலையுடன் குறிப்பிடாமலும் இருக்க முடியவில்லை. பெண்ணிய வாதிகளைப் போலவே பெண் ஊடகவியலாளர்களும், பெண்ணிய எழுத்தாளர்களும் ஆணாதிக்க சமூகத்தால் கொச்சைப் படுத்தப்படுவது இன்றும் தொடர்கிறது. ஊடகத்துறையில் பணியாற்றும் பெண், பெண்கள் பலருடனும் சகஜமாகப் பழகுவதை ஆணாதிக்க சமூகம் ஊனக் கண் கொண்டு பார்க்கும் நிலை இன்றும் இருக்கவே செய்கிறது. இன்னொரு புறம் சுதந்திர மனோபலத்துடன் ஊடகங்களில் பணியாற்றும் பெண்களின் திறமைகளையும் துணிச்சலையும் கண்டு ஆண்கள் அஞ்சுவதும் இதற்குகாரணம்.
 

இத்தனை தடைகளையும் தாண்டி இன்று ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. உலகளாவிய ரீதியில் இன்று ஊடகத்துறையில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அதற்கு சமானமாக இல்லாது விட்டாலும் எமது தேசத்திலும் கணிசமான பெண்கள் ஊடகத் துறையில் உட் பிரவேசித்துள்ளனர். இவர்களில்  பலரும் பெண்ணின் ஆற்றல் ஆளுமையையும், இருப்பையும், சிறப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பத்திரிகைத் துறையில் பெண்களின் பணி விதந்து குறிப்பிடும் படி இருப்பதை அவதானிக்கலாம். பத்திரிகை, ஆசிரியர் பீடத்தில் ஒரு புறமும், நிருபர்களாக மறுபுறமும் துணிச்சலுடன் பணியாற்றி வருகிறார்கள். ஆண்களால் சாதிக்க முடியாத சில நுணுக்கமான விடயங்களைக் கூட இன்று பெண்கள் சாதித்துக் காட்டுகிறார்கள். ஆபத்தான துறையில் துணிச்சலுடன் பணியாற்றுகிறார்கள்.

 mediaஉலகமயமாதல் உலகையே உள்ளங் கைக்குள்  கொண்டு வந்துள்ள நிலையில் தொடர்பு சாதனங்களின் பங்களிப்பும் ஊடகத்துறையும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இன்றைய ஊடகத் துறையின் வளர்ச்சியானது பத்திரிகை, தொலைக்காட்சி, கணணி என வளர்ச்சி கண்டு செய்மதிகள் ஊடகத்துறையின் துரித பங்காற்றலுக்கு பெரிதும் துணை புரிகின்றது. உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்ச்சியையும் அடுத்த கணமே அனைவரும் அறிந்துகொள்ள இதனால் முடிகிறது. ஊடகமானது வெறும் செய்திப் பரிமாற்றத்திற்கு அப்பால் பல்துறை வளர்ச்சியிலும் பங்காற்றுகிறது. சினிமா, தொலைக்காட்சி என பரந்து எங்கும் ஊடுருவி மக்கள் எதையும் அறிந்திடவும் அத்துறையில் தெளிவு பெற்றிடவும் ஊடகத்துறை இன்று பெரும் பங்காற்றுகிறது.ஊடகத் துறையையும் பெண்களையும் தொடர்பு படுத்தும் போது இருவகையாகப் பார்க்கலாம். ஒன்று ஊடகத்தில் பெண் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறாள் என்பது. மற்றையது ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது என்பதாகும்.
 

ஆணாதிக்க உலகம் பெண்களை ஒரு போகப் பொருளாக நோக்குதல் என்பது இன்றும் தொடர்கதையாக உள்ளது. அழகு என்னும் மாயைக்குள் பெண் போகப்பொருளாக வியாபார விளம்பரத்திற்கு பெரிதும் பயன் படுத்தப்படு கின்றாள். பெண்ணின் உடல் அழகை மிகைப் படுத்தியும், பாலுறுப்புகளை பகுதியாகக் காட்டியும், உடலின் வனப்பான பிரதேசங்களைக் காட்டியும் அழகான ஆடை அலங்காரங்களிலும், நவீன அலங்காரங்களிலும் காட்டியும் தமது வியாபத்தை விளம்பரப் படுத்துகிறார்கள். எல்லா வகையான ஊடகங்களும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவையல்ல எனும்மாப் போல் பெண்களை விளம்பரததிற்குப் பயன்படுத்துகின்றன. பாலியல் பார்வை, பெண் உடல் என்பவற்றுக்கு அப்பால்  பெண்ணும் ஒரு சக மானுடப் பிறவி என்ற எண்ணம் வளர்க்கப் பட்டால் இவ்வாறான போகப் பார்வை அற்றுப் போகும்.
 

பெண்களை ஊடகங்கள் விளம்பரப் பொருட்களாகஒரு புறம் பாவித்தாலும், பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வுகளை  ஏற்படுத்த  செய்வதையும் மறுப்பதற்கு இல்லை. காலத்தோடு ஒத்து ஓடாத ஊடகங்கள் புறம் தள்ளப்படும் என்பதனால் இவ் ஊடகங்கள் பெண்விடுதலை பற்றியும்  பேசுகின்றன. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் இந்த இரட்டை நிலைப்பாட்டை அவதானிக்க முடிகிறது. இன்னொரு புறம் ஊடகத் துறைக்கு பெண்களின் வரவானது பெண்ணிய மேம்பாட்டிற்கு ஊக்கியாகியுள்ளது.இவர்கள் பெண்ணியம் தொடர்பான படைப்புகளை ஊடகங்களில் உலாவரச் செய்கிறார்கள். பெண்ணிய மேம்பாட்டிற்கும், பால் சமத்துவம் ஏற்படுவதற்கும் இது பெரிதும் துணை நிற்கிறது.
 

வானொலி தொலைக் காட்சியைப் பொறுத்த வரைஒரு சில பெண்கள் சிறப்பாக பணி யாற்றினாலும், வேறு சிலரின் பங்களிப்பு எதிர் நிலையாக உள்ளது. தமிழ் உச்சரிப்பை கலப்பற்ற தமிழை கொச்சைப்படுத்துவதற்கு துணைபோவதுடன் பெண்களைக் கொச்சைப் படுத்துவதற்கும் அறிந்தோ அறியாமலோ துணைபோகிறார்கள். முதலாளித்துவ ஊடகங்கள் சாதுரியமாக பெண்களின் உடல் வனப்பையும், குரல் வளத்தை யும், அசைவையும் வியாபார நோக்கில் பயன் படுத்துகிறார்கள். சில தொலைக் காட்சி நிகழ்ச்சி களில் பெண் ஊடகவியலாளர்கள் அணியும் ஆடைகள் திருப்திகரமாக இல்லை. விரும்பியோ விரும்பாமலோ வியாபார விளம்பரப் பதுமைகள் போலவே இவ் ஊடகவிய லாளர்களும் பயன் படுத்தப்படுகிறார்கள் என்பதை பெண் ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தம்மைச் சிறுமைப் படுத்த துணைபோதல் ஆகாது.
 

WIFPCollage_small

ஊடகத் துறையில்பெண்கள் பரவலாக பணியாற்ற ஆரம்பித்த பின்னர் அவர்களது தற்துணிவும் செயற்திறனும் மேம்பட்டு வருவதை மறுக்க முடியாது. தாம் போசப் பொருட்களல்ல, ஆண்களைப் போன்ற சமமான மனிதப் பிறவிகள் என்பதை நிரூபிக்குமாப் போல் அவர்களது திறமைகள் வெளிப்படுத்தப் படுகின்றன.உடல் ரீதியாக உள்ள சில வேறுபாடு களையும் பிரசவ தொழிற்பாட்டையும் தவிர ஆண் பெண் இருபாலரும் சமமானவர்களே. பாரம்பரியக் கட்டமைப்பினால் அன்றி மனோரீதியிலும் இருபாலரும்  சமமானவர்களே. இன்றைய நவீன உலகில் பெண்ணை குறைவாக மதிப்பிட்ட ஆணாதிக்கப் பார்வை மெல்ல மெல்ல வலுவிழந்து வருகிறது. பெண், தான் குறைந்தவளல்ல என்பதை நிரூபித்து விட்டாள். ஆம்! ஊடகத்துறையிலும் கூட!ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது சிலகுறைபாடுகள் களையப்பட வேண்டி இருப்பினும் ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக இருப்பதை மறுக்க முடியாது.

ஜீவநதிக்காக எழுதப்பட்ட கட்டுரை  ஊடறுவுக்காக பரணி

 

1 Comment on “ஊடகத் துறையில் பெண்களின் செயற்திறன் மிக்க பங்களிப்பு”

  1. நல்லதொரு கட்டுரை. எனினும், படித்து முடிக்கும் போது ‘தொடங்கியதுமே சட்டென்று நிறைவுபெற்றுவிட்ட’தான உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கட்டுரையாளர் இந்த அருமையான கட்டுரையை இன்னும் சற்று விரித்து எழுதினால் நன்று எனத் தோன்றுகின்றது. வாழ்த்துக்கள்!

    மிக்க அன்புடன்,
    லறீனா அப்துல் ஹக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *